திங்கள், 3 செப்டம்பர், 2012

இரை தேடி.. தேவதையில்..

அலுவலகங்கள் மாறுவதும்
வேலைகள் மாறுவதும்
ஊர்கள் மாறுவதும்
புதிதல்ல அவளுக்கு.

அங்கி., காவி அணியாமல்
சிலுவை சூலம்
சுமப்பதைக் காண்பிக்க
விரும்பாதவள் அவள்.


ஊதுபத்தியாயோ
மெழுகுவத்தியாயோ
சித்தரிக்கப்படுவதும்
ரசிப்பதில்லை அவளுக்கு.

இரண்டு வேலைக்கு
இடைப்பட்ட நாட்கள்
நீண்டு நெடியதாகி
கிளை முளைத்து விடுகின்றன.

முதல் வேலையை விட்டவுடன்
அடுத்த வேலையில் சேரும்வரை
நாட்கள் முட்கொம்புகளாய்
முன்னே பின்னே தள்ளுகிறது அவளை.

நண்பர்களை , உறவுகளைத்
தூக்கிப் போடுவது போல
விடுதலை உடையதாய் இல்லை
வேலையைத் தூக்கிப் போடுவது.

தலைக்கு மேலே இல்லாத
கிரீடத்தைச் சுமப்பதும்
க்ரீடம் இல்லையென்று
தேடுவதுமாயிருக்கிறது பணிச்சுமை.

வேலையற்று வெறிக்கும்
பாலைப் பகல்களைக் கடக்கும்
சுமைதாங்கிக் கற்களைப் போல
நிற்கின்றன நாட்கள்.

வேலைகள் சுவாரசியமானவை
ஊதியங்கள் அப்படியல்ல.
தன்மானத்தை அகங்காரத்தை
விலை பேசுகின்றன அவை.

அலுவலக க்ரோட்டன்சுகளைப் போல
அழகுக்கான போன்சாய்களைப் போல
அண்டாவின் பூக்களைப் போல
உலவ முடிவதில்லை அவளால்.

பேசமுடியாத போதெல்லாம்
வேலையைத் தூக்கி எறிந்து
வெளியேறி இருக்கிறாள்..
தன்னம்பிக்கையோடு அவள்..

வேலை தெரியாதவள்,
வேலை செய்யாதவள்
என்பதை விடத் துன்புறுத்துவது
விட்டுக்கொடுத்துப் போகத்தெரியாதவள் என்பது.

கூடுகளை வனையும் பறவைகளுக்கு
ஊதியங்கள் பொருட்டில்லை என்றாலும்
அவள் அடுத்த வேலைகளைத்
தொடர்ந்து கொண்டே இருக்கிறாள்
குஞ்சுகளுக்கான புழுக்கள் தேடி.

டிஸ்கி:- இந்தக் கவிதை நவம்பர் 16-30, 2011  தேவதையில் வெளிவந்தது.

4 கருத்துகள் :

வரலாற்று சுவடுகள் சொன்னது…

//
வேலைகள் சுவாரசியமானவை
ஊதியங்கள் அப்படியல்ல.
தன்மானத்தை அகங்காரத்தை
விலை பேசுகின்றன அவை.
//

அருமையான வரிகள் அக்கா!

இன்று தான் கவனித்தேன் 500 பின்தொடர்பாளர்களை கடந்திருக்கிறீர்களே, இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா :)

அமைதிச்சாரல் சொன்னது…

இரை தேடுவதென்பது வெளியிலிருந்து பார்க்கறப்ப எவ்ளோ இலகுவா தெரியுதோ அவ்வளவு கடினம் உள்ளிருந்து அனுபவிப்பது. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் தேனக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றிடா சாந்தி.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...