எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 ஜூன், 2014

பாசங்கள் பலவிதம் (அ) பகைவனுக்கருள்வாய்..

பாசங்கள் பலவிதம் (அ) பகைவனுக்கருள்வாய்..
*******************************************************************************
( பகவான் மகாவீர் அகிம்சா சங்கத்தின் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது. )

கருணாமூர்த்தி துடித்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் கண்ணீரும் கம்பலையுமாக அவன் மனைவி சாந்தி. அவர்களது செல்வக் குழந்தை – மூன்று மாதமே நிரம்பிய அருணை அந்தப் பெரிய ஆண்குரங்கு தூக்கிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வேலைக்காரர்களுக்குக் கையும் காலும் செயல்படவில்லை. கருணாமூர்த்தியின் அப்பா குமரேசனோ புலம்பிக் கொண்டிருந்தார்.


பண்ணையாரான குமரேசன் தன் மகனுக்குக் கருணாமூர்த்தி என்று ஏந்தான் பெயர் வைத்தாரோ..சின்னப் பிள்ளையிலிருந்து அவனிடம் வளர்ந்ததெல்லாம் முரட்டுத்தனமும் விலங்குகளைச் சித்திரவதைப்படுத்துவதும்தானே தவிர கருணை அல்ல. தந்தையின் கண்டிப்பில் வாழ்ந்த அவனுக்குத் தாயின் அரவணைப்புக் கிட்டாததுதானோ என்னவோ..




சிறுவயதில் நாய்களையும் மைனாக்களையும் குருவிகளையும் கவண்கல்லை விட்டெறிந்து சுலபமாகக் கொல்லப் பழகியிருந்தான்.  எந்தப் பறவையாயிருந்தாலும் இரக்கமின்றிக் கொன்று குவிப்பதில் தீரன். மணமானபின்பும் இது மாறவில்லை. மேலும் அதிகரித்தது.


அவன் மனைவி ரொம்ப இரக்கமுள்ளவள். ஈ எறும்புக்குக்கூடத் தீங்கு நினைக்க மாட்டாள்.. அவளிடம் தனது வீரத்தனத்தைக் காண்பிக்க வேண்டியே ஏகப்பட்ட முயல்களையும் மான்களையும் கையில் கிடைக்கும் அனைத்தையும் வேட்டையாடிக் கொண்டு வந்து நண்பர்களுக்கு விருந்து வைப்பான்.


ஒவ்வொரு முறையும் அவள் அவனிடம் வேட்டைக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சும்போது ”கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றிச் சாகடிப்போம் என்று கேலியாகக் கூறிச் சிரிப்பான். கொன்றால் பாவம் தின்றால் போச்சு ” என்று சமாதானம் சொல்வான்.


இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஒரு குட்டிக் குரங்கை அதன் தாயிடம் இருந்து பிரித்து எடுத்து வந்து ஆராய்ச்சிக் கூடத்துக்கு நல்ல விலைக்கு விற்று விட்டான். இது போல அவன் பலமுறை பல பறவைகளையும் சுட்டு வந்து தன் நண்பர்களுக்குப் பரிசளித்திருக்கிறான்.


அவன் இப்படிச் செய்தபோதெல்லாம் அவனைத் திருத்த முயன்ற சாந்தி அவன் அந்த இளம் குரங்கை பிடித்துக் கொண்டு வந்த போது சத்யாக்கிரகம் பண்ணியும் அவன் கேட்கவில்லை.


இப்போது அவனுடைய மகனை அவன் எந்தக் குரங்கிடமிருந்து குட்டியைப் பிரித்துக் கொண்டுவந்தானோ அந்தக் குரங்கின் கணவனாகிய ஆண் குரங்கு உறுமலுடன் குழந்தையைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தது.


கருணாமூர்த்தியால் தாளமுடியவில்லை. உள்ளே ஓடினான். வெளியே வரும்போது கையில் வேட்டைத் துப்பாக்கி. அவனுடைய உள்ளம் அந்தக் கணத்தில் வெறிப்பிடித்துக் கொண்டது. மனம். “ என் மகன்.. என் மகன்.. என் வாரிசு.. என் ரத்தம் ..” எனப் பாசத்துடன் கதறியது.


சாந்தி படாரெனப் பாய்ந்து அவன் கரத்தைப் பிடித்துக் கொண்டு., ‘ வேண்டாம் தப்பித் தவறி குண்டு என் மகன் மேல் பட்டு விட்டால்..” என்று அலறினாள்.


தூரத்திலிருந்து ஒரு பெண் குரங்கு வேகமாகப் பாய்ந்து வந்து ஆண்குரங்கின் அருகில் சென்று அதன் கரத்திலிருந்த குழந்தையைப் பிடுங்கியது. ஷாந்தி மூர்ச்சித்து விழுந்து விட்டாள்.


இப்போது ஆண் குரங்கு பலமாக உறுமிவிட்டுக் குழந்தையை இறுக்கமாகப் பற்ற, பெண் குரங்கு இழுக்க, பெண்குரங்குக்குப் பலமாகக் காயம்பட்டு ரத்தம் கொட்ட, முடிவில் குழந்தையைப் பறித்துக் கொண்டுவந்து இவளருகில் போட்டுவிட்டுத் தள்ளாடித் தள்ளாடிச் சென்று சிறிது தூரத்தில் கால் நொடித்து விழுந்து முனகி உயிரை விட்டு விட்டது.


கருணாமூர்த்திக்குப் பொட்டிலறைந்தது போலிருந்தது. தான் பிடித்த குட்டிக் குரங்கின் தாய் தன் குழந்தையைப் பெற்றுத் தந்ததை – தன்னிடம்கூட இல்லாத மன்னிக்கும் மனப்பான்மை அதனிடம் இருந்ததைக் கண்டு வெட்கித் தலைகுனிந்தான்.


என் பிள்ளையைத்தான் நீ பிடித்துக் கொண்டு சென்றுவிட்டாய் ஆனால் உன் பிள்ளையை நான் காப்பாற்றி விட்டேன். விலங்கான எனக்கும் பாசம் நேசம் உண்டு என்று அந்தக் குரங்கு கூறுவதுபோல உணர்ந்தான். அடுத்த நிமிடம் அவன் கையிலிருந்த வேட்டைத் துப்பாக்கி காட்டை நோக்கிப் பறந்தது.


டிஸ்கி :- ’84 ஆம் வருட டைரியிலிருந்து.

5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...