எனது பதிமூன்று நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2020

மாயக்குதிரை - ஒரு பார்வை.

மாயக்குதிரை - ஒரு பார்வை. 


தமிழ்நதியின் கதைகள் மனதோடு பேசும் ரகம். அவருடைய கதாநாயகிகள் வித்யாசமானவர்கள். யதார்த்தமானவர்கள். அப்பட்டமாய்த் தங்கள் நிறைகுறைகளைப் போட்டுடைப்பவர்கள். சிலர் வெகு கம்பீரமானவர்கள். அதனாலேயே அவர்கள் வெகுஜனத்தைக் கவர்கிறார்கள். 

தாழம்பூ மிகவும் ரசித்த கதை எனினும் கமலஹாசனின் திறமைகள் போல் அதீதமாகப் போய்க்கொண்டே இருக்கிறது அக்கதை. ஹே ராம், தசாவதாரம் போல் மிக நீண்ட ஆனால் சுவாரசியமான கதை. எதையும் விலக்கவோ எடிட் செய்யவோ முடியாது. ரொம்பப் பிடித்தது. குறுந்தொகை சொல்லும் கதாநாயகி. அவள் மனங்கவர்ந்த ராஜகுமாரன். மதுவா,இவளா, தாழம்பூவா என்று இனம் பிரிக்க முடியாத கதாநாயகி. அந்தக் காதல், அந்த ஏக்கம், அந்த குருதி கிழிந்த இதயம் கொண்ட இரவு. கொஞ்சம் நடுக்கம். எனக்கும் இதழ்களில் அல்ல (தாழம்பூவையோ இவளையோ )நெற்றியில் உச்சிமோர்ந்து முத்தம் கொடுக்கத் தோன்றியது இக்கதையின் வலிமை. 

பாம்புகள் அடிக்கடி வருகின்றன. அச்சத்தின், பயத்தின் குறியீடாக. 

நித்திலாவின் புத்தகங்கள் புத்தகங்களைக் காதலிப்போர் அனைவரும் ஒப்புக் கொள்ளும் கதை. முடிவுதான் என்னைக் கொஞ்சம் அவளிடமிருந்து விலக்கியது. அவ்வளவு புத்தகப் பித்தா ?!

மாயக்குதிரை சூதாடியதில்லை என்பதாலோ என்னவோ ( ஷேர் பிரைஸ் இறங்கி ஏறினாலே பிபி ஏறும் ரகம் நான்.- காசை அழிக்க ஒருபோதும் சம்மதியேன். அதை யாருக்காவது மனமுவந்தாவது கொடுப்பேனே தவிர :) சூதாடியவளைப் பார்த்ததும் கோபம் கோபமாக வந்தது. கதை முழுக்க இவர் அவளின் சூதாட்ட வேகத்தை, வெறியை வர்ணித்து இருக்கும் விதம் அப்படி :) 

எனக்கு மிகப் பிடித்த கதைகள் காத்திருப்பு,  மலைகள் இடம் பெயர்ந்து செல்வதில்லை, கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி, 

தோற்றப்பிழையும் மனக்கோலமும் என்னவோ மனதுக்குப் பிடித்தமாயில்லை. ஏனெனில் ஆயியை நான் அம்மையாக கருணை வடிவாக மனக்கண்ணில் கண்டதாலோ என்னவோ. எனக்கு நகங்களில் ரத்தம் வழிய நின்ற ஆயி கொஞ்சம் அதிர்ச்சியூட்டினாள். மனக்கோலத்தில் ராசாத்தி ஏன் அப்படிச் செய்யவேண்டும் என ஆயாசமும் வெறுப்பும் வந்தது நிஜம். மதுவும் சாந்தனும் மனம் கவர்ந்தார்கள். அப்படித்தானே வாழப் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். 

மெத்தப் பெரிய உபகாரம் வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளைக் காணச் செல்லும் தாய் ஒருவளின் நிலையைத் தெளிவுபடுத்தியது. ஆசிரியை சொன்னதுபோல் அவருக்கு வீல் சேர் - சக்கர நாற்காலிக்கு ஏற்பாடு செய்திருந்தால் இந்த அவதி எல்லாம் ஏற்பட்டிருக்காது. ஆனால் என் தாய் என்றால் நான் அனைத்தையும் சொல்லியே அழைத்துவருவேன் என்பதால் முத்தாய்ப்பாய் அவர் கூறிய வார்த்தையில் உடன்பாடில்லை. 

இதேபோல்தான் நித்திலாவின் புத்தகங்களிலும்.அம்மா இறந்ததை விடுதலையாக நினைக்கும் நித்திலாவும் என்னை அச்சமூட்டினாள். ஆயி, நித்திலா, ராசாத்தி, இக்கதையில் வரும் பெண்கள் எல்லாருமே எனக்கு வித்யாசமாக நடந்து அச்சத்தையும் திகைப்பையும் கொடுத்தார்கள். 

என்னவர் ( கொரோனா லாக்டவுன் டைம் என்பதால் ) நான் வாசித்த புத்தகங்களை எடுத்துப் பார்த்தார். இத்தொகுப்பில் சில கதைகளை அங்கொன்றும் இங்கொன்றும் படித்து வியந்தார். அதில் நித்திலாவின் புத்தகங்கள், மாயக்குதிரை, மெத்தப் பெரிய உபகாரம் இவை மூன்றையும் வெகுவான சிலாகித்தார். ( என் புக்கையோ என் கதையையோ என்றைக்காவது படிச்சிருப்பீங்களா என்று மூன்றாவது கண் திறக்க நினைத்தேன். சரி பெருந்தன்மையோடு விட்டுக் கொடுப்போம் என விட்டுவிட்டேன். தமிழ்நதியின் மொழி நடையில் இலக்கிய வளத்தில் நானும் மயங்கி விட்டேன் என்றுதான் கூற வேண்டும் ). இக்கதைகள் பற்றி ( டிவி சீரியலைப் பெரியவர்கள் விவாதிப்பது போல ) நாங்களிருவரும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் உண்மைக் கதைகள் போல இப்படி அப்படி என அனலைஸ் செய்து  பேசிக்கொண்டிருந்தோம். 

மெத்தப் பெரிய உபகாரத்தில் ”அந்த அம்மா முதல் ஃப்ளைட்டில் எப்படி வந்தாங்களாம். அங்கே யார் ஹெல்ப் பண்ணாங்களாம். 

நித்திலா இப்படி ஒரு சுயநலக்காரியா 

என்ன இருந்தாலும் ஆயியின் கை விரல்களில் ரத்த மருதாணியா.. அவள் அன்பால் செய்யப்பட்டவளாச்சே

பெண்கள் இப்பிடி சூதாடியா இருக்கக்கூடாது. அதுக்கு அவன் வேற பணத்தைத் தரானே.. “ இதெல்லாம் நான் அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இல்லை காது கேட்காததுபோல் இருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் :) 

மலைகள் இடம் பெயர்ந்து செல்வதில்லையில் பாலத்துக்கு அடியில் இரவைக் கழிப்பது, காடுகளுக்குச் செல்வதைப் படித்தபோது இப்படியும் உண்டுமா எனப் பயமாய் இருந்தது. பாலையும் வீரையுமாய் ஆன நிலத்தைப் பார்த்துக் கதையின் நாயகி வருந்துவது போல காரைக்குடிப் பக்கம் பல வீடுகளைப் பார்த்து நான் பரிதவித்திருக்கிறேன். இழத்தல் எல்லாருக்கும் ஒன்றுதானே. அது எத்தகைய புலம்பெயர்தலாக இருந்தாலும். 

கறுப்பன் என்றொரு பூனைக்குட்டியில் நான் கருப்பனின் ரசிகை ஆகிவிட்டேன். பூனையோ வளர்ப்புப் பிராணியோ பிடிக்காது எனக்கு. அருணாசலத்தாரே கூடுவிட்டுக் கூடு பாய்ந்து மனோகரிக்காகக் கறுப்பனாக வந்துவிட்டாரோ என்று மனம் குதூகலித்தது. அதேபோல் கடனில் சத்தியன் பொய் பேசும் தனபாலனை அறைந்த போதும். 

அதேபோல் கோகுலன் அற்புதனாகத் திரும்ப அந்தத் தாய்க்குக் கிடைத்தது வெகு அற்புதம். தமிழ்நதி  ஒரு கதையைக் கொண்டு செல்லும் விதம் அவரின் மொழி அழகு ( நேரேஷன் ) எல்லாமே ரொம்ப ரொம்பப் பிடித்தது. முதல் வரியிலிருந்தே கதைக்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்று விடுகிறார். கதாபாத்திரங்களை நமக்குப் பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பதெல்லாம் அப்புறம். 

தமிழ்நதியின் மொழி என்னும் மாயக்குதிரையில் சவாரி செய்யவே இக்கதைத் தொகுப்பைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கும் சில கதைகளோடு உடன்பாடு இருக்கலாம் சில இல்லாமல் போகலாம். ஆனால் மிக நிச்சயமாக ஒரு ராஜபுரவியில் உலாப்போய் வந்த இதம் கிட்டும். 

நூல் :- மாயக்குதிரை
ஆசிரியர் :- தமிழ்நதி
பதிப்பகம் :- டிஸ்கவரி
விலை:- ரூ. 150/-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...