ஒப்பிட முடியா வீராங்கனை ஒனகே ஓபவ்வா
கர்நாடக
மாநிலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டதால் கொண்டாடப்படும்
இராணிகளுடன் ஒனகே ஓபவ்வா என்ற வீரதீரமிக்க பெண்மணியும் கொண்டாடப்படுகிறார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மீதும் முகலாயர்கள், ஆங்கிலேயர்கள்
ஆகியோரின் ஆக்கிரமிப்பு தொடங்கியது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா இராஜ்ஜியத்தினைப் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் ஆண்டுவந்தவர் மதகரி நாயக்கர். வலிமையாகக் கட்டப்பட்ட சித்ரதுர்கா கோட்டை ஒரு குன்றின் மீது அமைந்திருந்தது. சித்ரதுர்கா கோட்டைக்கு எலுசுட்டினா கோட் என்ற பெயரும் உண்டு. அதாவது ஏழு வட்டங்களின் கோட்டை என்று பொருள்படும் . தற்போதைய பெங்களூருவில் இருந்து வடமேற்கே 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
உயரமான மலைகள் மற்றும் கற்பாறைகளால் சூழப்பட்ட ஒரு சிறிய
அழகிய நகரம் சித்ரதுர்கா. அதில் உள்ள எழில்மிகு கோட்டையை 1550 முதல் 1700 வரை சுமார்
250 ஆண்டுகள் நாயக்க வம்ச மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். சித்ரதுர்காவை வடக்கில் பேஷ்வா மாதவராவால் ஆளப்பட்ட மராட்டிய
இராச்சியமும், தெற்கில் ஹைதர் அலியால் ஆளப்பட்ட மைசூர் இராச்சியமும் சூழ்ந்து
நின்றது.
இக்கோட்டை
மைசூரை ஆண்ட ஹைதர் அலியின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. எனவே மதகரி
நாயக்கரைத் தோற்கடித்துச் சித்ரதுர்கா கோட்டையைத் தனதுடைமை ஆக்க எண்ணி 1779ல்
மைசூரிருந்து ஹைதர் அலியின் படைகள் இந்தக் கோட்டையை முற்றுகையிட்டன.
குன்றின் மீது
அமைந்திருந்ததால் இந்த கோட்டையினை அவர்களால் கைப்பற்றவே முடியவில்லை. சொல்லப்போனால்
கிபி 1754 முதல்
கிபி 1779 வரை இருபத்தி ஐந்து வருடங்கள் அவ்வப்போது இக்கோட்டையை முற்றுகையிட்டுக்
கொண்டிருந்தார் ஹைதர் அலி. ஒவ்வொரு முறையும் படுதோல்வி. எனவே எப்படியும்
அக்கோட்டையைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற அவசத்தில் இருந்தார் அவர்.
.
அப்போது அக்கோட்டையின்
காவலாளியாக இருந்தார் கஹலே முத்தா ஹனுமா. அவரின்
மனைவி ஒனகே ஓபவ்வா. சித்ரதுர்கா கோட்டைக்குள் ஒரு பாறைப்பிளவின் சிறு துளை
வழியாக மேலேறிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ஓபவ்வா. அதில் ஒரு நேரத்தில்
ஒருவர் மட்டுமே செல்ல முடியும். அந்தப் பிளவின் மூலம் எதிரி வரக்கூடிய அபாயத்தை
உணர்ந்துதான் மதகரி நாயகர் அதன் அருகே இருந்து பாதுகாக்கும்படி ஓபவ்வாவின் கணவரைக்
காவலாளியாக நியமித்திருந்தார். கணவனும் மனைவியும் நாயக்க மன்னருக்கு மிகவும்
விசுவாசமானவர்கள்.
சித்ரதுர்கா
கோட்டையைச் சுற்றி வந்த ஹைதர் அலியின் ஒற்றன் ஒருவன் அக்கோட்டைக்குள் செல்ல
ஏதேனும் வழி இருக்குமா என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஒருமுறை
ஓபவ்வா இந்தப் பாறைப்பிளவின் மூலம் மேலேறிச் செல்வதைக் கண்டு பிடித்து ஹைதர்
அலியிடம் தெரிவித்தான். அப்பிளவின் மூலம் மேலேறிச் சென்றால் கோட்டையை எளிதாக அடைய
முடியும் என்பதையும் வந்து சொல்ல எத்தனை முறை முற்றுகையிட்டும் கைப்பற்ற இயலாத
அக்கோட்டையைக் கைப்பற்றத் தனது படை வீரர்களை அனுப்பி வைத்தார் ஹைதர் அலி.
ஒரு மதிய நேரம்
நூறு வீரர்கள் தந்திரமாக ஒருவர் பின் ஒருவராக சத்தமில்லாமல் அப்பிளவின் வழியாக
மேலேறும் முயற்சியைத் தொடங்கினர்.
அச்சமயம்
கஹலே முத்தா ஹனுமா உணவருந்தச் சென்றிருந்தார். அப்போது ஓபவ்வா ஒரு பானை நீர்
எடுப்பதற்காக வெளியே வந்தார். ஒரு குளத்தில் நீர் முகர்ந்து கொண்டுபோய்
உணவருந்தும் கணவருக்குக் கொடுத்துவிட்டுக் கணவர் வரும்வரை அந்தப் பாறைப்பிளவைக்
காவல் காக்க வந்தார். அப்போது சரசரவென
ஒரு அரவம் கேட்டது. பார்த்தால் ஹைதர் அலியின் படைவீரன் ஒருவன் அந்தப் பாறைப்
பிளவின் வழியே தலையை நீட்டி மேலேற முயற்சித்துக் கொண்டிருந்தான். கோட்டைக்குள்
அந்நியர்களா. பார்த்த உடனே ஓபவ்வாவுக்கு வந்ததே கோபம்.
தான் ஒரு பெண்
என்றோ, தனியாக இருக்கிறோம் என்றோ அஞ்சவில்லை அவள். எப்படியாவது இந்த ஊடுருவலைத்
தடுக்க வேண்டும். எப்படிக் கண்டுபிடித்தார்கள் இப்பாறைப் பிளவை? பல்வேறு கேள்விகள்
அவள் உள்ளத்தில் ஓடின.
எப்போதும்
காவலுக்காகக் கையில் கொண்டு வரும் நெல் குத்தும் உலக்கையை எடுத்து எந்த
யோசனையுமில்லாமல் துணிச்சலை மனத்தில் கூட்டிப் போட்டாளே ஒரே போடு. பேச்சு
மூச்சற்று விழுந்தான் பகைவன். ஒருவன் மட்டும்தான் என நினைத்தால் அடுத்து ஒருவன் தலை
நீட்டினான். பாறைத் துளைக்கு அருகே மறைந்து நின்றுகொண்டாள் ஓபவ்வா. வெளிவந்த
அவனையும் ஒரே போடாய்ப் போட்டுப் பள்ளத்தில் இழுத்துத் தள்ளினாள். பாறைப்பிளவில்
மூன்றாமவன் தலை தெரிந்தது.. கீழே பலர் மெல்லக் கிசுகிசுக்கும் சத்தமும் கேட்டது.
உடனே அங்கே ஏராளமான எதிரிப் படை வீரர்கள் மறைந்து இருக்கிறார்கள் என்பதைப்
புரிந்துகொண்டாள் சமயோசித புத்தி கொண்ட ஓபவ்வா.
இப்படி
மேலேறி வந்த ஒவ்வொரு எதிரிப்படை வீரனையும் ஓனக் என்னும் உலக்கையால் தலையில்
அடித்துக் கொன்று சத்தமில்லாமல் இழுத்துச் சென்று ஒரு பள்ளத்தில் தள்ளினாள். இது
மேலேறி வரும் அடுத்த வீரனுக்குத் தெரியாது. அடுத்த வீரனும் மேலேறி வந்து அவள்
உலக்கைக்குப் பலியாகி விடுவான். இப்படியே ஒன்றல்ல, இரண்டல்ல. அடுத்தடுத்து நூறு
வீரர்களைக் கொன்றாள் ஓபவ்வா.
கஹலே
முத்தா ஹனுமா உணவருந்திவிட்டுத் திரும்பினார். வந்து பார்த்தால் அவர் மனைவி ஓபவ்வா கையில்
இரத்தம் தோய்ந்த உலக்கையுடன் நின்றிருந்தார். பக்கத்திலோ இறந்த வீரர்கள்
குவியலாகக் கிடந்தார்கள். அவளைச் சுற்றிலும் இரத்த வெள்ளம். இதைக் கண்டு திகைத்த
அவர் உடனே அபாயச் சங்கை ஊதி போர் எச்சரிக்கை ஒலி எழுப்பி அனைவரையும்
உஷார்ப்படுத்தினார்.
உடனே
மதகரி நாயக்கரின் படைவீரர்கள் அனைவரும் அந்தப் பாறைப்பிளவின் அருகே கூடி
மிச்சமிருந்த ஹைதர் அலியின் படை வீரர்களையும் கொன்றார்கள். ஹைதர் அலியின் படை
முற்றுகை இவ்வாறாக அச்சமயம் தடுக்கப்பட்டுத் தோல்வியில் முடிந்தது.
ஒனகே என்றால்
உலக்கை. வெறும் உலக்கை மட்டுமே கொண்டு நூறு எதிரிப்படை வீரர்களை அழித்தவர்
என்பதால் இவர் ஒனகே ஓபவ்வா என்று அழைக்கப்படுகிறார். அன்றே
ஒனகா ஓபவ்வாவும் இறந்ததாகக் கூறப்படுகிறது. எதிரி வீரர்களின் தாக்குதலில்
மறைந்தாரா அல்லது அதிர்ச்சியில் இறந்தாரா என்பது தெளிவாக இல்லை. ஓபவ்வாவின் இந்த
வீர தீரச் செயலால் ஹைதர் அலி கோட்டைக்குள் நுழைவது அப்போதைக்குத் தாமதமானது.
ஆனாலும் அடுத்த
போரில் நாயக்கர் வம்சத்தின் கடைசி மன்னரான மதகரி நாயக்கரின் ஆட்சி ஹைதர் அலியின்
கைகளில் வீழ்ந்தது. மைசூர் ராஜ்ஜியம் சித்ரதுர்க்கா கோட்டையைக் கைப்பற்றியது.
நாயக்கர் ஆட்சி முடிந்து ஹைதர் அலியின் ஆட்சியும் தொடங்கியது.
எந்த வித ஆயுதமும் இல்லாமல் எந்தப் போர்ப்
பயிற்சியும் இல்லாமல் கையில் இருந்த உலக்கை ஒன்றைக் கொண்டே ஒரு நூறு எதிரிகளைக்
கூடத் தடுக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டியவள் ஓபவ்வா. அவள் இருந்தவரை
கோட்டைக்குள் நுழைய யாரையும் அனுமதிக்கவில்லை. கணவருக்குத் தகவல் கொடுக்க முடியாத
அந்த இக்கட்டான நேரத்திலும் சமயோசிதமாகச் செயல்பட்ட அவளது தீரம் போற்றத்தக்கது.
சாதரணப் பெண்ணும் கூட சரித்திர சாதனை படைக்க
முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டு ஒனகே ஓபவ்வா. அவள் கணவரும் அவளும் காவலாய்
இருந்து நாட்டைக் காத்த பாறைப்பிளவு ’ஓபவ்வண்ண கிண்டி’ என்று அழைக்கப்படுகிறது.
தனது வீரத்தால் அனைத்து மக்களின் இதயங்களிலும் இடம்பிடித்தவள் ஓபவ்வா.
கர்நாடகாவின் பெருமை, கர்நாடகாவின் வீரப்பெண்மணி, கன்னடப் பெருமையின் உருவகம்
என்று எல்லாம் போற்றப்படுகின்றாள் ஒனகே ஓபவ்வா.
ஒனகே ஓபவ்வா ஹோலயாஸ் (சலவாதி) சமூகத்தில்
இருந்து வந்தவர். கர்நாடக நாட்டுப்புறக் கதைகளில் இவரது எழுச்சி மிக்க
வீரதீரக்கதையும் ஒரு பகுதியாகும். அபாரத் துணிச்சல் கொண்ட பெண்மணி இவள். சித்ரதுர்கா கோட்டையின் பெண்
போராளி. வெறும் உலக்கை கொண்டு தனது கோட்டையைப் பாதுகாக்க முடியும் என்பதையும் வலிமையாக
நிரூபித்துள்ளார்.
ஒனகே
ஓபவ்வாவினால் ஈர்க்கப்பட்டு 2018 இல் பெண்களைப் பாதுகாக்கவும் கல்விஅறிவு
அளிக்கவும் ‘ஓபவ்வே படே’ என்ற குழுவைத் தொடங்கியது சித்ரதுர்கா காவல்துறை. இது
அடிப்படைத் தற்காப்பையும் பெண்களுக்குக் கற்பித்து வருகிறது. ஒனகே ஓபவ்வாவின் பிறந்தநாளான நவம்பர் 11 இல் அவரைப் பாராட்டிய பிரதமர்
நரேந்திர மோடி அவர்கள் அவரை “நாரி சக்தி” – “பெண் சக்தி” எனக் குறிப்பிட்டு
உள்ளார். தனிப்பெரும் பெண்ணாகத் தன் நாட்டைக் காத்த ஒனகே ஓபவ்வாவின் வீரம் ஒப்பிட
முடியாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)