பாதை மாறிய பயணம்
***********************
1.2.84 ( தமிழ்நாடு இறையியற் கல்லூரி நடத்திய கவிதைப்
போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை)
ச. தேனம்மை இளம் அறிவியல் , வேதியல் இரண்டாமாண்டு.
தீஞ்சுவைப் பாலெடுத்து
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக்
கொடுத்தாலும் புளிக்குதென்பேன்
ஏனெனில் தமிழ்த்தாயிடம்
மதலைநான்
தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்..!
இல்லையில்லை அன்னையவள் பரிவுகொண்டு
என்னை வளர்த்த காரணத்தால்..
தமிழன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..!
சங்கம் வளர்த்துச் செழிக்கும் மதுரையில்
தங்கத் தமிழ் வளர்க்கும் பாத்திமா அன்னை
வளர்த்து, “வாகை சூடிவா மகளே” என்று
வழியனுப்பிய புத்திரி நான்.
அவள் தாளில் தெண்டனிட்டேன்.
என்னுடைய தமிழ்ப் பயணம்
பாதை மாறிய பயணமாயிருக்காது.
“சமுதாயம் ஒரு சாக்கடை”யெனக்
கொட்டி முழக்குகின்றான்
அரசியல்வாதி..!
தான் தான் அந்தச் சேற்றின்
தலைமைப் புழு என்பதை ஏனோ
மறந்து விடுகின்றான்..?
பூக்கடையைக் கவிழ்த்துவிட்டுச்
சாக்கடைச் சமாதியை,
சாராயக்கடைச் சமாதியை,
எழுப்பின
முதல் தமிழ்த் துரோகன்
அவன்தானே..
நாம் பாதம் தவறிப் பயணிக்கிறோம்.
முட்டாள்த்தனமாகப்
பாதை தவறியவனைப் பின்பற்றுகின்றோம்.
மனசு கணங்களால் நிரம்பி வழிகின்றது.
புண்ணியத் தலங்களுக்கு
அதாவது,
புண்ணியத்தீர்த்தத் தலங்களுக்கு
வழிகாட்டியாய் அம்புக்குறிகளுடன்
வெளியே போர்டு
உள்ளே ஆட்டம் ஜோரு..
லோடு ஏறிவிட்டதால்
“தள்ளாடும் “ வெகு ஜோரு..
“குடிப்பது உடல் நலத்திற்குச் கேடு செய்யும்” என
எழுதி ஒட்டிய சிட்டைகள் கொண்ட
புட்டிகளை வட்டியில் வாங்கி
வீட்டைப் பட்டினி போடும்
வெட்டி மனிதர்களின்
பகுத்தறிவுக் கூடம்தான்
அந்தத் தள்ளாட்டக் கூடாரம்.
இவர்கள் பாதை தவறிப் பயணிக்கிறார்கள்.
இல்லையில்லை
பாதம் தவறிப் பயணிக்கிறார்கள்..
மனசு ஆட்டம் காண்கின்றது.
பரிசுச்சீட்டாம் பரிசுச்சீட்டு
பணத்தைப் பறிகொடுக்கும் கேலிக்கூத்து..
பாடுபட்டுப் பணத்தைத் தேடி அதை
அனுபவிக்காமல் புதைத்து வைத்து அல்ல அல்ல
புதைகுழிக்கு, மீளமுடியாப் புதைகுழிக்கு
அனுப்பிவிட்டு வரும்
கேடுகெட்ட மானிடரே!
கேளுங்கள்! கூடுவிட்டிங்கு
ஆவி போனபின்பு அல்ல அல்ல
ஆவி இருக்கும் போதே உடலில்
ஆவி இருக்கும் போதே
(அப்போதும் உருவம் கூடுபோலத்தான்)
யார் அனுபவிப்பார் அப்பணத்தை
அல்ல அல்ல
பரிசுச் சீட்டாகி குலுக்கலுக்குப் பின்
குப்பையாகிப் போன காகிதக் குவியலை..
அதைக் கழுதை வேண்டுமானால் அனுபவிக்கும்..!

இரவின் நிசப்தத்தில் தலையணை
தலைக்குக் குளிக்கும்
கன்னியின் கண்ணில்
பீரிடும் வெந்நீர் ஊற்றில்
தலையணை பொசுங்கிச் சாம்பலாகும்
பதுங்கிப்பாயும் வரதட்சணைப் புலிகள்
வளங்கொழிக்கும் குகை
‘இனியொரு சதி செய்வோம்’ எனத்
தாம் அடைந்த
கொடுமை விதியை மதிமறந்து
தன்னினத்தைத் தானே கொல்லும்
கோடரி போல,
உடன்பிறந்தே கொல்லும் நோயாக
எத்தனை பாதை மாறிய மனங்கள்..
பெண்மனங்கள்..
இவர்கள் பாதையை மட்டும் மாற்றவில்லை..
பயணத்தையே மாற்றுகின்றார்கள்.
பாவச் சுமைகளால் இதயம் கனக்கிறது..
பெண்மையை வணங்க மறந்து
வீதிகளில் பார்வையாக்கி
வியாபார போகமாக்கும்
விவஸ்தை கெட்டதனத்தின்
ஆபாசக்குவியல் நரகத்தை நோக்கி
நமது பாதை மாறிய பயணம் தொடர்கின்றது..
விதி கூட்டி வைக்கின்றதாம்
அன்புடையோரை: அதனால்
இவர்கள்
சதிசெய்து பயணிக்கின்றார்கள்
ஒரு நாள் இரவு;
இவர்கள் பாதை தவறிப் பயணிப்பதால்
பல பந்தங்கள் சிதறிச் சரிகின்றன.
இதயத்தில் இரத்த ஊற்று வெடிக்கின்றது.
தினமொரு சீதையை அக்கினிப்
பூவுக்கு அர்ப்பணம் செய்யும்
இராவணர்கள், இந்திய இராவணர்கள்
ஒவ்வொரு முறையும் மறுமணம்
என போர்வையில்
போதவிழ்ந்த பச்சை மகரந்தங்களைப்
பொசுக்குகின்றார்கள்.
இல்லத்தில் தாயவள்
மரவள்ளிக் கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்கையிலே
நினைத்துக் கொள்கின்றேன்..
இப்படித்தானே இந்தியப்
பெண்மைமொட்டுக்களும்
நீறுபூக்கப்படுகின்றன என்று.
மனசின் மூலைகள் வலிக்கின்றன.
இருதயத்தின் கடின எண்ணங்கள் கூட
இளகி இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன.
தண்டவாளத்தின் இணைகோடுகள்
இணையாய் இருக்கும் வரைதானே
இரயிலின் பயணம் நடக்கும்.
ஓரிடத்தில்
தடுமாறி விட்டால்
தடம் மாறிவிட்டால்
கதி என்ன ஆகும்..?
இந்தப் பாதை தவறிய
பயணங்களில்
பாதம் தடுமாறலாம்.
ஆனால் பயணம் தடுமாறக் கூடாது
பயணிப்பவர்களும்தான்..!!!

தமிழ்த்தாயிடம் தாய்ப்பால் குடித்துத் தான் வளர்ந்திருக்கின்றீர்கள் தோழி...ஒவ்வொரு வார்த்தையும் அழகு...என்றும் இதுபோல் வரிகளை வடித்து, சிறக்க வாழ்த்துக்கள்...:)
பதிலளிநீக்குதமிழ்த்தாயிடம் தாய்ப்பால் குடித்துத் தான் வளர்ந்திருக்கின்றீர்கள் தோழி...ஒவ்வொரு வார்த்தையும் அழகு...என்றும் இதுபோல் வரிகளை வடித்து, சிறக்க வாழ்த்துக்கள்...:)
பதிலளிநீக்குsako...!
பதிலளிநீக்குvalikonda varikal.......
நன்றி இளங்கோ
பதிலளிநீக்குநன்றி சீனி..
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!