புதன், 18 ஜனவரி, 2017

ஆதவன் மறைவதில்லை.


ஜனவரி பதினைந்தாம் தேதி இரவு ஒரு துயரச்செய்தியை ”லவ்லி லேடீஸ்” வாட்ஸப் குழுமத்தில் தோழி அகிலா பகிர்ந்திருந்தார். நம் அன்புக்குரிய வானவன் மாதேவி அவர்கள் இயற்கை எய்திய செய்திதான் அது. உண்மையை ஏற்றுக் கொள்ளாது அதிர்ந்தது நெஞ்சம். திரும்ப நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அதை உறுதிப்படுத்தினார் தோழி எழில் அருள்.

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இறந்த அனுராதாவைப் பற்றி என்னுடைய சாதனைஅரசிகள் நூலில் எழுதி இருக்கிறேன். இவர்களைப் பற்றி தோழி கீதா இளங்கோவன் முகநூலில் தனித்தகவலில் பகிர்ந்தவுடன் இவர்களின் பேட்டி வேண்டி இன்பாக்ஸில் தொடர்பு கொண்டேன். 

இவர்களிடம் என்னை அணுக்கமாக உணரச் செய்ததே இவர்களின் பேரும் இலக்கிய ஆர்வமும்தான். தன்னம்பிக்கை மிக்க பெண்ணரசிகள். முதலில் இயல் இசை வல்லபியிடமும் அதன் பின் வானவன் மாதேவியிடமும். ஆனால் ஏனோ பேட்டியாக வெளியிட சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. 

12.10 2014 இல் நான் அவரிடம் கேட்ட கேள்விகள்.


////நீங்க ரெண்டு பேரும் எந்தத் தருணத்தில் இப்படி ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்னுமுடிவெடுத்தீங்க ? 


உங்களோடு கரம் கோர்த்து செயல்படுவது யார்
இன்னிக்கு வரைக்கும்.?


அந்த நெகிழ்ச்சியான தருணத்தையும் அந்த நபர்களைப் பத்தியும் பகிருந்துக்குங்க.


மேலும் ஆதவ் ட்ரஸ்டுக்கான இடம் கட்டிடம் சம்பந்தமாவும் சொல்லுங்க


ஏன் ஆதவ் நு பேர் வச்சீங்க./////


இதற்கு பிஸியாக இருப்பதால் பின்னர் பதில் அளிப்பதாகக் கூறி  இருந்தார். 

தோழி கீதா அனுப்பிய உள்டப்பித்தகவல்.

 ////இந்நோயால் இயங்கும் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டு, கடைசி கட்டத்தில் நோயாளி மரணமடைகிறார்.
இந்நோயின் மூலக்காரணம் மரபணு என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இந்நோய்க்கான மருந்து இன்றுவரை கண்டறியப்படவில்லை என்பதே மிக வேதனை தரும் செய்தி.


தம்மைப் போல இந்நோயால் பாதிக்கப்பட்ட, வசதியற்ற நோயாளிகளுக்கு இந்த சகோதரிகள் மாற்று மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளிக்கிறார்கள். இதற்கென சேலத்தில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.


வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி பற்றிய `நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படம் வியாபார நோக்கம் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகமான மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு வாழ்வின் நல்ல சங்கதிகளின் மீது நம்பிக்கை மிகுதிப்படும். இவர்கள் நடத்தும் பொதுத்தொண்டுக்கு உதவவும் வாய்ப்பாகும்.


இக் குறும்பட வெளியீட்டு விழாவை, இம்மாதம் 22ம் தேதியன்று (சனிக் கிழமை) காலை 10 – 12 மணிக்கு முகநூலில் நடத்த இருக்கிறோம், உங்கள் முன்னுரை விமர்சனத்தோடு அந்த வெளியீட்டு விழா தொடங்க வேண்டும் என விரும்புகிறோம்.


படத்தின் youtube link இது : https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4
படத்தை பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை விமர்சனமாக எழுதுமாறும், வெளியீட்டு விழா நிகழும் 22 ந் தேதி அன்று உங்கள் பக்கத்தில் நிலைத்தகவலாக அந்த விமர்சனத்தைப் பதிவு செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி.
தோழமையுடன்
கீதா இளங்கோவன்////

/////அன்புக்குரிய நண்பர்களுக்கு, எங்களைக்குறித்த ஒரு ஆவணப்படம் "நம்பிக்கை மனுஷிகள்" என்னும் தலைப்பில் கீதா இளங்கோவன் மேம் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் வெளியீடு நாளை உங்களுக்கு மிகவும் பிடித்த (உங்களை அடிமையாக்கி வைத்திருக்கிற :P) இந்த முகனூலில் காலை 10.00-12.00 மணிக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் Link உங்களில் சில நண்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த படத்தைப்பார்த்தவர்கள் அது குறித்த விமர்சனத்துடன் அந்த linkஐ நாளை காலை 10 மணிக்கு மேல் உங்கள் முகனூல் பக்கத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி:)////

குறிப்பு: வீடியோவின் linkஐ நிச்சயம் நாளை காலைதான் வெளியிடனும்  அதுவரை சஸ்பென்ஸ் ஆக நம்மிடம் மட்டுமே இருக்கட்டுமே , ப்ளீஸ்:)பொதுவாக நான் அப்சர்வ் செய்த வகையில் சேலமும் அதைச் சார்ந்த ஊர்களிலும் பிறக்கும் பெருவாரியான குழந்தைகள் இந்நோய்த் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். மரபணு மாற்றப் பயிர்கள் , உரங்கள், இரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் தெளித்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொண்ட தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள் இந்நோயால் அதிகம் பாதிப்படைந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் இதற்கெல்லாம் தீர்வு என்ன என்பதுதான் தெரியவில்லை. 

நம் நாட்டைச் சிதைக்கும் குளோபல் வியாபாரிகள் வெளியேற்றப் பட்டால்தான் இயற்கை விவசாயமும் விவசாயியும் நாமும் பிழைக்கலாம். 

இந்நோய்க்கூறு தாக்கியவுடன் ஒவ்வொரு உறுப்பாகச் சிதைத்து கடைசியில் இறப்பு நிகழும். இதை நான் அனுராதா பேட்டியில் ( அவர் பற்றி திரு நெப்போலியன் அவர்களிடம் இந்த ப்ராஜெக்டுக்காக பணிபுரிந்து வரும் குழந்தைகள் சைக்யாட்ரிஸ்ட் வசந்தி அக்கா சொன்னது ) கேட்டபோதே மனம் தாளவியலாத தவிப்பில் ஆழ்ந்தது. அனுராதா தன் உடலை ஆராய்ச்சிக்காகத் தானமளித்துச் சென்றிருக்கிறார்.

வானவன் மாதேவியும் இயல் இசை வல்லபியும் ஆதவ் ட்ரஸ்ட் ஆரம்பித்தபின் அதை என் ப்லாகில் பகிர  என் நெருங்கிய உறவினர் தன்னால் முடிந்த ஒரு நல்ல தொகையை சில மாதங்கள் அனுப்பினார்.

ஒரு கோயிலுக்குச் சென்று அதன் அரசியலில் வெறுப்படைந்தபோது அவர் என்னிடம் இந்தச் சகோதரிகளுக்கு உதவும்போது பெரும் மன நிம்மதியும் ஆத்ம நெகிழ்வும் அடைந்ததாகக் கூறினார்.

பிறந்த அனைவருமே இறக்கிறோம். ஆனால் தாம் வாழும் காலத்தில் தமக்கிடப்பட்ட எல்லைக் கோடுகளுக்குள் ஒரு சந்தோஷப் ப்ரபஞ்சத்தையே உருவாக்கும் சக்தி இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் முயற்சிக்குத் தோள் கொடுப்போம்.

வல்லபி , மாதேவி - நம்பிக்கை மனுஷிகள்.

http://honeylaksh.blogspot.in/2014/12/blog-post_2.htmlதிரு அப்பாஸ் அவர்கள் இயல் இசை வல்லபியின் சுவரில் எழுதி இருந்த இரங்கலில் முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் பகிர்ந்திருக்கிறேன்.

/////#தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும், சிகிச்சையும் அளித்து வந்த தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலம் வானவன் மாதேவி நேற்று மரணமடைந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த பேளூர் அனுப்பூரைச் சேர்ந்த இளங்கோவன், கலையரசி தம்பதியின் மூத்த மகள் வானவன் மாதேவி (37). இவர் ‘மஸ்குலார் டிஸ்ட்ரோபி’ எனப்படும் தசை சிதைவு நோயால் 10 வயதில் பாதிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக போராடி வந்தார்.

இந்நோயால் தாக்கப்பட்ட வர்கள் நம் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் கை, கால் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகளை ஒவ்வொன்றாக முடக்கும். பின்னர் அனிச்சை உறுப்புகளான நுரையீரல், இருதயம் போன்ற உறுப்புகளை பாதித்து, மரணத்தை ஏற்படுத்தி விடும். இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு உறுப்பு என்ற கணக்கில் கை, கால், கழுத்து என ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து போகும்.

இதனால், இந்நோய் பாதித்தவர்கள் உட்கார்ந்த நிலையில் மட்டுமே வாழ முடியும். பிஸியோதெரபி, அக்குபிரஷர் போன்ற உடலியக்க சிகிச்சை கொடுத்து வந்தால், உறுப்புகள் செயலிழந்து போவதை சிறிது காலத்துக்கு தள்ளிப்போட முடியும்.

10 வயதில் நோய் தாக்குதலுக்கு உள்ளான வானவன் மாதேவியின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் தொடங்கியது. வீல் சேரில் வாழ்க்கை என்றபோதும், சிறிதும் மனஉறுதி குலையாத வானவன் மாதேவி, பிளஸ் 2, கணினி டிப்ளமோ ஆகியவற்றை படித்து தேறினார்.

இந்நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, அவரது ஊரில் ஆதவ் என்ற பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், மாற் றுத்திறனாளிகளையும்தேடிச் சென்றும்,தனது இல்லத் துக்கு வரவழைத்தும் தன்னம்பிக்கை யூட்டினார்.

இவரது இளைய சகோதரி இயல் இசை வல்லபியும் (34), இந்நோயால் பாதிக்கப்பட்டவர். இவரும் அக்காவுக்கு துணையாக அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். இந்நோயால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவர்கள் இல்லத்தில் பிஸியோதெரபிஸ்ட், அக்குபிரஷர், ஆயுர்வேதம் ஆகியவற்றில் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில் வானவன் மாதேவி, நோய் முற்றிய நிலையில் நேற்று தனது 37-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது உடல் அனுப்பூரில் உள்ள ஆதவ் அறக்கட்டளை வளாகத்தில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது./////


தன்வீடு தன் சுற்றம் என்பதையும் தாண்டி தன்னால் முடிந்த அளவு இன்னும் பலருக்கு உதவியும் தன்னம்பிக்கை எடுத்துக்காட்டாகவும் விளங்கிய வானவன் மாதேவியின் மறைவு உண்மையில் பேரிழப்பு. அதைத் தாங்கும் சக்தியை ஆதவ் ட்ரஸ்ட் உறுப்பினர்களுக்கும், இயல் இசை வல்லபிக்கும் அவர் பெற்றோருக்கும் ஆண்டவன் அளிக்க பிரார்த்திக்கிறேன்.  

கண்மணி நீ துயிலச் செல்லவில்லை.
வழி நடத்தப் பயிலச் சென்றிருக்கிறாய்.
அனைவரையும் அரவணைக்கும்
உன் பேரன்புக்கு அன்பும் முத்தங்களும்.

 


5 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மனதைக் கனக்க வைத்த பதிவு...மஸ்குலட் டிஸ்ட்ரோஃபி இப்போது சாதாரண ஒன்றாகிவிட்டது.அந்த நோய் தாக்கப்பட்டும் இத்தனை வருடங்களாகத் தன்னலம் பாராது உயர்ந்த சேவை செய்து வந்துள்ளனரே! யானை இறந்தாலும் ஆயிரம் பொன்! ஆதவன்மறைவதில்லைதான்!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தன்னம்பிக்கையுடன் அவர் செய்துள்ள அரிய பெரிய சேவைகளை எண்ணிப்பார்த்து பாராட்டி மகிழ்வோம்.

‘ஆதவன் மறைவதில்லை’ என்ற தலைப்பு மிகவும் பொருத்தமே.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் கலங்கச் செய்த பதிவு.

ஆதவன் மறைவதில்லை... உண்மை.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் துளசி சகோ

நன்றி விஜிகே சார்

ஆம் வெங்கட் சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...