எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.


மீனா லெட்சுமணன் சென்னையைச் சேர்ந்தவர். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். தன் தந்தையின் ஊரான திண்டிவனம் கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குப் போனபோது கொண்டாடிய பொங்கலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

அங்கே அடுப்பு வெட்டி பின் பொங்கல் செய்வார்களாம். இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பது இதுதானோ.. கிராமத்தில் மண் அடுப்பில் பானையில் செய்யும் பொங்கலுக்கு என தனி ருசி உண்டு.. ருசித்துப் பாருங்கள்.

வித்தியாசமான கிராமத்துப் பொங்கல்

நான் ஒரு சென்னை வாசி , சென்னைலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கிராமத்தில் பொங்கல் கொண்டாடினால் அது எனக்கு வித்தியாசமான புது அனுபவம் மிக்க பொங்கலாக தானே இருக்கும். குக்கர் பொங்கல் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்த்து கொண்டே சாப்பிட்டு பழக்க பட்ட எனக்கு கிராமத்தில் அடுப்பு செய்து பொங்கல் பொங்கி உற்றார் உறவினரோடு சேர்ந்து சாப்பிடும் அனுபவம் வித்தியாசமான பொங்கல் கொண்டாட்டம் தானே.

வந்தவாசி பக்கத்தில் மங்களம் என்னும் ஒரு குக்கிராமம் என் தந்தையின் பிறந்த ஊர். அவர் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார்.என் பெற்றோர் கலப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.என் தந்தைக்கு சென்னையிலேயே நல்ல வேலை, குடும்பம் என்று அமைந்து விட்டதால் மங்களத்தின் பக்கம் செல்லவே இல்லை , நாங்களும் கிராமத்தின் பக்கமே போகாமல் இருந்து விட்டோம் . எப்பொழுதாவுது என் தந்தையின் உடன் பிறந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள் அவ்வளவே ..வேறு எந்த சொந்தங்களை பற்றியும் தெரியாது.இப்படி இருக்கையில் ஐந்து வருடத்திற்கு முன்பு அந்த கிராமத்தில் என் அன்னையார் சொல்லி தந்தை ஒரு பெரிய வீடு வாங்கினார், வாங்கிய ஒரு வருடமாக வீட்டை பூட்டியே வைத்திருந்தோம் காரணம் பெற்றோர்கள் அரசாங்க பதவியில் இருப்பவர்கள். விடுமுறை கிடைக்கவே இல்லை.2007 ஆம் வருடம் பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பிலிருந்தே என் தந்தையின் நெருங்கிய உறவினர்கள் பொங்கலுக்கு ஊருக்கு வருமாறு பிடிவாதத்துடன் அழைக்கத் துவங்கி விட்டனர்.சரி எங்களுக்கும் கிராமத்திற்கு போய் வரலாமே என்று தோன்றியது.பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னரே சென்று விட்டோம். பூட்டி இருந்த வீட்டை சுத்தம் செய்து அழகாய் வைத்து இருந்தனர் என் தந்தையின் உறவுப் பெண்கள். நாங்கள் எங்கள் புது வீட்டின் வாசலில் காரிலிருந்து இறங்கியவுடன், உறவினர்கள் அனைவரும் எங்களுக்கு ஆரத்தி எடுத்து பூசணிக் காயில் திருஷ்டி சுத்தி போட்டார்கள், எனக்கு பார்க்க ஆச்சரியமாக இருந்தது, என் பெரியப்பாவிடம் கேட்டேன் "எதற்கு இதெல்லாம் செய்கிறார்கள்" என்று கேட்டேன். "நீங்கள் எல்லாம் முதல் முதலாக இப்பொழுது தானே இந்த ஊருக்கு வருகிறீர்கள் அதானால் ஊரு கண்ணு பட கூடாது என்பதற்காக அப்படி செய்தார்கள்" என்று சொன்னார். சென்னையில் 2400 சதுரடியில் வீடு கட்டினால் கூட பார்க்க குருவி கூடு தான் அனால் அங்கே எங்களுக்கு மிக பெரிய வீடு பின்னால் வயல் வெளி, ஆள் அரவமற்ற தெரு, மிகவும் அமைதியான சூழல், இப்படி எல்லாத்தையும் நான் ரசித்து கொண்டு இருக்க என் தந்தையின் உறவினர்கள் என்னிடம் வந்து "எப்பிடி இருக்க பாப்பா, நான் யாருன்னு தெரியுதா ?" என்றெல்லாம் விசாரிக்க தொடங்கி விட்டனர், நானோ சங்கடமாக நெளிய ஆரம்பித்து விட்டேன்.காரணம் எனக்கு யாரையும் தெரியாது. பிறகு என் தந்தையே அனைவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அப்பொழுது தான் தெரிந்தது என் தந்தைக்கு எவ்வளவோ. சொந்தங்கள் என்று கிட்ட தட்ட அந்த கிராமமே அவருடைய உறவினர்கள் தான், இவ்ளோ பெரிய குடும்பதை விட்டா என் தந்தை சென்னையில் இத்தனை வருட காலம் (50 years ) வாழ்ந்தார் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கின்றது. அன்று மாலை என் தந்தை உறவினர்கள் விட்டிற்கு என்னை அழைத்து சென்றார்.எங்கள் கூட ஒரு பெரிய கும்பலே வந்தது ஏதோ பேரணி நடத்தி அதற்கு நானும் தந்தையும் தலைமை வகித்து செல்வது போல் இருந்தது, என் தந்தை உறவினர் வீடுகளுக்கு சென்றதும் அங்கிருந்த பெரியவர்களுக்கு என் கையால் இனிப்பு பழங்கள் அடங்கிய தட்டை என்னிடம் குடுத்து கொடுக்க சொல்லுவார்.ஒரு வீட்டிற்கு சென்றோம் அங்கே ஒரு வயதான பாட்டி, நெற்றியில் கை வைத்து கண்ணை சுருக்கி கொண்டு என் தந்தையைப் பார்த்து "யாரு லக்ஷ்மணன் னா" என்று கேட்டு கொண்டே என் தந்தையை கட்டி கொண்டு கன்னங்களை தடவி விழியில் நீருடன் எப்புடி ஐயா இருக்க? இப்ப தான் உனக்கு என் நியாபகம் வந்துச்சா?" என்று கேட்டு கொன்டே என்னை பார்த்து "இது யாரு உன் பொண்ணா ?" . "ஆமா பெரியம்மா இது என் சின்ன பொண்ணு " என்று நா தழு தழுக்க என் தந்தை சொன்னார். பாட்டியின் கண்களில் நீரை பார்த்ததும் என் தந்தையின் கண்கள் கலங்குவதை முதன் முதலாக பார்கிறேன். என் தந்தை எப்பொழுதும் சிரிப்பும், கல கல என்ற பேச்சோடும், தப்பு செய்தால் கண்டிக்கும் குணத்தோடு பார்த்து பழக்க பட்ட எனக்கு உணர்ச்சி வசப்பட்ட தந்தையை பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நாங்கள் இப்படியே ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தோம், வீட்டின் பின் புறத்தில் களி மண் பிசைந்து கொண்டு இருந்தார்கள். நான் சென்று "எதற்கு இந்த களி மண் என்று கேட்டேன்" , "இதில் தான் அடுப்பு செய்து பொங்கல் வைக்க போகிறோம் நம் வீட்டில் " என்று சொன்னார்கள், எனக்கோ மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது . நானும் என் வயது ஒட்டி இருந்த உறவுப் பெண்களும் சேர்ந்து மண் பிசைந்து , போட்டு இருந்த உடை எல்லாம் கரை ஆக்கி கொண்டும் (கறை நல்லது !!), முகத்தில் பூசிக்கொண்டும் பெரியவர்கள் உதவியுடன் அடுப்பு செய்து வெயிலில் காய போட்டோம். போகி பண்டிகை அன்று எங்கள் ஊரில் பழைய பொருட்களை எரித்து விட்டு ஐயனார் கோவிலுக்கு சென்று பொங்கல் செய்து வழி பட வேண்டும். நாங்கள் அனைவரும் எங்கள் நிலத்தில் உள்ள ஐயனார் கோவிலுக்கு பூ , பழம், மற்றும் பூஜா சாமான்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு உறவினர்கள் படை சூழ சென்றோம்,அங்கு போனதும் நான் ஐயனாரை பார்த்து ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்று விட்டேன் காரணம் நாற்பதடி உயரம் கொண்ட ஐயனார் அவர் , அவருக்கு பொங்கல் படையல் இட்டு தீபாராதனை காண்பிக்கும் பொழுது என் அம்மாவை கூப்பிட்டு காண்பிக்க சொன்னார்கள் , முதலில் தயங்கிய அம்மா பிறகு செய்தார்கள்.பூஜை எல்லாம் செய்து வீடு வந்து சேர்ந்தோம்.

பொங்கல் அன்று எங்கள் வீட்டின் வாசலில் நாங்கள் செய்த அடுப்பை எடுத்து அதில் கட்டைகளை வைத்து தீ மூடினார்கள் என் தந்தையும் தந்தையின் சகோதரர்களும்.என் அம்மா புது பானை வைத்து நீர் ஊற்றினார்கள், என் அம்மாவிற்கோ பானையில் பொங்கல் வைக்க தெரியாது , நாங்களோ சினிமாவில் மட்டுமே பார்த்தவர்கள்.நீர் கொதி வந்த உடன் என் அம்மா அரிசியை போட்டார்கள் அனால் பொங்க வில்லை நாங்களோ பொங்கலோ பொங்கல் என்று கத்துவதற்காக் நின்று கொண்டு இருந்தோம், என்னை செய்வது என்று என் அம்மா முழித்து கொண்டு இருக்கையில் என் பெரியம்மாவும் பெரியப்பாவும் அந்த இடத்திற்கு வந்து "என்னமா நல்ல நேரம் முடிய போகுது இன்னும் பொங்கலையா" என்று கேட்டார், "அது பொங்கவே மாட்டேன்குது" என்று அம்மா அலுப்புடனும் கோவத்துடனும் சொன்னார், உடனே என் பெரியம்மா சமையல் அறையில் இருந்து ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வந்து அந்த பானையில் ஊற்றினார்கள் பிறகு ஐந்து நிமிடத்திற்கெல்லாம் பொங்கல் பானையில் இருந்து பொங்கியது, அது பொங்கிய சந்தோஷத்தில் நாங்கள் அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று கத்தினோம், பிறகு சூரியனுக்கு படையல் இட்டு வணங்கி முடித்ததும் இலைகள் போடப்பட்டது.நன்றாக வடை பாயசத்துடன் பொங்கல் சாப்பிட்டு முடித்தோம்.

மாட்டுப் பொங்கல் அன்று என் தந்தை உறவினர்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார், எல்லோருக்கும் அன்று பிரியாணி தான், வீட்டிலேயே ஆள் வைத்து செய்தோம்.தந்தையின் பெரியம்மா பிள்ளைகள் யாரும் என் தந்தையின் குடும்பத்தாரிடம் பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை கிடையாது, அது ஏதோ பங்காளி சண்டையாம், என் தந்தைக்கோ அவர்களை விருந்துக்கு அழைக்க ஆசை.இத்தனைக்கும் எல்லாரும் பக்கத்து பக்கத்து வீடுகள் தான். என் தந்தை அந்த குடும்பத்தில் வளர்ந்ததனால் அந்த சகோதரர்களிடம் அவருக்கு பாசம் கொஞ்சம் அதிகம்.இதை உணர்ந்த நான் என் தந்தையிடம் அவர்கள் கண்டிப்பாக நம் வீட்டு விருந்துக்கு வருவார்கள் கவலைப்படாதீர்கள் என்று வாக்களித்து அந்த வீட்டிற்கு சென்றேன்.என் பெரிய பாட்டி என்னை பார்த்ததும் அவருக்கு சந்தோஷம் பொங்கி கொண்டு வந்தது. "வா அம்மா" என்று வீட்டிற்குள் அழைத்து சென்றார், என் தந்தையின் சகோதரர் பிள்ளைகள் என்னிடம் ஆசையாக வந்து பேசினார்கள், எல்லோரையும் விருந்துக்கு அழைத்தேன், என் பெரியப்பவையும் அழைத்தேன் (தந்தையின் பெரியம்மாவின் மூத்த மகன் ). "நீ கவலைப் படாத உங்க அண்ணன்ங்க வருவாங்க " என்று சொன்னார் , இது போதும் குடும்பத்தை இணைக்க என்ற சந்தோஷத்துடன் சென்றேன் . அதே போல் அவர்களும் வந்தார்கள், என் தந்தை அவர்களை அழைத்து விருந்து பரிமாறினார்..அடுத்தநாள் நாங்கள் சென்னைக்கு கிளம்பும் முன் என் தந்தை என்னை அழைத்து கொண்டு அவரது பெரியம்மாவின் மூத்த மகன் வீட்டிற்கு சென்றார், அங்கு அவரை பார்த்ததும் அவருடைய அண்ணன் கண்களிலும் நீர், எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர், அண்ணனும் தம்பியும் கட்டி அணைத்து பாச மழை பொழிந்து அப்பப்பா என்ன நெகிழ்வான தருணம் , பிரிந்து இருந்த இரண்டு குடும்பமும் பல வருடங்கள் கழித்து என்னால் ஒன்று சேர்ந்தது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி.இப்பொழுது சொல்லுங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத வித்தியாசமான பொங்கல் அனுபவம் தானே இது.


--- மீனா லெட்சுமணன்

6 கருத்துகள்:

  1. மண் பிசைந்து , போட்டு இருந்த உடை எல்லாம் கரை ஆக்கி கொண்டும் (கறை நல்லது !!), முகத்தில் பூசிக்கொண்டும் பெரியவர்கள் உதவியுடன் அடுப்பு செய்து வெயிலில் காய போட்டோம்.//

    பகிர்வுகள் சுவாரஷ்யம்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரத்னவேல் சார்

    நன்றி கீதா

    நன்றி ராஜி

    பதிலளிநீக்கு
  3. இனிமையான நினைவுகள். சில கிராமங்கள்ல இப்பல்லாம் மண்ணு குழைச்சு கட்டி அடுப்பு செய்யறதைக்கூட விட்டுட்டாங்க. நேரடியா கல்லு இல்லைன்னா காங்கிரீட்ல செஞ்சு வெச்சிக்கிறாங்க. உடையாம இருக்கும்ன்னு காரணமும் சொல்லிக்கிறாங்க.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...