எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 செப்டம்பர், 2012

போபால், சிவகாசி மற்றும் கூடங்குளம்.

போபால் விஷவாயுவில் எந்தப் பெண்ணும் சாகவில்லை என சகோதரன் நியோ ஒரு இடுகையிட்டிருந்தார். அது பற்றி தன்னிலை விளக்கம் அளித்திருந்தேன்.

தற்போது சமூக அக்கறை இல்லாமல் சுயதம்பட்டம் மட்டும் அடிக்கும் பணக்காரப் பதிவர்களால் சமூகத்துக்கு என்ன பயன் என்று ஒரு சகோதரர் ( நிருபர்) முகநூலில் வினவி இருந்தார்.

சமூக அக்கறை என்பது என்ன.? சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி அக்கறை கொண்டு கருத்துப் பதிவு செய்வது. அது முகநூலாயினும் சரி, வலைத்தளமாயினும் சரி. உங்களுக்குக் கிடைத்த கருத்துக்கள் செய்திகளைக் கொண்டு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறீர்கள். அடுத்தவர் அவருக்குக் கிடைத்ததைக் கொண்டு பதிவிடுகிறார்.
ஒரே அலுவலகத்தில் இருந்தாலும் இருவரின் எண்ணப் போக்கிலும் விஷயத்தை அணுகும் முறையிலும் உங்களுக்குக் கிடைக்கும் நம்பிக்கையான தகவல்களின் அடிப்படையிலும் செய்திகளை மக்களுக்குத் தருகிறீர்கள். அதற்கு மேல் அதைப் பற்றித் துளிக்கூடக் கவலைப்படுவதில்லை. களத்தில் இறங்கிப் பணி புரிகிறீர்களா விஷயத்தைப் பகிரும் அனைவரும்.

இதில் நான் சமூக அக்கறையோடு இருக்கிறேன். மற்றொருவர் இல்லை. அவர் பணக்காரப் பதிவர் என்ற கண்ணோட்டம் கொண்டு ஒருவரைப் புண்படுத்துவது என்ன நியாயம். ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாய் கொடுத்து ஒரு இண்டர்நெட் செண்டரில் இருந்து யாரும் கருத்தைப் பதிவிடலாம்.

முகநூலில் பொதுவாக ஒரு வியாதி இருக்கிறது. அது நான் சொன்னேன் . எனக்கு சமூகத்தின்மீது பேரன்பும் பெரு அக்கறையும் இருக்கிறது. நீ சொல்லவில்லை. நீ சுயநலவாதி. உன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பாய் என.சமச்சீர் கல்வியில் நான் கருத்துச் சொல்லாததைப் பெரிதாக்கினதும் அப்படித்தான்.ஒருவர் வாயைக் கிளறி  அவரைச் சிக்கலில் மாட்டவிடுவது அல்லது வம்புச் சண்டைக்கு இழுப்பது, அதில் குளிர்காய்வது, பெருகி வருகிறது.

 அதில் பெரும்பாலோர் தங்களது அலுவலகப் பணிக்கான கம்ப்யூட்டரில் முகநூலில் நுழைந்து கருத்துப் பதிவு செய்பவர்களே. சொந்த வீட்டில் அமர்ந்து சொந்தக் காசில் சமூகத்தைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள் அல்ல. அந்தத் தகவல்களை சேகரிக்கவும் அலுவலகம் காசு கொடுக்கிறது. சம்பளம் கொடுக்கிறது. சம்பளமற்ற வெறும் அங்கீகாரத்துக்காக மட்டும் எழுதும் பதிவர்கள் அல்ல பெரும்பாலானவர்கள்.

நிற்க.

சிவகாசியில் 40 அறைகளில் உரிய பாதுகாப்பு வழிகள் ஏதுமின்றி, பட்டாசு தயாரிப்பதற்கான தகுதியற்ற தொழிற்கூடம் என்பதால் வெடி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளால் உரிமம் மறுக்கப்பட்ட தொழிற்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

இதற்கு யார் காரணம். நெருக்கடியான அறைகளோடு கூடிய உரிமம் மறுக்கப்பட்ட பட்டாசுத் தொழிற்சாலை செயல்படுவதைக் கண்காணிக்கவேண்டியவர்கள் கண்காணிக்காமல் விட்டுவிட்டதாலா. அப்படி என்றால் ஏன் கண்காணிக்கவில்லை. யார் காரணம், எது காரணம். என்று கண்டுபிடிக்கப்படவேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் அறிக்கையில்

///மிகவும் ஆபத்தான வெடிகளை செய்ய மனிதர்களை பயன்படுத்தாமல், இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். அப்போது பிழைப்பிற்காக இப்படிப்பட்ட ஆபத்தான தொழில்களில் ஈடுபடும் ஏழை, எளிய மக்களின் உயிர்களை காப்பாற்ற முடியும். அதைச் செய்யாமல் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு சில லட்சங்கள் நிவாரணமாக கொடுத்துவிட்டு திருப்தியடைந்துவிடக் கூடாது. உயிர்களுக்கு மதிப்பளிக்கும் நாடாக நாம் மாற வேண்டும். உயிருக்கு ஆபத்தான தொழில்களை செய்வதில் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். .///

பட்டாசு என்பது எல்லாம் நாங்கள் சின்னப்பிள்ளைகளாய் இருந்தபோது வெடித்தது. என்றைக்கு வடநாட்டில் குழந்தைத் தொழிலாளிகள் கண்ணாடி வளையல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுக் கொடுமை உறுகிறார்கள் எனத் தொலைக்காட்சியில் பார்த்தேனோ அன்றிலிருந்து கண்ணாடி வளையல்களே அணிவதில்லை. அது போல பட்டாசு எதுவுமே வாங்குவதில்லை. தீபாவளிக்கு சாஸ்திரத்துக்கு என்று கூட.

எல்லாரையும் பட்டாசு வாங்காதீர்கள் எனச் சொல்ல முடியாது. ஏற்றுமதிக்காக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதையும் ஒன்றும் சொல்வதற்கில்லை. அது போல மின்சாரம் தயாரிக்க 1988 ஆம் ஆண்டிலிருந்தே கூடங்குளத்தில் அணு ஆலைக் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.

உங்கள் மின்பகிர்வைக் குறைக்க ஏதேனும் முயற்சி செய்திருக்கிறீர்களா யாரும்? செல்ஃபோன், கம்ப்யூட்டர், மின் விசிறி, ஏசி இல்லாத அலுவலகம் உண்டா. ஏசி அறையில் உக்கார்ந்து கொண்டு நான் இந்தத்  திட்டத்தை எதிர்க்கிறேன் அந்தத் திட்டத்தை எதிர்க்கிறேன் எனக் கருத்துப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் . களப்பணியில் இறங்கி அங்கு இருக்கும் மக்கள் நடுவே அமர்ந்துவிட்டு சொல்லுங்கள்.

சி. ஜெயபாரதன் கனடா , திண்ணையில் சொல்கிறார்.

 ///அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப் படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிர்ப்பந்த விதி இதுதான்: பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும். வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும். செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை. பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள். ///

நான் சமூகத்துடன் இயைந்து வாழ்பவள். சில மக்களின் கல்லறை மேல்தான் பலரின் வாழ்வு ஒளி விட வேண்டும் என்பது என் கருத்தல்ல. நான் கேட்க நினைக்கும் கேள்வி தற்போது இயங்கும் கல்பாக்கம் அணுநிலையத்தையும் எதிர்ப்பாளர்கள் அணுகாதது ஏன். அங்கே விபத்து பயமில்லையா. அங்கிருப்பவர்களும் மக்கள்தானே. அதையும் நிறுத்தவேண்டியதுதானே.

ஒரு விஷயத்தின் அனைத்துக் கோணங்களையும் தெரிந்து கொண்டு கருத்துப் பதிவு செய்வது நலமாயிருக்கும். திமுக. அதிமுக, தலித், ஆதிக்கசாதிகள், ஆரியன், திராவிடன் என்ற பொதுக்கருத்துக்களை வைத்து எதிரிகளைப் போலச் சண்டையிடுவதை விட நல்ல கருத்துக்கள், நல்ல மனிதர்கள் எங்கிருந்தாலும் ஏற்று அல்லதை ஒதுக்கி வாழ்வதே என்னைப் பொறுத்தமட்டில் சிறந்தது. நடுநிலைவாதி என்பது முகநூலில் சிலர் கிண்டலடிக்கும் ஒரு வார்த்தை. போகட்டும். யார் வாயிலும் விழாமல் எதையும் செய்யமுடியாது.

ஒரு மின்வாரியத்துறை உயர் அதிகாரி நண்பர் சொன்னார், இந்தத் திட்டம் செயலுக்கு வருமா என்று பாருங்கள் என்று. ஏனெனில் அதன் மூலம் கிடைக்கும் மின் அளவு, அதனால் ஏற்படப்போகும் பயன்கள், மற்றும் தொடர்ந்து அதற்கான யுரேனியம் சப்ளை, மற்றும் அதன் பின் அதன் கழிவின் உபயோகம் எனப் பலதும் பகிர்ந்தார். இந்தியா வல்லரசாகி தன் வல்லமையை நிரூபிக்க பல தடைகள் இருக்கின்றன என்றார். இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ மக்களுக்கான நல்லரசாகவே இருக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

4 கருத்துகள்:

  1. அக்கா, எனக்கும் சேர்த்து எழுதியதற்கு நன்றி.

    //மின்சாரத்தயாரிக்க 1988 ஆம் ஆண்டிலிருந்தே கூடங்குளத்தில் அணு ஆலை தொடங்கப்பட்டுள்ளது//

    இது ஆலை கட்டுமானம் துவங்கப்பட்டுள்ளது என்று வந்திருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு

  2. //சமூக் அக்கறை சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்கள் பற்றி அக்கறை கொண்டு கருத்துப் பதிவு செய்வது. அது முகநூலாயினும் சரி, வலைத்தளமாயினும் சரி. உங்களுக்குக் கிடைத்த கருத்துக்கள் செய்திகளைக் கொண்டு ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறீர்கள். அடுத்தவர் அவருக்குக் கிடைத்ததைக் கொண்டு பதிவிடுகிறார்.//

    நீங்க் அழகான பாரதி கவிதை ஒன்றை இட்டதை
    நான் எனது தளத்தில் சேர்த்து
    என் நண்பர் வலைக்குழாம் கண்களுக்குக்
    கொண்டு சென்றிருக்கிறேனே !!

    இன்னமும் நீங்க்ள் கவனிக்க வில்லையே !!!

    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  3. திருத்திட்டேன் ஹுசைனம்மா. நன்றி தெளிவுறுத்தியமைக்கு.

    நன்றி சுப்புரத்தினம். பார்த்துவிட்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி.:)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...