செவ்வாய், 11 செப்டம்பர், 2012

மல்லிகை மகள் குழந்தைக்கவிதைகள்

வெளியேறும் நேரம் வந்தும்
வெளியேறவில்லை நீ
வெட்டித்தான் பிரித்தார்கள்
உன்னையும் என்னையும்.
******************************

எத்தனை விளம்பரங்கள்
எத்தனை உடைகள் கண்டாலும்
அத்தனையிலும்
உன்னைப் பொருத்தி
அழகுபடுத்தி ரசிக்கிறது மனது.********************************

பள்ளி செல்ல
நீ அழுவாயோவென
நான் கண் கசிந்தது பார்த்து
என் கண் துடைத்துச்
செல்கிறாய்.
வாய் பொத்திச் சிரிக்கிறது
காம்பவுண்டுக் கதவு.

*****************************

அதேதான் வேண்டுமென்று
பிடிவாதம் பிடித்தழுகிறாய்.
அதைக் கொடுத்ததும்
அடுத்தது கேட்டு.

******************************

நீயாகப் பாடுவாய்.
பாடச் சொன்னால்
வாய் மூடிக் கொள்வாய்.
வாய் மூடச்சொன்னால்
பாடுவாயா.

*********************************

குறும்புக்காய்
அடி வாங்குவாய்.
அடிக்கும்போதே
வலிக்கும் எனக்கும்.

********************************

புறங்கை கட்டிப்
பெரிய மனிதனாய்ப்
பார்ப்பாய்.
சின்னப் பிள்ளையாவேன்
நான்.

***********************************

டீச்சர் விளையாட்டு
நீ விளையாடும்போதெல்லாம்
உன்னைக் கற்கும்
மாணவியாய் நான்.

**************************************

வீட்டுப் பாடங்களும்
உணவு டப்பாக்களும்
ஓய்வெடுக்கின்றன
உன் ஞாயிறுகளில்.

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் டிசம்பர் 2011 மல்லிகை மகளில் வெளிவந்தன. 


4 கருத்துகள் :

வரலாற்று சுவடுகள் சொன்னது…

அனைத்தும் அருமை அக்கா!

ராமலக்ஷ்மி சொன்னது…

அத்தனையும் அருமை:)!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி ராமலெக்ஷ்மி.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...