எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

மூலம்

மூலம்

சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது மெச்சிக்கு அந்த ஜாதக விபரங்களைப் பார்த்ததும். மகனுக்குக் கல்யாணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார்கள் மெச்சியும் அவள் கணவர் அழகப்பனும்.

பையனுக்கு ஆறு நட்சத்திரங்கள் ஆகாது என்று கீழச்சீவல்பட்டி ஜோசியர் குறித்து கொடுத்திருந்தார். ஆனால் வச்சு அடிப்பது போல அந்த ஆறு நட்சத்திரங்களும் மாறிமாறிப் பெண் ஜாதகங்களில் வந்து கொண்டிருந்தன, எல்லாம் பொருந்தி இருந்தால் மெச்சி வீடு சார்ந்த அதே கோயிலையும், அதே பிரிவையும் சேர்ந்த பெண்களாகவே வந்தனர். அப்படி என்றால் சகோதரி முறையாச்சே பண்ணக் கூடாதே என விலக்க வேண்டியதாயிற்று. 

பத்தும் பத்தாததற்கு மகன் வயதில் உள்ள பெண்களுக்கு பத்துப் பதினைந்து வயதுக்குள் உள்ள குழந்தைகள் வேறு இருந்தார்கள். சில சமயம் மகனை விடப் பத்து வயது சிறிய பெண்களும் விவாகரத்தாகி இருந்தார்கள். திருமண மேட்ரிமோனிகளைச் சுற்றிச் சுற்றி வந்தும் மகனைப் போல பத்தாண்டுகளாக மறு திருமணம் ஆகாமல் அன்று கண்ட அதே இருபது முப்பது பெண்களே எஞ்சி இருந்தார்கள். அவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை இவனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் ஒரே பொருத்தம்.

இவர்களெல்லாம் எந்த நேரத்தில் பிறந்தார்களோ. எல்லாவற்றிலும் பர்ஃபெக்க்ஷன் எதிர்பார்ப்பது இன்றைய தலைமுறையின் வழக்கம் ஆகிவிட்டது. அவள் கணவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் மகன் விக்னேஷுக்கு எதுவுமே பிடிக்கவில்லை.. எல்லாவற்றிலும் முதல் திருமணத்தை ஒப்பிட்டு ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

”பையன்களுக்கு ஆண்மை இருக்கிறதான்னு கேக்குறாகளே பெண்ணுக்குப் பெண்மை இருக்குதான்னு யாராவது கேட்டு இருக்காகளா? இதனால்தான் திருமணம் முறியுதுங்ற உண்மையான காரணம் யாருக்காவது தெரியுமா” என்றெல்லாம் கேட்பதும் ”நான் இண்டிவிஜுலா இருந்துட்டுப் போறேன். இதுல உங்களுக்கு என்ன சிரமம்” என்று வாதிடுவதும் பழக்கமாகிப் போனது.

ஒவ்வொரு திருமணத்திற்கு செல்லும்பொழுதும் அவளும் கணவரும் சுற்றி வரும் குட்டித் தம்பதிகளைப் பார்த்து பெருமூச்சு விடுவார்கள். அடுத்த முறை போகும்பொழுது அவர்களின் கைகளில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பார்கள்.

வரதட்சணை வாங்கக்கூடாது என்பது அவளது முடிவாக இருந்ததால் மகனுக்கு தோதான வயது, கல்வி, கோயில், இனம் இருக்கிறதா என்று பார்த்துத்தான் முதல் திருமணத்தைச் செய்திருந்தார்கள். சொல்லப் போனால் தங்கள் ஸ்டேட்டஸ்க்கு ஈக்குவலாக இருக்கிறார்களா என்று கூடப் பார்க்கவில்லை.

பையன்கள் கூட இப்போது எல்லா வீட்டு வேலைகளையும் கற்றுக் கொண்டு செய்கிறார்கள் என்பது மெச்சியின் எண்ணமாக இருந்தது. என்னவோ குணக் கோளாறு பெண்ணிடம். ”சக மனுஷனா மதிக்காத துளிக்கூட அன்பே இல்லாத வாழ்க்கையில் எப்படிம்மா வாழ்றது” என்று மகன் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

ஒருவழியாக டைவர்ஸ் ஆனது. அதன் பின்னும் அவள் கிட்டத்தட்ட ஒரு 30, 40 வேண்டுதல்களைச் செய்து ஓய்ந்து போயிருந்தாள்.வாயுள்ள வாயில்லாத பிராணிகளுக்கெல்லாம் உணவளிப்பது, கோவில் கோவிலாகத் தீபம் ஏற்றுவது, பார்க்கும் சாமிக்கெல்லாம் மாலை போடுவது, குங்குமம் வாங்கிக் கொட்டுவது, போகும் கோயில் மண்ணை எல்லாம் அள்ளி வைத்து கும்பிடுவது என்று எண்ணற்ற பிரார்த்தனைகள். அங்கப் பிரதட்சணம்தான் செய்யவில்லை. ஏனெனில் சிசேரியன் செய்ததால் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடாது என்று டாக்டர் தடுத்திருந்ததால் அதை மட்டும் நிறுத்தி வைத்திருந்தாள்.

அவள் உக்கி உருகி வேண்டியதன் பலனோ என்னவோ அவளது தூரத்து உறவினர் ஒருவர் ஒரு ஜாதகத்தை அனுப்பி இருந்தார். முன்பு வந்த ஜாதகங்களில் குழந்தைகள் இருந்ததால் ”குழந்தை உள்ள பெண்ணைக் கல்யாணம் பண்ணா எப்படிம்மா அந்தப் பொண்ணு பக்கத்துல போய்ப் பழக முடியும்? அது யாரோ ஒருத்தனோட புள்ளயோட அம்மா இல்லியா. இப்படி இருக்கும்போது அந்தப் புள்ளய என் புள்ளையா நினைக்க முடியுமா? அதுவும் என்னை அப்பான்னு ஏத்துக்குமா? அப்படியே பண்ணிக்கிட்டாலும் அதோட படிப்பு, கல்யாணம் எல்லாத்துக்கும் நானும் செலவு பண்ணணுமில்ல. எனக்கு அந்த அளவுக்கெல்லாம் பெரிய மனசு இல்லை” என்று பட்டென்று கூறிவிட்டான். 

இதனால் விவாகரத்து மட்டுமே ஆகிக் குழந்தை இல்லாமல் இருந்த பெண்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். இப்படியான ஒரு பொழுதில் வாட்ஸப்பில் ஒரு திருமணத் தகவல் மையத்திலிருந்து ஒரு தாக்கல் வந்தது. அதைப் பார்த்துத்தான் திருதிருத்துக் கொண்டிருந்தாள் மெச்சி. அதை வாங்கிப் பார்த்த அவரும் ஒரு கணம் மெச்சி போலவே முழித்தார்.

ஏனெனில் பெண்ணுக்குப் பையனை விட இரண்டு வயது கூட. மேலும் ஜோசியர் விலக்கிய இன்னும் ஒரு நட்சத்திரமாகவும் இருந்தது. ”வயசு கூட. இருந்தாலும் பொண்ணு பார்க்கவும் பரவாயில்லாம இருக்கு. நீ மகன்கிட்ட ஒண்ணுஞ் சொல்லாதே” என்றார்.

இதே நட்சத்திரங்களில் தொடர்ந்து பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். இரண்டு வயது, நான்கு வயது மூத்த பெண்களைக் கூட அனுப்பிக் கொண்டிருந்தார்கள் தரகர்கள். எப்படியாவது நாப்பது, நாற்பத்திரண்டு வயசுக்கு மேற்பட்ட பெண்களை யார் தலையிலாவது கட்டிவிட வேண்டும் என்று கங்கணம்கட்டிக் கொண்டவர்கள் போல விவாகரத்தாகிக் குழந்தை பெற்ற பெண்களின் தாயார்களும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் தாயார்களும் மெச்சியின் மகனை ஓரளவு முற்றுகையிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

முன்பெல்லாம் தலையில் முடி கம்மியா இருக்கு, குண்டா இருக்கான் என்றெல்லாம் சொன்னவர்கள் இப்பொழுது எதுவுமே சொல்வதில்லை. திருமணம் செய்து கொண்டால் போதும் என்றுதான் வந்தார்கள். மேலும் திருமணத்துக்குப் பின் பெண் வேலைக்குப் போக மாட்டாள் என்பதையும் முன்எச்சரிக்கையாக அறிவித்தார்கள்.

அவர்கள் மகளுக்குக் குழந்தை பிறந்து விட்டதால் இனிக்குழந்தை பிறந்தால் என்ன பிறக்காவிட்டால் என்ன என்ற மனநிலைக்கு வந்திருக்கலாம் அல்லது பெண் 40 வயது வரை சம்பாதித்தது போதும், நமக்கு எல்லாம் தேவையான அளவு இருக்கிறது, இனி இத எங்கேயாவது தள்ளிவிடலாம், பார்த்துக்கொண்டு செலவழிக்க ஒரு ஆள் வேண்டும் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

”பத்து வருஷத்துக்கு முன்னாடின்னா நான் வேண்டாம்னு சொல்லியிருப்பேன். இப்ப நமக்கே 60, 65 வயசாயிருச்சு. எப்ப வேணும்னாலும் போகப் போற கேஸ்தானே. இதுக்குக் குழந்தை எல்லாம் இல்லை. நாம சீக்கிரமா கலியாணத்த முடிச்சிறலாம். இனி நம் பிள்ளைகள் நன்றாக இருக்க வேணும். அதுதான் முக்கியம்” என்றார் மெச்சியின் கணவர்.

பெண்ணின் தகப்பனாரோடு பேசி ஆயிற்று. அங்கே ஆரம்பித்தது ஒரு கோலாகலமான செலவுக்கான ஆரம்பம். குறிப்பிட்ட நாளில் பையனும் பெண்ணும் அவரவர் பெற்றோருடன் ஒரு கோயிலில் சந்திக்க முடிவானது. குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் இரவு மெச்சியும் கணவரும் அம்மன் கோயிலில் இருக்கும்போது பெண்ணின் தகப்பனாரிடம் இருந்து ஃபோன். ”ஆச்சி வெயிட்டிங் லிஸ்ட். கன்ஃபர்ம் ஆகலை. என்ன செய்யலாம்?”

கேட்டதும் பற்றி எரிந்தது மெச்சிக்கு. “தட்காலில் முதல்நாளே புக் செய்யமாட்டாரா பொண்ணு வாழ்க்கையைப் பத்திப் பொறுப்பில்லாத மனுஷன்” பொரிந்து தள்ளினாள் கணவரிடம். ஏனெனில் அவள் மறுநாள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பிள்ளையார், தங்கள் ஊரில் உள்ள பிள்ளையார், குலதெய்வக்கோயில், காளியம்மன் கோயில் எல்லாவற்றிலும் விளக்கு ஏற்றித் தேங்காய் உடைத்து வருவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தாள்.

கணவர் ஃபோனில் பொறுமையாக ”உங்க தோதுபோல வாங்க” என்றதும் இன்னும் நான்கு நாள் கழித்து வருவதாகச் சொன்னார். அன்றைக்குப் பெண்ணுக்கும் பிறந்தநாளாம். எடுத்தவுடனே முட்டுக்கட்டை, தடை போடுகிறாரே இது நடக்குமா என்ற சந்தேகம் வந்துவிட்டது மெச்சிக்கு.

காலண்டரை எடுத்து ராகு காலம், எமகண்டம், ஹோரை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். ”ஏற்கனவே டைம் குறிச்சாச்சுப்பா. இனிமே என்ன பார்க்கிறாய்” என்றார் கணவர். மகனிடமும் ஒருவாறு சொல்லித் தயார்ப்படுத்திக் கூட்டிச் சென்றார்கள் கோவிலுக்கு உள்ளேபோய் அர்ச்சனை எல்லாம் செய்து வந்தார்கள் மெச்சி குடும்பத்தார். வெளியே பெண் வீட்டார் வந்தவுடன் மாப்பிள்ளையும் பெண்ணும் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பெண்ணை அவர்கள் விழுந்து கும்பிடச் சொல்ல ஆசீர்வதித்தார்கள் மெச்சி குடும்பத்தார்.

”தனியாகப் பேசுங்கள்” என்று சொல்லி மகனையும் பெண்ணையும் பக்கத்திலிருந்த கருப்பர் சந்நிதிக்கு அனுப்பினார்கள். கால்மணிநேரம் கழித்து அவர்கள் வந்ததும் ”பிடித்திருக்கிறதா” என்று கேட்டதற்குத் தலையைச் சந்தோஷமாக ஆட்டினான் பையன். தன் தாயாரைக் கூட்டிச்சென்று குறுக்கே குறுக்கே நடந்து ஏதோ பேசினாள் பெண். பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று ஒற்றை வார்த்தையில் சொல்வதற்கு எதற்கு அத்தனை முறை நடந்து பேசினார்கள் என்று மெச்சிக்குப் புரியவில்லை

மெச்சி தான் கொண்டு சென்றிருந்த தேங்காய், பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுக்களைச் சில சில்வர் வாளிகளில் வைத்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாள். ”இது நாங்க செய்ய வேண்டியது” என்று அவர்கள் பதிலுக்கு அதே வாளியில் பணம் வைத்துத் தந்தார்கள்.

கொண்டு சென்றிருந்த பூக்களை எல்லாம் பெண்ணின் கூந்தலில் சூடிக் குழுமப் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினார்கள் மெச்சி குடும்பத்தார் ஓரளவு நல்ல குடும்பத்தாராக இருக்கிறார்கள் என்று இருவரும் அகமகிழ்ந்து இருந்தார்கள்.

இதற்கு முன்பு பேசிய திருமணங்களில் தொலைபேசி எண்ணை மாப்பிள்ளையும் பெண்ணும் மாற்றிக் கொண்டதால் அடிக்கடிப் பேசிப்பேசி ஏதோ ஒரு இடத்தில் சுவாரசியம் குன்றி அந்தத் தாக்கல்கள் விட்டுப் போயிருந்தன. ஆகையால் இந்த முறை எச்சரிக்கையாக மெச்சி பெண்ணின் தொடர்பு எண்ணைத் தான் வாங்கிக் கொண்டாள். வீட்டிற்கு வந்ததும் மகனிடம் கொடுக்கவில்லை ஒரு வாரம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அவனும் ”அம்மா அந்த நம்பரைத் தாங்க”. என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.

அதன் பின் பெண்ணின் தகப்பனாரும் தாயாரும் அடிக்கடி போன் செய்வார்கள். “கேக்குறேனேன்னு தப்பா நினைக்காதீங்க. ஏங்க உங்க மகனுக்கு ஸ்மோக்கிங் ஹாபிட் இருக்கா”. ” என்னங்க. இப்பிடிக் கேக்குறீங்க. இல்லைங்க” என்றதும் வைத்து விடுவார்கள்.

திரும்ப இரண்டு நாள் கழித்து, “சோஷியல் ட்ரிங்கிங்னு சொல்றாங்களே. அது மாதிரிக் குடிக்கிற பழக்கம் ஏதும் இருக்கிறதா” என்றும் கேட்டார்கள். தன் மகனுக்கு குடிக்கும் பழக்கமே இருந்தாலும் ஆமாமா. எங்கள் மகன் நல்ல குடிப்பான் என்றா ஒரு பெற்றோர் சொல்வார்கள்? உள்ளபடியே மெச்சியின் மகனுக்குக் குடிப்பழக்கம் இல்லாததால் அவர்கள் ”.இல்லைங்க என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க” என்று சொல்லி மறுத்தார்கள்.

அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து ”எங்க ரெண்டு பேருக்கும் ஒங்களயும் ஒங்க செட்டியாரையும் ரொம்பப் பிடிச்சிருந்துச்சுங்க. நல்ல முறையில் சந்தோஷமாப் பழகுனீங்க. அதனால ஒன்னு மட்டும் கேக்கலாம்னு நினைக்கிறோம். உங்க பையனுக்கு இஸ்யூ ஏதும் இல்லைலங்க” என்று கேட்டார்கள். உடனே சொன்னாள் மெச்சி அதிரடியாக ”அப்படிக் குழந்தை ஏதும் இருந்திருந்தால் நாங்கள் எங்க பையனை டைவர்ஸ் செய்யவே விட்டிருக்க மாட்டோமே. பேரனையோ பேத்தியையோ நாங்களே சந்தோஷமா வளத்திருப்போமே. நாங்க மறு கல்யாணம் பண்ண ஏன் வரோம். அதுவும் இல்லாம நாங்க எடுத்தோடனே சொல்லிருப்போமே குழந்தை இருக்குதுன்னு. உங்க பொண்ணுக்குக் குழந்தை ஏதும் இல்லையே என்று திரும்பக் கோவமாகக் கேட்டாள் மெச்சி.

”உங்க பெண்ணுக்கு எதுனால டைவர்ஸ் ஆச்சு” என்றும் கேட்டாள். ”அந்தப்பையன் வெளிநாட்டில் இருந்தான் ஏதோ சாமியார் மடத்துல ஆர்வமா இருந்ததால நம்ம ரெண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்கலாம் என்று சொன்னானாம். எங்க பொண்ணுக்குக் குடும்ப வாழ்க்கையே இல்லைன்னுதான் நாங்கள் கூட்டிக்கினு வந்தோம்” என்றெல்லாம் சொன்னார்கள்.

அவ்வளவு கன்சம்மேட்டடாக இருக்கும் ஒரு பெண் நமக்கு மருமகளாகக் கிடைக்கிறாளே என்று மெச்சிக்கும் சிறிது சந்தோஷம்தான். மேலும் அவர்கள் பெண் போட்டோ அனுப்பியபோது எல்லா வைரநகைகளும் பூட்டிய அலங்காரப் பதுமையாக அனுப்பி இருந்தார்கள். பரவாயில்லையே.. நம்மை போல அவளும் மூன்று வைரநகைகள் போட்டுக்கொண்டு சபைக்குப் பெருமையாக நிற்பாள் என்று மெச்சிக்கு டபுள் சந்தோஷமாக இருந்தது

”அங்கே வீடு இருக்கிறது, எங்களுக்கு இங்கே இடம் இருக்கிறது” என்றெல்லாம் அவர்கள் சொல்லும்போது சொத்தைக் குறியாக கொண்டவர்கள் அவர்கள் என்பது அப்போது தெரியாமல் போய்விட்டது மெச்சிக்கு. அவர்களிடம் இவர்களும் பெருமையாக ”எங்களுக்கு அங்கே வீடு இருக்கிறது, இங்கே வீடு இருக்கிறது என்று சொல்லி வைத்தார்கள். அங்கே பிடித்தது சனி அவர்கள் உடனே மெச்சியின் கணவரிடம் எந்தெந்த ஊரில் வீடு இருக்கிறது என்று விசாரித்தார்கள் அந்தந்த ஊரில் என்று சொன்னதும் எந்த பில்டர் என்று விசாரித்தார்கள் அந்த பில்டர்கிட்ட போனால் தரம் சரியாக இருக்காது பில்டிங் நன்றாக இருக்காது இந்த பில்டரிடம் போய் இருக்கலாமே என்றெல்லாம் கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்ணின் தகப்பனார்.

இத்தனையிலும் மெச்சியின் மகனுக்கு மட்டும் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது whatsapp நம்பர் கொடுத்த நேரத்தில் இருந்து ஏதோ அதில் பிடித்துவிட்டது சனி. மகன் ஏதாவது மெசேஜ் அனுப்பினால் அதற்கு அரைமணி நேரம், ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் அல்லது மறுநாள் ரிப்ளை பண்ணுவது என்பதை வழக்கமாக வைத்திருந்தாள் அந்தப்பெண். கேட்டால் whatsapp அதிகம் யூஸ் செய்ய மாட்டான் என்று கூறினார்கள் பெண்ணின் பெற்றோர். ”அனுப்புவது ரீடு என்று முதலில் வந்து விடுகிறது. மெசேஜ் பதில் மட்டும் மறுநாள் வருகிறது” என்றான் மகன்.

மெச்சிக்கும் ஒரு சிறிய சந்தேகம். அந்தப் பெண்ணின் தகப்பனாரே போனை வைத்துக்கொண்டு பெண்ணைப் பேச விடாமல் இவர்களே ஏதோ குறுக்கு வேலை பார்க்கிறார்களோ என்று. ஏனெனில் வந்த பதில்களில் ஒன்று கூட ஒரு பெண் அனுப்புவது போல் இல்லை என்று அவன் கூறுவதை வைத்து அனுமானித்திருந்தாள்.

அவளுமே பெண் பார்த்து வந்ததும் அந்த புகைப்படங்களைக் கொலாஜ் செய்து அனுப்பி இருந்தாள் பெண்ணுக்கும், அவளது தாய்க்கும், உறவினர் பெண் ஒருவருக்கும். பெண்ணின் தாயாரும் பெண்ணும் ஒன்றுமே ரிப்ளை செய்யவில்லை. ”என்னங்க அவங்க பதிலே போடவில்லை” என்று கேட்டதற்கு அந்த உறவினர் பெண் ”அக்கா பிசினஸில் இருப்பதால் எல்லார்கிட்டயும் ரொம்பப் பேசமாட்டாங்க” என்றார்கள். எல்லார்கிட்டயும் பேசாவிட்டால் பரவாயில்லை வரப்போகும் சம்பந்தப்புரத்திடம், மாமியாரிடம் கூடவா பேசமாட்டார்கள் என்று சிறிது நெருடலாக இருந்தது மெச்சிக்கு.

சரி போகட்டும் போ என்று விட்டுவிட்டுக் கல்யாண வேலைகளைப் பார்க்கத் துவங்கினார்கள். கெட்டி செய்து கொள்ளலாம் என்று சொன்னபோது பேசி முடித்துக்கொள்வது என்று இரண்டு சிலவு எதுக்கு. ஒரே செலவாப் பண்ணிடலாம் என்றார் பெண்ணின் தகப்பனார்.

”நான் மண்டபம் திருமண நாளைக்குத்தான் புக் செய்திருக்கேன்”  என்று அவர் சொல்லவும் மெச்சியின் வீட்டிலேயே பேசி முடித்துக் கெட்டி பண்ணிக் கொள்ளலாம் என்று முடிவாயிற்று. முகூர்த்தத்திற்கும் கெட்டி பண்ணிக் கொள்வதற்கும் நாள் குறிக்க ஐயரை அழைத்தால் அவர் வெளியூரில் இருக்கிறேன் என்றார். அதன்பின் சவண்டி வீட்டில் இருக்கிறேன் என்றார். எல்லாமே தடையாக வருதே, நல்ல சகுனமாக இல்லையே எனக் கலங்கினாள் மெச்சி. அழகப்பன்தான் ”ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலை, சகுனம்னு ஏதும் இல்லை” என அவளைத் தேற்றினார்.

ஒருவழியாக முகூர்த்தத்திற்கு நல்ல நாள் குறித்து இன்விடேஷன், மண்டப அட்வான்ஸ், விருந்தினர்கள் தங்க அறைகள், உக்கிராணம், சமையல் காண்ட்ராக்ட் அட்வான்ஸ், ரிடர்ன் தாம்பூல பேக், மேளகாரர்கள், கோவிலில் எழுதி வைப்பது, பூக்கள், குளிர்பானங்கள், ரொட்டி மிட்டாய்கள், வகைப்பழங்கள், முறைகள், முறை வாளிகள், சட்டிகள் என ஒரு மூன்று நான்கு லட்ச ரூபாயைச் செலவு செய்தார்கள். 

இது போகக் கல்யாணத்துக்கு முகூர்த்தப் பட்டுப் புடவைகள், உறவினருக்கான பட்டுப் புடவைகள், வேஷ்டி சட்டைகள், பெண்ணுக்குப் பரப்பும் சாமான்கள் என வாங்கி வெள்ளிப் பாத்திரங்கள், ஒரு செட் தங்க நகைகள் எனத் தன்னிடம் லாக்கரில் இருந்ததை எல்லாம் எடுத்து வைத்தாள் மெச்சி. பெண்ணின் பட்டுப் புடவைகளே லட்ச ரூபாயைத் தாண்டிற்று.

20 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்ணுக்குத் தாய்வீட்டிலிருந்து தங்க, வைர நகைகள் போக 15, 20 வகையான சாமான்கள், வெள்ளி, வெண்கலம், துத்தநாகம், மங்கு, சில்வர், பீங்கான், அலுமினியம், இரும்பு, மரச்சாமான்கள், ஜாடி குளுதாடிகள், மெத்தை தலையணைகள், அலமாரிகள், கட்டில் மெத்தைகள், புதிய எலக்ட்ரிக் சாமான்கள் இன்னும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், ட்ரெஸ்ஸிங் டேபிள் ஆகியவற்றைப் பரப்புவார்கள் இப்பொழுது பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் வெளிநாடுகளில் இருப்பதாலும் சாமான் பரப்புவதே கிடையாது.

அந்தக்காலத்தில் சில பேர் பெண்ணுக்குக் கூடப் பெண் வீட்டிலிருந்து உடைகள் பரப்புவார்கள் மாமியாருக்குச் சாமான்கள் பரப்புவார்கள் அதெல்லாம் இப்போது எதுவுமே கிடையாது பெண்ணுக்கு நகைகள் போடுவதும் வெள்ளி சாமான் கொடுப்பதும் மட்டும்தான் செய்கிறார்கள். மாப்பிள்ளை வீட்டில் மட்டும் பழைய முறைப்படிப் பெண்ணுக்குச் சாமான் பரப்புதல், நகை கொடுத்தல் என்றெல்லாம் செய்து கொண்டு வந்தார்கள் ஏனெனில் பெண் கிடைக்கவில்லையே பெண் கிடைத்தால் பொன் கிடைத்த மாதிரி அல்லவா.

அந்த லெவலுக்குப் பொண்ணும் பொன்னும் வெள்ளியும் மதிப்பு ஏறிக்கொண்டு போனது. கெட்டி பண்ணிக் கொள்ளவே ”எங்கள் வீட்டிலிருந்து 25 பேர் வருவோம்” என்றார்கள். ரொட்டி, மிட்டாய், பழங்கள், குளிர்பானங்கள், டேபிள் சேர், மாலை ஏழுபலகாரத்துடன் விருந்து, பூக்கள், டீ கேன், காஃபி கேன் வெற்றிலை பாக்கு, முறைப் பணம், முறை வாளிகள் சட்டிகள் என்று 51 பாத்திரங்கள், அவற்றில் வைக்கும் பணம், பிஸ்கட் பாக்கெட்டுகள், பழங்கள் என்று எகிறிக்கொண்டே போனது லிஸ்ட்.

கெட்டிபண்ணிக் கொள்ளும் நாளும் வந்தது. வீட்டைச் சுத்தம் செய்ய,  பரிமாற என்று நான்கு ஆட்கள் வேலைக்கு வந்தார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வீட்டுக்குள் கோலம் போட்டு, விளக்குகளை ஏற்றி வைத்தாள் மெச்சி. அந்தக் காலத்தில் பெண் வீட்டுக்காரர்கள் செய்வது போல இப்பொழுது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் செய்துகொண்டு இருந்தார்கள்.

பெண் வீட்டார் வந்து விட்டார்கள். அவர்களும் சீர்வரிசைக்கெல்லாம் ஒன்றும் குறை வைக்கவில்லை. அண்டாவில் மஞ்சள் தோய்த்த தேங்காய்கள், பைனாப்பிள், ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு, பிஸ்கட்ஸ்,  சாக்லேட் டப்பாக்கள், பேரிச்சை, முந்திரி, பாதாம் டப்பாக்கள், மஞ்சள் குங்குமம், மல்லிகைப்பூப்பந்து, வெற்றிலைபாக்கு என்று 16 வகையான தட்டுகளில் அனைத்தையும் சுமந்து வந்தார்கள் பளபளவென்று வைரநகை அணிந்து அனைவரும் திருமணத்திற்கு வந்ததுபோல அவ்வளவு பிரமாதமாக வந்து சேர்ந்தார்கள்.

ஆனால் மனிதர்களின் பளபளப்புக்கு பின்னே இருக்கும் சுயநலன்கள் தெரிவதில்லை அல்லவா. அவர்கள் வந்து கெட்டிபண்ணிக் கொண்டபின் சிட்டையில் எழுதி ”உங்களுக்கு என்ன தோது வேண்டும்” என்று கேட்டார்கள் பெண்ணின் தாயாரும் தகப்பனாரும். ”எங்களுக்கு எதுவுமே வேண்டாம். எல்லாமே பெண்ணின் பெயரிலேயே போட்டு விடுங்கள். நீங்கள் போடும் நகையெல்லாம் பெண்ணுக்குத்தான். நீங்கள் கொடுக்கும் வெள்ளிச் சாமான்களும் பெண்ணுக்குத்தான். இதுபோல் நாங்கள் வைப்பதை நாங்கள் வைக்கிறோம். நாங்கள் வெள்ளிக்குடம் கொடுக்கிறோம். நகை ஒரு நகை போடுகிறோம் என்றெல்லாம் சொன்னார்கள் மெச்சியும் கணவரும். இதன் பின் தான் விருந்து நடந்தது.

அனைவரும் சாப்பிடச் சென்றுவிட்டார்கள். தனியே மெச்சியையும் அவள் கணவரையும் அழைத்து, “ இல்லை நீங்கள் எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று எல்லோரும் கேட்பார்கள்” என்றார் அந்த பெண்ணின் தகப்பனார்.

பொதுவாக வரதட்சணையிலும் சீதனப் பணங்களிலும் பிடித்தம் இல்லாததால் மெச்சியும் அவர் கணவரும் எதையுமே விரும்பியதில்லை. தங்களிடம் இருப்பதைப் பிள்ளைகளுக்குக் கொடுப்போம். மருமகள் வந்தால் பெற்றோர் வீட்டிலிருந்து அவளுக்கு உள்ளதையும், தாம் கொடுப்பதையும் அவள் வைத்து கொள்ளட்டும் என்று நினைத்தார்கள்.

பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பவர்கள் அவதிப்படக்கூடாது என்று நல்லெண்ணமும் ஒரு காரணம். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை என நிரூபித்தார்கள். நாங்கள் பெண்ணை அல்லவா கட்டிக் கொடுக்கிறோம். அந்தக் காலத்தில் பெண்ணின் தாயார் தகப்பனாருக்கு வராகன் கொடுத்துப் பெண்ணைக் கட்டிக் கொண்டார்கள். அதே போல் இப்போதும் எதிர்பார்த்தார்கள்.

மேலும் கழுத்துருவுக்குப் பொன் கொடுப்பது என்று ஒரு பவுன், மூன்று பவுன், ஐந்து பவுன் பெண் வீட்டிற்குக் கொடுப்பார்கள். மிகப் பணக்காரர்கள் பதினாறு பவுன் போடுவார்கள். அதைத்தான் கேட்கிறார்கள் என நினைத்து ”மூணு பவுன் போடுவோம்” என்றார்கள் மெச்சியும் அவள் கணவரும். ஆனால் அதைக்கேட்டு, “என்னது இவ்வளவுதான் கொடுப்பீகளா” என்று அவர்களுக்கு முகத்தில் ஈயாட வில்லை

”ஒரு பதினாறு பவுனாவது போடணும்” என்றார்கள் அங்கே வந்த பெண்ணின் சித்தியும் சித்தப்பாவும். திக்கென்றது மெச்சிக்கு. என்னது பவுன் ஒன்றேகால் லட்சரூபாயாக இருக்குது. பதினாறு பவுன்னா இருபது லட்சரூபாய் ஆகுமே. கல்யாணச் செலவே அவ்வளவுதானே ஆகும். ஒன்றும் பேசவில்லை மெச்சியும் அவள் கணவரும்.

’நீங்கள் கொடுப்பதைப் பற்றி நாங்கள் கேட்கவில்லையே நாங்கள் கொடுப்பதை பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்’ என்று சொல்லாமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் மெச்சி. அவர்கள் போடுவதெல்லாம் அவர்கள் பெண்ணுக்கு. தங்கம் வெள்ளி வைரம் எல்லாமே. அவர்கள் கொடுக்கும் பணம் அவர்கள் பெண்ணின் பெயரில் டெபாசிட் ஆகப்போகிறது.  அதேபோல் மெச்சி பெண்ணுக்கு வாங்கும் புடவை, நகை, கொடுக்கும் வெள்ளி எல்லாம் பெண்ணுக்குத்தான். பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு என்று சாமான் கூடப் பரப்புவதில்லை இப்போதெல்லாம். மகனுக்கு ஐந்து பவுனில் சங்கிலி, கைச்சங்கிலி, வைர மோதிரம் எல்லாம் மெச்சியே செய்து கொடுத்திருந்தாள்.

சாஸ்திரத்துக்குக் கழுத்துருவுக்குப் பொன் கொடுத்தது போக இப்போது பெண் வீட்டில் 16 பவுன் டிமாண்ட் செய்கிறார்கள் என்று மெச்சிக்கும் மெச்சி கணவருக்கும் சிறிது அதிர்ச்சிதான். பையனுக்கு ஸ்மோக்கிங் இருக்கிறதா, ட்ரிங்கிங் இருக்கிறதா, குழந்தை இருக்கிறதா என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் விதவிதமாகப் பெண் வீட்டார் கேட்ட கேள்விகள் அவர்கள் மனக்கண் முன்னே ஓடின.

இருந்தாலும் அவர்கள் இருவரும் அமைதி காத்து, “சரி பார்க்கலாம் நீங்க உங்க தோதைச்  சொல்லுங்கள் நாங்கள் முடிந்ததைச் செய்கிறோம்” என்று சொன்னார்கள். பெண்ணுக்கு வாங்கிய புடவைகளின் ரவிக்கைகளைப் பெண்ணுக்குப் பிடித்த விதத்தில் தைக்கும்படிக் கூறிக் கணவரிடம் இருந்து முப்பதாயிரம் ரூபாயை வாங்கித் தையற்கூலியாகக் கொடுத்து அனுப்பினாள் மெச்சி. வாங்கிக் கைப்பையில் வைத்துக் கொண்டாள் பெண்ணின் தாயார். 

அவர்கள் உறவினர்கள் 25 பேருக்கும் தங்கள் உறவினர்கள் 25 பேருக்கும் வாளிகள், சட்டிகள் வைத்து அவற்றில் பழங்கள் தேங்காய்கள், இருந்த எல்லாவற்றையும் பங்கு பிரித்து அவற்றில் பணமும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் வைத்து நிறைவாகக் கொடுத்து அனுப்பினாள் மெச்சி. மனம் நிறைந்திருந்தது மெச்சிக்கும் அவள் கணவருக்கும், மகனுக்கு ஒரு பெண் தேடி விட்டோம், என்னதான் அவர்கள் முன்னேபின்னே இருந்தாலும் திருமணமானபின் அட்ஜஸ்ட் ஆகிவிடும் என்று நினைத்துக் கொண்டார்கள்.

மறுநாள் காலை பெண்ணுக்கு இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளை எல்லாம் இணைத்து ஒரே புகைப்படமாக அனுப்பி இருந்தாள் மெச்சி. ரவிக்கைகளைப் பிடித்த விதத்தில் தைத்துக் கொள்ளும்படியும் மெசேஜ் அனுப்பி இருந்தாள் பெண்ணுக்கு. அதற்கும் பெண்ணிடமிருந்தும் அவளது தாயாரிடமிருந்து பதில் இல்லை. பெண்ணின் தகப்பனாருக்கும், பெண்ணுக்கும், அவள் தாயாருக்கும் போன் செய்தால் எடுக்கவில்லை.

மெச்சி இதைக் கணவரிடம் சொல்ல அவரும் முயற்சித்துவிட்டு, ”யாரும் எடுக்கலையே” என்றார். பெண்வீட்டார் இவர்களைப் பற்றிப் பங்காளி வீடுகளில், உள்ளூரில் உள்ள சொந்தக்காரர்கள் அனைவரிடமும் விசாரித்துத்தான் இந்த தாக்கலைத் தேர்ந்தெடுத்து வந்திருந்தார்கள். ஆனால் மெச்சி வீட்டாருக்குப் பெண்ணின் ஊரில் யாரையுமே தெரியாததாலும் பொதுப்படையாக நம்முடைய ஆட்கள்தானே என்னும் நம்பிக்கையிலும் மறுதிருமணத்துக்கு மகனுக்குப் பெண் கிடைத்துவிட்டாளே என்ற சந்தோஷத்திலும் ஒப்புக்கொண்டிருந்தார்கள்.

மகனிடம் போன் செய்து விபரங்களைச் சொன்னால் அவன் கூறினான்,”ஒரு வாரமா இதே கதைதான். நா பேசினால் எடுப்பதில்லை. நான் whatsapp செய்தாலும் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கழித்தோ மறுநாளோ எஸ் ,ஓகே, நைஸ் இந்தமாதிரிப் பதில் சொல்கிறா. சாப்பாட்டைப் பற்றிக் கேட்டால் மட்டும் ரொம்ப சந்தோஷமா அத்தோ சாப்பிட்டேன் பெஜோ சாப்பிட்டேன்கிறா. மற்றபடி ஒன்னும் சொல்றதுக்கில்லை. இது ஒன்னும் ஒரு சுவாரசியமான கல்யாணமா இருக்காதுன்னு நினைக்கிறேன். உங்களுக்காக நான் சரின்னு சொல்லி இருக்கேன்” என்றான்.

மெச்சிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ’நாம் எவ்வளவுதான் தாழ்ந்து போனாலும் இவர்கள் இந்த மாதிரி இருக்கிறார்களே, அவர்களுக்குப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று அக்கறையே இல்லையா’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள். திடீர் என்று சாயங்காலம் ஒரு போன் வந்தது, “அண்ணே இந்தக் கல்யாணத்தை நாங்க நிறுத்திடுறோம்” என்று சொன்னார் பெண்ணின் தகப்பனார். கேட்டதும் மெச்சிக்கும் அவள் கணவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.

”கஷ்டப்பட்டு இவ்வளவுதூரம் தேடிப் பேசிமுடிச்சோம். எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு” என்க ”எங்களுக்குச் சகுனம் எல்லாம் சரியில்ல. நான் இன்னைக்குக் காலைல குலதெய்வம் கோவிலில் கெட்டிபண்ணி எழுதுன நோட்டை வைச்சுக் கும்பிடலாம்னு கிளம்பும்பொழுது எங்க வீட்டு வாசப்படியில கால் தடுக்கி விழுந்துட்டேன். உடனே எங்கோட்டு ஆச்சி பதறிட்டாக. எங்க ஆச்சிக்கு எல்லாமே நான்தான். அதனால இந்தக் கல்யாணம் வேண்டாம்ணே.  மொதக்கல்யாணம் பண்ணும்போது இப்படித்தான் குங்குமம் கொட்டிப்போச்சு எங்க ஆச்சி சேலையில. எம் புள்ள வாழாம வந்திருச்சு. இனியும் நாங்க ரிஸ்க் எடுக்கத் தயாராயில்லை. எம்புள்ள வாழோணும்ணே. எங்களுக்கு வேண்டாம்ணே”

உடனே மெச்சி போனைக் கணவரின் கையிலிருந்து வாங்கிச் சொன்னாள்.”அண்ணே உங்க மக மூல நட்சத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை என் ஆம்பிள்ளையானுக்கு ஒன்னும் பண்ணாதுன்னு நாங்க பண்ணிக்கிட வந்தோம். எங்களுக்கும் நிறையச் சகுனத்தடை வந்துச்சு. ஆனாலும் நாங்க முக்கியம் இல்ல எங்க புள்ளக வாழ்க்கைதான் முக்கியம்னு வந்தோம் ஆனா நீங்க” என்று அவள் பேசும்போதே போனைக் கட் செய்துவிட்டார் அவர். பின் எடுக்கவே இல்லை.

மெச்சிக்குப் பதறியது, .எவ்வளவு செலவு? கிட்டத்தட்ட மூணு நாலு லட்ச ரூபாய் வெட்டிச்செலவு. அது மட்டும் இல்லாமல் மகனின் மனதில் ஆசையை விதைத்து இப்படி ஏமாற்றி விட்டோமே, நமக்காக ஒப்புக்கொண்டானே என்றும் தோன்றியது. மொதக் கல்யாணச் செலவும் அது நிலைக்காமல் விவாகரத்துக்குகாகக் கொடுத்த பல லட்சங்களும் அவளைச் சங்கடப்படுத்தின.

திருமணம் முடிவானதும் அனைவருக்கும் போன் செய்து சொல்லி இருந்தாள் மெச்சி. நின்று போனதும் அனைவரும் போன் செய்து விசாரித்தார்கள் அதன் பிறகுதான் சொன்னாள், ”அந்தப் பெண்ணே மூல நட்சத்திரம்தான் நாங்க பரவாயில்லைன்னு செய்து கொள்ளத் தயாரா இருந்தோம். அவுகதான் சகுனத்தடைன்னு நிறுத்திட்டார்க” என்று. ”ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் இதக் கூட யோசிக்காமல் இப்படி எல்லாம் முரட்டுத்தனமாக் கல்யாணம் பேடப்புடாது மெச்சி. ஒன் ஆம்புள்ளையான் நல்லா இருக்கோணுமில்ல” என்று அனைவரும் அட்வைஸ் மழையைப் பொழிந்து தள்ளினார்கள்.

மறுநாளே வாட்ஸப்பில் அதே திருமணத்தகவல் குரூப்பில் மெச்சி அவள் மகனுக்குப் பார்த்துப் பேசிமுடித்து, முதல்நாள் விட்டுப்போன அதே பெண்ணின் பயோடேட்டா அடுத்த மாப்பிள்ளையை எதிர்பார்த்துச் சுடச்சுட வந்திருந்தது அதிகாலையிலேயே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...