பங்குச்சந்தையில் பெண்களின் பங்கு
”ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி”ன்னு பங்குச் சந்தை வர்த்தகத்துல சொல்லிட முடியாது. இல்லத்தரசிகளும் சரி வேலைக்குக் செல்லும் பெண்களும் சரி இன்று தங்கள் பணத்தைப் பல வழிகளிலும்
முதலீடு செய்கிறார்கள்.
பங்குவர்த்தகத்தில் ஈடுபடுவது கொஞ்சம் ஆபத்தானது என்ற அறிமுகத்தோடே ஆரம்பிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் இதில் எவ்வளவு லாபம் வருமோ அவ்வளவு நஷ்டமும் வரும். வீட்டில் சும்மாதானே இருக்கேன். நான் ஏதாவது வியாபாரம் செய்கின்றேன் அல்லது வேலைக்குப் போறேன் என்று கணவரை நச்சரிக்கும் பெண்கள் தங்கள் கணவரிடம் துணிந்து என்னிடம் ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுங்க . பங்குச் சந்தையில் முதலீடுசெய்து பார்க்கிறேன். ,லாபம் பண்ணத் தெரியுதான்னு பார்ப்போம். நஷ்டமாயிட்டாத் தொடர வேண்டாம். லாபம் வந்தால் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யலாம் எனக் கேட்கலாம்.
உங்கள் சிறுவாட்டுப் பணத்தில் கூட ( அஞ்சலக சேமிப்பு, ஆயுள் காப்பீடு, தங்கம், வீடு, மனை, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தது போக) சிறிய அளவில் பங்குகள் வாங்கி விற்கலாம். லாபம் காணலாம். இதற்கெல்லாம் அதிகம் ஒன்றும் தேவையில்லை பெண்மணிகளே.. கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் அனுமானம், கொஞ்சம் வாங்கிய பங்குகளின் ஏற்ற இறக்கங்களைப் பின் தொடர்தல் மட்டுமே.
பொதுவா ஒருத்தர் பங்குவர்த்தகம் செய்யணும்னா
இரண்டு விதமாகச் செய்யலாம்.
இதற்கென்றே இருக்கின்ற
பங்குவர்த்தக அலுவலகங்களை
அணுகித் தங்களுக்காக ஒரு டீமேட் கணக்கும் ,
பங்கு வர்த்தகக் கணக்கும் ஆரம்பிக்க வேண்டும். ஏற்கனவே வங்கியில் கணக்கு இல்லாவிட்டால் வங்கிக் கணக்கும் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு பான் அட்டை மற்றும் புகைப்படம் அத்யாவசியத்
தேவை. இது போக உணவு வழங்கல் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு இதில் ஏதோ ஒன்றை முகவரிக்கான சான்றிதழாகக் கொடுக்க வேண்டும். எதுவும் நிரப்பப்படாமல்
குறுக்குக் கோடிடப்பட்ட இரண்டு காசோலைகளையும்
கொடுக்க வேண்டும்.
அடுத்தது என்ன.. கொஞ்சம் பணத்தைக் கணவரிடம் கேட்டு வாங்கிப் போட்டுப் பங்கு வணிகத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான். ஆரம்பிக்க ரூ. 500/- ம் , வருடாந்திரத் தொகையாக ரூபாய் ( சேவைக் கட்டணம்) ரூ.350/- கட்டவேண்டி வரும்.
பங்குவர்த்தக அலுவலகம் மூலமாகச் செய்யப்படும் வணிகம் ஆஃப்லைன் வர்த்தகம் எனப்படும். நாமே நம்முடைய கணினியில் செய்யும் வணிகத்தின் பெயர் ஆன்லைன் வர்த்தகம். ஷேர்கான், icicidirect.com, பெனின்சூலார், ஓரியண்டல் ஸ்டாக்ஸ், கார்வி போன்ற நிறுவனங்களின் மூலம் ஆஃப்லைனாகவோ ,அவர்களின் அனுமதியின் பேரில் நம்முடைய கணினியில் இருந்து ஆன்லைனாகவோ வர்த்தகம் செய்ய முடியும்.
பங்குச்சந்தை வணிகம் என்பது பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்பது. நாமே அதன்குறிப்பிட்ட பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தின்
பங்குதாரர் ஆவது. நீங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்காமலே அந்த நிறுவனத்தின் பங்குதாரர்
ஆகின்றீர்கள். மேலும் அந்த நிறுவனத்தின் லாபம் நஷ்டம் பொறுத்து அதன் வருடாந்திர அறிக்கையின்
அடைப்படையில் உங்களுக்கு போனஸ் பங்குகளும்
வழங்கப்படும்.
முதன் முதலாக அறிமுகப்படுத்தப்படும் பங்குகள் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்ஸ் எனப்படும். ( பொதுமக்களின் பங்களிப்பையும் நிறுவனங்கள் ஏற்பது. பொதுமக்களையும் பங்குதாரராக்குவது. ) இதன்படிக் குறைந்த முதலீட்டில் வாங்கப்படும் பங்குகள் பெருமளவு லாபத்தையும் கொடுக்கும். சிலது நஷ்டத்தையும் கொடுக்கும். நஷ்டம் என்றால் நீங்கள் முதலீடு செய்த தொகை மட்டுமே.
இந்த டீமேட் கணக்கு மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பிக்கும்முன் இது எல்லாமே காகிதத்தில் எழுத்து வடிவில் இருந்தது. இப்போது எல்லாமே மின்வர்த்தகம்தான். எதுவுமே காகிதத்தில் இல்லை. உங்கள் முதலீடு எல்லாமே கணினி மூலமே. வங்கியில் பணம் செலுத்தி வர்த்தகத்தை ஆரம்பித்தால் அதன் இருப்புத்தொகை அல்லது நாம் நிர்ணயித்து முதலீடு செய்யும் தொகைக்கேற்ப லாபமோ நஷ்டமோ கிடைக்கும்.
லாபத்தையும் நஷ்டத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் மிகக் குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகள் என்றால் அது வங்கியில் நிரந்தர வைப்புநிதி, அஞ்சலக முதலீடு, ரியல் எஸ்டேட், தங்கம், வீடு, மனை, ஆயுள் காப்பீடு, பிபிஎஃப் இவை எல்லாம் அடங்கும். கொஞ்சம் ரிஸ்க் உள்ள முதலீடு என்றால் அது பரஸ்பர நிதி. இதுவும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் பொறுத்தே அமையும். மிக அதிக ரிஸ்க் என்றால் அது பங்குச் சந்தையில் ஈடுபடுவதுதான். மிகச் சிறந்த வழிகாட்டலுடன் ஈடுபட்டால் இதிலும் அதிகம் சம்பாதிக்கலாம்.
தினப்படி வர்த்தகம் செய்பவர்களை ஜாபர் என்பார்கள். ( jobbers ) . மிக அதிக அளவு சூதாட்டம் போல வாங்கி விற்பது நல்லதல்ல. இதை gambling என்பார்கள். NSE & BSE & MSE ( NATIONAL STOCK EXCHANGE & BOMBAY STOCK EXCHANGE & MADRAS STOCK EXCHANGE) சென்னை, மும்பை, தேசியப் பங்குச் சந்தை பரிந்துரைக்கும் நிறுவனங்களின் அதாவது A+++ நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீடாக வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. அந்தப் பங்குகள் ஏறும்போது விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்.
பங்குச் சந்தையில் ஈடுபட்ட சில காலத்துக்குள் மிக அதிக லாபம் பார்த்து விட்டால் அது உங்களை அதிக அளவு ஈர்த்து பணம் பண்ணும் வெறியிலும் தள்ளி விடலாம். எனவே பார்த்து எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.
பங்கு வர்த்தகத்திலேயே கமாடிட்டி மார்க்கெட் ( பலசரக்கு சாமான்கள் ) . கரன்சி மார்க்கெட் ( அந்நிய நாட்டுப் பணப் பரிவர்த்தனை ) ஆகியவனவும் உண்டு. நீங்கள் தங்கத்தைக் கூட பேப்பர் கோல்ட் அல்லது ஈ கோல்ட் என்னும் முறையில் கூலி சேதாரம் இல்லாமல் 22 காரட், 24 காரட் தங்கத்தில் பணத்தைப் போட்டுக் குறிப்பிட்ட சவரன் அல்லது கிராம் தங்கம் வாங்கலாம். திருடர் கொண்டு போய்விடுவாரோ என்ற பயம் இருக்காது. வெள்ளியையும் கூட இம்முறையில் வாங்கலாம்.
இன்னும் இண்டெக்ஸ் வர்த்தகமும் உண்டு. அது நிஃப்டி, என் எஸ் இ, பி எஸ் இ ஆகியவற்றின் குறியீடு பார்த்து முதலீடு செய்து விற்பது. எதில் செய்தாலும் சந்தையின் ஏற்ற இறக்கம்பார்த்து உடனடியாக வாங்கவோ விற்கவோ செய்தால் லாபம் அதிகமாக்கலாம். நஷ்டம் வந்தாலும் தவிர்க்கலாம். வீட்டில் செய்யும் ஆன் லைன் வர்த்தகத்துக்கு நாம் ஸ்டாப் லாஸ் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
ஃப்யூச்சர் மற்றும் ஆப்ஷன் ( கால் ஆப்ஷன், புட் ஆப்ஷன் ) ஆகிய வியாபாரங்கள் யூக வணிகம் எனப்படுகின்றன. அதாவது பங்குச்சந்தை இரண்டு மாதம் கழித்து ஏறும் அல்லது இறங்கும் என யூகம் கொண்டு வணிகம் செய்வது. இதில் நஷ்டம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இதை மிகவும் பரிந்துரைப்பதோ ஊக்குவிப்பதோ இல்லை.
முன்பெல்லாம் பங்குப் பரிவர்த்தனை அலுவலகத்திற்குச் சென்று கூவிக் கூவிப் பங்குகள் விற்பதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். இப்போதெல்லாம் ஆன்லைன் வணிகம்/ஆஃப்லைன் வணிகம்தான்.
இருந்த இடத்தில் இருந்தே வியாபாரம்.
ஸ்பாட் என்று ஒன்று உண்டு. அது அந்த இடத்திலேயே பணம் கொடுத்து வாங்குவது. மார்க்கெட் புல்லிஷ் என்றால் ஏற்றமாயிருக்கிறது என்று அர்த்தம். பியரிஷ் என்றால் இறக்கமாயிருக்கிறது என்று அர்த்தம். பங்குச் சந்தையில் ஈடுபடும் பலர் என் குடும்பத்தில் இருப்பதால் என்ன புல்லா, பியரா என்று முன்பு பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இதுபற்றி முரட்டுக் காளையும் மிரளும் கரடியும் என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.
நாம் புதிதாக ஆரம்பிக்கும் நிறுவனங்களிலும், மென்பொருள் துறையிலும் பணத்தை முதலீடு செய்யுமுன் பலமுறை யோசிக்க வேண்டும். எம் பி ஏ படிக்கும் மாணவர்களுக்கு எல்லா நிறுவனங்களையும் ஆராய்ந்து எப்படி முதலீடு செய்வது என ஆலோசனை சொல்லும் பாடத்திட்டமே உள்ளது. இதற்கு என்று சில கணக்கீடுகள் இருக்கின்றன.
பொதுவாக ஆட்சி மாற்றம், உலகளாவிய யுத்தங்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், தங்கம் விலை ஏற்றம் பொறுத்துப் பங்குச்சந்தையின் போக்கும் மாறுகிறது. ஹிந்து , இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ் லைன், எகனாமிக் டைம்ஸ், காபிட்டல் மார்க்கெட் ஆகிய பத்ரிக்கைகளும் , இதழ்களும் போக என் டி டி வி, சி என் பி சி டிவியும் 24 மணி நேரமும் பங்குகளின் ஏற்ற இறக்கங்கள் பற்றி அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.
பங்குச்சந்தை என்ன ஆண்கள் மட்டுமே ஈடுபடும் ஒரு துறையா.. இல்லை.. எனக்கு நெய்வேலியில் ஹிந்தி வகுப்பு எடுத்த ஆசிரியை, மற்றும் என் உறவினர் பெண்கள் சிலர் மட்டுமல்ல என் 68 வயதான அம்மா கூட இதில் ஈடுபட்டுப் பணம் சம்பாதித்து வருகிறார். மிகச் சிறந்த நிறுவனங்களின் அல்லது வங்கிகளின் பங்குகளை வாங்குவது, அவை ஏறும்போது விற்று லாபம் பார்ப்பது இதுதான் அவரின் கொள்கை. இறங்கி விட்டால் அப்படியே வைத்து விடுவார். தொடர்ந்து தொலைக்காட்சியில் பங்கு ஏற்ற இறக்கம் குறித்துக் கவனித்து வந்தாலே ஒரு தெளிவு கிடைத்து விடும்.
மனம் போன போக்கிலோ, அல்லது நிபுணர் கருத்துக்களிலோ, டிப்ஸ்களிலோ நம்பிக்கை வைக்காமல் தொடர்ந்து சந்தையின் போக்கைக் கவனித்து வருவதே சாலச் சிறந்தது. குமுதத்தில் தீபதர்ஷிணி பங்குச் சந்தை குறித்து எழுதி வருகிறார். மேலும் மும்பையைச் சேர்ந்த தர்மஸ்ரீ பங்குச் சந்தை பற்றிய வகுப்பு எடுக்கிறார். பங்குச் சந்தை என்றால் என்ன, அடிப்படை விஷயங்கள், ஆன் லைன் வர்த்தகம் மூலம் பங்குகளை வாங்குவது , விற்பது, நாள் வர்த்தகத்தில் ஈடுபடும் முறைகள், நல்ல நிறுவனங்களைக் கண்டுபிடிப்பது எப்படி என 5 வகுப்புக்கள் எடுக்கிறார்.
என்னுடைய தாத்தா 96 வயது ( இறக்கும் )வரையிலும் பங்குச் சந்தையில் ஈடுபட்டு வந்தார். சில சமயம் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் முதுமை காரணமாக அவரைச் சேர்க்கும்படி ஆனபோதும் நாளை பங்குச்சந்தையில் என்ன பங்கு ஏறுமோ, என்ன பங்கு இறங்குமோ என்ற நினைப்பு ஏற்பட்டு அந்த வேகத்திலேயே எழுந்து விடுவார். அவரை அந்த வயது வரை செலுத்தியது சுறுசுறுப்பாக வைத்திருந்தது அவர் ஈடுபட்ட பங்குச் சந்தையே எனலாம்.
இதை சூதாட்டக்களம் என்று பெண்கள் கருதுவதாலேயே ஈடுபடுவதில்லை. இதுவும் ஒரு முதலீடு என உணர்ந்தால் ஈடுபடலாம். நம் நாட்டில் 2 சதவிகிதம் பேரே இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார்கள். நம் நாட்டின் பொருளாதாரத்தின் முகுகெலும்பாய் இருக்கும் பங்கு வர்த்தகத்தைப் பாதுகாப்பாக செய்து நம்மையும் உயர்த்தி நாட்டையும் உயர்த்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)