இது ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம். :-
ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட கதிர் கிராமமும் வயலும் வயல் சார்ந்த வாழ்வை விரும்புவர். இயற்கையோடு இயைந்த பொங்கல் கொண்டாட்டாத்தையும் ., விவசாயிகளுக்கே உரித்தான மாட்டுப் பொங்கலையும் சிறப்பாகப் பகிர்ந்து உள்ளார். ”உழுதுண்டு செல்வாரே செல்வார் ,, மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பது இங்கு பொருத்தமாய் இருக்கிறது.
************************************************
கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம்:-
******************************************************
அவை இப்போது போல் தொலைக்காட்சிகளையும், சினிமாவையும் தொங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பண்டிகை தினங்கள் அல்ல. அப்போதெல்லாம் பொங்கல் பண்டிகையை குதூகலமாக வரவேற்க பல காரணங்கள் இருக்கும். முதல் காரணம் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் உடனடியாக வரும் விடுமுறை வாரம். அதற்குப் பின் முழு ஆண்டுத்தேர்வுக்கான படிப்புகள் விறுவிறுப்பாக(!!!) தொடங்கிவிடும்.
அடுத்த காரணம் பொங்கல் திருநாள் என்பது விவசாயக் குடும்பத்தில் நேரடியாக மகிழ்ச்சியை விதைக்கும் ஒரு பண்டிகை. பொதுவாக தை முதல் நாளான பொங்கல் தினத்தில் பொங்கல் வைத்து கொண்டாடுவது எங்கள் பகுதி விவசாயக் குடும்பங்களில் வழக்கம் இல்லை. பொங்கல் தினத்தன்று குலதெய்வம் கோவிலுக்கோ, கூடுதுறை, கொடுமுடி அல்லது பழனிக்கோ செல்வது வழக்கம். அப்படி போய் வருவதற்காக முதல் நாளே கட்டுச்சோறு கட்டி பொங்கல் தினத்தன்று விடியற்காலையில் கிளம்பி மதியமோ, மாலையோ களைத்து வீடு திரும்புவது மிக மகிழ்ச்சியான ஒன்று. அடுத்த நாள் வரும் மாட்டுப் பொங்கல் தான் வண்ணமயமாக கொண்டாடப்படும்.
எங்கள் வீட்டில் பசுமாடு வளர்த்ததாக நினைவில்லை. பாலுக்காக எருமைகளும், உழவுக்காக எருதுகளும், ஆடிமாதம் வெட்டி விருந்து வைப்பதற்காக ஆட்டு கிடாய்களும் வளர்த்திருக்கிறோம். பொங்கலுக்கு இரண்டொரு நாட்கள் முன்பாக எருதுகளுக்கு லாடம் அடிக்கப்படும்.
மாட்டுப் பொங்கலன்று காலை முதல் கட்டுத்தறை கூட்டிப் பெருக்கப்பட்டு மிக நேர்த்தியாக சுத்தம் செய்யப்படும். அடுத்ததாக எருமை மாடுகளும், மாட்டு வண்டியும் வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்து, வண்டியின் பலகைகளில் புதிய வண்ணம் அடிக்கப்பட்டு மெருகேற்றப்படும். எருதுகளின் கொம்புகளுக்கு பெயிண்ட் அடிக்கப்படும். அடிக்கப்ட்ட பெயிண்டுக்கு எதிர்நிறத்தில் கொம்புகளில் புள்ளி வைக்கப்படும். எருமைகளுக்கு பெயிண்ட் சூடு என்ற காரணம் சொல்லி, காவிக்கல் சாயம் மட்டும் பூசப்படும். எல்லாவற்றிற்கும் புதுக்கயிறுகள் மாற்றப்படும்.
அதே சமயம் ஒரு ஓரமாக மூன்று கற்கள் வைத்து பச்சரிசிப் பொங்கல் வைக்கப்பட்டிருக்கும். கட்டுத்தறையில் ஒரு பகுதியில் சாணம் போட்டு மொழுகி, அதில் மாட்டுச்சாணம் மூலம் ஒரு பிள்ளையார் வைத்து, சில அருகம்புல் சொருகி, பூக்கள் தூவப்படும். பொங்கல் பானையை நடுவில் வைத்து, மஞ்சள் தூர், கரும்புத் துண்டுகளோடு, சின்ன சின்ன வாழை இழைகளில் பொங்கல் சோறு வைக்கப்பட்டு கொஞ்சம் வாழைப்பழம் அதில் வைக்கப்படும். அது தழுவுச் சோறு என அழைக்கப்படும். கிணற்றில் நேரடியாக எடுத்து வந்த சொம்பு நீரோடு தேங்காய் உடைத்து கலக்கப்பட்டு தீர்த்தமாக்கி, பூஜையில் நீர் விழாவி, கற்பூரம் காட்டி, சாம்பிராணி புகையோடு பூஜை நிறைவடையும். அதன் பின் ஒவ்வொரு எருமை மாட்டிற்கும் சாம்பிராணி புகை காட்டப்பட்டு, தழுவு சோறு ஊட்டுவதோடு மாட்டுப் பொங்கல் இனிதே நிறைவேறும்.
காலப் போக்கில் உழவுக்கு ஏர், கலப்பை, உழவு எருதுகள் தேய்ந்து போய் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரம் உட்புகுந்தது, தற்சமயம் எங்கள் கிராமத்திலும், அநேகமாக சுற்றியுள்ள கிராமங்களிலும் கூட உழவுக்கான எருதுகள் அற்றுப்போனதாகவே நினைக்கிறேன். பாலுக்காக வளர்க்கப்படும் மாடுகளும், எருமைகளும் இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மாட்டுப் பொங்கலும் கொஞ்சம் பழைய நேர்த்தியை இழந்திருந்தாலும், இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
மாட்டுப் பொங்கல் தினத்தின் மாலை ஒவ்வொரு விவசாயின் பட்டியிலும், கட்டுத்தறைகளில் பொன் மாலைப் பொழுதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
----- ஈரோடு கதிர்.
மிக்க நன்றி! :)
பதிலளிநீக்குமிக்க நன்றி!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குநன்றி கதிர்
பதிலளிநீக்குநன்றி ராஜி