வியாழன், 29 மே, 2014

மொட்டு விரியும் சத்தம். கன்னடக் கவிதைகள் தமிழில்.மொட்டு விரியும் சத்தம். (கன்னடக் கவிதைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் ) எனது பார்வையில்.


கன்னடக் கவிஞர் திரு பி லங்கேஷ் அவர்களின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு திரு காளிமுத்து நல்லதம்பி அவர்கள் அவரின் சில கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொட்டு விரியும் சத்தம் என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். 


எல்லாமே ஐந்து வரியிலிருந்து ஏழு வரிக்குள் அடங்கிய கவிதைகள். ஆனால் அவை சொல்லும் அர்த்தம் பிரம்மாண்டம். இந்தக் கவிதைகளின் சிறப்பு என்னவென்றால் அவை கால ஓட்டத்தில் எங்கே வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்பதே.


தம்பித் தாத்தா என்று தன் பேரக் குழந்தைகளால் விளிக்கப்படும் நல்ல தம்பி அவர்கள் தன்னுடைய பணிக்காலத்துக்குப் பின்னான பொழுதுகளை இலக்கியத்துக்காகவும் செலவிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி ஏற்படுகிறது. பாரதியின் வரிகள் போல கலைச் செல்வங்களைக் கொண்டு சேர்க்கும் பணியில் இவர் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது.  தமிழில் இருந்து எனது 3 கவிதைகளைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார் இவர். மனுஷ்யபுத்திரன், சபிதா சபி ஆகியோரின் கவிதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார்.கன்னடத்தில் மிகப் பெரும் கவிஞரான பி லங்கேஷின் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தி நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தி மிகப்பெரும் சேவை செய்திருக்கிறார். லங்கேஷ், நல்ல தம்பி ஆகியோரின் எண்ணப் போக்கோடு நம் எண்ணப் போக்கும் ஒத்துப் போவதே இந்தக் கவிதைகளின் சிறப்பு. 


குழந்தைகளுக்குக் காதலுக்கு அரசியலுக்கு மனைவிக்கு என்று படைக்கப்பட்ட பல கவிதைகளுடன் சில கவிதைகள் விலைமாதுக்கள் குறித்தும் இருப்பது ஆச்சர்யம். 


கவிஞர் லங்கேஷ் 1935 , மார்ச் 8 இல் பிறந்தவர். மைசூர் மஹாராஜா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் ( எம் ஏ ஹானர்ஸ்) படித்திருக்கிறார். மூன்று கல்லூரிகளிலும், பெங்களூர் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1980 இல் லங்கேஷ் பத்ரிகே ஆரம்பித்தார். ஏழு கதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், பத்து நாடகங்கள், இரண்டு தழுவல்கள், ஆறு கவிதைத் தொகுப்புக்கள், மற்றும் சுயசரிதையும் படைத்தவர். நான்கு திரைப்படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.அதில் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார். இவற்றுக்காக ஆறு மாநில விருதுகளும், தேசிய விருதுகளும்  இலக்கியத்துக்காக  இரு வருடங்கள்  சாஹித்ய அகாடமி விருதுகளும் வாங்கி இருக்கிறார். 


நீலு காவ்ய என்ற இவரின் கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை நல்ல தம்பி அவர்கள் லங்கேஷ் அவர்களின் மனைவி இந்திரா, மகள்கள் கௌரி, கவிதாவின் அனுமதி பெற்று வெளியிட்டிருக்கிறார். 


இவரின் நண்பர் அருணும் மனைவி மல்லிகாவும் கொடுத்த ஊக்கத்தால் இதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ( ரிட்டயர் ஆனவுடன் ஆண்கள் செய்யும் வேலை டிவி சீரியல் பார்ப்பது. இதைத் தவிர்த்து இவர் இவ்வாறு தான் ரசித்த இலக்கியத்தை அனைவருக்குமாகப் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. இவர் புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர். இவர் எடுத்த புகைப்படங்களையே ஒவ்வொரு பக்கத்துக்கும் பயன் படுத்தி இருக்கிறார்கள்.


இனி நான் ரசித்த கவிதைகள் சில உங்கள் பார்வைக்கு.


///ப்ரியமானவனே

மது , பொன் சூது

இவற்றுடன் மாதுவையும்

சேர்க்க வேண்டாம்-

ஆண் ஆன நீ என் பங்குக்கு

அவை மூன்றும் ஆவாய்///


/// தன் குடும்பத்தின் மூன்று வயிறுகளுக்காக

மூட்டை மூட்டையாய் நெல் பயிர் செய்யும்

விவசாயியைப் பார்த்து ஆச்சர்யமடைந்து

உட்கார்ந்திருந்தது ஒரு பறவை ////// பாவாடையை முழங்கால் வரை

தூக்கி நொண்டி விளையாடும்

குழந்தையின் கால்களின் மேல்

கனவுகளின் பளுஇன்னும்

விழவில்லை என்று தோன்றுகிறது.////// என் காதலுடன் பார்த்த

தாமரைக் குளம் – நான் தனியாக

இப்போது பார்க்கும்போது

கண்ணீர் நிறைந்த கண்போல்

தென்படுகிறது//////எல்லா உதடுகளும் ஒன்றே

ஆனாலும் என்னவனின் உதடு

கொஞ்சம் பழையது என்றால்

என்னை விபச்சாரி என்று

எண்ண வேண்டாம். ///// பனி படர்ந்த குட்டி திபெத்

சீனா வசமான அன்று

நிறையப் பறவைகள்

கடவுள் நாமம் பாட மறுத்தன.////// மனைவி என்பவள்

உலக அழகியின்

முகத்திலும்

பரு காண்பவள்///


/// மொட்டு விரிவதைப் பார்க்கப்

பிடிவாதம் பிடித்து – தூக்கம்

மெல்லத் தழுவி – எழுந்த பொழுது

பூ மலர்ந்து இதழ்கள்

வாடத் தொடங்கி இருந்தன.////// மரத்திலிருந்து உதிரும்

பூ , இலை, விதைகளுள்-

மீண்டும் முளைக்கும் அகங்காரம்

விதைக்கு இருந்தால்

மோட்சத்தின் கர்வம்

பூக்களுக்கும் இலைகளுக்கும் உண்டு. ///நான் ரொம்ப ரசித்த கவிதை இது./// பெண்ணின் நிரந்தர

ஆசை, தன் தோல்

மாமிசங்களின் அழகைத்

தாண்டிய அன்பை

அடைய வேண்டுமென்பது.

அது நிறைவேறியது

மிக அபூர்வம்.///இதை வெளியிட்டவர் விழிகள்பதிப்பகத்தின் திரு நடராசன் அவர்கள். தாங்கள் இதுவரை வெளியிட்ட மூன்று நூலில் இரண்டு நூல்களுக்காகத் தமிழக அரசின் விருது கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலுக்கும் பல விருதுகளும் கிடைக்க வாழ்த்துக்கள். திரு கா நல்லதம்பி அவர்கள் இன்னும் பல நூல்களை மொழிபெயர்த்து வழங்க வேண்டும். 


நூல் :- மொட்டு விரியும் சத்தம்.

ஆசிரியர் :-  தமிழில் :- கா. நல்லதம்பி

கன்னட மூலம் :- பி. லங்கேஷ்.

பதிப்பகம் :- விழிகள் பதிப்பகம்

விலை :- ரூ. 165.
5 கருத்துகள் :

Seeni சொன்னது…

பகிர்வுக்கு நன்றி..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

திரு. நடராசன் அவர்களுக்கும் திரு.கா.நல்லதம்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Muruganandan M.K. சொன்னது…

பகிர்வுக்கு நன்றி..

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி சீனி

வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சகோ

நன்றி முருகானந்தம் சார்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...