சனி, 31 மே, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், கேஜிஜியின் காரணப்பெயர்/பெயர்க்காரணம். :)

வலையுலகில் மதிப்பிற்குரிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் கேஜிஜி  எனப்படும் K G GOWTHAMAN கேஜி கௌதமன் சார். இவரும் ஸ்ரீராமும் (இன்னும் சில நண்பர்களும் என நினைக்கிறேன்) இணைந்து  எங்கள் ப்லாக் என்னும் வலைப்பதிவில்  சிறப்பான பதிவுகள் போட்டு வருகிறார்கள். அதில் பாசிட்டிவ் பதிவுகளையும் புகைப்படப் பதிவுகளையும் அவ்வப்போது படித்து வருவேன். என் வலைப்பதிவிலும் இவர்கள் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வருகிறார்கள். ( என் இன்றைய நிலைக்கு வலைப்பதிவர் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும்  இருக்கிறது . அதற்கு நன்றிகள் )

வலைத்தளத்தில் கேஜி கௌதமன் சாரின் முழுப்பெயர் சட்டென்று கண்ணில் படவில்லை. ஆனால் முகநூலில் இவர் பெயரைப் பார்த்தவுடன் பரிச்சயம் ஆனதாகத் தெரிந்ததும் நட்பு அழைப்பு விடுத்தேன். அட நம்ம கௌதமன் சார் இவங்க என்று தெரிந்தது. தன் குழந்தைகள்/ பேரப்பிள்ளைகள் பேரை இப்பவெல்லாம் ரெண்டு எழுத்துக்கு மேல வைக்கிறதில்லை மக்கள். அதுவும் AA என்று இரண்டு ஏ வரும்படி ஆதித்யா, ஆருஷ், ஆரத்தி, ஆதி என்று வைக்கிறார்கள். இதுல கல்யாணமகாதேவி கோபால கௌதமன்னு சார் முகநூலில் பேர் வைச்சு இருக்காங்களே அதுக்கு என்ன காரணமாக இருக்கும். ஒரு வேளை அம்மா அப்பா பேரையும் சேர்த்து வைச்சிருப்பாங்களோ ஸ்கூல்ல எல்லாம் எப்பிடி கூப்பிட்டு இருப்பாங்கன்னு ஒரே யோசனை


// நீங்க என்ன ஆஸ்ட்ராலஜரா இல்ல அவர் பேருக்கு நியூமராலஜி பார்க்கப்போறீங்களா.. ரொம்ப முக்கியம் // இப்பிடின்ன்னு எல்லாம் உங்க சிந்தனை என்னப்பத்தி ஓடுறது தெரியுது. ஆனா அவர்கிட்ட அவரோட பெயர்க்காரணம் கேட்டுப் போடாட்டி என் ப்லாக் வெடிச்சிடும்னு கூகுளாண்டவர் சொல்லிட்டார்.

அதுக்குன்னு என்ன வேதாளம் முருங்கைமரம்னு எல்லாம் கற்பனை பண்ணிடாதீங்க. சார்கிட்ட ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அதுக்கு பதில் கிடைச்சிடுச்சு. சோ என் ப்லாக் வெடிக்காம தப்பிச்சுது. அந்தக் கேள்வி.

//// கல்யாணமகாதேவி கோபால கௌதமன்.. இவ்ளோ பெரிய பேருக்குப் பெயர்க்காணம் சொல்லுங்க சார் ////

பெயர்கள் காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என்று இரண்டு வகைப்படும் (அவ்வளவுதானா - இன்னும் இருக்கா?) என்று ஆறாம் வகுப்பு இலக்கணப் பாடத்திற்காக சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு படித்தது ஞாபகம் வருகின்றது. 

எல்லோருடைய பெயருக்கும் பின்னாலே ஒரு காரணம் இருக்கும். 

சீனக் குழந்தைகளுக்கு எப்படிப் பெயர் வைப்பார்கள் என்று ஒரு ஜோக் படித்தது ஞாபகம் வருகின்றது. பெயர் வைக்கவேண்டிய நன்னாளில், ஒரு பெரிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூனை தூக்கிப் போடுவார்களாம். "கிளிங் டாங் ...." என்ன சத்தம் கேட்கிறதோ அதுதான் அந்தக் குழந்தைக்குப் பெயராக வைப்பார்களாம்! 

ஒரு பிரிட்டிஷ் குழந்தைக்கு 10 X 8 என்று பெயர் இருந்ததாம். ஏன் என்று கேட்டவர்களுக்கு, குழந்தையின் அப்பா கூறிய விளக்கம்: எங்களுக்குத் தோன்றிய பெயர்களை எல்லாம்  எழுதி, குழந்தையின் தாத்தாவின் தொப்பியில் போட்டுக் குலுக்கி பார்ட்டிக்கு வந்திருந்த ஒரு சிறுவனிடம் காட்டி, ஒரு பெயரை எடுத்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். அந்தப் பையன் தொப்பிக்குள் துழாவி, கஷடப்பட்டு உருவி எடுத்தது, தொப்பி சைஸ் (10 X 8) போட்டிருந்த லேபிளை! 

சரி சரி சப்ஜெக்ட்டுக்கு வருகின்றேன். 

என்னுடைய பெற்றோருக்கு நான் பதினோராவது குழந்தை. எண்ணிக்கை சரிதான் என்று நினைக்கிறேன். ஏதோ ஒன்றிரண்டு கூட / குறைத்து இருக்கலாம். இந்தப் பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சொந்த பந்தங்கள் இடையே ஒரு பட்டிமன்றம் நிகழ்ந்ததாம். 

அப்போ ஒருவர் சொன்ன 'அன்று ஒரு தகவல்' என்னுடைய அம்மாவுக்கு ரொம்பப் பிடித்துப் போயிற்றாம். அவர் சொன்ன அன்று ஒரு தகவல், இதுதான்: குடும்பத்தில் நிறைய குழந்தைகள் பிறந்துகொண்டே இருந்தால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, குழந்தை என்ன கோத்திரமோ, அந்த கோத்திரப் பெயரை வைத்தால், மேற்கொண்டு அந்தப் பெற்றோர்களுக்கு குழந்தை பிறக்காது என்ற தகவல்தான் அது. 

சுப்ரமணிய, சேஷாச்சல, சுப்ரமணிய, கோபாலனாகிய என் தந்தை, நாங்கள் கௌதம கோத்திரம் என்பதால், எனக்கு கௌதமன் என்று பெயர் வைத்தார்கள். எங்கள் ஊர் திருவாரூர் பக்கத்தில் உள்ள கல்யாணமகாதேவி. எனவே நான், 'கல்யாணமகாதேவி  கோபால கௌதமன்'. க கோ கௌதமன். K G கௌதமன். 'KGG' என்று சொந்த, பந்த, நண்பர்கள் அழைக்கும் பெயர். 
                
இதுதான் என் காரணப் பெயர் ...... இல்லை இல்லை - பெயர்க்காரணம்! 

= X = X = X = X    = X = X = X = X  = X = X = X = X  = X = X = X = X  
        
"ஆமாம் - உங்களுக்கு அப்புறம் உங்கள் பெற்றோருக்குக் குழந்தைகள் பிறக்கவில்லையா?" என்று கேட்கின்றீர்களா? ஹி ஹி அப்புறம் ஒரு தங்கை, அதற்கப்புறம் ஒரு தம்பி. 

கோத்திரப் பெயர் வைத்தால் அப்புறம் குழந்தைகள் பிறக்காது என்று கூறியவரை, என்னுடைய அம்மா கடந்த ஐம்பத்தெட்டு வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்! 

டிஸ்கி:- ஹாஹாஹா என்னது 10 X 8  ஆ ஏதோ ரூம் அளவு மாதிரி இருக்கு.  நல்ல மனுஷர் உங்களுக்குப் பேர் வைக்கச் சொன்னவர். ஏதோ மணந்தால் மகா தேவி என்ற ரேஞ்சுக்கு ஏதோ நினைச்சேன் சார்.  எங்க சாட்டர்டே ஜாலி கார்னரில் உங்க பெயர்க்காரணம் சொன்னதுக்கு சும்மாவின் சார்பில் நன்றி சார். :) வாழ்க வளமுடன் :)

32 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பெயரும் ,பெயர்க் காரணமும் ரசிக்கவைக்கிறது..

பால கணேஷ் சொன்னது…

ஹா... ஹா... ஹா... கல்யாணமகாதேவி ஊர்ப் பெயர், கோபால என்பது அப்பா பெயர் என்பது எனக்குத் தெரியும். கௌதமன் என்கிற பெயரின் பின்னாலும் ஒரு காரணம் இருப்பதை இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அழகான (சிரிப்பான) விளக்கத்துக்கு நன்றி கே,ஜி.,ஜி ஸார்... (எங்கம்மா கூட என்/என் மனைவியின் ஜாதகம் பார்த்து பொருத்தம் சொன்ன ஜோசியதை இன்னும் கொலவெறியோட தேடிட்டுத்தான் இருக்காங்க. ஹி... ஹி... ஹி...)

kg gouthaman சொன்னது…

தன்யனானேன் தேனம்மை மேடம்! மிக்க நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதுவரை தெரியாமல் இருந்த பெயர்க்காரணம்...! "எங்கள் blog" சாருக்கு வாழ்த்துக்கள்...

கோவை ஆவி சொன்னது…

ஹஹஹா.. உண்மையிலேயே இது ஜாலி கார்னர் தான்.. KGG சார் நீங்க இருக்கிற இடமே ஜாலி கார்னர் தானே? :)

Geetha Sambasivam சொன்னது…

கெளதம கோத்திரமா இருக்குமோனு யோசிச்சிருக்கேன். கேட்கத் தயக்கம். :)))) இன்னிக்கு உறுதியாச்சு. பெயர்க்காரணம் அருமையா இருக்கு.

Geetha Sambasivam சொன்னது…

எனக்குத் தெரிஞ்சு அடுத்தாப்போல் குழந்தை வேண்டாம்னால் பெண்ணாய் இருந்தால் மங்களம், காயத்திரி, சாவித்திரி எனப் பெயர் வைப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கேன். எங்களுக்குத் தெரிஞ்ச கன்னட நண்பர் ஒருவர் அவர் பெற்றோருக்குப் பனிரண்டாம் குழந்தை என்பதால் அதோடு போதும் என்பதற்காக "சாக்கி" என வைத்தார்களாம். அது காலப்போக்கில் திரிந்து நாங்களெல்லாம் அவரை "ஜாக்கி ராயர்" என்றே அழைத்துக் கொண்டிருந்தோம். பிறகு ஒரு நாள் எங்க வீட்டில் எல்லோரையும் உட்கார்த்தி வைத்துப் பெயர்க்காரணத்தைச் சொன்னார். அவர் பனிரண்டாம் குழந்தை என்பதாலோ என்னமோ கடைசி வரை கல்யாணமே பண்ணிக்கலை. :))))

Geetha Sambasivam சொன்னது…

இந்த ஜாக்கிராயர் என்னோட படிப்புக்குப் பெரிய உதவிகள் செய்திருக்கிறார். :)

kg சொன்னது…

11 ஆவது குழந்தையாக இருந்து ஜாக்கி என்றழைக்கப் பட்டிருப்பாரோ?

kg சொன்னது…

11 ஆவது குழந்தை ஜாக்கி என்றழைக்கப் பட்டாரோ?

ஸ்ரீராம். சொன்னது…

சீனப் பெயர் வைக்கும் ஜோக் கியாங் மியாங் என்று சிரிக்க வைத்தது. கேஜிஜி எழுதும் பதிவுகளுக்கு ஒரே ப்ளாக் என்பதால் இதுவரை கமெண்ட் போட்டதில்லை. இப்போது அதற்கு ஒரு வாய்ப்பு. எங்கள் ப்ளாக்கின் இன்னொரு ஆசிரியர் கூட அதிசயமாக கமெண்ட் போட்டிருக்காரே!

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஆஹா கல்யாணமஹாதேவி ஊர் தெரியும். கௌதமன் ஜிக்கு இப்படி ஒரு காரணமா. பிச்சை என்று கூடப் பெயர் வைப்பார்கள் கடைசியாக இருந்தால். பிச்சு பிச்சம்மாள்கள் நிறையப் பேரைத் தெரியும். நல்லதொரு ஜாலி பகிர்வு தேன். நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

11 ஆவது குழந்தையைத் தான் ஜாக்கி என்பார்களா? புரியலையே? கன்னடத்தில் சாக்கு என்றால் போதும்னு அர்த்தம்னு அவர் சொல்லிக் கேள்வி. அதனால் குழந்தை போதும் என்பதால் சாக்கி எனப் பெயர் வைத்ததாகச் சொல்லுவார். கன்னடம் தெரியாத நாங்க அதை ஜாக்கி என்று மாற்றிவிட்டோம். அதான் விபரம் சொல்லித் திருத்தினார். ஆனாலும் நாங்க விடலையே! ஜாக்கினு தான் கூப்பிட்டோம். :)

kg gouthaman சொன்னது…

அதாகப்பட்டது (க்கும்... க்கும்!) kg சொல்லியிருப்பது என்னவென்றால், சீட்டுக்கட்டுக் கணக்கு. Ace,2,3,4,5,6,7,8,9,10 வரிசையில்,அடுத்தது, J என்கிற ஜாக்கி - பதினோராவது சீட்டு. அப்புறம் பன்னிரெண்டாவது க்வீன், பதின்மூன்று கிங் என்றெல்லாம் கணக்குப் போடக்கூடாது!

kg gouthaman சொன்னது…

பதினொன்றாவது குழந்தை சாக்கு (சாக்கி?) என்றால் முதல் குழந்தை முதல் பத்து வரை எல்லாம் பேக்கு வா ? (பேக்கு = இன்னும் வேண்டும்; சாக்கு = போதும்!)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

சிரிப்பான..... ம்ஹூம், சிறப்பான பெயர் விளக்கம்!!!

Thenammai Lakshmanan சொன்னது…

கௌதமன் சார் எனக்கொரு சந்தேகம்..

///பெயர்கள் காரணப் பெயர், இடுகுறிப் பெயர் என்று இரண்டு வகைப்படும் (அவ்வளவுதானா - இன்னும் இருக்கா?) என்று ஆறாம் வகுப்பு இலக்கணப் பாடத்திற்காக சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு படித்தது ஞாபகம் வருகின்றது. ///

/// கோத்திரப் பெயர் வைத்தால் அப்புறம் குழந்தைகள் பிறக்காது என்று கூறியவரை, என்னுடைய அம்மா கடந்த ஐம்பத்தெட்டு வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்! ///

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. ஹாஹா முதல்ல தோராயமா 61 வருது அடுத்து 58 தான் வருது. இத யாருமே நோட் பண்ணலையே ஏன்.. ஏன் ஏன்.. உங்க உண்மையான வயசு என்ன என்ன என்ன.. :) :) :)

இத யாராவது பின்னூட்டத்துல சொல்வாங்கன்னு பார்த்தா யாருமே கண்டுக்கிடலை.. அவ்வ்வ் நானேதான் சொல்ல வேண்டியதா இருக்கு. :)


kg gouthaman சொன்னது…

ஊஹூம் நான் சொல்லமாட்டேன்!
அம்மா தேட ஆரம்பித்தது, எனக்கு ஐந்து வருடங்கள் கழித்து என் தங்கை பிறந்ததும்! அதுவரை நானே ராஜா!

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா அப்ப உங்களுக்கு 63 வயசா.. :P :P :P

Madhavan Srinivasagopalan சொன்னது…

// கோத்திரப் பெயர் வைத்தால் அப்புறம் குழந்தைகள் பிறக்காது என்று கூறியவரை, என்னுடைய அம்மா கடந்த ஐம்பத்தெட்டு வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்! //

How abt. other chances..
(1) He could have meant 'Gothram' which is not yours
or
(2) Had it been the name of the gothram, by any chance your gothram is not 'Kowthama'...

# think differently..

Geetha Sambasivam சொன்னது…

மாதவன் ஶ்ரீநிவாச கோபாலன், (எவ்வளவு பெரிய பேருங்க இதுவும்!) கொன்னுட்டீங்க போங்க! உட்கார்ந்து, படுத்து, நின்னு, ஓடி, நடந்து, யோசிச்சிருப்பீங்க போல! :)))))

Madhavan Srinivasagopalan சொன்னது…

// மாதவன் ஶ்ரீநிவாச கோபாலன், (எவ்வளவு பெரிய பேருங்க இதுவும்!) // that's simple : 'மாதவன்' எனது பெயர். ஸ்ரீனிவாசகோபாலன் (single name/word no space in-between), எனது தந்தையின் பெயராகும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் பெயர்க்காரணம் பற்றி நகைச்சுவையாக சொன்னதை ரசித்தே கேஜிஜி சார்.....

kg gouthaman சொன்னது…

Thank you V N

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ராஜி.

பால கணேஷ் உற்சாக வெள்ளத்துல இத எல்லாம் வெளியே சொல்றீங்களே.. பப்ளிக் பப்ளிக் யாராவது வீட்டம்மாகிட்ட போட்டுக் கொடுத்துடப் போறாங்க.

வெல்கம் கவுதமன் சார்

நன்றி தனபாலன் சகோ

உண்மைதான் கோவை ஆவி , அவர் அனுப்பிய பதிலைப் படிக்கும்போதே சிரித்துக்கொண்டுதான் இருந்தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றி கீதா மேம். நான் உங்க ஆஆரம்ப காலப் பதிவுகள் படித்துப் பின்னூட்டமிட்டிருப்பேன். :)

Thenammai Lakshmanan சொன்னது…

முதன் முறையா என் வலைப்பதிவில் கருத்துக் கூறியமைக்கு நன்றி கேஜி சார்.

நீங்க கியாங் மியாங் நு சிரிக்கிறதப் பார்க்கணும்னு தோணுது ஸ்ரீராம். :) :) :)

உண்மைதான் வல்லிம்மா. கருத்துக்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

அப்பாடா ஜாக்கிக்கு விவரம் கொடுத்தீங்க இல்லாட்டி மண்டை கொழம்பி போயிருக்கும் கேஜிஜி. :)

பேக்கு வுக்கும் அர்த்தம் சொன்னதுக்கு தாங்க்ஸ். :)

கருத்துக்கு நன்றி முகம்மது நிஜாமுத்தீன்

Thenammai Lakshmanan சொன்னது…

மாதவன் சார் எல்லா பாசிபிலிட்டீலயும் யோசிக்கிறீங்களே எப்டி சார் எப்டி.. :)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட்

நன்றி கேஜிஜி. :)

கேஜி கேஜியா என் ப்லாகில கமெண்ட்ஸும் இனிப்பும் கொட்டுனதுக்கு நன்றி கேஜிஜி சார். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Geetha Sambasivam சொன்னது…

//கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றி கீதா மேம். நான் உங்க ஆஆரம்ப காலப் பதிவுகள் படித்துப் பின்னூட்டமிட்டிருப்பேன். :)//

அப்படியா? எனக்கு நினைவில் இல்லையே!!!! ஆனால் நீங்க பெரிய எழுத்தாளர் என்பது தெரியும். வந்ததுக்கு நன்றி.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...