எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 10

 

10

”தம்பி உங்க அப்பச்சி இந்த இடத்தை லீஸுக்கு எடுத்துத்தான் வீடெல்லாம் கட்டி வாடகைக்கு விட்டுருக்காக. இப்பக் கோயில்காரவுக குத்தகைத் தொகையை ஏத்திப்புட்டாக. உங்க அப்பச்சிகிட்ட இது பத்தின பத்திரமெல்லாம் இருக்கும். குத்தகை முடிஞ்சு போச்சு. அதக் கொண்டாங்க மறுக்கா அதிகப் பணங்கட்டி லீஸைப் புதுப்பிச்சுக்குங்க. இல்லாட்டி பழைய லீஸுப் பேப்பரை ஒப்படைங்க. வாடகை எல்லாம் தராம வேற அங்க நெறையப்பேரு குடியிருக்காக.” என்றாக அந்தவருடம் பெருமாள் கோவில் கணக்கு வழக்குப் பார்க்கும் நாராயணன் செட்டியார்.

பெருமாள் கோவில் இடத்தை லீஸுக்கு எடுத்து அப்பச்சி கட்டிவிட்ட வீடுகளில் பித்தளைக்கு ஈயம் பூசுற சொடலமுத்து ஆசாரி, அப்பளம் போட்டு விக்கும் ஒலகி அக்கா, பள்ளிக்கூடப் பக்கம் மாங்காய்ப்பத்தை, எலந்தவடை விக்கும் ஈசுவரி அக்கா, கார் டிரைவர் வேலு, சமையக்காரக் கருப்பையாண்ணே குடும்பம், கடலைமிட்டாய் போட்டு கடைகளுக்குச் சப்ளை செய்யும் மோகன், அம்மி கொத்தும் பழனியண்ணேன், காளியம்மா கோயில் பூசாரி பெருமாண்ணேதான் குடியிருந்தார்கள்.

வாடகை தந்தால் தருவார்கள். இல்லையென்றால் இல்லை. அடுத்தமாதம் அடுத்தமாதம் என்பார்கள் ஒருமாதம் கூட முழுசா வாடகை கொடுத்ததில்லை. அப்பச்சி பெருமனசுக்காரவுக ஒண்ணும் கேட்டதில்லை. ஆச்சு அப்பச்சி செத்தும் மூணு வருஷம் ஆச்சு

ரத்தினக் கம்பளங்கள் அடுக்கி இருந்தன. மக கல்யாணத்தின் போது மாப்பிள்ளைக்கு விரிச்ச ரத்தினக் கம்பளங்கள். பந்திக்கட்டுக்கு தயிர் உறையவைச்சு வைக்கும் 100 வெள்ளிக்கப்புகள் அடங்கிய ட்ரே, ட்ரேதான் மிச்சமிருக்கிறது. ரத்தினக் கம்பளத்துக்கு அருகிலேயே மாப்பிள்ளை அழைப்பின்போது மாப்பிள்ளை ஏறிவந்த குதிரைக்குப் போர்த்தி இருந்த வெல்வெட் துணி இருந்தது. அனைத்தையும் வருடிப் பார்த்தாக கருப்பஞ்செட்டி. கண்ணுக்குள் மகளின் நினைப்பு அலைமோதியது.

நாளைக்கு வாங்கிய கடனுக்கு ஜப்தி செய்ய பாங்குக்காரவுக வந்திருவாக. செதம்பரம் வட்டிக்கடையை பங்கு பார்த்துக் கொண்டிருந்த அடைக்கப்பண்ணனுக்குப் பணம் வாங்கிக்கினு விட்டுக் கொடுத்தாச்சு.

இன்னும் ஒரு மாசத்துல பொங்கல் வருது. மாப்பிள்ளையை மக எப்பிடியோ தக்கவைச்சிக்கினு இருக்கா. எந்த வழியும் பொறக்குமுன்னு அவர்களுக்குத் தோணல. இந்த வேலுவுக்கும் கருப்பையாண்ணனுக்கும் கூட ஒரு வழி பண்ணாமப் போகிறோமேன்னுதான் அவுகளுக்கு ஆத்தாமையா இருந்தது.

அப்பச்சி படுத்த குறிச்சியில் சாய்ஞ்சாக. “ என்னய ஏன் பெத்தே ஆத்தா.. சோகியாத்தா. சிவகாமியாத்தா என்னய ஏந்த்தா பெத்தே . இப்பிடி வதைப்படுறதுக்கா , இந்த வீட்டுல சாமி இருக்கா, தெய்வம் இருக்கா “ இரண்டு கையையும் விரிச்சபடி எழுந்திரிச்சவுக தடுமாறிக் கீழே விழுந்துட்டாக.

வேலு வந்து பார்க்கும்போது அவுகளுக்குப் பேச்சு வரவில்லை. ’வாதம் வந்து இழுத்துவிட்டது’ என்றார் வந்து சோதித்த அப்பாசாமி வைத்தியர். வங்கிக்காரர்கள் வீட்டு வாசலில் நோட்டீஸு ஒட்டிப் பூட்டி அரக்குச்சீல் வைத்துப் போய்விட்டார்கள்.

மகள் வந்து அப்பச்சியையும் கூட்டிக்கினுபோய் தங்கள் வீட்டில் வைத்துக்கொண்டாள். “ செவஞ்சொத்துக் கொலநாசம்பாக. பார்த்தியா அப்பச்சியும் மகனும் ஊரை அடிச்சு ஒலையில போட்டுச் சீர் செனத்தி பண்ணுனாய்ங்க. அம்புட்டுப் பேரும் ஆன்னு வாயத் தெறந்துக்குனு ஆச்சிரியப்பட்டீகளே. இப்பப்பாரு நெலைமையை. எல்லாம் கெடையாக் கெடக்குதுக ”என மோவாயில் தாவாங்கட்டையை இடித்துக் கொக்கரித்தாள் வெனையத்தாச்சி. ’ஆமா இந்த வெனையத்தாயா ஏன் இப்புடி மாறிப்போனாக. எம்மேலே என்ன காட்டம்?’ என்று நினைத்தாள் சோகி.  

“ஆத்தா அப்பிடி எல்லாம் பேசாதீக . அவுக லீஸுக்கு எடுத்தது பெருமா கோவில் நெலம். கெடைன்னு வந்தா எல்லாருக்கும் ஒண்ணுதான் “ ஆத்தாளை அதட்டிய சந்திரமௌலி மேல் மதிப்பும் மரியாதையும் வந்தது சோகிக்கு. சின்னப் புள்ளையில் ஆயா வீட்டுக்கு வரும்போதெல்லாம் கல்லா மண்ணா, ஐஸ்பை எல்லாம் ஒன்றாக விளையாடிய அண்ணன் அல்லவா.

ஆனா அந்தப் பாடாவதிப் பய பண்ணின வேலையில் ஆம்பிளையான் போன பெறகு அவ தன் பங்கு வீட்டையே வித்துப்புட்டு வர்றாப்புலயில்ல ஆயிப்போச்சு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)