எனது புது நாவல்.

சனி, 11 ஆகஸ்ட், 2018

பூக்கூடையும் முறைமாமனும்.

கூடை கூடையாய் இயற்கை சேமிப்போம்.
கூடி வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்தியபொருள்தான் கூடை. சற்றேறக்  குறைய 30, 40 ஆண்டுகளுக்கு முன் சந்தைக்குச் செல்ல, கடைகளுக்குச் செல்ல மக்கள் கூடைகளைத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டுக்குடும்பத்துக்கு ஏற்றமாதிரி எல்லாவகையான பொருட்களையும் வாங்கித் தூக்கித் தலையிலும் சுமக்கலாம் இடுப்பிலும் சுமக்கலாம். பயணப் பொழுதுகளிலும் துணி மணி எடுத்துச் செல்லக் கூடைகளின் பயன்பாடு அதிகம். அன்றைக்குச் சந்தைக்குச் செல்பவர்கள் அங்கேயே விற்கும் விதம் விதமான கூடைகளையும் வீட்டு உபயோகத்துக்காக வாங்கி வருவார்கள்.
கூடை பின்னுவதை கூடை பின்னுதல்/முடைதல் என்றும். அதன் வாயை முடைவதைப் பட்டி பொத்துதல் என்றும் சொல்வது வழக்கு. கைப்பிடி உள்ள கூடைகள், கைப்பிடி இல்லாத கூடைகள் என்றும் இவற்றை வகை பிரிக்கலாம். ஒரேமாதிரி எண்ணிக்கையிலும் அளவிலும் ஓலையைப் பிரித்துக் கத்தியால் ஓரத்தை வழுவழுப்பாகச் சீய்த்துக் கொண்டு அல்லது ஒயர்களைப் பிரித்துக் கொண்டு காலில் வைத்து இடுக்கிப் பிடித்து பேஸ் எனப்படும் அடிமட்டத்தைக் கைகளால் கெட்டியாக இறுக்கிப் பின்னுகிறார்கள். அதன் பின் குறிப்பிட்ட பேஸ் முடிந்ததும் தட்டுச் சுற்றில் உயரமாகப்பின்னுகிறார்கள்.

இந்தக் கூடைகள் பொதுவா இயற்கையான பொருட்கள் கொண்டே அன்று தயாரிக்கப்பட்டன. மூங்கில், பிரம்பு, பனை ஓலை ஆகியன மூலப் பொருட்கள், சில சமயம் பனை ஓலையில் சாயம் தோய்த்துக் காயவைத்தும் பயன்படுத்துவார்கள்..
அதன் பின் மெல்லிய ப்ளாஸ்டிக் ஒயர்களில் பின்னப்படும் கூடைகள் பிரபலமாயின. அதே பட்டை ப்ளாஸ்டிக் ஒயரில் பின்னப்படும் கூடைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இவற்றில் ப்ளாஸ்டிக் மணி, ட்யூப் ஆகியன கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் சிவன் முடிச்சு, நெல்லிக்காய் முடிச்சு, பிஸ்கட் முடிச்சு என்று பல்வேறு விதமாகப் பின்னுகிறார்கள்.
ரெடிமேடாக மோல்டுகளில் போட்டு உருவாக்கப்படும் ரப்பர் சாப்பாடுக்கூடைகளும் புழக்கத்தில் உள்ளன. பட்டை, நரம்பு, ஸ்வஸ்திக் ஆகிய கூடைகளும் பின்னப்படுகின்றன. ரவுண்டு, ஓவல், அடுக்குக் கூடைகளும் பின்னப்படுகின்றன. க்ரோஷா ஒயர் மற்றும் க்ரோஷா நூல் கொண்டு தயாரிக்கப்படும் கூடைகள் சாப்பாட்டுக் கூடைகளாகவும் கைப்பைகளாகவும் பயன்படுகின்றன.
பனை ஓலை, மூங்கில் கூடைகள் பின்னும் போது வாய் மூடிக் கட்டுவதை பொத்துதல் என்பார்கள். சத்தகம் வைத்து அந்த ஓலையையே சின்னதாகச் சீவிச் சீவிக் கொடுத்து வாங்கி பட்டி பொத்துவார்கள். இப்படிப் பொத்தினால்தான் அவை கட்டுக்கோப்பாய் இருப்பதோடு பல்லாண்டுகாலம் வாய் பிரியாமல் உறுதியாய் உழைக்கும். சிலவற்றில் சாணி போட்டும் மெழுகி வைத்திருப்பார்கள்.
இக்கூடைகளின் நடுவிலும் சாயம் நனைத்த ஓலைகளைக் கொண்டு டிசைன் டிசைனாக பூ, மான், நாய்க்குட்டி போன்ற உருவங்களைப் பொத்துவார்கள். ஓரங்களை வெல்வெட் துணியால் அல்லது வுல்லன் நூலினால் கூட பட்டையாக சுற்றி சுற்றி மூடுவார்கள். இது ஒரு சிறந்த கைத்தொழிலாகவும் சிறுவாட்டுப் பணம் சேமிக்க உதவுவதாகவும் இருந்தது. நிறையப் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வருவாயையும் ஈட்டித் தந்தது.
ஒவ்வொரு வகையான கூடைகளும் ஒவ்வொரு உபயோகம். இதில் மூங்கிலில் செய்யப்படும் கூடைகள் மண் அள்ளிக் கொட்டவும் பயன்படும். பிரம்பு கூடைகள் காய் வாங்கக் கொண்டு செல்ல, பிற பொருட்களைச் சுமந்துவரப் பயன்படும். சாலை ஓரங்களில் ஆளுயரக் கூடைகள், கலர்க்கூடைகள், வலைக்கூடைகள் ஆகியவற்றை விற்கிறார்கள்.
கொட்டான் எனப்படும் கூடைகள் பலவகைப்பட்டவை. அதில் மெல்லிய சிறிய கொட்டான்கள் மாவிளக்கு, உப்புமா, முறுக்கு போன்றவை செய்ய அரிசி, பருப்பு களைந்து நீர் வடியவைக்கப் பயன்படும். ஓட்டை உள்ள பிரம்புக் கொட்டான்கள் கீரை, காய்கறி  போன்றவை அலசி வைக்கவும் பயன்படுத்துவார்கள்.
சதுரக் கொட்டான்கள், செவ்வகக் கொட்டான்கள், வட்டக் கொட்டான்கள், முக்கோணக் கொட்டான்கள்  என்று பலவகை உண்டு. கிடைமட்டமாக இருக்கும் செவ்வக அல்லது சதுரக் கொட்டான்களின் நடுவில் திருகை எனப்படும் இயந்திரத்தை வைத்துக் கையாலேயே திருகையைச் சுற்றி உப்புமாவுக்கு உடைப்பார்கள். காய்கறி வைக்கப் பயன்படும் கொட்டான்களும் கிடைமட்டக் கொட்டான்களே.
உழைக்கும் மகளிர் பயன்படுத்தும் சில சோற்றுக் கொட்டான்கள் வலுவானவையாகவும் உயரமானவையாகவும் இருக்கும். இவற்றில் பலகாரம் போன்றவற்றையும் அக்காலங்களில் வைப்பார்கள். படைப்பு, பூசை போன்றவற்றில் இக்கொட்டான்களில் காய்கறி, சாதம் போன்றவற்றைக் கொட்டி வைப்பார்கள்.
உயர்தர ஸ்டார் ஹோட்டல்களில் ரூமாலி ரொட்டி, நான், பராத்தா, சப்பாத்தி, போன்ற வட இந்திய உணவு வகைகளை டிஷ்யூ பேப்பரில் சுற்றி வைக்க பிரம்புக் கூடைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
கல்யாண விருந்துகளில் சாதம் வடிக்கப் பயன்படும் கூடைகள் சாதக்கூடைகள் என்பார்கள். அவை சிறிது கலகலப்பாகக் கட்டப்பட்டிருக்கும். சந்தைக்குச் செல்லும் பெண்கள் பழம் விற்கும் பெண்கள் தலையில் சும்மாடு வைத்து அதன் மேல் காய்கறிக் கூடைகளில் காய் பழத்தைச் சுமந்து வருவார்கள்.
வக்கூடு எனப்படும் கூடைக்கு மூடியும் கைப்பிடியும் உண்டு. இது கெட்டிப் பிரம்பு, மெல்லிய பிரம்பு அல்லது சடப்பிரம்பு கொண்டு பின்னப்படுவது. கைப்பிடியையும் மூடியையும் கூட பிரம்பிலேயே அமைத்திருப்பார்கள்.  துணி மணிகள் , குழந்தைகளுக்கான பொருட்கள், மருந்துகள் எடுத்துச் செல்லப் பயன்படுவது.
பால் கூடை என்பது குழந்தைகளுக்கான பால்பாட்டில், ரப்பர், தண்ணீர் பாட்டில், பால் பவுடர், துண்டுகள், ரப்பர், ஆகியன கொண்டு செல்லப் பயன்படுத்துவார்கள். மருந்துக்கூடையில் குழந்தைகளுக்கான மருந்துகள் வைத்திருப்பார்கள். கோயிலுக்குச் செல்லும் அநேக பெண்கள் விளக்குப் போட திரி, தீப்பெட்டி, எண்ணெய் கொண்ட விளக்குக் கூடைகளையும்  பூ, பூஜைப் பொருட்கள் கொண்ட பூஜைக்  கூடைகளையும், அர்ச்சனைக் கூடைகளையும்  கொண்டுசெல்வார்கள்.
வீடுகளில் பிரம்பில் செய்யப்பட்ட பூக்கூடை, பழக்கூடை ஆகிய சாப்பாட்டு மேசையையும் வரவேற்பு மேசையையும் அலங்கரிக்கப் பயன்படுகின்றன. கூடை சேர், மோடா எனப்படும் பிரம்பு ஸ்டூல் ஆகியன பிரம்பு கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அழுக்குத் துணிகளைப் போட்டு வைக்கவும் கைப்பிடி மற்றும் மூடியுடன் கூடிய  உயரமான பிரம்புக் கூடைகள் பயன்பாட்டில் உள்ளன.  
குழந்தைகளைக் கூடையில் வைத்துத் தூக்கிச் செல்லும் பழக்கம் கர்ணனின் காலத்திலிருந்தே இருக்கிறது. இதேபோன்றதொரு கூடையில்தான் கிருஷ்ணரும் பிறந்ததுமே இடம் பெயர்ந்தார். பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் மூதாட்டி வந்திக்காக மண் அள்ளிக் கொட்டியதும் கூடையிலேதான். கோயில்களில் சேங்கைவெட்டுதல் திருவிழாவின் போது கூடைகளிலேயே மண்ணை அள்ளிக் கொட்டிக் கண்மாயின் கரையை உயர்த்துவார்கள்.  
வெளிநாடுகளில் இப்படிக் கூடைகளில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் பழக்கம் இன்னும் இருக்கிறது. எ பேபீஸ் டே அவுட் என்ற படத்திலும் இதைக் காணலாம். செல்லப் பிராணிகளையும் சிலர் கூடைகளில் சுமந்து ஊர்விட்டு ஊர் தூக்கிச் செல்கிறார்கள். ஃபேரீஸ் டேல்ஸில் காளான் சேகரிக்க இம்மாதிரிப் பிரம்புக் கூடைகளைக் கொண்டு செல்வதைக் காணலாம். நம்மூர் கிராமங்களில் கோழி போன்றவை இரவில் ஓடிவிடாமல் இருக்க அவற்றைப் பிடித்து மூங்கில் கூடையில் போட்டு மூடும் வழக்கம் இருக்கிறது. கோழிகள் அடைகாக்கவும் கூடைகள் பயன்படுகின்றன.
பொங்கல் போன்ற திருவிழாக்கள் முடிந்தபின் முறைமாமன் பறித்துத்தரும் ஆவாரம் பூ சேகரிக்கக் கூடையோடுதான் செல்வார்கள் பெண்கள். காணும் பொங்கல் திருநாளன்று சிதம்பரம் கோயிலில் கோலாட்டம் கும்மி அடித்து விளையாடும் கன்னிப் பெண்கள் கூடையோடு வந்து அதை நடுவில் வைத்துக் கும்மி அடித்துப் பாட்டுப் பாடி அதில் அரிசி, காய்கறிகள் வாங்கிச் செல்வார்கள்.
காரைக்குடிப்பக்கம் வீடுகளில் ஒவ்வொரு அறைக்கும் சாவிகள் பெரிது பெரிதாக இருக்கும். அவற்றைக்கூடைகளில் போட்டுத்தான் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். அதற்குச் சாவிக்கூடை என்று பெயர்.
வேவுக்கடகாம் எனப்படும் கூடைகள் கல்யாண சமயங்களில் பயன்படுத்துவார்கள். அந்தக்காலங்களில் பாட்டி வீட்டில் இருந்து பெண்ணுக்குத் தாய்மாமன் சீரும், திருமணமாகி பெண்ணின் வீட்டில் இருந்து மாமியார் வீட்டுக்குச் சீரும் இவ்வகைக் கொட்டான்களில் கொடுத்துள்ளார்கள். இதில் பச்சரிசியும் வெல்லமும், கத்திரிக்காய், தேங்காய் போன்றவையும் இருக்கும்.
திருமண சமயங்களில் சிலர் இதை வெள்ளிக்கூடைகளாகச் செய்து வைத்து வேவு இறக்குவார்கள். திருமணச் சீர் கொடுக்க கல்யாண வேவு, திருப்பூட்டிய வேவு, பெண்ணழைத்த வேவு, குழந்தை பிறந்ததும் விளையாட்டுப் பொட்டி வேவு, புதுமனை புகுந்ததும் வேவு எடுப்பது என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.
இதில் சிவப்போலைக் கொட்டான் என்பது மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இதில் பாக்குப் பணம் வைத்துத்தான் முறைகளைக் கொடுக்க வாங்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இன்றைக்குத் திருமண வீடுகளில் தாம்பூலப் பை கொடுப்பதைப் போல முக்கிய விருந்தினருக்கும் முக்கிய முறைகளுக்கும் சீர் கொடுக்க சிவப்போலைக் கொட்டானில் பணம், வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுப்பது அன்றைய நடைமுறை. இன்று இக்கொட்டான்கள் பின்னுவது அருகிவிட்டதால் கொடுப்பதும் அருகி விட்டது.
போழை எனப்படும் கூடைகள் சாமி வழிபாட்டுக்கு உரியவை. இவை சாமி வீடுகளில் உறியைப் போலக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்தப் போழைகள் கீழ்ப்பாகம் பெரிதாக உயரமாகவும் மேல்பாகம் சிறியதாக மூடியைக் கொண்டனவாகவும் இருக்கும்.
இந்தப் போழைகளில் ஒவ்வொரு வருடப் படைப்பின் போதும் முன்னோர்களுக்காக எடுக்கப்படும் புதுத்துணிகள் அலசி வைத்து இரவில் உணவோடு படைக்கப்பட்டு மறுநாள் கட்டி வைக்கப்படும். அடுத்த வருடம் முதல் வருடம் வைத்த துணிகளை எடுத்துவிட்டு அடுத்த வருடப் படைப்புத் துணிகளை வைப்பார்கள்.
கட்டிக் கொடுத்தபின் பொருளாதாரக் காரணங்களால் கணவர் வீட்டில் மிகவும் கஷ்டப்படும் பெண் மக்களுக்கு அவர்கள் தாய்வீட்டில் இருந்து அந்தக் காலத்தில்  பெண்ணின் தாய்மார்கள் கடகாம்கள் எனப்படும் வலிய கூடைகளில் அரிசி, பருப்பு, பயறு , வத்தல், வரளி, காய்கறி போன்ற தீஞ்சாமான்களைக் கட்டித் தலைமேல் வைத்துக் கொண்டுவந்து கொடுத்துச் செல்வார்கள் என்று  கேள்விப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கும் ரயிலில் கொய்யாப்பழம், வெள்ளரிக்காய் போன்றவை விற்கும் பெண்மணிகள் பிரம்பு அல்லது மூங்கில் கூடைகளில்தான் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள். இயற்கை சுழற்சியில் பலகாலம் தாக்குப் பிடித்தும் எங்கு போட்டாலும் சூழ்நிலையைப் பாழ்படுத்தாமல் மக்கிவிடக்கூடிய இந்தக் கூடைகளின் தொண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.  
கூடைகளோடு கூடி வாழ்ந்த நாம் இன்று நெகிழிப் பைகள், கூடைகள், போன்றவற்றுக்கு அடிமையாகிவிட்டோம். கூடைத் தொழிலும் முடங்கி வருகிறது. அப்படிப் பின்னப்படும் கூடைகளும் ப்ளாஸ்டிக், ரப்பர் போன்ற ஒயர்களால் பின்னப்படும் கூடைகளாக இருக்கின்றன.
ஷாப்பிங் மால், மளிகைக்கடைகள் வைத்திருப்பவர்கள் இயற்கை மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் கூடைகளை வாங்கி அதை உருவாக்கும் விற்பன்னர்களை ஊக்குவிக்கலாம்.
இயற்கைக்குக் கைகொடுப்போம். சுற்றுச்சூழலைப் பாதிக்காத பிரம்பு, மூங்கில், பனைஓலைக்கூடைகளை வாங்குவோம். சிறுதொழிலும் பெருகும். சுற்றுச்சூழலும் சீர்படும். கூடை கூடையாய் இயற்கையை சேமிப்போம்.

5 கருத்துகள் :

Puthiyamaadhavi Sankaran சொன்னது…

கூடைகளில் இத்தனை வகைகளா..! எத்தனைப் பயன்பாடுகள். இயற்கையுடன் வாழ்ந்த வாழ்க்கையை அந்த வாழ்க்கையின் அடையாளமாக இருந்த கூடைகளை எங்கே தொலைத்துவிட்டோம் என்ற கேள்வி எழுகிறது. மீட்டெடுப்போம் கூடைகளை மட்டுமல்ல நம் வாழ்க்கையையும். அருமையான பதிவு. ஒன்றுவிடாமல் தொகுத்திருக்கும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுதல்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

அம்மாடி... எவ்வளவு தகவல்கள்...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவர்களின் திறமைக்கே பலவற்றை வாங்கலாம்...

G.M Balasubramaniam சொன்னது…

நான் அரக்கோணத்தில் பள்ளியில் ஒன்பதுவயதுக்குள்ளிருக்கும் பனை ஒலையில் பாய் முடையக்கற்றிருந்தேன்கை வேலைஎன்று பாடம் என்மனைவி ப்ளாஸ்டிக் வயரில் அழகான் கூடைகள் செய்திருக்கிறாள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி புதிய மாதவி

நன்றி ஸ்ரீராம்

ஆம் டிடி சகோ

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் பாராட்டுகள் பாலா சார் :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...