எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 பிப்ரவரி, 2012

பாரதி மணி ஐயாவின் ஆசியுரை சாதனை அரசிகளை வெளியிட்டபின்.


பாரதி மணி ஐயா..

இலக்கிய உலகில் எனக்கு மறக்க முடியாத பெயர். ஒரு புத்தகம் , சில கட்டுரைகள் எழுதி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். வைக்கம் முகம்மது பஷீரின் சப்தங்கள் நாடகத்தில் பஷீராக நடித்தவர். புகைப்படத்தில் பார்த்த பின் இவர்தான் பஷீரோ என எண்ண வைத்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலும், வீர சிவாஜி என்றாலும், திருஞான சம்பந்தர் என்றாலும் நடிகர் சிவாஜியின் சாயல் மனதுள் படிவது போல இவர் போலத்தான் பஷீரும் இருக்கவேண்டும் எனத் தோன்றியது.


பல நேரங்களில் பல மனிதர்கள் எழுதிய இவர் தன்னுடைய பல மனித சுபாவங்களையும் வெளிப்படுத்தி எழுதியதால் மிகப் பிடித்தவர். இவரிடம் சூரியக்கதிருக்காக முதல் பேட்டி எடுத்தேன். எனக்காக டிஸ்கவரி புத்தக நிலையத்துக்கு வந்தார். மிகத் தன்மையான மனிதர் என உணர்ந்தேன். அடுத்தடுத்து சில சந்திப்புகள் நிகழ்ந்தது. ஒவ்வொரு முறையும் நம் உறவினரைப் பார்ப்பது போல தோன்றும்.

அனைவருக்கும் நடிகராகவும் எழுத்தாளராகவும் தெரியும் அவர் என்னைப் பொறுத்தவரை மிக இனிய நண்பர். அழகான புன்னகைக்கும் அழுத்தமான சொற்களுக்கும் சொந்தக்காரர். எந்தக் கூட்டத்தில் பேசினாலும் ஜனவசியம் செய்யும் கலை அவருக்குக் கை வந்த கலை. ( தமிழ் மகனின் வெட்டுப் புலி அறிமுக விழாவில் அவர் பேச்சில் கட்டுண்டு கிடந்த கூட்டத்தைப் பார்த்தேன். இன்னும் பேச மாட்டாரா எனக் கூட எண்ணி இருப்பார்கள் வந்திருந்தவர்கள்.)

இலக்கியம் மட்டுமல்ல, நாடகம் , சினிமா, ரேடியோ, கர்நாடக இசை என்று அனைத்திலும் வல்லவர். எங்கள் இலக்கியக் குழுமத்தில் பிதாமகர். சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரைச் சொத்து என நான் அதிலிருந்து விடுபட்டபோதும் என் உறுதுணையாக இருந்தவர். அவரிடம் பேசியபின் சில பல குழப்பங்களில் இருந்தும் விடுதலை பெற்றேன். வயது மட்டும் காரணமல்ல. பொறுமை என்பது அவரின் அணிகலன் என்பது உண்மை.

என் முதல் புத்தகம் சாதனை அரசிகளை அதில் உள்ள பெண்களைக் கொண்டும் இன்னும் சில பிரபல பெண்மணிகளைக் கொண்டும் வெளியிட எண்ணியிருந்தேன். எல்லாருக்கும் இடமும் நேரமும் ஒருங்கே ஒத்து வரவில்லை. என்றைக்கும் நம் வளர்ச்சியில் பங்கு கொண்டு போன் செய்து வாழ்த்தும் நம் நண்பரையே அழைத்தால் என்ன எனத் தோன்றியது. ( தேனம்மை.. நான் உன் வளர்ச்சியை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. என கூறினார் ஒரு முறை. ) பிரபலங்களை நாம் ஞாபகம் வைத்திருப்பது பெரிதல்ல அவர்கள் நம்மை ஞாபகம் வைத்திருப்பதுதான் அற்புதம்.

அழைத்தவுடன் வருவதாக சொன்னார் அன்பிற்கினிய நண்பர் பாரதி மணி அவர்கள். என் உறவினர்கள் பலருக்கும் பிடித்த எழுத்து இவருடையது. ( ஒரு முறை ஹென்கலில் வேலை செய்யும் என் சித்தப்பா இவரின் “ மீரா ராடியாவும் நான் டெல்லியில் செய்யாத திருகுதாளங்களும் “ படித்து சிலாகித்துக் கொண்டிருந்தார். சித்தப்பா எனக்கு இவரை நன்கு தெரியும். போன் நம்பர் தருகிறேன் பேசுகிறீர்களா என சொன்னதும் ரொம்ப சந்தோஷமாகி உடனே பேசினார். அப்போது மணி சாரிடம் சார் உங்க நம்பரை என் சித்தப்பாவுக்கு கொடுத்திருக்கிறேன். அவர் உங்களோடு பேசுவார் என கூறியதும் , நம்பர் கொடு நானே பேசுகிறேன் என்றார். தன்னுடன் பேச விரும்பும் அனைவருடனும் அவர் உரையாட விரும்பினார்., எந்த பந்தாவுமில்லாமல் எளிமையாக..!!!

என் முதல் புத்தகம் சாதனை அரசி வெளியீட்டில் எந்த ( படிக்க புத்தகம் அனுப்பி வைத்ததோடு சரி ) செலவும் எனக்கு வைக்காமல் நெரிசல் மிகுந்த புத்தகக் கண்காட்சி அரங்குகளுக்குள் நுழைந்து சரியான நேரத்தில் வந்து விட்டார். பங்சுவாலிட்டி என்றால் என்ன என்பதை அனைவரும் இவரிடம் தெரிந்து கொள்ளலாம். புத்தகம் வெளியிட்டவுடன் தன்னுரையில் இன்னுரையாக என் கணவரை என் வெற்றியில் பின்னிருக்கும் ஆண் என வாழ்த்தியது இனிமையானது.

“தேனம்மை எங்கள் இலக்கிய குழுமத்தில் இருந்தார்”. ”மிக நன்றாக எழுதக் கூடிய நீ இன்னும் உனக்கான இலக்கியத்தைப் படைக்கவே இல்லை. இது எல்லாம் ஜர்னலிசம் ரைட்டப்ஸ்.. ( JOURNALISM WRITEUPS) . உன்னிடம் நல்ல எழுத்தாற்றல் இருக்கிறது. நான் மிக ராசியானவன். என் மூலம் வெளியிடப்பட்ட இந்த சாதனை அரசிகள் இன்னும் பலரை சென்றடையும். உன்னுடைய இலக்கியத்தை நீ எழுதி வெளியிடும்போது அதையும் நானே இந்த அரங்கில் வெளியிடுபவனாக இருப்பேன். நீ இன்னும் சிறந்த இலக்கியம் படைக்க வாழ்த்துக்கள்.!” என்றார்.

மற்ற சாதனைப் பெண்களையும் வாழ்த்தி சிறப்பாக திருஷ்காமினியையும் வாழ்த்தினார். அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றவர்களிலேயே சின்னப் பெண் அவர்தான். விடாமுயற்சியுடன் ஜெயித்துக் கொண்டிருப்பவர். இளம் கிரிக்கெட்டர் திருஷ்காமினி இரண்டாவதாக அந்தப் புத்தகத்தைப் வெளியிட்டார்.

பாரதி மணி சார், நான் அந்தப் புத்தகத்தை வெளியிட காரணமே என்னுடைய ஒரு வருட உழைப்பு மற்றும் அந்தப் பெண்களின் உயர்வு, இதை உலகத்துக்குச் சொல்லத்தான். அது இலக்கியமல்ல. ஆனாலும் உங்கள் வார்த்தைகளால் என்னாலும் சிறந்த இலக்கியம் படைக்க முடியும் என என்னை எண்ண வைத்ததற்கு நன்றி. வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள் போல ஒன்று எழுத வேண்டும். அது அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ள வேண்டும் என ஆசைதான். உங்கள் ஆசியை மெய்ப்பிக்க முயற்சிக்கிறேன் ஐயா..

நான் என்னுரையாக., “ ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் ஊடகத்துறையிலும் , நாடகத்துறையிலும் தன் முத்திரையைத் தொடர்ந்து பதித்து வரும் என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய, என் மனதிற்கு மிகவும் நெருங்கிய, வயதில் மூத்த பேரன்புடைய உங்கள் கையாலும், வயதில் இளைய கிரிக்கெட்டர் திருஷ்காமினி கையாலும் வெளியிடப்படுவதில் மகிழ்கிறேன்.” என்று கூறினேன்

நீங்கள் ராசியானவர்தான் எனத் தெரியும் . ஆனால் இப்போதுதான் தெரிந்தது மிக ராசியானவர் என்பது. ஜனவரி 8 , 2012 இல் என் முதல் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்தினீர்கள். இன்னும் பல புத்தகங்கள் வெளியிட வேண்டுமென்று. அது உண்மையாகி விட்டது. இந்த ஃபிப்ரவரி 5 , 2012 அன்று என்னுடைய அடுத்த புத்தகம் குழந்தைக் கவிதைகள் ,” ங்கா ..” என்ற தலைப்பில் , உள்பக்கம் “ஆராதனா என்ற குழந்தைக் கவிதையும், தேனம்மை லெக்ஷ்மணனின் கவிதைக் குழந்தைகளும்” என்ற கேப்ஷனோடும் வெளி அட்டையில் “ங்கா.. எந்த மொழியிலும் இல்லாத வார்த்தை. எல்லா மொழியினருக்கும் புரிந்த வார்த்தை என்ற கேப்ஷனோடும் வெளியானது.

ஈரோடு வலைப்பதிவ நண்பர் திரு . தாமோதர் சந்துரு அண்ணனின் மகன் அருண் திருமணத்தின் முதல் நாள் அண்ணனின் நண்பர் திருப்பூரைச் சேர்ந்த சிபி டைமண்ட்ஸ், ரொட்டேரியன் திரு. பரசுராம் அவர்கள் வெளியிட, முதல் காப்பியை மதுரை வலைப்பதிவ சகோதரர் திரு. கார்த்திகைப் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.

அது தாமோதர் அண்ணனின் பேத்தி ஆராதனாவின் வண்ணப் புகைப்படங்களோடு மிகச் சிறப்பாக , நேர்த்தியாக வந்துள்ளது. உங்கள் ராசியும், ஆசியும் உடனே பலித்தது ஆச்சர்யம். தாமோதர் அண்ணன் இலக்கிய ஆர்வலர். புரவலர். நல்ல இலக்கியங்களைத் தேடிப் படிப்பவர். என்னுடைய கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக்கி வெளிவரச் செய்த பெருமை எல்லாம் அவருக்கே. இது என்னுடைய இரண்டாவது புக் என்பது தவிர இதில் என்னுடைய பங்கு ( செலவு) எதுவுமேயில்லை. கை நிறைய, மனம் நிறைய நிறைய புத்தகங்கள் எனக்கும் கிடைத்தது.

பாரதி மணி சார்., நன்றி என்ற ஒற்றைச் சொல்லிலேயே எதையும் முடிக்க வேண்டி உள்ளது. என் உள்ளன்பான நன்றிகள் நண்பரே..


7 கருத்துகள்:

  1. விரைவிலேயே உங்கள் இரண்டாவது புத்தகம் வெளியானதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. இன்னும் பல புத்தகங்கள் வெளியாகி என்னை மகிழ்விக்க (சுயநலம் கலந்த) இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்க்கா.

    பதிலளிநீக்கு
  2. சில சமயங்களில் நன்றியைத் தாண்டியும் நம் உணர்வுகள் இருப்பினும் அதை வெளிப்படுத்த வேறு வழியின்றி நன்றி என்ற வார்த்தையைத்தான் நாட வேண்டியுள்ளது என்பதை நானும் அனுபவித்திருக்கிறேன். நல்லாச் சொல்லிருக்கீங்கக்கா...

    பதிலளிநீக்கு
  3. ஆத்மார்த்தமான பகிர்வு.

    ‘ங்கா’வுக்கு வாழ்த்துகள்!

    கட்டுரையை வாசிக்கும் முன்னரே அட்டையிலிருப்பது யாருடைய பேத்தி என்பதை கண்டுபிடித்து விட்டேன்:)! PiT போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். அழகுக் கவிதைகளுக்கு அழகான படம்.

    பதிலளிநீக்கு
  4. ”ங்கா”வள்ளுவன் சொல்லாத வார்த்தைச்சுருக்கம்.எந்த மொழியிலும் வராத இது ஒரு இன்பத்தமிழ்.சொல்ல வாய்,கேட்க காது,இனிக்க இனிக்க ஒரு மொழி. அது தான் ”ங்கா”.இலக்கியத்தில் சிறந்த இக்குழந்தை மொழி,படிக்க படிக்க எல்லோரையும் நிச்சயம் பால்யத்துள் நெட்டித்தள்ளும்.தேனம்மையாரே உங்களின் சாதனைகள் தொடர என்றென்றும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களோடே பயணிக்கும்.நன்றி. கவிதை முகம் கண்டு அகமகிழ்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் பல விருதுகள் வாங்கிக் குவிச்சிக்கிட்டு இருக்கீங்க.
    இருந்தாலும் தங்களுக்காக ஒரு சிறிய விருது எனது வலைப்பூவில் http://vaarthaichithirangal.blogspot.in/2012/02/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. நன்றி கணேஷ்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி கார்த்திகேயன்

    நன்றி ஜிஜி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...