அவளுக்குக் கோபமாய் வந்தது. ரொம்பக் கோபம். நேத்துவரை சிட்டி
வெளையாடுறதுக்காக அவள் வீட்டுக்கு வந்து ஓடிக் கொண்டிருந்த அந்த வள்ளிக் குட்டி இன்னைக்கு
சன்னல் வழியாக இவள் கூப்பிட்டும் திரும்பிப் பார்க்காமல் சென்றது. ‘சாயந்திரம் பள்ளிக்கூடம்
விட்டுத் திரும்பி வரும்ல.. அப்பப் பார்த்துக்கலாம்.’.
இவள் திரும்பி வந்து அப்பத்தாவின் தலை மாட்டில் நின்று எக்கிப்
பார்த்தாள். ஆயா வீட்டிலிருந்து அப்போதான் அப்பத்தா வீட்டிற்கு வந்திருந்தாள். அப்பத்தா
மேல் அவ்வளவு பிரியம் என்றோ வெறுப்பு என்றோ சொல்வதற்கில்லை. இருந்தாலும் அவளுக்கு அப்பத்தாளைப்
பிடிக்கும்.
அந்த வெள்ளை வெளேரென்ற நிறமும், கண்டிப்பைப் பறைசாற்றிப்
பயமுறுத்திக் கொண்டிருக்கும் விழிகளும், அந்த அஞ்சுகல் மூக்குத்தியும் – மூக்கும் ரொம்ப
அழகா வெட்டிவச்ச மாதிரி இருக்கும். – இவளுக்கு ரொம்பவும் பிடித்துப் போன சமாச்சாரங்கள்.
“இதற்குமேலாய் அவள் யாருடனும் தன் அப்பத்தாள் வெட்டிப் பேச்சுப் பேசிப் பார்த்ததில்லை.
வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுதான்.
அவளின் அப்பத்தாளைக் கட்டிலில் போட்டிருந்தார்கள். அப்பத்தா
லேசாக அசைவது தெரிந்தது.அவள் இன்னும் எக்கி “அப்பத்தா, அப்பத்தா.” எனக் கூப்பிட்டாள்.
பக்கத்தில் மூணாவது வீட்டு ஆச்சி “இந்தக் குட்டிக்கு இருக்குற
பாசத்தைப் பாரேன்,” என்று ஏதேதோ சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தது. இவள் அதை இலட்சியமே
செய்யவில்லை. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏன் அப்பத்தாள் இப்படிப் படுத்திருக்கிறாகள்
என்று. எப்போதும் மெட்டி ஒலிக்க நடைபோடும் அப்பத்தாளா இங்கன படுத்திருக்கிறது..?
சாப்பாட்டுப் பந்தில சமையக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு அல்வா
கேட்டா கண்ணால எழுந்திரிக்க வைக்குற அப்பத்தாளா இப்பிடிக் கெடக்குறாக..? விருந்தாளிக
வந்தா டிஃபன் எடுத்து வைக்கும்போது , அவுகளுக்கு எதுக்கால எனக்கும்னு கேட்டுத் தட்டுல
வச்சிருக்கிறதுல ஒண்ணு எடுத்துத் தின்னுட்டா பார்வையாலே கையைப் பணியவைக்குற அப்பத்தாளா..?
சமையக்காரண்ணன்கிட்ட கணக்குப் பண்ணி அளவாச் சாமான் எடுத்துக் குடுத்து சமைக்கச் சொல்லுற
அப்பத்தாளா இது.. ? ஏன் இப்பிடிப் படுத்துருக்காக..என்ன ஆச்சு.. ஹூம்..
யார்கிட்ட கேக்கலாம். ஆத்தா நடந்து வந்திக்கிட்டு இருந்தாக.
பத்தி வளவுல. அவுககிட்ட கேக்கலாமா.? வேண்டாம் ஆத்தா யார் மேலேயோ கோபமா இருக்குறாக.
இப்பக் கேட்டா கட்டாயம் பூசைதான். மௌனமாய்ச் சென்று ஆத்தாளின் முந்தானையைப் பிடித்துக்
கொண்டு நின்றாள்.
ஏன் இப்படி எல்லாரும் உள்ளேயும் வெளியிலேயும் ஓடுறாக. ஐயா
ஒரு டாக்டரைக் கூட்டியார்றாக. உடனே எல்லாரும் பரபரக்கிறாக. யாரோ வந்து ஐயா தம்பிக்கு
( அவள் அப்பாவை ஐயாவும் அப்பத்தாளும் தம்பின்னுதான் கூப்பிடுவாக.) தந்தி கொடுக்கச்
சொல்றாக. இந்தா பணம் கொடுத்துட்டு வா என்று அனுப்புகிறார்கள். அவளுக்கு சந்தோஷம் அப்பா
வரப் போகிறார்கள் என்று.
டாக்டர் வேகமாய் வெளியே சென்று காரில் ஏறிக் கொண்டார். காரை
அறைந்து சாத்தும் சத்தமும் கார் கிளம்புவதும் அவளுக்குக் கேட்டது. அவளுக்குக் காரில்
போக ரொம்பப் பிடிக்கும். திரும்பவும் ஓடிவந்து பட்டாலையில் அப்பத்தாவின் கட்டிலுக்கருகில்
நின்று கொண்டாள்.
ஐயா பதற்றமாகக் கோதை கோதை என்று அழைத்துக் கொண்டே வாயில்
ஸ்பூன் ஸ்பூனாய்த் தண்ணீர் ஊற்றினார்கள். அப்பத்தாவின் கண்கள் திறப்பதும் செருகுவதுமாய்
இருந்தது. அவளுக்கு லேசாய்ப் பசித்தது.மூன்றாவது ஸ்பூன் வாயிலேயே தேங்கி நாலாவது ஸ்பூன்
ஊற்றியதும் வழிய ஆரம்பித்தது.
ஐயா, “ கோதை.. கோதை..” என்று உரக்கப் பதற்றத்துடன் கத்திவிட்டுக்
கண் கலங்கி அழ, இவளும் என்னமோ ஏதோவென்று பயந்து, ஐயா அழுவது எதற்கென்று புரியாமல்,
அவர்கள் அழுகிறார்கள் என்று இவளும் “அப்பத்தா, அப்பத்தா” என்று அழக் கூடியிருந்த கூட்டம்
அதற்கெனவே காத்திருந்தாற்போல ஒப்பாரி வைக்க ஆரம்பித்தது. இவளுக்குப் பசி மரத்துவிட்டது..
அப்பத்தாளைத் தூக்கி வந்து பட்டாலையில் ஒரு மூலையில் கிடத்தினார்கள்.
ஐயா முகப்புக்குப் போய் விட்டார்கள். யாரோ முகப்பின் இரண்டு பெரிய கதவுகளையும் திறந்துவிட்டார்கள்.
உள் முகப்பிலும் வெளி முகப்பிலும் ஏகக் கூட்டம்.
யாரோ வந்தார்கள். யாரோ போனார்கள். எல்லாரும் ஏதோ முக்கிய
வேலையிருப்பது போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். சமையக்காரர்கள் வீட்டின் பின்புறத்தில்
மண்ணில் அடுப்பு வெட்டி, அண்டாக்களை ஏற்றிச் சமைக்க ஆரம்பித்து விட்டார்கள். தண்ணி
தவிப்பது மாதிரி இருந்தது. மெல்ல மெல்ல விசும்பிக் கொண்டிருந்தாள் இவள். அழுகை கொஞ்ச
நேரத்துக்குப் பிறகு வரவில்லை. மூக்கை நோண்டிக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக்
கொண்டிருந்தாள்.
அங்கு வந்த யாரோ சின்னப் பிள்ளைகளை ஓட்டிக் கொண்டு போய் பந்தியில்
வரிசையாக உட்கார வைத்தார்கள். ஆல்வீட்டில்
பந்தி வாழையிலையுடன் கனஜோராய் நடந்து கொண்டிருந்தது. இவளையும் உட்கார வைத்தார்கள்.
சீயம் போட்டிருந்தார்கள். இவள் இட்டிலியை விட்டுப்புட்டுச் சீயத்தைத் தின்றாள். பந்திக்காரனைக்
கூப்பிட்டு இன்னொன்று கேட்க ஆசைதான். ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்..?
பந்திக்காரன் பக்கத்து இலை ஆயாவுக்காகச் சீயத்தை வைக்க வந்தவன் இவள் திருதிருப்பது
பார்த்துவிட்டு என்ன வேணுமா என்று கேட்டு ஒன்று போட்டு விட்டுப்போனான்.
அப்பத்தா வந்தால் நான் கேட்கவில்லை அவன்தான் வைத்தான் என்று
சொல்லிக் கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.
திடீரென்று ஆத்தா என்று ஒரு அலறல். அவசர அவசரமாகப் பந்தியை
விட்டு ஓடிவந்து ஆள்வீட்டுக்கும் பத்திக்குமுள்ள வாசலில் நின்று பார்த்தால் பெரிய ஐய்த்தை
( சரசய்த்தை) ஆத்தா என்று கத்திக் கொண்டே ஓடிவருவது தெரிந்தது.
சீயத்தைக் கையில் வைத்துக் கொண்டே யோசித்தாள் ஐய்த்தை ஏன்
இப்படி ஓடி வர்றாகன்னு.. ஹையா ஜாலி பெரியமாமாவும் இல்ல வந்திருக்குறாக. அப்பாவும் அப்புறம்
வந்துருவாக.
கைகழுவிவிட்டு வந்தால் அப்பத்தா தலைப் பக்கத்தில் ஒரு விளக்கேற்றி
வைத்திருந்தார்கள். அப்பத்தா என்ன இன்னும் தூங்குறாக. யாரோ அழுதுகொண்டே பாட்டுப் பாடினார்கள்.
( அது ஒப்பாரியாம். நாச்சா சொன்னாள்.) என்ன சொல்றாகன்னு புரியல. என்னமோ, ‘ மீனு கொளம்பு
வச்சா ஊரெல்லாம் வாசம் வரும்னு. ‘.. ஆமா மீனு கொளம்பு வச்சா நாத்தமில்ல அடிக்கும்.,
வாசமாமில்ல.. ஊம்..
அப்பா வந்தாக. அவுகளும் ஆத்தான்னு கத்திக்கிட்டே வந்தாக.
குலுங்கிக் குலுங்கி அழுதாக. ஆசையாக அப்பாவைப் பார்க்கக் காத்திருந்த அவளுக்கு அப்பா
மேலே கோபமாய் வந்தது. அப்பா கூட டூ. அப்பாகிட்ட டூ காமிக்காம டூ விட்டாச்சு.
அப்புறம் எல்லாரும் அழுதுகிட்டே இருந்தாக. ஐய்த்தை, அப்பா,
ஆத்தா, சித்தப்பா ரெண்டு பேர், இவுகளைத் தவிர எல்லாரும் சாப்பிட்டாக. அவுக சாப்பிடாதபோது
அவள் தானும் சாப்பிடக் கூடாதென்று மத்யானம் சாப்பிடலை.
சாயந்திரம் அப்பத்தாவை கீழ் வாசல்ல ஒரு கட்டில்ல தூக்கிட்டு
வந்து குளிப்பாட்டினாங்க. அப்ப அப்பத்தா தலைக்குப் பின்னாடி வந்து நெத்தில எண்ணையையும்
, சீயக்காயையும் தொட்டு வைக்கச் சொன்னாக. அவ, சித்தப்பாக்கள், நாச்சா, வள்ளிக்கண்ணு
எல்லாரும் வந்து தொட்டு வச்சாக. நாச்சா, “ மாணிக்க மாமாவும் அண்ணாமலை மாமாவும் பாவம்..
பாவம் “ என்றாள். எதுக்குப் பாவம்.. அவளுக்கு ஒண்ணும் புரியல.
அப்புறம் அந்தப் பக்கம் பச்சைக் கலர் மூங்கில்ல கட்டில் செஞ்சாக.
அய் அழகா இருக்கு காவடி மாதிரி. ஒரு கட்டில் மாதிரி இருந்துச்சு. கட்டிலுக்கு மேலே
கூரை வைச்சது மாதிரி. ஏணிப்படி மாதிரி இருந்தது. ஆனா அவளுக்குக் கிட்டக்கக் போகப் பயமா
இருந்துச்சு.
எல்லாரும் பெருங்குரலெடுத்து அழுக ஆரம்பிச்சாக. அப்பத்தாளைக்
குளிப்பாட்டினார்கள். தட்டி வச்சுத் தடுத்திருந்தார்கள். பத்திக்குப் பக்கத்திலேயே
இவர்கள் பகுதியில் நாலு பக்கமும் சாணி வைத்துக் கம்பு நட்டு மேலே பந்தல் கால் போட்டு
அப்பத்தாளைக் கிடத்தி இருந்தார்கள்.
நெத்தியில் குங்குமம் பெரிசாக இருந்தது. மூக்குத்தி , தோடு
எல்லாம் கழற்றி விட்டார்கள். ஒரு சேலையைக் கட்டிவிட்டுக் கண்ணில் சந்தனமோ, மஞ்சளோ தெரியவில்லை
அப்பி இருந்தார்கள். இப்படித்தான் அன்னைக்குக் கூட ஸ்கூலுக்கு மாஜிக் செய்ய வந்திருந்த
ஒரு ஆள் மைதா மாவைக் கண்ணிமையில் அப்பிக் கொண்டான். மூக்கில்பஞ்சைத் திணித்து வைத்திருந்தார்கள்.
காதிலும்.. வாய் இறுக்க மூடிக் கிடந்தது.
வசந்தா ஐய்த்தையும் மீனா ஐய்த்தையும் ரொம்ப அழுதார்கள். கியாஸ்
லைட் எல்லாம் வீட்டில் வைத்திருந்தார்கள். அவள் அதன் பளபளப்பில் மயங்கித் தொட்டுப்
பார்க்கக் கை கொப்புளித்து எரிந்தது. அவளும் கத்தி அழுதாள். இப்பொழுது நிஜமாகவே கண்ணீர்
வழிந்தது. கை எரிச்சல் தாங்கவில்லை.
முதலில் ஐயா தோளில் ஒரு சீலையைப் போட்டுப் பிடித்துக் கொண்டு
அழுது கொண்டே சுற்றி வந்தார்கள். அடுத்து அப்பாவும் குழந்தையைத் தோளில் சுற்றிக் கொள்வது
போல் ஒரு மடித்த சீலையைப் போட்டுப் பிடித்துக் கதறிக் கொண்டே பந்தக்காலைச் சுற்றி வந்தார்கள்.
எல்லாரும் பின்பற்றிச் சுற்றினார்கள். அப்பா கால்கள் பின்னியது. யாரோ தள்ளிக் கொண்டே
சுற்றினார்கள். ரெண்டு சித்தப்பாவும் அழுது கொண்டே சுற்றினார்கள்.
அவளும் சுற்றினாள். அப்போது அவளுக்கு அம்மை போட்டிருந்த போது
வேப்பிலையை அரைத்துப் பச்சைத் தண்ணீரில் தலைக்குக் குளிப்பாட்டிய அப்பத்தா, ஏதோ ஒரு
கோயிலுக்குச் சென்று முடி இறக்கி விட்டு அந்தக் கோயில் ஊரணியில் தன்னை பயப்படாமல் பிடித்துப்
படியில் உக்காரவைத்துப் பிடித்துக் கொண்டு தலையில் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டிய அப்பத்தா,
ஆள் வீட்டின் இருட்டில் அமர்ந்து செவ்வாய்க்கிழமைக் கொழுக்கட்டையைத் தன்னோடு பகிர்ந்து
கொண்ட அப்பத்தா, ( எல்லாரும்.. அயித்தை மக்கள் பிஸ்கட்டுத் திங்கப் போகையில் இது மட்டும்
செவ்வாக் கொழக்கட்டை போதும்.. உப்பில்லாவிட்டாலும் நல்லா இருக்கும்னு அப்பத்தாவோட இருக்குது.)
ஒரு நாள் ப்ரிப்பரேட்டரி ஸ்கூலில் எல் கே ஜி படித்துக் கொண்டிருக்கும்போது சாயங்காலம்
ஸ்கூல் பஸ்ஸில் திரும்பும்போது ஜெமினி ஸ்டாப்பில் (ஆயா வீட்டுக்கு அருகில்) இறங்காமல்,
அப்பத்தா வீட்டுக்கு அருகில் முத்தாளம்மன்
கோயிலுக்கருகில் கடைசிப் பெண்ணாக ட்ரைவரும், கண்டக்டரும் இறக்கிவிட, அந்தியில் ஒற்றையாய்
நடந்து வந்தபோது திகைத்துப் போன அப்பத்தா எல்லாரும் கண்முன்னே தோன்றினார்கள்.
ஆயாவுடன் பார்க்க வந்தபோது பிஸ்கெட் எடுத்துத் தந்த அப்பத்தா,
தீபாவளிக்கு மன்னார்குடிக்கு ஐயாவுடன் வந்திருந்த அப்பத்தா, பட்டாலையில் கம்பீரமாக
உட்கார்ந்து இருக்கும் அப்பத்தா, ஐயாவுக்குப் பரிமாறும் அப்பத்தா, என்று எத்தனை அப்பத்தாக்கள்.
திடீரென்று தம்பி அருணா ஒன்றும் புரியாமல் ஆத்தாவைக் காணாமல்
இரைச்சலால் பாதிக்கப்பட்டு ‘ஓ’வென்று கத்தவாரம்பித்தான். அப்பத்தாவை அந்தப் பச்சை மூங்கிலில் ஏற்றியாயிற்று.
நாலுபேர் தோள் கொடுக்கப் பயணம் புறப்பட்டு விட்டார்கள். அப்பா, ஐயா, அய்த்தைகளை யாராலும்
அடக்க முடியாமல் போனது.
அய்த்தைகள் வாசல்வரை கதறிக் கொண்டே ஓடி வந்தார்கள். அவளும்
தெருமுக்கு வரையில் ஓடிவந்தாள். அதற்குள் ஒரு ஐயா அவளைத் திரும்பி வீட்டிற்குப் போகும்படி
அதட்டினார்கள். வீட்டிற்கு ஓடிவந்தால், எல்லாரும் வீட்டைக் கழுவிக் கொண்டும் , குளத்தில்
தலைமுழுகிவிட்டும் வந்து கொண்டிருந்தார்கள்.
இரவு நேரத்தில் வீட்டில் எல்லா ட்யூப் லைட்டுக்களும் எரிந்தன.
அவளையும் அழைத்துக் கொண்டு போய்த் தலையில் தண்ணியைக் கொட்டினார்கள்.
அலங்க மலங்க விழித்துவிட்டுப் பெரீய்ய அய்த்தை மீனி அய்த்தையிடம்
வந்து உட்கார்ந்து கொண்டு இருந்தாள். சிறிது நேரத்தில் சாமியாடித் தூங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் வீட்டில் ஒவ்வொருவரும் ஓரொரு இடத்தில் உட்கார்ந்து
பேசிக் கொண்டிருக்க இவள் பட்டாலையின் ஜன்னலில் அமர்ந்து பள்ளிக்கூடம் போகக் கிளம்பி
வந்து கொண்டிருந்த வள்ளிக்குட்டியை ஜன்னல் வழியாகவே “ஏய்.. இஞ்ச..வள்ளி.. எங்க வீட்டுக்கு
வெளையாட வர்றியா” என்று வினவ அது, : செத்த வீடு.. செத்துப்போன வீடு நா வரமாட்டேன்..”
என்று கத்திக் கொண்டே ஓட, கோபத்தால் அவளுக்கு முகம் சிவந்தது.
பிடிவாதமாய் உதடு இகழ்ச்சியுடன் கீழே வளைந்தது. மூக்கு துடித்தது.
கண்ணீர் கோர்த்துக் கொண்டது. தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செத்துப் போய்விட்ட அப்பத்தாவிடம்
முதல் முறையாகக் கோபம் வந்தது.
டிஸ்கி:- ’85 டைரியிலிருந்து.
டிஸ்கி 2. இந்தச் சிறுகதை மே 1 - 15, 2014 அதீதத்தில் வெளிவந்தது.
மன வலியுடன் கலங்க வைத்தது...
பதிலளிநீக்குஅப்பத்தா வாழ்ந்த ஒரு அற்புதமான வாழ்க்கையை ஒரு அப்பாவி சிறுமியின் மன ஓட்டங்கள் மூலமாக அறியச்செய்த கதை. இதுபோன்றதொரு இரண்டுங்கெட்டான் வயதில்தான் என் ஆத்தாவை இழந்தேன். ஆத்தா வீட்டில் பிணமாகக் கிடக்க, அரையாண்டுத் தேர்வை எழுதியே ஆகவேண்டுமென்று அடம்பிடித்து பள்ளிக்கூடம் சென்ற அறியாமையை இப்போது நினைத்து வருந்துகிறேன். நினைவுகளை மீளக்கொண்டுவரச்செய்த நீரோட்டமான எழுத்து. அதீதத்தில் வெளியானமைக்குப் பாராட்டுகள் தேனம்மை.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி தனபாலன் சகோ
பதிலளிநீக்குநன்றி கீதா. உங்கள் பகிர்வு நெகிழவைக்கிறது.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!
அப்பாத்தா நெஞ்சை நெகிழ வைத்தது.
பதிலளிநீக்கு“பார்வையாலே கையைப் பணியவைக்கும்.....” உவமை பிரமாதம்.
பாராட்டுக்கள்.
/அப்பத்தா வாழ்ந்த ஒரு அற்புதமான வாழ்க்கையை ஒரு அப்பாவி சிறுமியின் மன ஓட்டங்கள் மூலமாக அறியச்செய்த கதை. /
பதிலளிநீக்குமிக அழகாகச் சொல்லி விட்டார் கீதா. கதையைக் கொண்டு சென்று முடித்த விதம் அருமை தேனம்மை. அப்பத்தா மனதில் நிற்கிறார்.
கண்கள் கலங்கி விட்டன!.. பாராட்ட வார்த்தைகளில்லை!
பதிலளிநீக்குமீண்டும் சிறுமியாகச் செய்த கதை. எழுத்தோட்டம் அருமை. எத்தனையோ அப்பத்தாக்கள் மனதில் வந்து போகிறார்கள். நன்றி தேன்.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி அருணா
பதிலளிநீக்குமிக்க நன்றி ராமலெக்ஷ்மி
நன்றி பார்வதி மேம்
நன்றி வல்லிம்மா.