ஏக வீரனும் ஏகாவளியும்
ஸ்ரீ தேவியின் மேல் பக்தி கொண்டு தேவியின் திருநாமங்களைத் தொடர்ந்து சொல்லி வந்தால் அவள் எந்த இக்கட்டிலிருந்தும் நம்மைக் காப்பாள் என்பதற்கு இக்கதையே உதாரணம்.
முன்னொரு சமயம் ஸ்ரீவைகுண்டத்தில் லட்சுமிதேவி மிக மகிழ்ச்சியாகத் திருமாலோடு அமர்ந்திருந்தாள். அச்சமயம் சூரியனின் மைந்தனான தேவந்தன் என்பவன் உச்சை சிரவஸ் என்னும் குதிரையின் மேல் ஏறி அங்கு வந்தான். அக்குதிரையின் அழகைக் கண்ட திருமகளோ 'நம்மோடு பிறந்த இக்குதிரை எவ்வளவு அழகாக இருக்கிறது' என்று வியப்பிலாழ்ந்தாள். அச்சமயம் திருமால் அவளைப் பலமுறை அழைத்தும் அவள் அவரைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அதனால் சினம் கொண்ட திருமால், "குதிரையின் அழகைக் கண்டு மனம் மயங்கியதால் நீயும் குதிரையாகப் பிறக்கக் கடவாய்" என்று சாபம் கொடுத்தார்.
இதைக் கேட்ட லட்சுமிதேவி திடுக்கிட்டாள். திருமால் இட்ட சாபம் உடனடியாகப் பலித்துவிட லட்சுமிதேவி இமயமலைச் சாரலில் ஒரு பெண்குதிரையாகத் தோன்றினாள். எனினும் அவளுக்குப் பூர்வஜென்ம ஞாபகம் இருந்தது. எனவே திருமாலை அடைய வேண்டி அவள் சிவபெருமானைப் பூஜை செய்து வந்தாள்.
திருமாலும் சிவன் விருப்பப்படி அங்கே ஆண் குதிரையாகத் தோன்றினார். பெண் குதிரையாயிருந்த திருமகளுடன் அவர் இணைய அவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுத் திருமாலும் திருமகளும் ஸ்ரீவைகுண்டம் சென்று விட்டனர். தேவியின் குதிரை உருவமும் மாறிவிட்டது.
தனியே விடப்பட்ட அக்குழந்தை கையைக் காலை ஆட்டிக்கொண்டு தன் கட்டைவிரலை வாயில் வைத்துச் சப்பிக்கொண்டிருந்தது. இது இவ்வாறு இருக்க துர்வர்சு என்ற மன்னன் தனக்கு ஒரு புத்திரன் வேண்டும் என்று திருமாலைக் குறித்துப் பக்தி சிரத்தையுடன் தவம் செய்து கொண்டிருந்தான்.
அவன் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த திருமால் அவன் முன் தோன்றி, "நீ இப்பொழுது சென்றால் கங்கை கரையில் உனக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை கிடைக்கும். அதனை எடுத்துச் சென்று உன் மைந்தனாக நினைத்துப் போற்றி வளர்ப்பாயாக" என்று அருள்பாலித்தார். அது கேட்டு மகிழ்ச்சி அடைந்த துர்வர்சு கங்கைக் கரைக்குச் சென்றான். பேரழகோடு கிடந்த அக்குழந்தையைத் தன் அரண்மனைக்குக் கொண்டுவந்து மனைவிடம் கொடுத்தான்.
பெருமாளின் அருள்பெற்ற குழந்தை என்பதால் அவனுக்கு ஏக வீரன் என்று பெயரிட்டு வளர்த்தார்கள். குழந்தையாகிய ஏக வீரனுக்கு எல்லாக் கலைகளும் கற்பிக்கப்பட்டன. அவன் அரச பாரத்தைச் சுமப்பதற்கு ஏற்ற வயது பெற்று கட்டிளங்காளையாகத் திகழ்ந்தான்.
தன் மகன் ஏக வீரனை மன்னன் அமைச்சர்களிடம் ஒப்படைத்து, "இவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு நான் வானப்பிரஸ்தாசிரமம் ஏற்றுத் துறவறம் செல்கிறேன். என்னிடம் காட்டிய மதிப்பையும் அன்பையும் நீங்கள் இவனிடமும் காட்ட வேண்டும்" என்று கூறினான். தன் மகனாகிய ஏக வீரனிடம் அரச பாரத்தைச் சுமப்பதற்கான பொறுப்புக்களை எல்லாம் விளக்கிக் கூறி, அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்துவைத்துவிட்டு மனைவியுடன் தவம்புரியக் காட்டுக்குச் சென்று விட்டான்.
அரசனாகிய பின் மிக அழகிய தோற்றப் பொலிவோடு திகழ்ந்தான் ஏக வீரன். ஒரு நாள் ஏக வீரன் தன் குதிரையோடு நெடுந்தூரம் சென்று விட்டான். அங்கே ஒரு தாமரை தடாகம் எதிர்ப்பட்டது. அதன் கரையில் ஒரு அழகிய இளம்பெண் அழுது கொண்டிருந்தாள். ஏக வீரன் பரிவோடு அவளை நோக்கி, "பெண்ணே! உனக்கு என்ன குறை? ஏன் அழுகிறாய்? அக்குறையை என்னிடம் சொன்னால் நான் தீர்த்து வைப்பேன். நான் இந்நாட்டு அரசன். உன்னால் எனக்கு உதவ முடியும்" என்று கூறினான்.
அவனுடைய உரையைக் கேட்ட அம்மங்கை சிறிது நம்பிக்கை பெற்றாள். "அரசே! உம் ஆட்சிக்கு உட்படாத ஒரு தேசத்தை ரைப்பியன் என்னும் ஒரு மன்னர் ஆட்சி புரிகிறார். அவருக்கு ருக்மரேகை என்ற மனைவி இருக்கிறாள். அவர்களுக்குக் குழந்தைப்பேறு கிட்டவில்லை. எனவே ருக்மரேகை வருந்தித் தன் கணவனிடம்,"நாதா நமக்குக் குழந்தைப்பேறு இல்லை. இக்குற்றம் என்னைச் சார்ந்ததுதான். இக்குறைதீர நாம் என்ன செய்யலாம்?" என்று கேட்டாள்.
அரசன் மந்திரிப் பிரதானிகளுடன் ஆலோசித்துப் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்பொழுது அந்த யாகக்குண்டத்திலிருந்து மின்னல் கொடி போன்ற ஒரு அழகிய பெண் குழந்தை தோன்றியது. யாகத்தைச் செய்து வைத்த குரு சிரேஷ்டர் குழந்தையை மன்னரிடம் கொடுத்து, "அரசே! இந்தப் பிறவியில் உனக்கு இம்மகள் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கிறாய். இவள் மிக சிலாக்கியமானவள். யாகத்தில் தோன்றியவளாகிய இந்தப் புத்திரியை நீ புத்திரனாகவே கருதி வளர்ப்பாயாக" என்று கூற மன்னரும் மகிழ்ந்து பராசக்தியின் திருவருளால் குழந்தை கிடைத்ததால் அதற்கு ஏகாவளி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார்.
இப்படி இருக்கும் போது ஒருநாள் எங்கள் ராஜ்ஜியத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் ஏகாவளியின் பொலிவைப் பார்த்துவிட்டு," இப்பெண்ணை மகாவிஷ்ணுவின் மகனான ஏக வீரன் மணப்பான்" என்று ஆசி கூறிச் சென்றார். அன்று முதல் ஏகாவளி ஏகவீரனே தனக்கேற்ற கணவன் என்று கருதினாள். பல்வகைப்பட்ட கலைகளிலும் சிறந்தவள் அவள்.
இருந்தாலும் தாமரைக் குளத்தையும் தாமரை மலர்களையும் கண்டால் மகிழ்ச்சி அடைவாள். தடாகத்தில் மூழ்கி தாமரையைச் சூடி மகிழ்வாள். இந்தத் தாமரைக் குளம் மிகவும் ரமணீயமாக இருந்ததாலும் இங்கே ஆயிரக்கணக்கான தாமரை மலர்கள் மலர்ந்திருந்ததாலும் ஏகாவளி இங்கே வந்தாள். அந்த அரசனது மந்திரிகுமாரி ஆகிய நானும் இங்கே அவளுடன் வந்தேன்.
வந்த இடத்தில் காலகேது என்னும் ராட்சசன் என் தலைவியான ஏகாவளியைப் பலவந்தமாகத் தூக்கி சென்று விட்டான். நானும் அவனை விடாமல் பின்தொடர்ந்தேன். அவன் அவளைப் பாதாள உலகில் சிறைவைத்து, அவளுக்கு என்னைத் துணையாக வைத்து, அவள் மனத்தை மாற்றுமாறு எனக்குக் கட்டளையிட்டான். என்ன செய்வது என்று புலப்படாமல் நான் வருந்திக் கொண்டிருந்தேன். அப்போது என் தலைவியாகிய ஏகாவளி எல்லாத் துன்பங்களையும் போக்கும் ஸ்ரீ புவனேஸ்வரிதேவி மந்திரத்தைத் தியானம் செய்து வந்தாள்.
ஆகையால் அவள் பக்திக்கு மகிழ்ந்த அன்னை நேற்று இரவில் அவள் கனவில் தோன்றினாள். அன்னை ஏகாவளியை நோக்கி," நீ உன் தோழியை நாளை தாமரைக்குளத்துக்கு அனுப்பு. உன்னை மணக்கப் போகும் ஏக வீரன் அங்கே வருவான். அவன் உன் தோழியின் மூலம் உன் நிலையை அறிந்து இங்கு வந்து காலகேதுவைக் கொன்று உன்னை காப்பான்" என்று கூறி அருளினாளாம்.
ஏகாவளியின் ஏவலால் நான் இங்கே வந்து காத்திருக்கிறேன். அம்பிகையின் மந்திரத்தை நானும் இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அதன் பயனாகவே தாங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். தாங்களே ஏகவீரனென்று கருதுகிறேன். என் தலைவியையும் என்னையும் அந்த ராட்சசனிடமிருந்து காப்பாற்றுங்கள் அரசே" என்று வேண்டினாள்.
ஏகாவளி என்ற பெயரைக் கேட்டதுமே ஏக வீரன் அவள் தனக்காகவே பிறந்தவள் என்று மகிழ்ந்து உறுதியான காதலுடன் பவானி தேவியின் பீஜாட்சரத்தை ஜெபித்துக் கொண்டே அத்தோழியுடன் பாதாள உலகம் சென்றான்.
அந்தச் சமயத்தில் தன்னை மணந்து கொள்ளுமாறு ஏகாவளியைக் காலகேது கெஞ்சிக் கொண்டிருந்தான். ஏகாவளி, "நீ ஒரு அரக்கன். உனக்குச் சத்ரிய தர்மம் தெரியாது. ஒரு பெண் தனக்கு உரியவன் என்று ஒருவனை மனத்தில் நினைத்துவிட்டால் அப்பெண் வேறொருவருக்கு மனைவியாகக் கூடாது. நான் ஏக வீரனை விரும்பி விட்டேன். என் தந்தையும் அதற்குச் சம்மதம் கொடுத்துவிட்டார். எனவே அவரைத்தான் மணப்பேன். அவர் வந்து உன்னைக் கொல்வதற்கு முன் நீ என்னை எனது அரண்மனையில் சேர்த்துவிடு" என்று அந்த ராட்சசனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இந்நிலையில் காலகேதுவின் தூதர்கள் ஓடோடி வந்து, "தலைவா தங்களோடு போர் செய்ய பூலோகத்தில் இருந்து ஒரு வீரன் வந்துள்ளான். அவனைப் பார்த்தால் நம்மை வெற்றி கொண்டு விடுவான் போல் தெரிகிறது" என்று கூற, அவர்கள் பேச்சைக் கேட்ட காலகேது பெருங்கோபம் கொண்டு போர்க்குப் புறப்பட்டான். ஏக வீரனுக்கும் காலகேதுவுக்கும் கடுமையான போர் நடந்தது. போரின் முடிவில் காலகேது கொல்லப்பட்டான்.
பின்பு ஏக வீரன் ஏகாவளியைப் பார்த்து, "பெண்ணே ஸ்ரீ புவனசுந்தரி தேவியின் அருளால் நீ எனக்குக் கிடைத்தாய்" என்று மகிழ்வோடு கூறினான். அவளும்," உடனே நாம் என் தந்தையிடம் சென்று நிகழ்ந்தவற்றைக் கூறுவோம். அவரே முன்நின்று என்னைத் தங்களுக்குத் திருமணம் செய்து வைப்பார். அப்பொழுதுதான் நம் வாழ்வு சிறக்கும்." என்று கூறினாள்.
ஏகவீரனும் ஏகாவளியின் வேண்டுகோளுக்கு இணங்கி ஏகாவளியையும் அவள் தோழியையும் அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கே அரசரிடம் அவர்களை ஒப்படைத்தான். நிகழ்ந்தவற்றைக் கூறினான். மன்னனும் மனம் மகிழ்ந்து உடனே ஏக வீரனுக்கும் ஏகாவளிக்கும் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தான்.
ஏகாவளி பின்பு தன் கணவருடன் அவருடைய ராஜ்யத்தை அடைந்து மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கை நடத்தினாள். அவர்களுக்குக் கிருத வீரியன் என்னும் ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் ஸ்ரீதேவியின் மந்திரத்தை உச்சரித்ததால் ஸ்ரீ தேவியின் பேரருள் பெற்று மகிழ்ச்சியுடன் இனிமையாக வாழ்ந்தனர்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)