எனது நூல்கள்.

புதன், 1 ஆகஸ்ட், 2018

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாகித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.


கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாஹித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.

காரைக்குடி மலர் ஹோட்டலின் செண்பக அரங்கில் கடந்த 28. 7. 2018 ஞாயிறு மாலை கம்பன் அடிப்பொடியின் 37 ஆவது புகழ்த்திருநாள் நடைபெற்றது.  கம்பன் கழகத்தார் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் காரைக்குடியைச் சேர்ந்த இரு சாஹித்ய அகாதமி விருதாளர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.


பால சாஹித்ய அகாதமி விருதை முனைவர் கிருங்கை சேதுபதி அவர்களும், யுவ புரஸ்கார் விருதை டாக்டர் சுனில்கிருஷ்ணன் அவர்களும் பெற்றதற்காக நடத்தப்பட்ட இவ்விழாவில் முத்து பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள்.

அரு வே மாணிக்கவேலு தலைமையுரை நல்க, கிருங்கை சேதுபதி அவர்கள் சிறப்புரை ஆற்ற, சேதுபதி அவர்களின் நூல்பற்றி அழகப்பா பல்கலையின் தமிழ்த்துறை உயராய்வு மையத்தலைவர் முனைவர் செந்தமிழ்ப்பாவை அவர்களும், சுனில் கிருஷ்ணனின் நூல் பற்றி முனைவர் மா சிதம்பரம் அவர்களும் விரிவுரை ஆற்றினார்கள்.

சேதுபதி சாரின் சிறப்புரையைத்தான் தவற விட்டுவிட்டோம். செந்தமிழ்ப் பாவை அவர்கள் சேதுபதியின் குழந்தைகளுக்கான கவிதைகளை சிறப்பித்துக் கூறினார். அதில் மேகம் நீரைக் குடித்து மழையாய்ப் பொழிவது இயற்கையின் சுழற்சியைக் கூறுவது போல, குழந்தையின் புத்திசாலித்தனமான உரையாடல்களை அவர் கவிதையாக்கி இருக்கும் விதம் பற்றி சிலாகித்தார். மேலும் குழந்தை கூறும் உறுதி மொழிகள் ஆச்சர்யப்படுத்தின.  

சிதம்பரம் அவர்கள் சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை பற்றியும், கூண்டு கதை பற்றியும், பேசும் பூனை பற்றியும் கூறியவை சிந்திக்கத்தக்கன.

சுனில் கிருஷ்ணன் ஏற்புரை நல்கினார். அதில் மரபான படிமங்கள், தொன்மங்கள் பற்றியும் நவீன கதைகள் எப்படி அவற்றோடு கை கோர்த்தன என்றும் விளக்கினார். நீலகண்டத்தை எதார்த்தத்தோடு அழகாக உவமித்தார்.  மதங்க நர்த்தனம் ,பிணைந்த நாகங்கள், ஆகியவை கொண்டு காலம் காமம் ஆகிவற்றை ஒரே படிமத்தில் கொண்டுவந்த அந்தக் கலைஞனைப் பாரட்டினார்.  

நவீன இலக்கியம் மரபிலக்கிய மேடையில் பாராட்டப்படுவது இதுவே முதல் முறை அதுவும் இங்கேயே இப்போது நடந்ததே முதல் முறை, இது எவ்வளவு விஷயங்களைக் கடந்த கடினமான விஷயம் என்றும், ஒரு நல்ல முன்னெடுப்பு என்று பாராட்டினார். பல நவீன எழுத்தாளர்கள் கம்பன் பற்றி பேசி இருப்பது பற்றியும் ( ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ) குறிப்பிட்டார்.

காரைக்குடி புத்தகத் திருவிழாவில் அறிமுகமான சுனில் கிருஷ்ணன் மரப்பாச்சி இலக்கிய வட்டம் என்றொரு அமைப்பை நடத்துகிறார். அது மாதந்தோறும் காவேரி மருத்துவமனையில் கடைசி ஞாயிறு அன்று கூடுகை நடத்துகிறது. அதில் முன்னணி மருத்துவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், பங்கெடுக்கிறார்கள். 

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் நவீன கதைகள், நவீனக் கதைகளின் கருப்பொருள்கள் விவாதப் பொருளாகின்றன. அதில் என்னையும் இணைத்திருக்கிறார். ஒரு மீட்டிங்குக்குத்தான் இதுவரை சென்றிருக்கிறேன். மிச்சம் எல்லாம் வாட்ஸப்பிலேயே பதிந்து விடுகிறேன்.
J  


அக்குழுவில் இடம் பெற்றிருக்கும் நண்பர் நாராயணன் அவர்களும் நானும் நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பாராட்டச் சென்றிருந்தோம். பொன்னாடையைக் கையில் கொடுத்துப் பாராட்டி விட்டு அவரது நூலை வாங்கி வந்தேன். படித்துவிட்டு பகிர்கிறேன். வாழ்த்துக்கள் சுனில் & சேதுபதி சார். வாழ்த்துக்கள் கம்பன் கழகத்தாருக்கும்.

2 கருத்துகள் :

Balasubramanian Munisamy சொன்னது…

நிகழ்ச்சி் குறித்த பதிவும் படங்களும் அருமை தேனம்மை.கம்பன் கழகத்துக்கு நன்றிகள்.தேனுக்கு பாராட்டுகள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி பாலா.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...