செவ்வாய், 18 ஜூலை, 2017

சுமையா – ஒரு பார்வை.சுமையா – ஒரு பார்வை.

வைக்கம் முகம்மதுபஷீர், தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகீர்ராஜா வரிசையில் கொண்டாடப்படவேண்டியவர் கனவுப் ப்ரியன். அவரது சிறுகதைத் தொகுப்பு சுமையா படித்தவுடன் ஒரு மாதிரி பரவசமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டு நூலைக் கீழே வைக்காமல் 3 மணி நேரத்தில் படித்து முடித்தேன்.

21 கதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒரு விதம் . ஒரு ரகம். ஒன்றோடு ஒன்று தொடர்பில் வருவதில்லை. நிலப்பரப்பும் நினைவுப் பரப்பும் கூட !. ஒரு தீப்பொறியைப் போல அவரது கதைகள் என்னுள் இறங்கி இருக்கின்றன. உரசினால் ஆக்கபூர்வமான நெருப்பைப் பற்ற வைக்கும் ஏன் என்று கேள்வி கேட்கும் ஒரு மனிதநேய மனிதனின் கேள்விகள் அடங்கிய கதைகள்.
ஒவ்வொரு கதையிலும் கதை மாந்தர் வெவ்வேறு நாடு, மொழி , மதம் இனம், இடத்தைச் சார்ந்தவர்களாகவும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தார்மீகப் பண்பாட்டுக் குணங்களும் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் சிறப்பு. அவர் எழுப்பும் கேள்விகள் எதைச் சார்ந்தவர்களாயினும் ஆதரிக்கும் விதத்தில் அவர்களும் ஆக்ரோஷப்படும் விதத்தில் பொதுமையான ஒரு நியாயத்தில் அடங்கி இருப்பது தனித்துவம். 

குறும்படமாக எடுக்கக்கூடிய தன்மை ஒவ்வொரு கதையிலும் காணப்படுகிறது. ஓரிரு கதைகளை ஆரம்பிக்கும்போது திரும்ப நாம் முதல் பக்கத்தை படித்து நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். தகவல் சுரங்கம் மட்டுமல்ல இவர் அத்தகவல்களை எப்படி அடுக்கிக் கொடுக்க வேண்டும் என்பதையும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்.

தகவல்கள் அதிகமாகிவிட்டால் கட்டுரை ஆகிவிடக்கூடிய பாதிப்புகள் ஓரிரு கதைகளில் இருந்தும் அவற்றின் முடிவுத்தன்மை அவற்றைக் கதையில் கொண்டு சேர்க்கிறது. கடல் பற்றி என்றாலோ கானகம் பற்றி என்றாலோ பறவை பற்றி என்றாலோ கனவுப் ப்ரியன் சொல்லிவிடுவதை விடவும் அதிகமான விவரங்களை யாரும் படைத்துவிட முடியாத அளவு வலிமையான சித்திரங்களாக அமைந்துள்ளன கதைகள்.

இதிலும் மருத்துவ அறிவியல் சார்ந்த தகவல்கள் கொண்ட கதைகள் வித்யாசமாகவும் நிறைய அறியத்தருவனவாகவும் அமைந்துள்ளன. ஒரு காயத்தையோ பணம் எடுத்துச் செல்வதையோ சொல்லத் துவங்கும் கதை அது கணவனால் ஏற்பட்ட காயமோ, அல்லது பணம் தொலைந்து விடப்போகிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வாழ்வில் எதிர்கொள்ளும் வெவ்வேறு சிக்கல்களை வெளிக்கொணர்கிறது. நாம் எதிர்பாராத கோணத்தில் பயணிப்பதுதான் இவரது கதைகளின் சிறப்பம்சம். ஒரு கதை பெண்ணின் பார்வையிலும் பயணிக்கிறது ! 

செய்திகளையும் சிறுகதையாக்கும் உத்தி சிறப்பு. அது சம்பந்தமான ஏ டு இஸட் தகவல்களைத் திரட்டிக் கொடுத்துள்ளார். அபுல்கலாம் ஆஸாத் ஜியின் ஆப்கன் ஈரான் பற்றிய ஏதோ ஒரு கட்டுரையில் பஸ்தூனியர்களை அவர் சிலாகிக்கும் அதே கோணத்தில் நம்மையும் சிலாகிக்க வைத்திருப்பார், அட இவங்க எல்லாம் ஆளவே பொறந்தவங்க. யாருக்கும் அடங்கியே இராதவங்க. யாருக்கும் கப்பம் கட்டாதவங்க என்ற அவரின் பெருமிதம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். அதே போல் அரபி , உருதுக் கவிதைகளை அவர் விளக்கும் விதம் போல கனவுப் ப்ரியனும் அரபி உருதுக் கவிதைகளைத் தேவையான இடத்தில் பயன்படுத்தி உள்ளார். மேலும் சிந்தனையாளர்கள், மேதைகள், கண்டுபிடிப்பாளர்களின் கருத்துக்களை தகுந்த இடங்களில் மேற்கோள் காட்டியிருப்பது இயல்பாக அதே சமயம் வியப்பைத் தருவதாகவும் இருக்கிறது. 

சுமையா நான் முன்னுரையைப் படித்துவிட்டு மலாலா அளவு நினைத்தேன். கதையில் அவரது பங்கு வித்யாசமாய் வெளிப்பட்டது. ஆனால்.  ஆயிஷாவிடம் அஹமதுயார்கான் மகளா என்று யாராவது அவரைக் கேட்கமாட்டார்களா என்று ஏங்க வைத்தது கதை. 

நம்பி கோயில் பாறைகள் ஒரு மாயக்கனவைப் படைத்தன. ஆவுளியா கடல்சார் தகவல்களை அள்ளித்தெளித்தாலும் ஒரு சினிமாட்டிக்கான முடிவாக இருந்தது. நேற்றைய ஈரம் காதலைக் கொன்னவனும் மாட்டுக்கறி தின்னவன் என்று கொன்னவனும் எவ்வளவு குரூரமானவர்கள் என்று அறைந்தது. 

அதுவேறு ஒரு மழைக்காலம் மூன்றுவிதமான பதில் அறியாக் கேள்விகளுக்குப் பதில் அளித்தது. மார்க்கோ போலோ இழிவரல் வரவைத்த கதை. எட்டாவது அதிசயமாக காரகோரம் பிரிட்ஜைக் கட்டிய ஒரு கர்னல் சுயம் இல்லாமல் வாழ்வது குறித்து விசாரம் செய்தது.

ஷாஹிர்க்கா தட்டுக்கடை, வியாதிகளின் மிச்சம், துணிக்கடை அண்ணாச்சி, , மண்ணெண்ணெய் குடிச்சான், சூது கவ்வும் , நீ வந்தது விதியானால், தற்கொலைப் பறவைகள் கழிவிரக்கம் கொள்ள வைத்த கதைகள். 

ஜெனியின் டைரிக்குறிப்புகள் ஃபேண்டஸிக்கதை. அன்று சிந்திய ரத்தம் முக்கிய விஷயத்தை முன்னிறுத்தி நடுநிலை பேசிய கதை.. 

ரசவாதம், அன்னக்காடி சிறிது கட்டுரை ஆகிவிடும் அபாயத்தில் தகவல்களால் ததும்பு கதைகள் எனினும் பார்வை இல்லாதவர் நிகழ்த்தும் ரசவாதமும், அரிசிக் சோறின் முக்கியத்துவமும் சொல்வதால் பிடித்திருந்தது.

இந்தத் தொகுப்பிலேயே என்னைப் பெரிதும் கவர்ந்த கதை கடற்குதிரை. கண்ணீர் கசிய வைத்தது என்றால் மிகையில்லை. அந்தத் தகப்பன் மட்டுமல்ல மகனும் கூட  தன் குடும்பத்தைக் கர்ப்பம் தரித்த ஆண் கடற்குதிரைகள்தாம்.

ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் பற்றிய மதிப்பீடு மிகச் சரியாகப் பதியப்பட்டிருக்கிறது. சுயஎள்ளல் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. ஆஸாத்ஜி சொல்வதுபோல் எல்லாமே சல்தா ஹை என்று எடுத்துச் செல்லும் இன்றைய மனநிலை பல்வேறு கதைகளில் வாய்க்கப்பெற்றிருக்கிறது. 

இவ்வருமையான தொகுப்பை அனுப்பிய திரு ரத்னவேல் சார் அவர்களுக்கு நன்றியும் அன்பும். இன்னும் தொடர்ந்து எழுதுங்க கனவுப் ப்ரியன். தொடர் வெற்றிகள் உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்கு. சாகித்ய அகாடமி போன்ற பல விருதுகள் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நூல் :- சுமையா ( சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர் :- கனவுப் ப்ரியன்
பதிப்பகம் :- நூல் உலகம்
பக்கம் :- 216.
விலை :- ரூ 160/-

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆழ்ந்த விமர்சனம்... கனவுப் ப்ரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

Rathnavel Natarajan சொன்னது…

சுமையா – ஒரு பார்வை - அற்புதமான மதிப்புரை. வாழ்த்துகள் கனவுப் பிரியன் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி Thenammai Lakshmanan

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான மதிப்பீடு. விரைவில் வாசிப்பேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

NANDRI DD SAGO

NANDRI RATHNAVEL SIR

NANDRI JAMBU SIR.


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...