எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 ஆகஸ்ட், 2016

கவிதா.. குமார்..

நம் நட்பில் இருந்த, இருக்கும் இருவரின் காதலை நாம் தினம் தினம் சோகத்தோடு  சுமந்தலைவது எவ்வளவு கொடிது. தினம் தினம் புறாக்கள் எச்சமிட்டு எவ்விப் பறக்கும் மொட்டைமாடியின் பெஞ்சுகளில் சிதறிக்கிடக்கும் தானியங்களும் நீரும்போலக் கலந்தழிகிறது மனது. ஒரு நெருப்பை மூடியது போல, ஒரு காட்டாற்றைக் கதவடைத்து வைத்தது போல ஒன்றரை மாதங்களாகச் சூழ்ந்து செல்லும் இவ்வேதனையைக் கடப்பதெப்படி . தினம் தினம் சோர்வுறும் மனதை எதனால் புத்துணர்வூட்டிக் கொள்வது. கவிதாவைப் போலக் குமரனின் கவிதைகளிலா..

அவளும் நானும் முகநூலில்தான் நட்பானோம்..கவிதா சொர்ணவல்லி என்ற பேர் எனக்கு மிகவும் பிடித்தது. அதுவும் அவளின் படமாக அந்த ஒற்றை மயில் மாணிக்கம் அற்புதம். அவளின் சில சிறுகதைகளைப் படித்து இப்படியும் உள்மனசை, உண்மையை அதிரடியாய்ச் சொல்லமுடியுமா என அதிசயித்திருக்கிறேன்.

குமரகுருபரனை நான் நேரில் பார்த்ததேயில்லை. ஆனால் கவிதாவின் முகநூல் எழுத்துகள் வழி பார்த்திருக்கிறேன். அவரது இரு நூல்களின் வெற்றியை அவள் கொண்டாடிய ஒவ்வொரு தருணங்களிலும் பொறாமையுற்றிருக்கிறேன். அவரின் கம்பீரத்தையும் உருவத்தையும் உயரத்தையும் சிலாகித்தபோதெல்லாம் அவளிடம் செல்லக் கோபம் கொண்டிருந்திருக்கிறேன். அது அவள் என்னிடம் கொண்ட அன்பின் பங்கீட்டுக்கான பொறாமை. அவள் பொசல் வெளிவந்தபோது நான் அவள் பக்கமில்லையே என்று மிக வருந்தி இருக்கிறேன்.

எஃப் எம் ரேடியோவில் வழக்கமாக அனைவரையும் கலாய்க்கும் பாலாஜி என்னை கவிதாவின் அறிமுகத்தில் ( சர்வதேசத் திரைப்படங்கள்பற்றிய) கருத்து கேட்டபோது  மிக மிக எளிதாகப் பேச விட்டார். முதன்முதலில் வானொலியில் என் குரலை உலவவிட்ட பெருமைக்குரியவள்.

லேடீஸ் ஸ்பெஷல் மகளிர் சந்திப்புக்காகக் கேட்டபோது மெரினா கடற்கரையில் ஓடி வந்து பிரியத்தோடு அணைத்துக் கொண்டு நின்று பேசியபோது என்னை அவளில் கண்டேன். மிரர் இமேஜ், க்ளோன் என்று சொல்லும்படி இருந்தது எங்களுக்கிடையேயான அந்தப் புரிந்து கொள்ளல். கண்கள் கூடப் புன்னகைக்கும் அழகான முகம் அவளுக்கு.

காதலால் செய்தவள், கரை காணாக் காதலுக்குச் சொந்தக்காரி, காதலை வாழ்வாகவே வாழ்ந்தவள்., இன்னும் அந்தக் காதல் உயிர்த்தீயில் யாகம் வளர்த்துக் கிடப்பவள். ஜோதா அக்பரில் காதல் காட்சியை விட ஐஸ்வர்யா ராய் ஹ்ரிதிக் ரோஷனுடன் வாளெடுத்து ரொமாண்டிக்காக சாகசத்துடன் சண்டை போடும் அற்புதக் காட்சி எங்கள் இருவருக்கும் மிகப் பிரியம்.

 குமாருக்கு ராஜமார்த்தாண்டன் விருதும் கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதும் கிடைத்தபோது கவிதாவின் பெருமிதம் என்னில் நிரம்பி இருந்தது. கிட்டத்தட்ட பெண் வயதிருந்தும் சக தோழியைப் போல தேனூஸ் என்றழைப்பாள்.

நான் எழுதிய சில காதல் கவிதைகளைப் பகிர்ந்து மேலெடுத்துச் சென்றவள். ஒரு முறை முகநூலில் குமரகுருபரன் பக்கத்தை விரும்ப அழைத்திருந்தாள்.  யாரோ ஒரு நட்பாயிருக்கும் என நினைத்து லைக் போட்டேன். அந்தச் சமயம் அதிலிருந்த கவிதை ஒன்றை வாசித்தேன். ”பேய்கள் தங்களை ரத்தக் காட்டேரிகள் என்றழைப்பதை விரும்புவதில்லை ஏனெனில் அவை காதலிப்பதில்லை என்பதையும் கடவுளின் போட்டியாளராகக் கருதுகின்றன “ என்பதையும் படித்ததும்  சிரிப்பு வெடித்தது என்னிலிருந்து .

///உண்மையில் பேய்கள் நேர்மையானவை.
அவற்றிற்கு சாதி,இன,மொழி,பால்,
வயது வேறுபாடு கிடையாது.
தவிர,
அவை மட்டுமே இவ் வுலகில் ஒரே
குறிக்கோளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
பேய்கள் தங்களை ரத்தக் காட்டேரிகள்
என்றழைப்பதை விரும்புவதில்லை.
ஏனெனில் அவை காதலிப்பதில்லை.
காதலித்ததால் மட்டுமே அவை பேய்கள் ஆகியிருக்கின்றன என்பது அவற்றின் தீரா வலி.
பேய்கள் தங்களைக் கடவுளின்
நேரடிப் போட்டியாளர் ஆகக் கருதுகின்றன.
இறப்பை அதனாலேயே
உன்னதப் படுத்துகின்றன.
பேய்களின் அதி அற்புதமான குணம்
என்றாவது ஒருநாள் தாங்கள் யார்
என்பதை அவை வெளிப் படுத்தி விடுகின்றன.
என்பது தான்.
பேய்கள் உண்மையில் மிக நேசிக்கப் பட வேண்டியவை.
அதற்கு நாம் பேயாக வேண்டும்.
குமரகுருபரன் கவிதைகள்

இதே போல் அவ்வப்போது குமாரின் பக்கங்களில் வரும் கவிதைகளைப் படிப்பதுண்டு. மிக அருமையான கவிதைகள். அதில் நிலையாமையைப் பேசியவையே அதிகம். அவை அப்போது என்னை யோசிக்க வைத்ததை விட இப்போது அதிகம் யோசிக்க வைக்கின்றன. ஒரு ஞாயிறு இரவு உங்கள் மறைவு பற்றிய செய்தி அதிரச் செய்தது.  மறுநாள் அதிகாலையில் கவிதாவிடம் கேட்கத் துணிவில்லாது ப்ரவீண்குமார் லியோவிடம் தொலைபேசியில் இச்செய்தியைக்  கேட்டபோது வருத்தமாயிருந்தது.  நீங்கள் மாடிப்படிகளில் இறங்க இறங்க ஓரிரு நிமிடங்களில் உங்கள் மனம் தழுவ மரணம் காத்திருந்தது குரூரம்.

////குமரகுருபரன் கவிதைகள் - முக்கிய அறிவிப்பு.
************************************
யாரும் யாருடனும் இல்லை
இனிய கீதம் ஒன்று காற்றில் தவழ்ந்து வருகிறதைப்
போல் ஆரம்பமும் முடிவும் அற்றவை தீர்மானிக்கிற
பொழுதுகளில் நிரம்பி வழிவது ஒருத்தருக்கொருத்தர்
நிகழ்த்தும் துரோகங்கள்.
அவை உண்மையில் அப்படி ஆரம்பித்திருக்காது
வேறொன்றும் இல்லை எனும்போது அப்படியும்
சொல்லிக் கொள்ளலாம்.
சொல்வதை யாரிடம் சொல்வீர்கள்
ஒரு மரத்தைப் போல கற்புடன் யாரும் இங்கில்லை
வேறொரு மனதின் வீச்சத்துடன்
நம்மை எல்லாரும் நெருங்கி அணைக்கிறார்கள்
அது தவறென்று சொன்னால்
வாசமற்று உதிர்வீர்கள்
எப்படியெல்லாம் வருகிறது வாழ்க்கைக்கான அவசியம்
தூரப் போனால்
எல்லாம் சரியாகும்.
யாரேனும் அருகில் இருக்கிறார்களா
என்பதைச் சோதிக்கும் போது
நாம் இறந்துவிடுகிறோம்.
வானத்தில் மின்மினி கண்ணசைக்கும்போது
இரவை ஒரு பொழுதும் கடக்க முடிவதில்லை
அவை எதுவும் நமக்கானதும் இல்லை.
கண்மூடி உறங்குகையில் எதுவுமே இல்லை
இதைப் பொய் என அறிவிக்கவாவது
யாரும் யாருடனும் இருக்கிறீர்களா?///


-- வேறொரு மனத்தின் வீச்சம் என்ற வரி இந்தக் கவிதையை எங்கேயோ கொண்டுபோய்விடுகிறது., என்னவோ செய்தது..  தூரப் போனால் எல்லாம் சரியாகும், அவை எதுவும் நமக்கானது இல்லை, கண்மூடி உறங்குகையில் எதுவுமே இல்லை  என்ற வரிகள் நிம்மதி இன்மையை உண்டு பண்ணியவை. 
  
என்னைச் சார்ந்தவள் தினம் உருகி மருகிக் கலைந்து ஒழுங்காகும்போது நானும் நொந்து நூலாகிறேன். அவள் போலாகிறேன்.

////எங்கேயோ தவித்துக் காத்திருக்கிறது
இன்னமும் சொல்லப் படாத ஒரு சொல்.
எங்கேயோ குளிரில் விறைத்துக் கொண்டிருக்கிறது
இன்னமும் எழாத ஒரு சூரியன்
எங்கேயோ பாலையில் புதைந்து கொண்டிருக்கிறது
இன்னமும் பறவாத ஒரு பறவை
எங்கேயோ வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது
இன்னமும் உடையாத ஒரு நதி
எங்கேயோ பிச்சை உணவருந்திக் கொண்டிருக்கிறது
இன்னமும் பற்றவைக்கப் படாத ஒரு அடுப்பு.
எங்கேயோ ஒப்பேற்றிப்பாடிக் கொண்டிருக்கிறது
இன்னமும் எழுதி முடியாத ஒரு இசை.
எங்கேயோ மௌனத்தில் அரற்றிக் கொண்டிருக்கிறது
இன்னமும வாழாத ஒரு துயரம்.
எங்கேயோ தனிமையைத் தேடிக் கொண்டிருக்கிறது
இன்னமும் சேராத ஒரு துணை.
எங்கேயோ இறந்து கொண்டிருக்கிறது
இன்னமும் பிறக்காத ஒரு பிறப்பு.
மறுபடியும்
சிகரெட் பற்றவைத்து
ஒரு காபி அருந்திக் கொண்டே
நீங்கள் உங்களைத் துவங்குகிறீர்கள்
சரியா?
ஆமென்.
குமரகுருபரன் கவிதைகள்////

என்னை அசைத்தவை இம்மூன்று கவிதைகளும். அதிலும் வாழாத துயரும் சேராத துணையும்  வலி கொள்ள அடிக்கிறது . நோவைச் சுமந்த மனம். என்னுடைய  நம்பிக்கையான கடவுளர்களிடம் கேட்கின்றேன் ஏன் இவ்வளவு சீக்கிரம் அவரை அழைத்தீர்கள் என்று. ஒரு புல்புல்லைப் போலப் பறந்து கொண்டிருந்த கவிதாவை ஏன் கண்ணீர்ப் பறவையாக்கினீர்கள்.

'காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ


இதுதானே உங்கள் முகநூல் பக்கத்தில் இருக்கும் வரிகள் குமார்.  காண்பனவற்றிலெல்லாம் உங்களைக் கண்டு, தினம் உங்களோடு உரையாடிக்கொண்டு, உங்கள் நினைவைச் சுமந்திருக்கும் கவிதா நீங்களாகவே ஆகிவிடுவாள் போல. கண்ணீருக்குப் பதிலாகக் கவிதையாய் வடிக்கிறது அவள் மனம்.

அதிரூபன் என்று உங்களை அவள் எழுதும்கணம் இன்னமும் அவள்  உங்களையே சுற்றும் சிறகுகள் பதித்த குட்டி தேவதையாக எனக்குக் காட்சி அளிக்கிறாள். மனசெங்கும் உங்களை நிரப்பி இருக்கும் அவளை முகநூலில் பார்க்கும்போதெல்லாம், உங்கள் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம் தோன்றுகிறது. ஆம் நீங்கள் இருவரல்ல. என்றுமே பிரிவற்ற ஒருவர்தான் 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...