திங்கள், 20 ஜூன், 2011

தாயுமானவர் ஓம் ப்ரகாஷ்..

ஒருநாள் ஒரு நண்பர் மற்றும் தங்கை வீட்டில் விருந்து. விருந்தென்றால் செம விருந்து.. விருந்தளிக்கவே பிறந்தவர்கள் நண்பரும் தங்கையும். கனிவான புன்னகையோடு அவர்களிடம் உரையாடவே இன்பமாய் இருக்கும். அப்போது அவர்கள் வீட்டில் தங்கைக்கு உதவியாக ஒரு ஆண் வேலை செய்து கொண்டிருந்தார். எல்லார் வீட்டிலும் இருப்பது போன்ற வேலைக்காரர் தோற்றமும் இல்லை. நன்கு நீட்டாக உடை உடுத்தி 5 ஸ்டார் ஹோட்டல் ஊழியர் போல பளிச்சென்று இருந்தார். நண்பர் வீட்டின் விஷேஷம் என்னவென்றால் கணவன் மனைவி மட்டுமல்ல . அவர்களுக்கு பணிபுரிபவரும் தங்களில் ஒருவராக நடத்தப்படுவதே என்னைக் கவர்ந்தது.


விருந்தில் அத்தனை பேருக்கும் முகம் சுளிக்காமல் வந்தவுடன். ஒரு அழகான வேலைப்பாடமைந்த ட்ரேயில் தண்ணீர் மற்றும் ஜூஸ். அவர் அதைக் கொண்டு வந்து பவ்வியமாக நீட்டும் அழகே அழகு. வந்தவருக்கெல்லாம் சமையல் மட்டுமல்ல . அந்த வீட்டின் ஒத்திசைவு என்போமே அதுவும் பிடித்திருந்தது. ஒரு ஹார்மனி இருந்தது. வீடு அழகு அற்புதம் சுத்தம்.

மிகுந்த அக்கறையோடு சமைக்கப்பட்ட உணவுகள். நல்ல நியூட்ரிஷியஸ் உணவு. இதை திட்டமிட்டவர் தங்கை அதை செயல் படுத்தியவர் ப்ரகாஷ். அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க சிலர் நேரமாகிவிட்டது என கிளம்பினார்கள். அப்போது நண்பர் சொன்னார்,” எல்லாரும் நல்லா சாப்பிட்டுட்டு போங்க. உங்களுக்காக ப்ரகாஷ் மத்யானத்திலேருந்து அக்கறையோடு பார்த்துப் பார்த்து சமைத்து வைத்திருக்கிறார் ..”

எனக்கு மிகப் பிடித்த ரஸ்மலாய் ., வெள்ளரிக்காய்., வெங்காயம்., தக்காளி., காரட் ஸ்லைசஸ்., வெஜிடபிள் சாலட்., மிக மெல்லியதான சாஃப்டான சுக்கா சப்பாத்தி., தக்காளி பிரியாணி., வெஜ் பச்சடி., தயிர் ராகி சேமியா., வெஜிடபிள் குருமா., இட்லி ., சாம்பார். என எல்லாம் ஸ்டார் ஹோட்டல் தரம்.

நண்பரும் அவர் மனைவியும் மத்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள். பெரும் பொறுப்பான பதவியை இந்தச் சின்ன வயதில் இருவருமே அடைந்தவர்கள். சேவை மனப்பான்மை உள்ளவர்கள்.

நன்கு பேசிக்கொண்டிருந்து விட்டு நேரமாகி விட்டதென அனைவரும் கிளம்பினோம். அப்போது ப்ரகாஷ் ஒரு ட்ரேயில் டம்ளர்கள் வைத்து எல்லாரும் அருந்த நீர் ஊற்றிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட சும்மா இராமல் அவ்வப்போது சூடாக சப்பாத்திகளையும் இட்லிகளையும் பரிமாறின விதம் ஒரு தாயின் கவனிப்பை நினைவூட்டியது. தங்கையும் அவ்வப்போது உதவிக் கொண்டிருந்தார்.

பெண்களும்., அம்மாக்களும்., தங்கைகளும்., அக்காக்களுமே வேலை செய்து பரிமாறி பழக்கப்பட்ட கண்களுக்கு ஒரு ஆண் அன்போடு முகம் கோணாமல் செய்தது அழகாய்ப் பட்டது. எல்லார் வீட்டிலும்தான் வேலை செய்பவர்கள் ., சமையல் செய்பவர்கள் இருக்கிறார்கள் . ஆனால் உணவில் அன்பெனும் ருசியை தூவுவது சிலரே.

இன்னொரு முறை செல்ல நேர்ந்தது. நானும் தங்கையும் ஒரு விழாவை அட்டெண்ட் செய்து விட்டு மிகக் களைப்பாக தங்கையின் வண்டியில் போய் இறங்கினோம். அப்போது தோட்டத்துச் செடிகளுக்கு ஹோசில் நீரூற்றிக் கொண்டிருந்தார் ப்ரகாஷ். எங்களைக் கண்டவுடன். தோட்ட வழியாக உள்ளே வந்து ஒரு அழகான ட்ரேயில் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் நீர் கொடுத்தார். களைத்து சோஃபாவில் அமர்ந்திருந்தோம். டீ மட்டும் போதும் என்றோம். இல்லை ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று சொல்லி. இன்னொரு சித்திரமாய் செதுக்கிய மர ட்ரேயில் நான்கு கண்ணாடிக் கோப்பைகளில் (மைக்ரோவேவ் அவனில் வைத்து ) சுடச் சுட மைசூர்பாவும் மிக்சரும் ஸ்பூன் போட்டு கொண்டு வந்து கொடுத்தார். அடுத்து உயர்தரமான யேராவோ., லா ஒபல்லாவோ தெரியவில்லை தங்க விளிம்புகளுடன் நெளிநெளியாய் வனைந்த கோப்பைகளில் சுடச் சுட ஹெர்பல் டீ வந்தது. அருந்தியதும் ஒரு புத்துணர்ச்சி வந்தது இருவருக்கும்.

வேலை செய்வது பெரிதில்லை.. ஈடுபாட்டோடு செய்பவர்களை காண்பதுதான் அரிதாய் இருக்கிறது இந்த நாளில்.. எங்கிருந்தோ வந்தான் கண்ணன் என்ற பாடலும் ஞாபகம் வந்தது.

வீடு வந்தவுடன் நண்பரிடம் போன் செய்து கேட்டேன். அப்போது அவர் ப்ரகாஷ் பற்றி சொன்னார்.. நண்பரின் தந்தையும் ப்ரகாஷின் தந்தையும் இந்தியன் ஆர்மியில் பணியாற்றியவர்கள். பதவி ஏற்றத்தாழ்வு இருந்தாலும் நண்பரின் தந்தை ப்ரகாஷின் தந்தையுடன் சமமான நட்போடே பழகுவார்.

அதே போல எட்டாம் வகுப்புவரையே படிக்க முடிந்த ப்ரகாஷும் ஆர்மியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வில் வந்தவர். பின் என்ன செய்வது என்ற கேள்வி எழும்போது நண்பர் அவரை பத்தாம் வகுப்பு ( எஸ் எஸ் எல் சி ) படிக்க வைத்து தன் அலுவலகத்தில் வீட்டு உதவிக்கு கொடுக்கப்பட்ட பங்களா ப்யூன் என்ற போஸ்டை வாங்கித்தந்திருக்கிறார். அதிலிருந்து அவர் நண்பரின் வீட்டுப் பொறுப்பாளர் ஆகிவிட்டார். தோட்டம்., சமையல்., சுகாதாரம்.,மளிகை எல்லாம் இவர் பொறுப்பில்தான். இவர் கண்ணாடி போல் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தி பெண்களுக்கே கைவராதது.

நண்பர் ப்ரகாஷின் தாய்க்கும் உதவிகள் செய்து வருகிறார். ப்ரகாஷுக்கு ஆர்மியில் இருக்கும்போதே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் தலை நகரத்தில் கேந்திரிய வித்யாலயாவில் படித்து வருகிறார்கள். அரசாங்கம் இவர்களுக்கென்றும் வீடு கொடுத்திருக்கிறார்கள்.. அவர் இங்கே தனது பணிகளை முடித்துவிட்டு தன் இல்லத்துக்குச் சென்றுவிடுவார்.

எல்லார் வீட்டிலும் நடத்தப்படுவது போல் இவர் வேலைக்காரராக நடத்தப்படுவது இல்லை இங்கே.. அவரும் வேலைக்காராக நடந்து கொள்ளாமல் உரிமையோடும்., நட்போடும்., அன்போடும் தன் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார். நல்ல உறவினர்கள் கிடைப்பதைவிட அரிதாய் இருக்கிறது பொறுப்பான அன்பான நட்பான புரிந்துகொண்டு செயலாற்றும் தன்மையுள்ள வேலைக்காரர் கிடைப்பது..

நண்பர்., நாங்கள் விருந்து முடிந்து கிளம்பியதும் சொன்னதுதான் இந்தப் பதிவுக்குக் காரணம். ”நாங்க ஆஃபீஸ் போனப்புறம் எல்லாம் இவர் ராஜ்ஜியம்தான். எங்களை நல்லா பார்த்துக்குவார் இவர். எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆஃபீசிலிருந்து வந்ததும் எங்களுடைய தேவைகளைக் கவனித்து நாங்க சாப்பிட்டவுனே தூங்க வைச்சிட்டுப் போவார். ”என்று வேடிக்கையாய் குறிப்பிட்டார். இதைச் சொல்லும் போது ஒரு தாய் தன் குழந்தைகளைத் தாலாட்டித் தூங்க வைத்த அழகு இருந்தது வார்த்தைகளில். குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என தோன்றியது..

சில உறவுகளும் நட்புக்களும் வேலைக்காரர் என்ற பதம் மீறியும் அழகானவை. நாம் எப்படி நடத்துகிறோமோ அதாகவே அவர்களும் மாறிவிடுகிறார்கள் என்பதை நானும் பலசமயம் உணர்ந்திருக்கிறேன்.

கடவுள் எல்லா இடங்களிலும் நம்மோடு இருக்க முடியாது என்பதற்காக தாயைப் படைத்திருக்கிறார்.. தாய் எல்லா வயதிலும் நமக்கு சேவை செய்ய முடியாது என்பதால் தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார். மிகப்பெரிய அளவில் சாதித்துக் கொண்டிருக்கும் நண்பர் குடும்பத்துக்கு ப்ரகாஷ் தாயுமானவராய் இருக்கிறார்.. வாழ்க அவர்கள் நட்பும்., புரிந்துணர்வும். வையம் உள்ள மட்டும்.! வாழ்க வளமுடன். !

டிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 இவள் புதியவளில் அழகு மிளிரும் வீடு என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நன்றி இவள் புதியவள்.:))

8 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

arumayaana pathivu..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//
கடவுள் எல்லா இடங்களிலும் நம்மோடு இருக்க முடியாது என்பதற்காக தாயைப் படைத்திருக்கிறார்.. தாய் எல்லா வயதிலும் நமக்கு சேவை செய்ய முடியாது என்பதால் தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார்.
//

உண்மையான வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

என்று எனது வலையில்

ஆத்தாவா?தாத்தாவா ?- மாறன் குழப்பம்

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
இந்த பதிவை படித்து நெகிழ்ந்து விட்டேன்.
வாழ்த்துக்கள் அம்மா.

தமிழ் உதயம் சொன்னது…

தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார்.////

சில இடத்தில் நண்பர்கள், சில இடத்தில் உறவுகள் என்றும் சொல்லலாமோ.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

படிக்கும்போதே ஒரு முழுத்திருப்தி ஏற்படுகிறது. இதுபோல பாசமுள்ள, திறமையான, முழு ஈடுபாட்டுடன் கூடிய நல்ல பணியாளர்கள் அமைய உண்மையிலேயே கொடுத்து வைக்க வேண்டும். நான் பணியாற்றும் போது என்னிடம் இராஜேந்திரன் என்று ஒருவர் இதே போலவே இருந்தார். படு சுறுசுறுப்பு அதே சமயம் படு சுத்தம். துளிதூசு இருந்தால் அவருக்கு அழுகையே வந்துவிடும். பாதி நேரம் எதையாவது ஈரத்துணியால் துடைத்துக்கொண்டே இருப்பார். காஃபி ஃப்ளாஸ்க் + கோப்பைகளை தினமும் பளபளவென்று தேய்த்து விடுவார். அவர் கையால் எது கொடுத்தாலும்,
படு சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், தைர்யமாக சாப்பிடலாம்.

நல்லதொரு பதிவுக்கு பாராட்டுக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சர்செல்

நன்றி ராஜா

நன்றி ரத்னவேல் சார்

நன்றி ரமேஷ்

நன்றி கோபால் சார்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...