எனது பதிமூன்று நூல்கள்

வெள்ளி, 31 ஜூலை, 2020

நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒரு பார்வை.

நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – ஒரு பார்வை.


பூமிச்செல்வம் அவர்கள் நகுலனின் 16 கதைகளைத் தேர்ந்தெடுத்து நேர்த்தியாக அளித்துள்ளார். நகுலனின் கதைகளில் நாம் ஆத்ம தரிசனத்தை அடையலாம். இயற்கையின் மீதான காதல், சுசீலா என்ற அரூப ரூபத்தின் மேலுள்ள ப்ரேமை, தனிமை, உள்நிறைவுடன் விலகி இருத்தல், குதியாட்டம்போடும் மனது, மன விசாரங்கள், பிரமை அல்லது சித்தப் ப்ரமை எனக் குறிக்கப்படும் விஷயம் குறித்தான விவாதம், வாழ்க்கையை அதன் போக்கில் கடந்து செல்லும் ஞானம், வெறுமே அமர்ந்து மரத்தைக் காணும் காற்றை உணரும் மனம் எனக் கலவையாக இருக்கிறார் நகுலன்.

தெருவின் கதை ஆத்மவிஞ்ஞாபனம். சவப்பெட்டி தயாரிப்பவன் அதற்கும் சலுகைகள் கொடுப்பதும் ஏமாந்துவிடாமல் இருக்கச் சொல்வதுமான இவரது எள்ளல் பிடித்திருந்தது. சிதம்பர ரகசியத்தை யாரும் தெரிந்து கொள்வதில்லை. ஏனெனில் திரை விலகுவதில்லை என முத்தாய்ப்பாகக் கூறுகிறார். உண்மைதான் இல்லாவிட்டால் கோடீஸ்வரனோ, தெருவில் நிற்பவனோ இவ்வளவு பாடுகளும் ஏது ?

அழைப்பிதழ் பாதைகள் பிரிந்தவர்களின் எண்ணப் போக்கை வரைகின்றன. உள்நிறைவுடன் விடைபெறும் பந்தம் ஏதும் உண்டா. என் பெயர் வைத்தியநாதன் பதின்பருவத்தில் மனச்சிக்கலுக்கு ஆளான ஒரு நபரை அடையாளம் காட்டியது.

ஒரு ராத்தல் இறைச்சி முன்பே படித்த கதைதான். இறைச்சிக்காக காலை நக்கும் நாயை சகிக்க முடியவில்லை என்று இவர் அடையாளமிடுவது அடிவருடும் மனிதர்களையே.

சிப்பி கொஞ்சம் ரொமாண்டிக் கதை. தம்பி குழந்தைகளுடன் குழந்தைகளாகப் பழகும் மனது. அவர்களைப் பேச்சில் ஜெயிக்காலமலே வென்றவிதமும் முடிவில் தந்தை இவரையும் குழந்தையாக எண்ணி நடத்துவதும் வெகு அழகாக இருந்தது. பக்குவப்பட்ட குழந்தை மனது.

மனக்கோளாறு உடல் கோளாறையும் உருவாக்கும் எனச் சொன்ன கதை வெய்யில். (ஒரு கதையில் தாய், இன்னொரு கதையில்) தந்தைக்கு (இன்னொரு கதையில் மகன் ஆகிய அனைவருக்குமே) மனநோய் பீடித்திருப்பதாக இவர் வரைந்து காட்டுவதும் சுசீலா என்ற உருவத்தின் மேல் உள்ள ப்ரேமையும் இக்கதையில் வெளிப்படுகிறது. காலை அறை என்ற கதையில் தந்தைக்குத் தன் அறையில் யாரோ இருப்பது போல் பிரமை தட்டுகிறது.

ரொம்பவே அசைத்த கதைகள் நிலக்கடலையும் பீடித்துண்டுகளும், பிரிவும் எதுவும் மாறாது திரும்பத் திரும்ப இதே சுழற்சிதான் என்று ஒருவிதமாகப் பயமுறுத்திய கதை அது. பிரிந்தாலும் தூரத்தில் வாழ்ந்தாலும் பின்னர் சந்திக்கவே முடியாது போனாலும்  எண்ணங்களால் நாம் அவர்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்ன கதை பிரிவு. சாயைகளும் அப்படித்தான். இருவேறு பொருட்களுக்கிடையேயான உறவு அப்பாற்பட்டதா அல்லது பார்ப்பவனின் கற்பனையா என்ற கேள்வி இன்னும் சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. கயிற்றரவு எதற்குச் செய்கிறோம் என்பது தெரியாமல் பிடிவாதத்திற்கா, பொழுதுபோக்கிற்கா, வேறு என்ன செய்வதெனத் தெரியாததாலா. அல்லது அதற்கு ஆட்பட்டுவிட்டதாலா என நாம் செய்யும் அனிச்சைச் செயல்களைப் படம் பிடித்தது.

குழந்தைகள் ரொம்பப் பிடித்த கதை. மேலும் எட்டு வயதுப் பெண் குழந்தையும் மலையாளக் கவியும் கூட. ஒரு குழந்தை மாபெரும் கவியைப் போலக் கவி இயற்றி விடுகிறது. இதுவல்ல இங்கே விஷயம் அதன் மன வருத்தத்தையும் கவியாக இயற்றிவிடுவதுதான் வலி மிக்க செய்தி. அந்த வருத்தத்தில் கரைந்து நாமும் இல்லாமல் போவது என்பது எப்போதாவது நடப்பதுதானே.

காக்கையைப் பற்றிய கதை படிமக் கவிதை. காக்கை மட்டுமல்லாமல் பருந்து, கருடன், புறா, நாரை, வாத்து, மைனா, சிட்டுக்குருவி, மயில் என மனம் தாவி அது சுசீலாவையும் தொட்டுச் செல்லும் அற்புதம். அதன் பின் அது மரங்கொத்தி, அக்காப் பறவை, மீன் கொத்தி, எனப் போய் பருந்து போலப் பறந்த தருணங்களையும் அக்காக் குருவிபோல அழுத தருணங்களையும் நம்முன் பரப்பி வைக்கிறது. நாமும் அக்காக் குருவி ஆகிறோம். தவம் செய்யச் சென்றவளை விட்டுவிட்டுப் பின் உள் வெளியில் ஒளிவீசக் கண்டோம்.  

சுசீலாவுக்கு எழுதிய கடிதங்கள் பிரேமையின் பரிசு. உறவை நோக்கிச் செல்லும்போதே பிரிவைநோக்கியும் செல்லும் மனது இவருக்கு. எப்போதும் இருமையிலேயே பயணிக்கிறார். அதனால் எல்லாவற்றையும் மறுதலித்துத் தனித்திருக்கும் மனம் வாய்க்கிறது.

அசுவத்தம் என்னும் மரம் மனதின் சாவைப் பற்றிப் பேசியது. இவரது கதை மாந்தர்கள் அநேகம் பேருக்கு இரட்டைச் சூழலில் வாழும் மனம். நிகழ்காலம் மனதின் காலம் என்று ஒன்று. மனம் பேதலித்துப் பேசுபவர்கள் இக்கதைகளில் அநேகம் தென்படுகிறார்கள். அவர்கள் சாதாரண மனிதர்கள்தாம். ஆனால் ஞானியின் மனநிலை கொண்டவர்கள். அசாதாரண பித்துக் கொண்டவர்கள். சாதாரண மனிதர்களுக்குத் தோன்றுவதுதான் இந்த  நிழல்வெளி மயக்கங்கள் , யாரோ தன்னைப் பார்ப்பது, யாரோ பின் தொடர்வது யாரோ தன்னைப் பற்றிப் பேசுவது இன்னபிற. அது அதீதமாய்ப் போகும் போதில் எப்படி மனநோயாகிறது என்பதை இக்கதைகளில் உணரலாம்.

எழுத்துக்களில் மலையாளச் சூழல்,கவிகள் இடம்பெறுவது போல மேற்கத்திய சிந்தனைகளும் புதுமைகளும் எளிமையும் கூட இடம் பெறுகிறது. மனிதர்களின் அக புற உணர்வுகளை வடித்தவை. எல்லாருக்குள்ளும் விழும் நிழலையும் பயத்தையும்  எழுத்தாக்கிய கதைகள் இவை. நல்ல கதைகளைத் தேர்வு செய்திருக்கிறார் பூமிச் செல்வம்.

நூல் :- நகுலன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.
தேர்வும் தொகுப்பும் :- ஆ. பூமிச்செல்வம்
பதிப்பகம் :- டிஸ்கவரி
விலை :- ரூ. 100.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...