இங்கிவரை யாம் பெறவே.. – 2
நமக்காகத் தங்கள் வாழ்நாள் பூரா பணிபுரியும் சிலரை நாம் மறக்கவே முடியாது. மன்னார்குடியில் எங்கள் வீட்டில் பணிபுரிந்த நீலாக்கா என்பவரை மறக்க முடியாது. மிக அன்பானவர். ஈழத்தமிழர். தினமும் வந்து வீடு துடைப்பதும் ஆட்டுக்கல்லில் மாவரைப்பதும் பாத்திரம் தோய்ப்பதும் துணி துவைப்பதுமாக இருப்பார். அவருக்கு ஒரு மகன் , ஒரு மகள். முதல் திருமணத்தில் ஒரு மகளும் , அடுத்த திருமணத்தில் ஒரு மகனும் இருந்தார்கள். மகன் நை நை என்று அழுதுகொண்டே இருப்பான். இன்று அந்தப் பையன் மிகப் பெரும் ஃபோட்டோகிராஃபராக இருக்கிறான்.
அம்மா வீட்டில் காளிமுத்து அக்கா( சரோஜா அக்கா ) சிலகாலம் பணிபுரிந்தார். எங்கள் ஆயாவைப் போல எங்கள் அம்மா அப்பாவும் வேலை செய்பவர்களைப் பிள்ளைகளாகவே பாவிப்பார்கள். அவர்கள் குடும்ப நல்லது கெட்டதுக்கெல்லாம் உடனிருப்பார்கள். இவர்களின் பிள்ளைகளின் படிப்பு கல்லூரி, திருமணச் செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள்.தோடு கொலுசு, தோடு, வளையல், செயின், சைக்கிள் வாங்கவும், பிரசவம், கண் வைத்தியத்துக்கும், வேலையில் சேரப் பணம் கட்டவும் உதவுவார்கள்.
துணி துவைக்கப் பழனி அண்ணனும் சரசக்காவும் வருவார்கள். குடியின் காரணத்தால் பழனி அண்ணன் இயற்கை எய்திவிட தற்போது சரசக்கா வந்து செல்கிறார்கள். வெள்ளை என்றால் அப்படி ஒரு வெள்ளை இருவரையும் போலத் துவைக்க நம்மாலும் முடியாது , எந்த அட்வான்ஸ்டு வாஷிங் மெஷினாலும் முடியாது.
மாசமாக இருக்கும் போது எண்ணெய்த் தண்ணீர் ஊற்றவும் குழந்தைப் பேறின் பின் கைக்குழந்தைகளைக் குளிப்பாட்டவும் முத்தி அக்கா வருவார்கள். வெந்நீர், வாசனைத்தூள், சீயக்காய்த்தூள், கஷாயம், அக்காவுக்குக் காஃபி, பிள்ளைக்கு உரசிக் கொடுக்க மருந்து, என்று என் தாயார் தயாராக வைத்திருப்பார்கள். “ தாய் செய்வதை யாராலும் செய்யமுடியாது “ என்று எனது அம்மாவை சிலாகிப்பார்கள் முத்தி அக்கா. மூப்பின் காரணத்தால் கண் பார்வை மட்டுப்பட்டு கடைசிக்காலத்தில் வீட்டிலேயே இருந்தார்கள்.