மதிப்பிற்குரிய வேதா மேடம் & சுபா அவர்கட்கு,
தேனம்மைலெக்ஷ்மணன் எழுதிக் கொண்டது.
இத்துடன் ஏமாற்றாதே, ஏமாறாதே என்ற தலைப்புக்காக எழுதிஅனுப்பி இருக்கிறேன்.
அன்பும் வாழ்த்தும்
தேனம்மைலெக்ஷ்மணன்.
*************************************
தங்கத்தாமரை
பதிப்பகத்துக்காக.
ஏமாற்றாதே
ஏமாறாதே.
ஏ
எஸ் டி எஃப் ஜி எஃப். செமிகோலன் எல் கே ஜே ஹெச் ஜே.. இதைத் திரும்பத் திரும்ப அடித்தபடி
இருந்தாள் வள்ளி அக்கா. டைப்ரைட்டிங் வகுப்புக்கு ஆனா ஆவன்னா, ஏபிசிடி எல்லாம் இதுதான்.
அவள் தினமும் குன்றக்குடியில் இருந்து ஒரு வாரமாக வந்து கொண்டிருக்கின்றாள். நான் பக்கத்து
சேரில் அமர்ந்து லெட்டர் டைப் செய்துகொண்டிருந்தேன். க்ர்ரிக் க்ர்ரிக் என நகர்த்தி
நகர்த்தி அடிக்க ஆரம்பித்தேன்.
ஸ்கூல்
ஆஃப் காமர்ஸில் அதன் நிறுவனர் வள்ளியப்பன் முன்னிருக்கும்போது கொசுக்கடித்தாலோ ஈ சுற்றினாலோ
கூட அக்கம்பக்கம் தலையைத் திருப்பாமல் கருமமே கண்ணாயினராக டைப்ப வேண்டும். இதுதான்
அங்கே டைப்படிக்கப்படாத நியதி. டக்கு டக டக்கு என்று டைப்படிக்க அடிக்க வெள்ளைத்தாள்
முழுக்க கறுப்பு எழுத்துச் சகதியால் நிரம்பியது. சர்ரென்று உருவிக் கொடுத்துவிட்டு வெளியே மரப்படிகளில்
குதித்து இறங்கும்போது லேசான வெக்கைக் காற்றுடன் கொப்புடையம்மன் கோயில் தேர் நின்றிருந்தது.
இறுக்கத்திலும்
வியர்வையிலும் இருந்து வெளிப்பட்ட சுதந்திர உணர்வுடன் பின்னால் திரும்பினால் வள்ளி
அக்காவும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
போபாலில்
விஷ வாயுக் கசிவில் கணவருடன் எதிர்காற்றில் தப்பிப் பிழைத்து வந்தவரில் அவளும் ஒருத்தி.
சுவாரசியமாக போபால் கதைகள் எல்லாம் சொல்லுவாள்.
செகண்ட்
பீட் போய் ஏதோ வாங்கிக் கொண்டு பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று குன்றக்குடிக்கு பஸ் ஏறவேண்டும்
அவள். தொண தொணவென்று பேசியபடி வருவாள் அக்கா. நான் வலப்புறம் குதிரை வண்டி ஸ்டாண்டுப்
பக்கம் திரும்ப வேண்டும். காரைக்குடி சன்னா ஓட்டல் பக்கத்தில் எனது ஆயா வீடு. கல்லூரி
முடித்து முடித்த வருஷம் கல்கியில் மாணவர் பக்கத்தில் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது.
பேச்சு சுவாரசியத்தில் சொல்லிவிட்டேன், கல்கியில் வெளியான கவிதை பற்றியும். இன்னும்
வைகறை, பூபாளம், புரவி, சிப்பி, புதிய பார்வை, தேன்மழை, லீவ்ஸ் ஆஃப் ஐவி, நம் வாழ்வு
ஆகியவற்றில் வெளி வந்த கவிதைகள் பற்றியும்.
கொண்டுவா
தேனு படிச்சுட்டுத் தரேன் என்று கண்கள் விரிய ஆச்சர்யப்பட்டுப் பாராட்டிக் கேட்டாள்.
மறுநாளே வீட்டிற்குக் கூட்டிப் போய் மூட்டையாய்க் கட்டி வைத்திருந்த புத்தகங்களை எடுத்துக்
காண்பித்தேன். அனைத்தையும் வாசித்தாள் , வரிக்கு வரி நேசித்தாள். சிலாகித்தாள். புளகாங்கிதமடைந்தேன்.
பரவச மழையில் இருக்கும்போது ஒன்று கேட்டாள். ஒன்றே ஒன்றுதான். அதுதான் அந்தக் கல்கி
அத்தனை புத்தகங்களில் அதை மட்டும் எடுத்துச்
சென்றுவிட்டு மறுநாள் தருவதாக உறுதி அளித்தாள். .அவளும் இப்போதானே சேர்ந்திருக்கின்றாள்
இன்னும் ஆறுமாசம் டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வரத்தானே வேண்டும் என்ற முரட்டு நம்பிக்கை
ஏற்பட்டது.
ஆனந்த
மழையில் நனைந்த நான் உடனே புத்தகத்தை எடுத்து நீட்டினேன். புத்தகப் பிரபு தானம் கொடுப்பது
போல. சிரித்துக்கொண்டே சென்றாள். அப்போது தெரியவில்லை எதற்குச் சிரித்தாள் என்று. மறுநாள்
அவள் வருவாள் என நம்பி டைப்ரைட்டிங்க் வகுப்பு சென்றேன். அவள் டைப் செய்யும் இடம் காலியாக
இருந்தது. திடுக் கென்றது. மறுநாள் வந்துவிடுவாள் என சமாதானப் படுத்திக் கொண்டேன்.
மறுநாளும். அதற்கடுத்த நாளும் அவள் வரவேயில்லை. அடிப்பாவி என் வாழ்க்கையில் எனக்கான
கிரீடம் போலக் கிடைத்த ஒன்றை அபகரிச்சுட்டுப் போயிட்டியே என்று ஒரே ஆற்றாமையாக இருந்தது.
அவளைப் பற்றிக் கேட்கக் கூட அவளைப் பற்றித் தெரிந்தவர் யாருமே இல்லை. இதுதான் வாழ்க்கையின்
விநோதம். நம்பிக்கையின் நசிவு.
ஆத்தாமையும்
அழுகையுமாக வந்து நான்காம் நாள் கல்லூரியின் ட்ரெங்குப் பெட்டியைக் குடைந்து அப்பாடா
மிச்ச புத்தகங்களையும் நம்பிக் கெட்டுக் கொடுக்காமல் விட்டோமே என நினைத்து அடுக்கும்போது
என் தமிழாசிரியை எம் ஏ சுசீலாம்மா எனக்கு வாங்கி அனுப்பிய என் கவிதை வெளியான கல்கி
அட்டைப்படத்தில் அவரது கையெழுத்துடன் ஜொலித்தது. அள்ளி அணைத்த நான் நினைத்துக் கொண்டேன்.
நன்மை செய்யும் ஒருவர், தீமை செய்யும் ஒருவர் என்று மனிதரில் எத்தனை நிறங்கள் என்று.
கண்ணீர் காய்ந்து ஜொலித்தது, இன்றுவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் குன்றக்குடி வள்ளி
அக்காவை, கொடுத்த புத்தகத்தைத் திருப்பிக் கேட்க அல்ல. உன் சூதுக்கும் வஞ்சத்துக்கும்
தப்பி என்னிடம் என் படைப்பு வெளியான புத்தகம் ஒன்று இருக்கிறதென்பதை மகிழ்வோடு காட்ட.
J
கொடுக்கும்புத்தகங்கள் பல திருப்பப்படுவதில்லை வாசகர் ஒற்றுமை இதில் ஓங்குகிறது
பதிலளிநீக்குபுத்தகங்கள் திரும்பி வருவதில்லை! :)
பதிலளிநீக்குகொடுக்கப்பட்ட புத்தகங்கள் என்றுமே திரும்புவதில்லை. ஆனால்,நாங்கள் இரவல் வாங்கும் புத்தகத்தைத் திருப்பிக் கொடுப்பதை மிகவும் உறுதியாகப் பின்பற்றுகிறோம்..
பதிலளிநீக்குஆம் பாலா சார் :)
பதிலளிநீக்குஆம் வெங்கட் சகோ
ஆமாம் துளசி சகோ. நீங்கள் பின்பற்றுவது அருமையான கொள்கை :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!