எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

சிறப்பானதைக் கொடுத்த சபரி. தினமலர். சிறுவர்மலர் - 30.

சிறப்பானதைக் கொடுத்த சபரி
சாதாரணாமாகவே பிறருக்கு நாம் ஒன்றைக் கொடுக்க வேண்டுமென்றால் நல்லதையே கொடுக்க வேண்டும். அதுவும் அவதார புருஷனான இராமபிரான் வரப்போகிறார் என்றால் அவருக்கு சிறப்பானதைத்தானே கொடுக்க வேண்டும். அதனால் மரங்களிலிருந்து நல்ல பழங்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள் அந்த வேடுவப் பெண். ஓராண்டு ஈராண்டல்ல எட்டு வயதிலிருந்தே அவள் தினமும் அப்படி என்ன சிறப்பான பழங்களை சேகரிக்கிறாள் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ரிஷியமுகம் ஆசிரமம். அங்கே முனிபுங்கவர்கள் ரிஷிகள் வேதம் ஓதும் சப்தமும், ஹோமத்தின் புகையும் வானோங்குகிறது. இதுதான் சரியான இடம் என்று மதங்க முனிவரின் குடிலுக்கருகில் சென்று அமர்கிறாள் ஒரு சின்னஞ்சிறுமி. அவளுக்கு எட்டு வயதிருக்கும். காதோலைக் குருத்தணிந்து தலையை சேவற்கொண்டையிட்டு காலில் தண்டையயும் அரையில் சிற்றாடையும் அணிந்த அப்பெண்ணின் முகத்தில் தேஜஸ் ஒளிவிடுகிறது.
திருமண சமயம் வீட்டை விட்டு ஆசிரமத்துக்கு ஓடி வந்த அவளைத் தேடி அவளது வேடுவத் தந்தை வருகிறார். ”அம்மாடி பெண்ணே. உன் விருப்பத்துக்கு மாறா திருமணம் செய்யமாட்டோம். நீ ஆசைப்பட்டபடி எந்த ஆட்டையும் பலி கொடுக்காம ஆயிரம் ஆட்டையும் விடுதலை செய்து விட்டுட்டோம். நீ திரும்ப வீட்டுக்கு வா “ என்கிறார். மகளோ மறுக்கிறாள்.

அப்பெண்ணின் முகத்தில் இருந்த தேஜஸைப் பார்த்த மதங்கமுனிவர்  அவளது தந்தையிடம் அவள் ஒரு ஞானப்பெண் அவள் அங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறார். மகள் பிரிவால் வாடிய வேடுவத் தந்தையும் சாந்தியடைந்து அவளை அங்கேயே விட்டுவிட்டு மனநிறைவுடன் செல்கிறார்.
மதங்க முனிவர் பின்னொரு நாள் இராமர் அங்கு வரப்போகிறார் என்று உரைத்து அவளுக்கு ராமநாமத்தை உபதேசிக்கிறார். அவளும் தினமும் அந்த ஆசிரமத்தில் உழவாரப்பணி செய்து, இராம நாமம் ஜெபித்து இராமருக்காகக் காத்திருக்கிறாள்.

இராமர் வரும்போது எதையாவது கொடுக்க வேண்டுமே. அவளது அன்பின் பரிசாக அங்கே விளைந்த இலந்தைப் பழங்களை தினமும் பறித்து பறித்து வைக்கிறாள். சும்மாவா வைக்கிறாள். அதை எல்லாம் கடித்துக் கடித்துப் பார்த்து இனிப்பான பழங்களை மட்டுமே இலைத் தொன்னைகளில் வைக்கிறாள்.
ல்லாண்டுகள் கடக்கின்றன. சபரி முதுமை அடைந்துவிட்டாள். மதங்க முனிவர் மகாசமாதி அடைந்துவிட்டார். பல்வேறு முனி சிரேஷ்டர்கள் அங்கே தவம் செய்து வருகிறார்கள். ரிஷியமுகத்தில் ராமரின் வருகை நிகழ்ந்துவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள். அவரை சந்திக்க சபரி வெகு ஆவலாகக் காத்திருக்கிறாள்.
ந்துவிட்டது அந்த நாள். இராமர் தன் தம்பி இலக்குவன் பின் தொடர ரிஷியமுகத்துக்கு மதங்க முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தே விட்டார். அங்கேயே பக்கத்தில் அமைந்திருந்தது சபரியின் எளிய குடில். வைக்கோல் போர்த்திய குடிலில் சாணம் மெழுகி குளிர்ச்சியுடன் இருந்தது. செடி கொடிகளும் பூக்களுமாக அன்று மலர்ச்சியுடன் இருந்தது ஆசிரமம்.
தன் எளிய குடிலுக்கு வந்திருந்த அந்த அவதார புருஷரை “ராம ராம வந்தனம்” என்று முகமன் கூறி வரவேற்றாள் சபரி. அவள் மனமெங்கும் மகிழ்ச்சி நிரம்பி இருந்தது. அன்றைக்கும் அதிகாலையிலேயே சென்று பறித்து வந்து இலைத்தொன்னைகளில் நிரப்பிய இலந்தைப்பழங்கள் மணம் வீசுகின்றன.
அவற்றை எல்லாம் கைகளில் ஏந்தி எடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறாள் சபரி. அத்தொன்னைகளைக் கைகளில் வாங்கி மிகவும் மகிழ்வோடு உண்ண ஆரம்பிக்கிறார் அண்ணல். ஆனால் அவரது இளவலோ முகம் சுளிக்கிறார்.
’இதென்ன இந்த சபரி வேடுவப்பெண்  என்பது உண்மையாயிற்றே. இவள் கடித்துத் தின்ற பழங்களை எல்லாம் அண்ணனுக்குக் கொடுக்கிறாளே. அந்த எச்சில் பழங்களை அவரும் இன்னமுதம் போல வாங்கி உண்கிறாரே.’ என நினைக்கிறார்.
தன் தம்பி இலக்குவனின் சிந்தனை ஓட்டத்தைக் கண்ட அண்ணன் கூறுகிறார்.
“தம்பி இலக்குவா இந்தப் பழங்கள் சாதாரணப் பழங்கள் அல்ல. பல்லாண்டுகளாக நான் வருவேன் என்று காத்திருந்து தினம் தினம் சபரி அதிகாலையிலேயே வனம் சென்று பறித்து வருவாள். அவற்றுள் இனிப்பானவற்றை மட்டுமே கடித்து ருசி பார்த்து எனக்காகப் பொறுக்கி எடுத்துத் தொன்னைகளில் வைத்திருப்பாள். இதை ஓராண்டு ஈராண்டல்ல தனது எட்டாம் வயதிலிருந்தே நான் வருவேன் என்ற நம்பிக்கையில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்து சேகரித்து வருகிறாள்.
இன்றும் இம்முதிய வயதிலும் எனக்காக அவள் அதிகாலையில் வனத்துக்குச் சென்று தேர்ந்த மரங்களில் ஏறிப் பறித்து ருசித்து இனிப்பான இலந்தைப் பழங்களை எனக்காகப் பொறுக்கி வைத்திருக்கிறாள். அவளது மாசு மருவற்ற அன்பின் முன் அவை எனக்கு எச்சில் பழங்களாகத் தோன்றவில்லை.  அவளது அன்பின் பரிசாகத் தோன்றுகின்றன. ”என்று கூறுகிறார் ராமபிரான்.
அதைக் கேட்டதும் அன்பின் பரிசாகக் கிடைக்கும் அனைத்தும் பிரசாதமே என்று புரிகிறது இலக்குவனுக்கு. சிறப்பானதைக் கொடுத்த சபரி போல் நாமும் பிறருக்கு சிறப்பானதையே அளிப்போம் குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 3. 8. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி:- விடாமுயற்சிக்கு ஒரு பகீரதன் என்ற இதிகாச புராணக் கதையை அரும்புகளின் கடிதத்தில் பாராட்டிய காரைக்கால் வாசகி ஆர். மீனா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...