எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

தாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.


தாயைக் காத்த தனயன்.( வினதையைக் காத்த கருடன்.)

தாய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால் அதில் முதலிடம் வகிப்பது கருடன் மட்டுமே. அவர் தாயான வினதைக்கு நேர்ந்த இக்கட்டு என்ன அதை அவர் எப்படிக் களைந்து தன் தாயைக் காப்பாற்றினார் என்று பார்ப்போம் குழந்தைகளே.

கஸ்யபர் என்ற முனிவருக்கு கத்ரு, வினதை என்று இரு மனைவிகள் இருந்தார்கள். வினதைக்குக் கருடன், அருணன் என்று இரு மகன்களும், கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் மகன்களாகவும் பிறந்தார்கள். கத்ருவின் புதல்வர்களும் வினதையின் புதல்வர்களும் தாய்ப்பாசம் மிக்கவர்கள். தங்கள் தாய் சொல்லைத் தட்டாதவர்கள்.

ரு முறை இந்திரனின் குதிரையான உச்சைசிரவஸ் என்ற குதிரை ஆகாயமார்க்கமாகச் சென்றது. அப்போது கத்ருவுக்கும் வினதைக்கும் அதனுடைய வாலின் நிறம் பற்றி கருத்து வேற்றுமை ஏற்பட்டது. வினதை அந்தக் குதிரை வெண்மை நிறமாக இருப்பதால் வாலும் வெண்மையாக இருக்கிறது என்று கூறினாள். ஆனால் கத்ருவோ அதன் வால் கருநிறமாக இருக்கும் என்று கூறினாள். வால் அப்படிக் கருநிறமாக இருந்தால் வினதையும் அவள் பிள்ளைகளும் தனக்கு அடிமை என்று பந்தயம் வைத்தாள் கத்ரு. சூது அறியாத வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள்.


இப்போட்டியில் ஜெயிப்பதற்காக கத்ரு தன் மகன்களான கருநாகங்களைக் கூப்பிட்டு அந்தக் குதிரையின் வாலில் ஒட்டிக் கொள்ளும்படி கூறினாள். தாயின் மேல் பாசங்கொண்ட அந்தக் கருநாகங்களும் தாயின் ஆணையை சிரமேற்கொண்டு அந்தக் குதிரையின் வாலில் சென்று ஒட்டிக் கொண்டன. வால் கருநிறமாகக் காட்சியளித்தது.

இதை வினதையிடம் காண்பித்த கத்ரு வினதையும் கருடனும் அருணனும் தனக்கு அடிமை எனக் கூறினாள். மனம் குழம்பிய வினதை ஒப்புக் கொண்டு கத்ருவுக்கு அடிமைச் சேவகம் செய்தாள். இதைக் கண்ட கருடனின் உள்ளம் கொதித்தது. தன் தாய் தன் மாற்றாந்தாய்க்கு அடிமைத் தொழில் செய்வதா. இதற்கு மாற்றுக் கண்டே ஆகவேண்டும் என்று சிந்தித்த கருடன் கத்ருடம் வினயமாகச் சென்று தன் தாயை அடிமைத் தொழிலில் இருந்து விடுவிக்கும்படிக் கேட்டான். அமராவதிப் பட்டிணத்தில் தேவேந்திரன் வசமிருக்கும் அமிர்தகலசத்தைக் கொண்டுவந்து தந்தால் அந்த அப்பாவிகளை விடுவிப்பதாகக் கூறுகிறாள் கத்ரு.

டனடியாகப் பறந்து தேவலோகம் செல்கிறான் கருடன்.அங்கே இந்திரனுடன் சண்டையிடுகிறான். அமிர்த கலசத்தைக் கைப்பற்றுகிறான். அதோடு முடிந்ததா. இல்லையே. அமிர்த கலசத்தைப் பறிகொடுத்த இந்திரன் மஹாவிஷ்ணுவிடம் முறையிடுகிறான். மஹாவிஷ்ணு கருடன் முன் எதிர்ப்படுகிறார்.

“கருடா அமிர்தகலசத்தை எங்கே கொண்டு செல்கிறாய் ? என்னிடம் கொடு “

“என் சிற்றன்னை கத்ருவிடம் கொடுக்கக் கொண்டு செல்கிறேன்.  அதைக் கொடுத்தால்தான் நானும் என் தம்பியும் என் அன்னையும் அடிமைத்தொழிலில் இருந்து விடுதலையாவோம். அதை ஏன் உங்களிடம் தரவேண்டும் . முடியாது“ என மறுத்துரைக்கிறான்.

“கருடா. அது சாகாவரம் தரும் அமிர்தம். அதை உன் சிற்றன்னையிடம் கொடுத்தால் அவளும் அந்த நாகங்களும் அருந்தி சாகாவரம் பெறுவார்கள். எனவே என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என்ன வரம் வேண்டுமோ கேள் “ என்கிறார்.

“ எனக்கு வரமளிக்க நீங்கள் யார். எனக்கு என் தாய் விடுதலையாக இந்த அமிர்தம் வேண்டும். அதனால் தரமாட்டேன் உங்களுக்கு வேண்டுமானால் என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன். ” என்கிறான் குழந்தைகருடன்.

இதைக் கேட்டதும் புன்னகை பொங்குகிறது விஷ்ணுவின் முகத்தில். கருடனைப் பார்த்துச் சொல்கிறார். “ சாகாவரம் கொடுக்கும் அமிர்தம் கிடைத்தும் அருந்தாமல் தாயைக் காக்கச் செல்லும் உன் பணி சிறப்பானதே. ஆனால் நீ எனக்கு வரம் கொடுத்திருக்கிறாய். அதன்படி நீ எனக்கு வாகனமாக வரவேண்டும் “ என்கிறார்.

அடடா வாக்குக் கொடுத்துவிட்டோமே என்று ஒரு கணம் யோசித்த கருடன் அந்த அமிர்தத்தைக் கொடுத்து தாயை விடுவித்துவிட்டுவர விஷ்ணுவிடம் அனுமதி கேட்கிறார்.விஷ்ணுவும் அனுமதிக்கிறார்.

கருடன் அமிர்தகலசத்தைக் கொண்டுவந்து தர்ப்பைப் புல்லின் மேல் வைக்கிறார். கத்ருவிடம் தெரிவித்ததும் அவள் வினதையையும் கருடனையும் அவன் தம்பி அருணனையும் விடுவிக்கிறாள். அதற்குள் தேவேந்திரன் வந்து அமிர்தகலசத்தைத் தூக்கிச் சென்றுவிடுகிறான்.

தாய் கத்ருவின் சொல்லைக் காக்க நாகங்கள் செய்ததற்குப் பாசம்தான் காரணம். ஆனால் தன் தாய் வினதையைக் காக்க விஷ்ணுவையும் எதிர்த்த கருடனின் தாய்ப்பாசம் அதனினும் போற்றுதலுக்குரியதுதானே குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 27. 7. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...