எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஐநா சபையும் மலர்க் கடிகாரமும் உடைந்த நாற்காலியும்.

அதென்னவோ தெரியல இந்த ஸ்டார் டூர்ஸ் பாதி யூரோப்பியன் நாடுகளை அர்த்தராத்திரியிலேயே சுத்திக் காட்டுறாங்க. பாரிஸ் பை நைட், ரோம் பை நைட் இதெல்லாம் இரவுல சுத்திப் பார்க்கத் தனிக் காசு. ஆனா ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் ஜெனிவாவுக்கு நாங்க இரவுலதான் போய்ச் சேர்ந்தோம். பகலில் டூரிஸ்ட் பஸ் எல்லாம் அந்தப் பக்கம் உள்ள ரோட்டுல கூடப் போக முடியாது என நினைக்கிறேன்.


ஸ்விட்ஜர்லாந்தில் ஜூரிச்சுக்கு அடுத்தபடியாக அதிக பிரபல்யமான நகரம் இது. ரோலக்ஸ் கடிகாரங்கள் ஸ்விஸ் நாட்டின் சிறந்த தயாரிப்புகள். உலக அளவில் இவற்றுக்கு மார்க்கெட் இருக்கிறது.  நாங்கள் இறங்கிய இடத்திலேயே ரோலக்ஸ் கடிகாரத்துக்கான கட்டிடம் ஒன்றைப் பார்த்தோம்.
இங்கே ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலகளாவிய பல சர்வதேச அமைப்புகளின் தலைமையகம் இயங்குது. ”ஜெனிவா அமைதி ஒப்பந்தம்” என்ற சொல்லாடலை அவ்வப்போது செய்திகளில் கேள்விப்பட்டு இருப்பீங்க. மக்கள் இங்கே நிம்மதியா வாழலாம் என்பதால் “ அமைதித் தலைநகரம்”னு அழைக்கப்படுது, கொஞ்சம் காஸ்ட் ஆஃப் லிவிங் ஜாஸ்தி என்றாலும் கூட.

ஜார்டின் ஆங்கிலாய்ஸ் பூங்காவின் வெளிப்புறம் அமைந்துள்ளது இந்த ராட்சச ஜெயண்ட் வீல். இத்தனை வெளிச்சம் இருந்தும் அன்றைக்கு ஏனோ இது ஓடவில்லை.

 ஸ்விஸ் நாட்டுக் கொடியில் இருக்கும் க்ராஸ் சின்னம்தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சின்னமாகவும் பயன்படுது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பன்னாட்டுப் போர்களாலும் உள்நாட்டு ஆயுதப் போர்களாலும் பாதிக்கப்பட்டவர்கள், போரினால் விபத்தினால் காயமடைந்தவர்கள், கைதிகள், அகதிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு மனிதாபிமான அடிப்படையில் சேவைபுரிந்து வருகிறது. ஐ எஃப் ஆர் சி  (IFRC ) மூன்றுமுறை அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி இருக்கு.

இந்த சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு நிறுவப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமா இந்த ஃப்ளோரல் க்ளாக் எனப்படும் மலர்க் கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.



L'HORLOGE FLEURIE எனப்படும் எல்’ஹார்லோஜ் ஃப்ளூரி - மலர்க் கடிகாரம் ஜார்டின் ஆங்கிலாய்ஸ் என்ற முனிசிபாலிட்டி பூங்காவின் மேற்குப் பகுதியில் வெளிப்புறமாக அமைந்து  உள்ளது.


இந்த கடிகாரம் 6,500 பூச்செடிகள் மற்றும் புதர்கள் வைத்து அமைக்கப்பட்டுள்ளது. சீஸன் மாறுவதற்கு ஏற்றாற்போல பூக்களையும் செடிகளையும் மாற்றுவார்களாம்.

1955 இல் முதல் முதல் இயற்கைக்கு அர்ப்பணிக்க அமைக்கப்பட்ட மலர்க் கடிகாரம் இதுதான். இதைப் பார்த்துத்தான் பெங்களூரு லால்பாக் போன்ற மலர்ப் பூங்காக்களில் மலர்க் கடிகாரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இக்கடிகாரத்தில் நிமிஷமுள் 2.5 மீட்டர் நீளமுள்ளது !


இரவில் ஒளிவிட்டு மணமோடு சுற்றிய இக்கடிகாரத்தின் முன்பு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.


இந்த ஜார்டின் ஆங்கிலாய்ஸ் என்ற பூங்காவின் வெளிப்புறத்தில் ஒரு படகுப் போக்குவரத்து இருக்கிறது. உல்லாசப் பயணியர் கப்பலும் , உள்ளூர்ப் போக்குவரத்துக்கு மோட்டார் படகுகளும் இதில் ஓடுகின்றன.


சவோய் என்றொரு உல்லாசப்படகு.




படகுத் துறைமுகத்தில் படகுகள் நிறுத்துமிடம்.


ஏரிக்குள் ஃபவுண்டன்களும் அழகூட்டுகின்றன.



லூ பீப்பிள் ஜெனிவோஸ் என்பது இச்சிலையின் பெயர். அதே மலர்க் கடிகாரப் பூங்காவை ஒட்டியே இதுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மோண்ட் - ப்ளாங்க் பாலத்தின் எஸ்ப்ளேனேடில் இந்த இரண்டு இளம்பெண்கள் ஒருவருக்கொருவர் இடுப்பைச் சுற்றிப் பிடித்தபடி இன்னொரு கையில் இரட்டை முனைகள் கொண்ட வாளும் கேடயமும் சுமந்து நிற்கிறார்கள்.  ஏரியைப் பார்த்தபடி, அதற்கு மேலும் எல்லைகளைக் கண்காணித்தபடி.  நிற்கிறார்கள்.

1854 ஆண்டு முதல் இந்த ஜார்டின் ஆங்கிலாய்ஸ் ( ஆங்கிலப் பூங்கா)  பூங்காவில் நிற்கும் நினைவுச் சின்னம் இது. ஆமாம் எதற்கு இந்த நினைவுச் சின்னமாம்?  ஒரு இளம்பெண் ஜெனிவா குடியரசு ( தலைக்கவசம் அணிந்தவள் ), இன்னொரு இளம்பெண் ஹெல்வெட்டியா, என்ற சுவிட்ஜர்லாந்துப் பகுதி.

இந்த இரு பகுதிகளும் செப்டம்பர் 12, 1814 இல் இருந்து ஜெனிவா கூட்டமைப்போடு இணைந்திருப்பதை அடையாளப்படுத்த இந்த நட்புறவுச் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. தேசத்தின் பகுதிகளை இளம்பெண்களாகச் சித்தரித்தல் இத்தாலியின் வெனிஸில் விக்டர் இம்மானுவேல் சிலையிலேயே பார்த்திருக்கிறோம்.  மிக அழகான எழிலான கம்பீரமான சிலை இது. அர்த்தராத்திரியிலும் என்னைக் கவர்ந்து புகைப்படம் எடுக்க வைத்தது.


ஐக்கிய நாடுகள் சபைக்குப் போகுமுன் இந்த உடைந்த நாற்காலியைப் பார்த்துவிட்டுப் போவோம். இது மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் பிரதிநிதி. அப்படி என்ன விஷயத்தை இது சொல்கிறது ?

மூன்று கால்கள் பூமியில் இருக்க நான்காவது கால் முறிந்த நிலையில் ஐநா சபையின் எதிரே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்த நாற்காலிச் சிலை.

ஐந்தரை டன் எடையுள்ள இந்த உடைந்த நாற்காலி 12 மீட்டர் உயரம் கொண்டது. அணுகுண்டு. அணு உலை. போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வைச் சித்தரிக்க இது ஹாண்டிகாப் இண்டர்நேஷனல் என்ற மனித நேய அமைப்பால்  வைக்கப்பட்டுள்ளது.


இதுதான் ஐக்கிய நாடுகள் சபை. அர்த்தராத்திரியில் நாமே கோஸ்ட் போலத் தோன்றும் நேரத்தில் ஐக்கிய நாடுகளின் சபை முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பின்னே உலக அமைதி ஒப்பந்தம் எல்லாம் இங்கேதானே கையெழுத்தாகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக அமைதி பரஸ்பர பாதுகாப்புக் கருதி இது நிறுவப்பட்டது. இந்த ஐக்கிய நாடுகள் சபை இருக்கும் இடம் சர்வதேச எல்லைக்கு உட்பட்டது. 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த இடத்தை ஜான் டி ரோக் என்பவர் ஐநா சபை அமைக்க இலவசமாகக் கொடுத்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையில் எம் எஸ் அம்மா பாடி இருக்காங்க என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம்.

உலக அமைதியைக் குறிக்கும் வண்ணம் இளம் நீல நிறப் பின்புறத்தில் வெண்மை நிற ஐநா சின்னத்தில் வடதுருவத்திலிருந்து உயர்ந்து நிற்கும் உலக வரைபடத்தை இரு ஆலிவ் இலைகள் சூழ்ந்திருப்பது போல் இதன் கொடி அமைக்கப்பட்டிருக்கு. எங்கள் பின்னே இருக்கும் போர்டில் பாருங்க.


அக்டோபர் 24  ஐநா தினம் கொண்டாடுகிறோம். இதில் 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்தியாவும் 30.10.1945 இல் இருந்து இதில் உறுப்பினராக சேர்ந்திருக்கு.

ஐநா சபை எதுக்கு அமைக்கப்பட்டது என்றால் சுய ஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைக் காக்க அமைக்கப்பட்டது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை இச்சபை கண்காணித்து வருது. ஆறு உள் அமைப்புகளை கொண்ட இச்சபை வருடத்துக்கு இருமுறை கூடுகிறது.


ஜெனிவாவில் ஐநா சபையின் எதிரில் இருக்கும் ப்ரோக்கன் சேர்அதாவது மூன்று கால் உள்ள நாற்காலிதான். பால் வெர்முலன் என்ற சர்வதேச ஹேண்டிகாப் அமைப்பைச் சேர்ந்தவர் இதை 18 ஆகஸ்ட் 1997இல் ஒட்டோவா ஒப்பந்தத்தை எதிர்த்துத் தற்காலிகமா ஒரு கால் உடைந்த இதை நிறுவி இருக்காங்க. நாற்பது நாடுகளின் ஒப்புதலோடு அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி விட அதை எதிர்த்து 2007 இல் இங்குள்ள பொதுமக்கள் இதை இங்கே நிலையா நிறுவிட்டாங்க. உடைந்த காலை முறிந்த காலா மாத்திட்டாங்க. 


குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாதத்தை எதிர்க்கும் சின்னமாகவும் இதை ஐநா சபைக்கு வருகை தரும்அரசியல் பிரபலங்களுக்கு நினைவுறுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது


இதை வடிவமைத்தவர் ஸ்விஸ் கலைஞர் டேனியல் பெர்ஸட், இவர் வடிவமைத்த கற்பனைக்கு உருவம் கொடுத்தவர் லூயி ஜெனிவே என்ற தச்சுக் கலைஞர்.

ஐநா சபையும் உடைந்த நாற்காலியும் சொல்லும் கதை என்ன. அமைதியும் சமாதானமும் மக்கள் மனங்களில் இருக்கிறது. அதை ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களும் உணரவேண்டும் என்பதைத்தானே :) 

2 கருத்துகள்:

  1. படங்களும் விவரங்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...