மூலம்
சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது மெச்சிக்கு அந்த ஜாதக விபரங்களைப்
பார்த்ததும். மகனுக்குக் கல்யாணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார்கள் மெச்சியும்
அவள் கணவர் அழகப்பனும்.
பையனுக்கு ஆறு நட்சத்திரங்கள் ஆகாது என்று கீழச்சீவல்பட்டி ஜோசியர்
குறித்து கொடுத்திருந்தார். ஆனால் வச்சு அடிப்பது போல அந்த ஆறு நட்சத்திரங்களும் மாறிமாறிப்
பெண் ஜாதகங்களில் வந்து கொண்டிருந்தன, எல்லாம் பொருந்தி இருந்தால் மெச்சி வீடு சார்ந்த
அதே கோயிலையும், அதே பிரிவையும் சேர்ந்த பெண்களாகவே வந்தனர். அப்படி என்றால் சகோதரி
முறையாச்சே பண்ணக் கூடாதே என விலக்க வேண்டியதாயிற்று.
பத்தும் பத்தாததற்கு மகன் வயதில் உள்ள பெண்களுக்கு பத்துப் பதினைந்து வயதுக்குள் உள்ள குழந்தைகள் வேறு இருந்தார்கள். சில சமயம் மகனை விடப் பத்து வயது சிறிய பெண்களும் விவாகரத்தாகி இருந்தார்கள். திருமண மேட்ரிமோனிகளைச் சுற்றிச் சுற்றி வந்தும் மகனைப் போல பத்தாண்டுகளாக மறு திருமணம் ஆகாமல் அன்று கண்ட அதே இருபது முப்பது பெண்களே எஞ்சி இருந்தார்கள். அவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை இவனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் ஒரே பொருத்தம்.