6
”நெல்லிமரத்துப் பிள்ளையாருக்குச் செதர்காய் ஒடைச்சிட்டுத்தான்
வந்தேம்ணே “ என்று பரிதவிப்போடு கூறினான் வேலு. “பரவாயில்லை விடப்பா “ என்று பத்தாவது
முறையாகக் கூறினாக கருப்பஞ்செட்டி. கோழி விழுந்ததும் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவர்
ஒருவர் எழுந்து வந்து “அதுகளாத்தான் குறுக்கால ஓடியாந்து விழுந்துச்சுக. எங்க கோழிகதான்.
ஒங்க தப்பில்ல போங்க “ என்று கூறிவிட்டார்.
என்னவோ இன்று பலி விழுந்தது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை வேலுவுக்கு. வீட்டுக்கு வந்ததும் பங்காளி வீட்டுச் சுகுணா ஆச்சி வந்து ஆலாத்தி எடுத்தாக. சாமி வீட்டில் விளக்கேற்றி இருந்தது. மூன்று கட்டு வளவு உள்ள பெரிய வீடு அது. அப்பச்சி கூட்டிக்கினுபோய் விபூதி பூசி விட்டாக. வேலு கார் டிக்கியிலிருந்து எடுத்து பொட்டி பைகளைக் கொண்டு வந்து பட்டாலை அறையில் வைத்தான்.
மிட்டாய்த்தட்டு வைக்கவும் விளையாட்டுப்பொட்டி வேவுக்கு சம்மந்தப்புரத்தை
அழைப்பது பற்றியும் பேச இரு பங்காளி வீட்டு அண்ணன்கள் வந்திருந்தாக. “கருப்பையாண்ணே.
எலையப் போடுங்க சாப்பிட்டுட்டுப் பேசுவோம்” அப்பிடின்னாக ஆவுடையப்பன்.
“ அண்ணே மக பொறந்திருக்காளே.” “ தம்பி மக பொறந்திருக்குறாளே
“ என வந்த இருவரும் விசாரிக்க ’ஆமாண்ணே” என்று சொன்ன கருப்பஞ்செட்டிக்கு நெஞ்சாங்கூட்டுக்குள்
கருப்பஞ்சாறாய் இனித்தது. மகளை எப்பப் பார்க்கப் போவது? அப்பச்சிகிட்ட கேட்டுட்டு நாளைக்குப்
போயிற வேண்டியதுதான். சமையற்கட்டுப் பந்தியே
கருப்பையாண்ணனின் கைவண்ணத்தால் மணத்தது. ரொம்ப நாள் கழிச்சு ருசியான அசைவச் சாப்பாடு.
பேத்திக்குப் பண்ணிய பூச்சரத்தைப் பெட்டகத்தைத் திறந்து அப்பச்சி
கருப்பஞ்செட்டிக்கும் பங்காளி வீட்டாருக்கும் காண்பிச்சாக. ”அப்பச்சி மலயாவிலேருந்து
வெளையாட்டுச் சாமானும், கவுனும், முட்டாய் ரொட்டிகளும் வாங்கியாந்திருக்கேன்” என்று
கருப்பஞ்செட்டி சொல்லவும், “ சாயங்காலமாப் பொட்டியப் பிரிப்போம் தம்பி, இப்ப சத்த ஒறங்கு
“ என்று சொல்லிவிட்டுப் பங்காளி வீட்டாரை முகப்பு வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தாக
ஆவுடையப்பன்.
”அப்பச்சி ஆத்தாளே வந்து பொறந்துட்டாக அமக்கு. ஆத்தாப்பொண்ணை
எப்பப் பார்க்கப் போறது அப்பச்சி “ என்று கருப்பஞ்செட்டி கேட்கவும். ”நாளைக்கே நல்ல
நாளா இருக்கப்பா. அதுனால இங்கன காலைல முட்டாய்த் தட்டு வைச்சிட்டு மத்தியானம் பங்காளி
வீட்டுக்குச் சாப்பாடு ஏற்பாடு பண்ணிருவோம். சாயங்காலமே வெளையாட்டுப்பொட்டி வேவுக்கு
வருவாக. சம்மந்தியா வீட்டுக்குச் சொல்லி விட்டாச்சு “ என்றாக ஆவுடையப்பன் .
“ஆத்தாடியோவ் .நல்ல வேளை நாளைக்கே பார்க்கப் போறோமா. ஆனா சாயங்காலம்
வரை காத்திருக்கோணுமா “ என்று மகிழ்வும் சலிப்பும் தட்டியது கருப்பஞ்செட்டிக்கு.
மாலையில் மகன் கொண்டுவந்த கவுன், ப்ராக்குகள், குல்லாய், சொட்டர்,
காலுறைகள் எல்லாம் பார்த்து வியந்து போனாக ஆவுடையப்பன். கருப்பஞ்செட்டியும் மகளுக்குச்
செய்து கொண்டு வந்திருந்த இரண்டு ஜோடி பிள்ளைக்காப்புக்களை அப்பச்சியிடம் காண்பித்தான்.
“ஜிலேபிக் காப்பு. அருமையா இருக்கப்பா “ என்று சிலாகிச்சாக ஆவுடையப்பன். மகள் பிறந்ததும்
மகனுக்கு பொறுப்பு கூடிவிட்டது என்ற உணர்வு ஏற்பட்டது அவுகளுக்கு.
”நல்லபடியா இன்னொரு மகனையும் ஒமையா பெத்துப்புட்டா பேரனைப் பார்த்த
சந்தோசத்துல போய்ச் சேருவேன் “ என்று அப்பச்சி கூறவும் பதறினான் கருப்பஞ்செட்டி. “
ஏனப்பச்சி அப்பிடிச் சொல்லுறீக. அதுகளுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து வளர்க்க
நீங்க வேணும் அப்பச்சி. என்னைய வளத்தது மாதிரி அவுகளையும் நீங்கதான் வளக்கோணும் “ என்று
சொல்ல அப்பச்சி மகன் இருவருக்கும் மனம் நெகிழ்ந்து கிடந்தது. ஒருவர் கையை ஒருவர் பிடிச்சிக்கினாக.
மறுநாள் காலை வழக்கம்போல விடிந்து கிடந்தாலும் சூரியனின் வெம்மை
மிகவும் கொடுமையாகத் தகித்தது. பங்காளிகள் ஒவ்வொருவராக வந்து ரொட்டி மிட்டாய் எடுத்துக்கினாக.
வெள்ளி மிட்டாய் ஸ்டாண்டும், பொட்டு ஸ்டாண்டும், வெத்திலைத்தட்டும் பட்டாலையில் ஒன்றும்
பத்தியில் ஒன்றுமாக வைக்கப்பட்டிருந்தன. பட்டாலையிலும் பத்தியிலும் பெரிய சமுக்காளங்கள்
விரிக்கப்பட்டிருந்தன. நன்னாரி சர்பத்தும் வெட்டிவேர் சர்பத்தும் கலந்து கருப்பையாண்ணேன்
வைக்க வேலு ஒவ்வொருவருக்காய் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
வந்தவுக அனைவரும் ” மலேயா ரொட்டி, மிட்டாய், வேஃபர்ஸ்னா அது
தனி ருசிதான் ” என்று கூறியபடி எடுத்துக்கினாக. ஒரு கம்போஸாத் தாம்பாளத்தில் பேத்திக்குக்
கொடுக்கும் நகைகள், உடைகளை வைத்து வேலுவிடம் கொடுத்துக் காண்பிக்கச் சொல்லி இருந்தாக
ஆவுடையப்பன். அனைவருமே அதைத் தொட்டுப் பார்த்து ”கெவுன் வெல்வெட்டாட்டம் இருக்கு, விசிறிமடிப்பு
ப்ராக்கும் அழகு. வர வர பச்சைப் புள்ளைக்கெல்லாம் விதம் விதமாத் துணிமணி வர ஆரம்பிச்சிருச்சு
. ஒம் மக நல்ல புது நெறம்தான். அந்தக் குட்டிக்கு இது எல்லாமே எடுப்பாயிருக்கும் “
என்று சிலாகித்துக் கொண்டிருந்தாக. கேட்கக் கேட்கப் பெருமையாயிருந்தது கருப்பஞ்செட்டிக்கு.
மகளையும் பொண்டாட்டியையும் எப்பப் பார்ப்போம்னு ஆயிப்போச்சு
அவுகளுக்கு. நல்ல சைவச்சாப்பாடு தயார்ப் பண்ணி இருந்தார் கருப்பையாண்ணே. கூடத் துணைக்கு
செட்டு சமையக்காரவுக நாலுபேர் வந்திருந்தாக. எல்லாரும் சோறுண்ணதும் சாயாங்காலம் வேவுக்காக
பதினாறு பலகாரம் தயாராகிக்கிட்டு இருந்துச்சு. பாதாம் அல்வா, முந்திரி பகோடா, கந்தரப்பம்,
மசாலைச் சீயம், கவுனரிசி , செகப்பரிசிப் பணியாரம், எருக்கலங்கொழக்கட்டை, தூள் பஜ்ஜி,
தம்புருட்டு அல்வா, கேரட் இட்டிலி, இனிப்பு இடியப்பன், காய்கறி ஊத்தப்பம், ரெங்கோன்
புட்டு, தவலை வடை, புட்டுக் கொழக்கட்டை, வடை, தொட்டுக்க இங்கிலீஷ் காய்கறி குருமா,
கத்திரி வத்தல் மாவத்தல் அவர வத்தல் மொச்சைக்கொட்டை போட்ட குழம்பு, பச்சடி, டாங்கர்
சட்னி, கதம்பச் சட்னி, கொத்துமல்லித் துவையல், காபி.
முகப்புக் கதவுகள் திறந்திருக்க மருமக ஒமையாளின் ஆத்தாவீட்டில்
வேலை செய்யும் காளிமுத்து அண்ணன் வேகவேகமாக உள்ளே வந்தார். அவர் ஆவுடையப்பண்ணன் அருகில்
சென்று காதில் ஏதோ கூற அவுக முகம் கருத்தது. வாய்க்குள் “ அடியாத்தி.. அப்பிடியா “
என்றாக ஆவுடையப்பன்.
சாமி வீட்டில் நகைகளை எல்லாம் நகை டப்பிகளில் எடுத்துவைத்துக்
கொண்டிருந்த கருப்பஞ்செட்டியின் கையிலிருந்து ஒரு ஜிலேபிக்காப்பு உருண்டோடி பெட்டகத்தின்
பக்கவாட்டில் ஒளிந்தது. கையை உள்ளே விட்டுத் தேடி எடுக்க அவன் முயற்சித்துக் கொண்டிருக்க,
கேட்ட தாக்கலை மகனிடம் எப்படிச் சொல்வதெனத் தயங்கித் தயங்கிச் சாமிவீட்டுக்குள் நுழைஞ்சாக
ஆவுடையப்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)