42. புளியமுத்தில் ஒற்றையா இரட்டையா. ( பிஸ்தா ஓட்டில் )
ஒற்றையா இரட்டையா பம்பையா பரட்டையா. என்று சொல்லி விளையாடும்
விளையாட்டு இது. வீட்டில் முன்பு எல்லாம் கோடைகாலங்களில் வருடத் தேவைக்கான புளி வாங்கி
சுத்தம் செய்வார்கள் அந்தப் புளியமுத்து ஒரு படி இரண்டு படி கூட இருக்கும்.
அதில் கொஞ்சம்
எடுத்துக் கொண்டு இருவர் முதல் பலர் வரை விளையாடலாம் இந்த விளையாட்டு. இப்போது மாதத்
தேவைக்குக் கடைகளில் புதுப்புளி வாங்கி விடுவதால் புளியங்கொட்டை எல்லாம் பார்க்க முடிவதில்லை.
எனவே சால்டட் பிஸ்தா வாங்கும்போது அதன் ஓட்டை உரித்து இது போல் விளையாடுவதுண்டு.
இருவருக்கும் சமமான எண்ணிக்கையில் புளியமுத்து வைத்துக் கொள்ளணும்.
இருவரில் ஒருவர் கை நிறைய புளியமுத்து அல்லது பிஸ்தா ஓட்டை வைத்துக் கொண்டு எதிர் ஆட்டக்காரரிடம்
ஒத்தையா இரட்டையா பம்பையா பரட்டையா என்று கேட்கணும். அதாவது அவர் கைக்குள் வைத்திருக்கும்
முத்துகள் ஒற்றைப்படை எண்ணிக்கை கொண்டனவா அல்லது இரட்டைப்படை எண்ணிக்கை கொண்டனவா அல்லது
பம்பையா பரட்டையா என்றால் ஒன்றுமில்லையா என்று அர்த்தம். பரட்டை அல்லது
மொட்டை என்றால் கையில் முத்து இல்லை என்று அர்த்தம். இப்போது பம்பையா பரட்டையா என்பதை மொட்டை
என்று சொல்கிறார்கள். பம்பை என்பது சந்தத்துக்காக சேர்த்துக் கொள்வது.