என் காதலே என் காதலே என்ன செய்யப் போகிறாய், மழைவருது மழை வருது குடை கொண்டு வா, எனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்தவ, குண்டு ஒண்ணு வைச்சிருக்கேன், கத்திரிக்காய் குண்டுக் கத்திரிக்காய், குளிச்சா குற்றாலம் கும்பிட்டா பரமசிவம், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, மழையின் துளியில் லயம் இருக்குது, பூவே இளைய பூவே, ஏதோ மோகம் ஏதோ தாகம், மாறுகோ மாறுகோ, பூங்காற்று உன் பேர் சொல்ல எனக் காதலும் காமெடியும் கலந்தவை பிரபுவின் படப்பாடல்கள்.
25, டிசம்பர் 1956 இல் பிறந்தார். நடிகர் திலகத்தின் இளைய மகன். பரந்த முகம். அகண்ட நெற்றி, நிறைந்த தலைமுடி கன்னக்குழி, நிறைவான புன்னகை எப்போதும் ஹை எனர்ஜி லெவலில் இருப்பது இவரது ஸ்பெஷாலிட்டி. ஜாலி பால். தந்தையின் புகழ் விசிட்டிங் கார்டாகப் பயன்பட்டாலும் அதையும் மீறித் தன்னை நிலை நாட்டி ஜெயித்தவர்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சங்கிலி இவரது முதல் திரைப்படம். கும்கியில் நடித்த விக்ரம் பிரபு இவரது மகன். இவர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தவை சின்னத்தம்பி, குரு சிஷ்யன், சந்திரமுகி, வசூல் ராஜா எம் பி பி எஸ், சம்திங் சம்திங் அக்னி நட்சத்திரம் அரங்கேற்றவேளை, மை டியர் மார்த்தாண்டன் ஆகியன.
கமலுடன் ஒரு திருவிழா வெற்றி விழா, மணி மைண்டட் மருத்துவர்களைக் கலாய்த்த வசூல்ராஜா எம்பிபிஎஸ், ரஜினியின் சிஷ்யனாகக் குரு சிஷ்யன், ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியில் சிக்கிய மனைவியைக் காக்கும் சந்திரமுகி, சுயகௌரவம் பெரிதெனக் கருதும் அண்ணனாக சம்திங் சம்திங்,, அஞ்சலியில் சிறையிலிருந்து வெளிவந்த கைதியாக ஒரு கேரக்டர். திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் கஞ்சத்தனமான மனிதர்களைக் காமெடியாகச் சித்தரித்த படங்கள். சுயம்வரம் கதம்பக் கூட்டாக நடிகர்கள் நடித்த படம்.
அண்ணா நகர் முதல் தெரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் இதில் அம்பிகாவின் கணவனாக வரும் பிரபு செக்யூரிட்டி ராம்சிங்காக வேலை செய்யும் நன்கு படித்த சத்யராஜுக்கு உரிய வேலை வாங்கி கொடுப்பார். என் தங்கச்சி படிச்சவ, சூரக்கோட்டை சிங்கக்குட்டி, பிரியமுடன் பிரபு,, பாலைவன ரோஜாக்கள், பிரியங்கா, தர்மத்தின் தலைவன், கும்பக்கரை தங்கையா ஆகியன இவர் நடித்த சில படங்கள்.
சிவாஜியின் வசந்த மாளிகை போல் லதா, ஆனந்த் என்ற இரு காதலர்கள் கொண்டு அமைக்கப்பட்ட படம் ஆனந்த். ஹோட்டல் ரிஸப்ஷனிஸ்டாக இருக்கும் லதாவை ஆனந்த் காதலிக்க அதில் ஏற்படும் சிக்கல்களைக் களைந்து முடிவில் காதலோடு சேர்வது மிக மிக அற்புதமான ஒரு கதை அமைப்பு..
அரங்கேற்ற வேளை. இதில் விகே ராமசாமி உடன் ரேவதியும் பிரபுவும் நடிப்பில் தூள் கிளப்பி இருப்பார்கள். வாடகை தராத பிரபுவைக் காலி செய்வதற்காக ரேவதியை விகேஆர் தன் வீட்டில் குடி வைக்க ரேவதி செய்யும் தகிடுதத்தங்கள், குட்டி குட்டி ஃபிராடுகள், அடிக்கும் லூட்டி எல்லாம் சிரிப்பாக இருந்தாலும் முடிவில் சுபம் இதில் மூன்று பேரும் சேர்ந்து பாடும் ஆகாய வெண்ணிலாவே என்ற கனவுப் பாட்டு மூன்றுவித கெட்டப் ரகளை.
அக்னி நட்சத்திரம் தோளோடு தோள் உரசி அக்னிப்பொறி பறக்கக் கார்த்திக்கும் பிரபவும் நடித்த சிறந்த படம். விஜயகுமாரின் இரு மனைவிகளுக்குப் பிறந்த மகன்கள் இருவரும். இதில் பிரபுவுக்கு அமலா ஜோடி.. இந்த படமும் 3 விருதுகள் பெற்றுள்ளது. வித்யாசமான லைட்டிங்குகளில் நின்னுக்கோரி வர்ணம், வா வா அன்பே, தூங்காத விழிகள் இரண்டு என இதன் அனைத்துப் பாடல்களும் கர்நாடக ராகங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
பிரபு குஷ்பூ நடித்த இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் மை டியர் மார்த்தாண்டன். அரண்மனையில் வசிக்கும் மார்த்தாண்டன் தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்யச் சென்னை வந்து குஷ்புவைக் காதலித்துக் கைப்பிடிக்கும் கதை. இதில் பாக்கு வெத்தல போட்டேன் பத்தல என்ற பாடல் எல்லாம் அழகு. பல்வேறு படங்களில் இணை சேர்ந்துள்ள பிரபு குஷ்பூ ஐடியல் ஜோடி.
தலையில் ஒரு பக்கம் கொண்டையுடன் கும்பக்கரை தங்கையா , கடத்தல்காரனாக மாறும் கிழக்கு கரை இவற்றிலும் பருமனான உடலை வைத்துக் கொண்டே இவர் ஆடும் ஆட்டம் வியப்பு.. சின்னத்தம்பி பெரிய தம்பியில் சத்யராஜின் சின்னத்தம்பி ஆக வந்து முறைப்பெண்ணான நதியாவை மணமுடிப்பார். கோழி கூவுது படத்தில் அக்காவின் மகளைக் கல்யாணம் செய்ய மிலிட்டரிக்காரனாக ஆவார். பிரபுவுக்கு இதில் சில்க் ஸ்மிதா உடன் சில பாடல்கள் உண்டு. அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே என்ற பாட்டு கரகரப்பான வித்யாசம்.
சென்னை ஏவிஎம் இராஜேஸ்வரி தியேட்டரில் டூயட் பார்த்தோம். இது இவரது இன்னொரு சிறந்த படம். ரமேஷ் அரவிந்த், பிரபு சகோதரர்களாக நடித்துள்ளார்கள். பேரழகியான மீனாட்சி சேஷாத்ரியை இருவருமே காதலிக்க முடிவில் வில்லன் பிரகாஷ்ராஜையும் மீறி இந்த டூயலில் அவர் யாரை மணக்கிறார் என்பதே கதை. இதில் சாக்ஸஃபோன் வாசிப்பவராக நினைத்து அவர் ரமேஷைக் காதலிக்க முடிவில் பிரபுதான் வாசிக்கிறார் என்பது தெரிய வருகிறது. சந்திரலேகா டிரம் க்ளைமாக்ஸ் போல் இதில் பேரல் க்ளைமாக்ஸ்.
பிரபு நடித்த படங்களில் மிக முக்கியமானது காலாபாணி. அசல் மலையாளம். இது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகியவற்றில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரத்தம் வழிய ஆவேசக் கண்களோடு நிற்கும் பிரபுவின் தோற்றம் ரொம்ப டெரராக இருக்கும். சுதந்திர போராட்ட காலத்தில் அதில் ஈடுபட்ட கோவர்தனை காக்கும் நண்பராக முகுந்தன் என்னும் பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தமான் சிறையில் கலவரத்தைத் தூண்டி, சிறைக் கைதிகள் தப்பிக்கும் போது என்கவுண்டர் செய்ய நினைக்கும் காவல் அதிகாரிகள் இவர் தப்பிக்க மறுக்கும் பொழுது தலைமை ஆணையரைச் சந்திக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்கிறார்கள். கோபமான கோவர்தன் அதற்குக் காரணமான டேவிட்டைக் கோபுரத்திலிருந்து தள்ளிவிட்டு மிர்சாகானைக் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறார். இது பிரபுவின் நடிப்பில் மிகச் சிறப்பான படம்
சின்னத்தம்பி 90 களின் இளசுகளைப் பெரிதும் கவர்ந்த படம். மூன்று பணக்காரச் சகோதரர்களின் குலக்கொழுந்தான நந்தினி எனும் குஷ்பூ எதிர்ப்புகளை மீறித் தன் விருப்பப்படி இவரை மணந்து கொள்வது தான் கதை. குஷ்புவுக்கும் பிரபுவுக்கும் சிறப்பான பெயரைப் பெற்று தந்த படம். தூளியிலே ஆட வந்த வானத்து வெண்ணிலவோ என்றெல்லாம் பாடும் இவர் மஞ்சக் கயிறு கட்டினால் அதுதான் தாலி என்று தெரியாமல் இருப்பது கதையில் ஒரு வினோத முடிச்சு. சினிமா எக்ஸ்பிரஸ் விருது ஃபிலிம் ஃபேர் விருது, தமிழக அரசு விருது பெற்ற படம் இது.
எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை போல பிரபு நடித்த ஒரு படம் உங்க வீட்டு பிள்ளை. சிவாஜியின் பிரபுவும் சேர்ந்து நடித்த படங்கள் சிம்மசொப்பனம் மற்றும் மிருதங்க சக்கரவர்த்தி ஆகியன சிம்ம சொப்பனத்தில் இருவரும் வக்கீல்கள், மிருதங்க சக்கரவர்த்தியில் இருவரும் மிருதங்க வாத்தியக்காரர்கள். இருவரும் சேர்ந்து நடித்த எல்லாப் படங்களிலும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள்.
சிம்மக் குரலோன் பதினாறடி பாய்ந்தால் சிங்கக்குட்டி பத்தடியாவது பாய்ந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சமீப காலங்களில் கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் தோன்றும் பிரபுவுக்கு இந்த டிசம்பரில் எழுபது வயதாகப் போகிறதுதாம் !. பிறந்தநாள் வாழ்த்துக்கள் & கல்யாண் ஹோ பிரபு ஜி !.
டிஸ்கி:- சரோஜாதேவி கட்டுரையைப் பாராட்டிய திருமதி கலைச்செல்வி இராமநாதன் அவர்களுக்கு நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)