கோவையில் சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருந்த தெருவில் கடைசியில் இருந்த வீட்டில் இரு பெண்கள் இருந்தார்கள். இருவருமே கல்லூரியில் பயில்பவர்கள். ஒரு நவராத்திரி சமயம் சகோதரிகளில் மூத்தவர் எங்கள் தெருவின் முக்கில் கால் தடுக்கி விழுந்துவிட்டதாக என் மாமியார் சொன்னார்கள்.
அந்தப் பெண் மிகவும் மெலிவாக இருப்பார். என்ன காரணம் என்று தெரியவில்லை. அதே போல் சில நாட்களில் அவரின் சகோதரியும் கல்லூரிக்கு நடந்து செல்லும்போது கீழே விழுந்துவிட்டார். போலியோவுக்கு சின்னப் பிள்ளையில் மருந்து கொடுக்காவிட்டால் அது இப்படி பெரிய பிள்ளையானதும் கூட பாதிக்கும் என்று பேசிக் கொண்டார்கள் மக்கள்.
அது நிகழ்ந்து பல வருடங்கள் ஆன பின்பு 3 வருடங்களுக்கு முன்பு ஒரு பத்ரிக்கை பேட்டிக்காக என் கல்லூரியில் படித்து குழந்தைகள் மனோதத்துவ மருத்துவராக இருக்கும் திருமதி வசந்தி பாபு அக்காவை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் நடிகர் திரு நெப்போலியன் அவர்களின் மகனுக்கு ஏற்பட்டுள்ள மஸ்குலர் ட்ஸ்ட்ரோஃபி என்னும் நோய்க்காக ( ஆங்கில மருத்துவத்தில் ஃபிசியோதெரஃபி தவிர வேறு வழியில்லை என்பதால் ) மருந்தும் மாற்று மருத்துவமும் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
வீரவநல்லூர் என்னும் இடத்தில் இதற்கான ஒரு இடத்தை நெப்போலியன் வழங்கி அங்கே இது போல் பாதித்த மக்களுக்கான சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அப்போதுதான் மஸ்குலர் டிஸ்ட்ரோஃபியினைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடிந்தது, இது தசை இறுகி செயல்பாடு இழக்கும் நோய் என்பது.
அதே போல் பாதித்து 47 வயதுவரை உயிர்வாழ்ந்து ( தனக்கென மட்டுமில்லாது மற்றவர்க்கும் ஆந்திர மகிள சமாஜத்தில் உதவி செய்து ) தன் கண்களையும் உடலையும் தானமாக அளித்துச் சென்ற அனுராதா பற்றி அறிய நேர்ந்தது. அவரின் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் சிலிர்க்க வைத்தது. வசந்தி பாபு அக்கா மூலம் இவரைப் பற்றி விவரங்கள் அறிந்து என் சாதனை அரசிகள் புத்தகத்தில் எழுதி உள்ளேன். என் வலைத்தளத்திலும் பகிர்ந்து உள்ளேன். அவரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துச் சென்றிருக்கிறார்.
சேலத்தைச் சேர்ந்த இயல் இசை வல்லபி, வானவன் மாதேவி என்னும் இரு சின்னஞ்சிறு பெண்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டபோது தமக்காக இந்நோயுடன் போராட தம் பெற்றோர் இருக்கிறார்கள் ஆனால் இந்நோய் தாக்கி உரிய பராமரிப்போ அல்லது தேவையான கவனிப்போ இல்லாதவர்களுக்கும் உதவிக் கரம் கொடுப்போம் என முடிவு செய்து ஆதவ் ட்ரஸ்ட் என்னும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.
/// மரபணு மாற்றப் பயிர்களால் 1800 களில் ஆரம்பித்தது இந்நோய் என மாதேவி கூறியது மிகச் சரியானதே. உரங்களின் பயன்பாடும் மரபணு மாற்றப் பயிர்களின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ///
தனக்கென வாழும் இவ்வுலகில் தங்கள் நோய்க்கூறுடன் எதிர்த்துப் போராடி பிறர்க்கெனவும் வாழும் இந்தச் சக்திகளின் செயல்பாடு பிரமிக்க வைக்கிறது. அழகிய புன்னகைப் பூக்கள் போன்ற இவ்விருவரும் தாங்கள் கடந்து வந்த பாதையை எந்த வருத்தமும் முகவாட்டமும் இல்லாமல் இயல்பான ஒன்றைப் போல கடந்து செல்வதுடன் இதைப் போல நோயுடன் வாழும் மக்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டி புத்துயிர் அளிக்கிறார்கள்.
பிறந்த அனைவருமே இறக்கிறோம். ஆனால் தாம் வாழும் காலத்தில் தமக்கிடப்பட்ட எல்லைக் கோடுகளுக்குள் ஒரு சந்தோஷப் ப்ரபஞ்சத்தையே உருவாக்கும் சக்தி இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் முயற்சிக்குத் தோள் கொடுப்போம்.
ஆதவ் ட்ரஸ்டின் மூலம் இடம் வாங்கப்பட்டுள்ளது. தற்போது ஐவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஃபிசியோ தெரஃபி, அக்யுபஞ்சர், ஆயுர்வேத மருந்துகள் என சிகிச்சை செலவும், அவர்கள் தங்குவதற்கான, கல்வி பயில்வதற்கான செலவும் ஏற்றுச் செய்து விடலாம் என்ற நம்பிக்கையோடு முனைந்திருக்கிறார்கள். இவர்களிடம் உதவி கேட்டுப் பலர் வருவதால் நல்லோர் பலரின் உதவி பெற்று இதைச் செம்மையுறச் செய்ய எண்ணியுள்ளார்கள்.
சகோதரிகளின் முயற்சி வெற்றி அடையட்டும். நம்மாலான பங்களிப்பை அளிப்போம். ஆதவ் ட்ரஸ்டின் முகவரி.
ஆதவ் ட்ரஸ்ட்”
Aadhav Trust,
489-B, Bank Staff Colony,
Hasthampatty, Salem – 636007,
Tamil Nadu, INDIA.
வங்கி விவரம்
A/c Name : AADHAV TRUST
SB Ac No.: 1219101036462
Bank : CANARA BANK
Branch: Suramangalam
IFSC Code: CNRB0001219
MICR Code: 636015005
இவ்விரு சகோதரிகளைப் பற்றி ( ஆட்டிசம், மாதவிடாய் பற்றிக் குறும்படம் எடுத்த ) கீதா இளங்கோவன் ”நம்பிக்கை மனுஷிகள்” என்ற தலைப்பில் குறும்படம் எடுத்திருக்கிறார். கதிரின் எழுத்தில் இந்தச் சகோதரிகளின் வார்த்தைகள் இன்னும் பலமாய் ஒலிக்கின்றன.. நம்பிக்கை மனுஷிகளுக்கான இவர்களின் பங்களிப்புக்கும் வாழ்த்துகள்.
”நம்பிக்கை மனுஷிகள்” தங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!