எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 7

 

7

”பொறந்தோடனே ஆத்தாளைத் தூக்கிப் போட்டு முழுங்கிருச்சி இந்தக்குட்டி. ” எனப் பேசிக்கொண்டிருந்தாக பங்காளி வீட்டில் இரு ஆச்சிகள். “ எறையாமப் பேசு. அப்பச்சிக்கும் ஐயாவுக்கும் இந்தக்குட்டின்னா ஓவியம், உசுரு. ஒருத்தருக்கு ஒரு சாமானைக் கொடாது. அதுவே வச்சிக்கினு உங்கும், திங்கும். வெளையாடும். ஆரையும் சேத்துக்காது. சரியான வறளி “

”ஆமாமாம் எதுனால அந்த ஒமையா எறந்து போனாளாம்.”

“ரெத்தப் போக்கு அதிகமா இருந்துச்சாம். மேக்கொண்டு சமைஞ்சாப்புல அவ ஊரணிக்குத் தண்ணி எடுக்கப் போனாளாம். அப்ப முனி அடிச்சிருக்குன்னு வேற சொல்றாக. குலதெய்வக் கோயில்லே கொண்டே சேத்துப்புட்டாகன்னு சொன்னாக. ஆர் கண்டா “

“ ஒய்யக் கொண்டா வீட்டுல சொன்னாக அது ஏதோ புள்ள பொறந்து ஒரு மாசத்துக்குள்ள அசைவம் சேக்கோணும்னு கறி, கோழி, மீனு, கருவாடுன்னு சமைச்சுக் கொடுத்தாகளாம். கருவாடு சாப்புட்டதுல ஏதோ ஒத்துக்காம வயித்தால அதிகமாப் போயி போயிருச்சுங்கிறாக. “

“ வீட்டுக்குள்ள அவ படம் எதுவுமேயில்லை பாத்தீகளா. குலதெய்வக் கோயில்லே கொண்டேய் ஆணி அடிச்சுச் சேத்துப்புட்டாகங்கிறாக. எது உண்மையோ யாரு கண்டா “ என வம்பு பேசி மகிழ்ந்தார்கள்.

”ஆமா இந்தக் குட்டி சமைஞ்சதுக்கு ஆயா வீட்டுல என்ன பண்ணுனாக. நான் அடுப்படியிலேயே மேப்பாத்ததால ஒண்ணையும் பாக்கல. ஆவுடையப்பண்ணே என்னய இங்கிட்டுப் பாத்துக்கச் சொன்னாக “

“அவுக நல்லா ஓவியமாக் கொண்டுவந்துதான் அம்புட்டும் குடுத்துட்டுப் போனாக. கெம்புக்கல்லு செட்டு ஒண்ணு குடுத்தாக. அதுல ஜோடித் தோடு, ஜோடிக்காப்பு, அட்டிய. வைரத்துல ரெட்டைவரிசைக் காப்புப் பண்ணி இருப்பாக போல. வெள்ளில வேவுக்கடகானும் கொடமும் கொடுத்தாக. அப்புறம் பித்தளையில இருபத்தியோரு குழி இட்டிலிச்சட்டி, காசாணி அண்டா, தவலை, சருவச்சட்டின்னு பெருவாரியாக் கொடுத்தாக. சில்வர் சாமான்களயும் பித்தளையையும் பரப்புனாகளே பாத்திருப்பியே. ”

“பாத்தேன். சரியாப் பாக்கல. கெண்டாங்கிச் சேலை கெட்டிச் சரிகைக் கரையோட நல்லா இருந்துச்சு. “

”எல்லாம் நல்லாத்தான். இந்தக் குட்டிதான் பெல்லாக் குட்டி, மகாப் பூடம் “

“ஆமா அம்மான் மகன் ஒருத்தன் இருக்கானாமுல்ல. அவனுக்கே சேய்ஞ்சுட்டா அது எல்லாம் திரும்ப அவுகளுக்குத்தானே. அதான் நல்லாப் பண்ணி இருக்காக. “

அடுப்படிப்பக்கம்  இவுக ரெண்டு பேரும் கிசுகிசுக்கிறது பார்த்து மூணாவது வீட்டு ராமாயி ஆச்சி வந்து கேட்டாக “ என்னவோ கொப்பனாபட்டித் தமிழ்க்கல்லூரியில கலைச்செல்வி பட்டத்துக்குப் படிச்சிச்சாமே இந்தப் புள்ள.  முடிச்சிருச்சா.”

சுதாரித்துக் கொண்ட பங்காளி வீட்டு ஆச்சிகள் “ஆமா. சமத்திக் குட்டி. நல்லாப் படிக்கும். அங்கன முடிக்குமுன்னே சமைஞ்சிருச்சில்ல. அதுனால உடனே போய் அழைச்சாந்துட்டாக. இனித் திருப்பி அனுப்புவாகளா தெரியல. ” என்று சொல்லி வளவுக்குள் வேறு ஏதோ வேலை இருப்பது போலப் பிரிஞ்சி போனாக.  

மாநெறந்தான்னாலும் சோகி வயசுக்கே உரிய அழகோட இருந்தா. அவளப் பார்க்கப் பார்க்க ஐயாவுக்குக் கொள்ளல. “ ஆத்தாத்தோய் . கொப்பாத்தா மாதிரி எம் பேத்தி சொப்புச் சிலையாட்டம் அழகா இருக்கா ,கெட்டிக்காரி, சித்ராங்கி, சீமைச் சமைத்தி, அம்புட்டுப் பேரையும் நிர்வாகம் பண்ணி நல்லா வேலை வாங்கிருவா.”

“அப்பச்சி என்னோட பக்கத்துக் கிட்டங்கிக்காரவுக மகனுக்கு நம்ம சோகியக் கேக்குறாக. மாப்பிள்ளைப் பையன் மலேயாவுலேயே பொறந்து வளந்தவுக. இங்கன மலயாவுல இருக்குற ஆளுக போலத்தான் பழக்க வழக்கம் எல்லாம். பார்க்க நல்லா இருக்காக. பேண்ட் சட்டைதான் போட்டுக்குவாக. பெருவாரிப் பணம். அவுக வீட்டுல வைரத்தைப் படியிலதான் அளப்பாகன்னு இங்கன சொல்லிக்கிறாக. “

”விசாரிச்சுப்பிட்டு நமக்குத் தோதா இருந்தாப் பண்ணுவோம் அப்பச்சி”

”அவளுக்கும் ஆவணி வந்தா பதினாலாகுது. ஆத்தா இல்லாத புள்ள. கருவேப்பிலைக்கண்ணு மாதிரி ஒரே மக எனக்கு. செல்லமா வளத்துப்புட்டோம். நான் வேற இங்கன இருக்கேன். உங்களுக்கும் அவளப் பார்த்துக்கச் செரமம். சீக்கிரம் கலியாணம் செஞ்சுட்டாத் தாவலை “ என்று கடிதாசி போட்டிருந்தாக கருப்பஞ்செட்டி.

“தம்பி நீ சொல்ற தாக்கல வெசாரிச்சுப் பார்த்தேன். அவுக வேறவட்டகை ஆளுக. நம்மள மாதிரி இல்ல. எல்லாம் படிக்கணக்குல சீர் செய்யோணும். அது கூடச் செஞ்சிரலாம். பழக்க வழக்கம் எல்லாம் அது வேற மாதிரி. மேக்கொண்டு அவுக வீட்டு விலாசம் சொல்லி வெசாரிச்சேன். மாப்பிள்ளைக்குப் பல பழக்கமும் இருக்குறமாதிரிச் சொல்லுறாக. பெரும்பணக்காரவுகதான். பெரும்போட்டு ஆளுகதான். அதுக்குன்னு வைர ஊசின்னு வயித்துல குத்திக்கிற முடியுமா “

”நான் ஆத்தாப் பொண்ணுகிட்டயேக் கேக்குறேன். அவளுக்கு அம்மான் மகனைச் செஞ்சுக்க நோக்கம் இருக்குறமாதிரித் தெரியுது. பார்ப்போம். எல்லாம் அக்கினியாத்தா சித்தம் “ என்று கடிதாசி போட்டிருந்தாக ஆவுடையப்பன்.

”வினோபாவின் பூமிதான இயக்கம் வந்து ரெண்டு மூணு வருஷமாச்சு. நெலத்தைப் பூரா உழுதவனுக்கும் பங்கு கொடுக்கச் சொல்லுறாக அரசாங்கத்துல. 30 வருஷமா குத்தகைக்கு பாடுபட்ட பொசலான் இருந்தாலாவது குடுக்கலாம். இப்ப அவனும் செத்துப் போனான். விவசாயமும் பாக்க முடியல. போக வர எசையல. வயலை வேணா வித்திறலாமா. பேத்தி கல்யாணத்தை நல்லவடியா முடிச்சிட்டு மீதிய வட்டிக்குக் குடுத்து வாங்கலாம்னு இருக்கேன் தம்பி. வேணும் ஸ்ரீ சற்குருநாதர் துணை. “

அப்பச்சி கடிதத்தைப் படித்த பிறகு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான் கருப்பஞ்செட்டி. அஸ்தமன சூரியன் தட்டுப்பட்டது. ’இங்கேயும் வட்டிக்குக் கொடுத்து வாங்குறது செரமமா இருக்கு. சைனாக்காரய்ங்க எப்ப கத்திய எடுத்துக் காட்டுவாய்ங்களோன்னு பயப்புடுறாய்ங்க பெட்டியடிப் பயலுக. சுருக்கிக்கினு போயிறலாமா. மக கல்யாணத்தோட்ட அங்கனயே பக்கத்துல இருக்கலாம். அங்கன அப்பச்சியோட இன்னொரு வட்டிக்கடையைப் போடலாம்.’ யோசித்தபடி அமர்ந்திருந்தான் கருப்பஞ்செட்டி.  ஊருக்கு முன்னே மலேயாவில் சீக்கிரம் அஸ்தமித்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...