எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 ஜூலை, 2020

அம்மா இல்லாத திண்ணை. - நூல் முகம்.

தாயுமானவன்.
தன் முகத்தில் தாயின் முகமும் மகள் முகத்தில் தன் முகமும் காண விழையும் தாயுமானவன் இக்கவிதைகளின் நாயகன். ஆண்டுகள் பலவானால் என்ன கவிஞன் என்பவன் உணர்வுபூர்வமாய் உள்மனதிலேயே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். காகிதத்திலோ கணினியிலோ இறக்கி வைக்காவிடினும் காலம் கனியும்போது அவன் தன் மன இச்சைகளையும் இற்றைகளையும் கவியாக்கிக் கனியத்தருவான் என்பதற்கு இத்தொகுப்பு ஒரு சான்று.
எண்பதுகளில் உள்ள இளமனதைப் புதுப்பித்ததோடு இன்றைய இளசுகளின் உள்ளக் கிடக்கையையும் வரைந்து காட்டுகின்றன கவிதைகள். விவசாயம், பாழாகும் இயற்கை, உணவு, உறவு, ஊர் நிலைமை, அரசு யந்திரத்தின் மெத்தனம், அறியாமையை எள்ளல், காதல், தந்தைமை, தாய்மை என ஒன்றையும் விட்டுவைக்காமல் ஹைக்கூ, க்ளெரிஹ்யூ, புதுக்கவிதைகள் எனப் படைத்திருக்கிறார் கவிஞர்.
பூக்களை உதிர்க்கும் காற்றைப் படிக்காத அறிவிலியாக்குதல் கவிஞருக்கே சாத்தியம். கிளி ஜோதிடம் பற்றி நல்ல எள்ளல். ”ஒற்றைமணி நெல்லுக்குக் கூட்டில் அடைபட்ட கிளிப்பிள்ளை பற்றியெடுக்கும் அச்சடித்த தலைவிதிப் பாட்டுச் சீட்டினை” அறியாமையின் தலையில் இடிவிழ வைத்த இக்கவிதை யதார்த்த இழிவரல்.

காலத்துக்கேற்றாற்போல் கொரோனா கவிதைகளும் உண்டு. ஓருயிர்க் காரணியால் நோய்பரப்பிய காய்ச் சந்தை, ஜைனத் துறவியாகவோ அனுமனாகவோ ஆக்கும் கொரோனா கவசம் மேலும் முகக் கவச விளம்பரம் பற்றிய நையாண்டி நச்செறிந்தது.
உயிராசையில் தொட்டியில் நீந்தும் மீன் லாக் டவுனை நினைவுபடுத்தியது. அதிலும் கோவிலைத் திறக்கச் சொல்லும் கடவுள் கவிஞரின் அதிகபட்ச குறும்புக்கு எடுத்துக்காட்டு. அதேபோல் தீண்டாமை ஒழிப்பும் சமூக இடைவெளியோடு. உள்ளூருக்குச் செல்லவே கொரோனா காலக் கடவுச்சீட்டையும் எள்ளுகிறது ஒரு கவிதை. ஊரடங்கினால் ஊர் உய்ந்தது, இயற்கை இயல்பானது குறித்த கவிதை அற்புதம்.
உறவு வில்லை முறித்துப் பணச்சீதையைக் கைப்பிடித்த ராமனைக் கடியும் கவிதை கவிஞரின் தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. நிலவுப் பெண்ணின் முகக்கறை துடைக்க மரம் அனுப்பிய கைக்குட்டை மேகம் என்ற ப்ரயோகம் பார்த்து வியந்தேன். கடிகாரமுட்களின் புணர்வில் நாட்கள் பிறக்கும் அதிசயத்தையும்.
ஸ்நேகம் என்பது உணரப்படுதல். ஆத்மார்த்தமாக உணரப்படும் நட்பு  மனதைக் குளிர்விக்கும், அதற்கு இளந்தென்றல் என்ற உவமை வெகு பொருத்தம்.
வாழ்க்கை பற்றிய கவிதை நட்புக்கும் பொருந்தும். துணையின் நேசமும் நட்பின் பாசமும் மெல்லிய நூலிழையிலேயே அனைத்தும் அறாமலும் விழாமலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. திருமண பந்தத்தில் இணைய விரும்பும் இணைகளின் ஏக்க எதிர்பார்ப்புக் கவிதை வெகு அற்புதம்.
அப்பாவைப் பற்றிய கவிதை வெகு அருமை. அவரின் நம்பிக்கை வார்த்தைகள் மலை உச்சியையும் சமதளமாக்கும். முயற்சி திருவினையானால் பருந்தும் குருவிக்குக் கீழாகும் எனவும், திறமைச் சிறகு விரித்துப் பறக்கும் சிச்சிலிப் பறவையிடம் வானம் வசப்படும் எனவும் நம்பிக்கை ஊட்டுகிறார் கவிஞர்.
முயற்சியே வெற்றியின் உயிர்ப்பெனக் கவிஞர் காட்டியிருப்பது வெகு அழகு. மௌனம் தேடும் ஞானமும், மரத்தில் வெட்டிய நினைவுச்சின்னமும் கூட.
பூவில் சிறைப்படும் தேனி, காதல் வெய்யிலில் வெள்ளை நிழலான அவள், உதிரத்தோடு சிவப்பாய்ப் பிறக்கும் சூரியக் குழந்தை , காட்சிப்பிழைக் கவிதை , இசைதலுக்கும் சான்றாகும் நாணல்கள், உள்ளங்கைச்சூடு ஆறாதிருக்கும் குடை என நிறங்களோடு கூடிய அழகான காட்சிப் படிமங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன.
இவற்றோடு டாஸ்மாக் கவிதையும் உண்டு. தீர்த்தம் தரும் தலங்களை மூடித் தீர்த்த சாந்தியளிக்கும் தலங்களின் திறப்பு பற்றி நல்ல இடிப்பு. அதையும். தள்ளாடும் அரசாங்கம் தள்ளாடாமல் இருக்கவும் ஒரு மண்டல விரதம் முடிக்கவும் முதல் ஆளாய்ப் போய் வானவில்லாய்ப் பருகுவீர் சாமியப்பனாய் என்கிறார்.
ஆயிரம் ரூபாய்க்குள் அடங்கிவிடும் ஏழையின் பொருளாதாரம்., தூண்டிலை விழுங்கும் மீன், உடையும் கண்ணாடியாய் மனது, அழியாத ஊழல் கறை, அலையும் அணில்குட்டி, அம்மா இல்லாத வெற்றுத் திண்ணை, கடன்வாங்கும் மேலாளர் , நாயோடு நடைபயிலும் விருப்பம், பெற்றோர் இட்ட பெயரென அனைத்தையும் மாற்றும் இருப்பு, அம்மாவின் சேமிப்பு என அவசம் தோன்றவைத்த கவிதைகள் சில.
முகமறியாமல் அரும்பும் முகநூல் நட்பு பற்றிக் கூறி இருக்கும் இவர் தபால்காரனின் வரவை எதிர்பார்க்கும் நட்புகள் பற்றியும் ஒரு காலத்தில் கவிதை இயற்றி இருக்கிறார்.  
நினைவுகள் கல்வெட்டுக்கள்தான். கடிதங்கள் அபூர்வமாய்ப் போய்விட்ட காலத்தில் அவை குறிஞ்சிதான். ஏன் கவிதைகள் அபூர்வமாய் போய்விட்ட காலத்தில் செறிவான இந்தக் கவிதைகளும் கூடத்தான் குறிஞ்சிபோல் அழகாய் அபூர்வமாய் மலர்ந்திருக்கின்றன.

அம்மா இல்லாத திண்ணைபோல் அம்மாவின் நினைவுகள் மனதுள் ஒளிந்த பொக்கிஷமாய், மீட்டெடுக்க முடியாத சித்திரமாய்க் காட்சி தருகின்றன. 
ஊரடங்கு காலத்தில் எல்லாம் இளைப்பாறும்போது இளைப்பாறாத விவசாயியின் ஏர்ப்பின்னது உலகம் நம் வயிறையும் உயிரையும் காத்தது. அதேபோல் களைப்புறும்போதும் களிப்புறும்போதும் நம்மை ஆற்றுப்படுத்தும் தாய்மையாய் தாயுமானதகப்பனான இக்கவியின் நட்பு வாய்த்திருப்பது பெரும்பேறு.

3 கருத்துகள்:

  1. அம்மாவின் திண்ணையாய் தங்களின் பதிவு. சிறப்பு.....

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    நன்றி துரை அறிவழகன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...