எனது பதிமூன்று நூல்கள்

ஞாயிறு, 26 ஜூலை, 2020

நிலமெலாம் முள் மரங்கள் - ஒரு பார்வை.நிலமெலாம் முள் மரங்கள் .

சமீபத்தில் நான் வாசித்த நூல்களில் என்னை மிகவும் கவர்ந்தது இந்நூல். எளிய மனிதர்களின் அவசத்தை இதைவிடச் சிறப்பாக எந்த நூலும் கூறியிருக்க முடியாது. எளிமையான வார்த்தைகளில் மண்ணின் மணம் வீசும் இயல்பான கதைகள். 

மொத்தம் 17 கதைகள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் காரைக்குடி கிளையின் தலைவர் திரு. ஜீவசிந்தன் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நாம் அன்றாடம் காணும் மக்களின் வாழ்க்கையை, அவர்களின் வாழ்வியல் துயரங்களை, அதோடும் கூட அவர்களைச் செலுத்தும்  மனிதநேயத்தை வெகு யதார்த்தமாகப் பதிவு செய்துள்ள கதைகள் இவை. 

மூட நம்பிக்கையைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தும் மீனாட்சி கதை ரொம்பப் பிடித்தது.அதுவும் “ நாலு பேய் சேர்ந்து ஒண்ணாப் பிடிச்சிருந்தா எப்பிடிக் குழந்தை பிறக்கும் ?” என்ற வார்த்தை புன்னகைக்க வைத்தது. பின்னர் பேய் ஓட்டுகிறோம்  என்று அவர்கள் படுத்தும் பாட்டைப் பார்த்ததும் படித்த கண்ணிலேயே ரத்தமும் வந்தது. 

பாலியல் மனக்கிலேசமும் மனநோயை உண்டாக்கும் என்றும் அதையே பேய் பிடித்தது என்று பூசாரி மூலம் விரட்டச் சொல்லும் மக்களையும் சந்தர்ப்பம் பார்த்துத் தடுக்க வேண்டியே பேயாகும் மீனாட்சியைப் படைத்த ஆசிரியர் மிக லாவகமாக அந்தக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார். இதே போலத்தான் காவுகள் கதையும். ஆனால் பூசாரியின் வாழ்வியல் தேவைகளை நிவர்த்திக்க அவர்கள் செவலைக் காளைகளைக் காவு கொடுக்க வேண்டியதாகிறது. 

நிறைய விழிப்புணர்வுக் கதைகள். குடியை நிறுத்த விரும்புபவன் காண விரும்பும் புதிய வெளிச்சம், சாதி சங்கத்தலைவரின் உண்மை முகத்தைத் துகிலுரிக்கும் சாதியின் சாதி, சாதி அக்கப்போரில் கணவனைக் கொன்றவனின் மனைவியைக் கொலை செய்ய ஓடும் வேலம்மாவின் மனம் அநாதரவான அவன் குழந்தையையும் மனைவியையும் நெருக்கத்தில் பார்த்ததும் இரக்கத்துக்கு மாறுவதைப் படைத்த உயிருக்கு உயிர் ஆகியன. 

அப்பாவின் இடம், அப்பாவின் கடைசி விருப்பம், சுப்பிரமணி, இயலாமை, நீர் விளையாட்டு, நிறுத்தம்  ஆகியன  இழிவரல் தோன்றவைத்த கதைகள். வானம் பார்த்த மனசிலே ஒரு துளி மழைச்சொட்டு மனிதனின் மனதை மாற்றுமிடம் அற்புதம். வளர்ச்சியின் தேய்மானம் இன்றைய உலகம் இவ்வளவுதான் என ஆயாசம் தோன்றவைத்தது. 

கிழவி கதை எல்லாக் கிராமங்களிலும் இருக்கும் ஏதோ ஒரு வயதான பெண்ணை இனங்காட்டியது. சூழ்நிலைக் கைதியாகச் செல்லும் இன்றைய முதியோரின் அடையாளமாகவும் அவர் படைக்கப்பட்டிருக்கிறார். விசாலம் கதை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாமோ என நினைக்க வைத்தது. 

இதில் கிராமத்து வாழ்வியலை ஆசிரியர் ஆவணப்படுத்திய இடம் நாம் அனைவரும் அறியாதது. ” கண்மாய் காலாங்கரைக்குப் போகும் கணக்கு “ “ கிராமதேவதை கும்பிடும் காளாஞ்சி பதிவு , “ “ பொது மீன் கூறு “என ஒரு கிராமத்தில் வசிக்கும் குடும்பத்திற்கு என்னென்ன சமூக & இயற்கைக் கொடுப்பினைகள் உள்ளன என அறியத் தந்தது. 

கடன் முடிவில் படீரென வெடித்துச் சிரிக்கவைத்த கதை. “ அட என் கடன் கிடக்கட்டும் ..இந்தியக் கடன்..?” நடத்துனராகப் பணிபுரிந்தாலும் பேருந்து ஓட்டுநர் பார்வையில் ஒரே ஒரு கதைதான் எழுதி இருக்கிறார். பேருந்து பற்றி இரண்டு கதைகளில் வருகின்றன. இரண்டும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட கதைகள், சுப்ரமணி, சின்ராசு.

ஆசிரியரான அண்ணாமலை சாரைச் சந்திக்க நினைக்கும்போது ஏற்படும் தயக்கம் உள்ளபடியே என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய கதை. மிக மெல்லிய நுண்ணுணர்வுகளைக் காட்சிப்படுத்திய கதை. தாட்சண்யம் பார்க்கவேண்டுமே என நாம் எவ்வளவு விஷயங்களில் எவ்வளவு பேர்களிடம் இப்படி விலகிச் சென்றிருக்கிறோம் என்பதைச் சிந்திக்க வைத்தது. மிக நுணுக்கமான அவதானிப்பு இந்தக் கதை. டீசல் தண்டனை, நிர்வாகம் வரையறுத்த நிறுத்தங்கள் என நாம் அறியாத அநேக விஷயங்களைக் கதைகளில் தந்துள்ளார். 

இரு வேறு மனநிலைகளைப் பேசுவனவாக அநேக கதைகள் அமைந்துள்ளன. ஏமாற்றம் மனதைத் தேற்றிக் கொள்ளல், விரக்தி, அதிலிருந்து வெளியேறுதல் என நேர்மறை விஷயத்தை நோக்கிப் பல்வேறு கதைகள் சென்றாலும் கிராமத்து வாழ்வியல், அதன் பாலை நிலை பற்றிய ஆசிரியரின் ஆதங்கம் மனதைத் தொட்டது. விவசாயிகளின் பாட்டை கிராமத்து வாழ்வியலின் சாராம்சத்தை, புழங்கு மொழிகளைக் கதைகள் விவரிப்பது வெகு சரளம். 

கதைகளில் நிறைய வட்டார வழக்குகள், சொலவடைகள் இடம்பெறுகின்றன. “அழுதுக்கிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இரு “ “கிடக்கான் சின்ன வடுவாமவன்”” நெனைப்பு பொழப்பக் கெடுத்துச்சாம்.” “மாமியா செத்து மருமக வடிச்ச கண்ணீரா சுரக்கும் ஊற்று நீர் “”ஓடுனவன் ஒன்பதாம் இடத்து ராசா, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி” ” யானை படுத்தாலும் பூனைக்குமா குறைஞ்சிடும் “ எனத் துள்ளி விழுகின்றன. 

அதேபோல் இவரின் ஊர் பற்றிய விவரணைகள், மனிதர்களின் இயல்பு, உருவம் பற்றிய வர்ணனைகள் நம் மனதில் பல்வேறு இயற்கைச் சித்திரங்களைப் படைக்கின்றன என்றால் மிகையில்லை. இயலாமை கதையில் “ வயல் மேட்டை வெட்டிப் பள்ளமாக்கும் முயற்சியும், வாழ்க்கைப் பள்ளத்தை மேடாக்கும் முயற்சியும் முற்றுப் பெறாததாகவே இருந்தது “ என்று மொத்தக் கதையையும் இந்த இருவார்த்தைகளில் படைத்து விடுகிறார். 

சீமைக்கருவேலம் ஆக்கிரமித்த ”நிலமெல்லாம் முள்மரங்கள்” கதை ஹைலைட். அநேக கதைகளைப் போல இக்கதையிலும் சீரழிந்த கிராமத்தைப் பார்த்து வீராச்சாமி மகன் வேலுச்சாமி தன்னைத்தானே தேற்றிக்கொண்டு எழுகிறார். சீமைக் கருவேலம் என்பதை நம்மை ஆக்கிரமிக்கும் அந்நிய சக்தி, அழித்தொழிக்கும் அரசியல் சதிகள், மக்களின் விட்டேற்றித்தனம் , அலட்சியம், அக்கறையின்மை என எது வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். 

ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். எல்லாக் கதைகளிலும் முடிவை வாசகரின் எண்ணப் போக்குக்கும் சிந்தனைக்கும் விட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் எல்லாவற்றிலும் இன்னும் ஓரிரு சாராம்சங்களை, முடிவான வார்த்தைகளைச் சேர்ந்தால் கதைகள் அனைத்தும் இன்னும் தாக்கத்தை உண்டு பண்ணும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். 

தனது கருத்து என எதையும் திணிப்பதில்லை ஆசிரியர். அவரின் கதாபாத்திரங்களே தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிறுகதை அமைப்பில் அது ஒருவிதமான நிம்மதியைக் கொடுக்கிறது. ஆனால் அதே கணம் விறுவிறுப்பை உண்டுபண்ணுவதற்குப் பதிலாக வெகு சாதாரணமாக முடிந்துவிடுகிறது.  திரு. தமிழ்ச் செல்வன் அவர்களும் “கலைநுட்பம் இன்னும் கைகூட அவர் செய்ய வேண்டிய காரியங்கள் பல உண்டு” என்பதையே கூறி இருக்கிறார். அதையே வழிமொழிகிறேன். 

மொத்தத்தில் சிறப்பான தொகுப்பு. இதை வாசிக்கும் மண்ணின் மைந்தர்கள் அனைவருமே இதில் ஒரு கதையிலாவது தம்மை அடையாளம் காண்பர் என்பது உறுதி. 

நிலமெல்லாம் பூத்துக் கிடக்கும் சீமை முள் மரங்கள் மண்ணின் ஈரத்தை உறிஞ்சி விடுவதைப் போல மரித்துவரும் மனிதம் பற்றியும் மனிதர்களின் எண்ணப் போக்குப் பற்றியும் விரிவாகக் கொடுத்துள்ள இவர் அடுத்துத் தன் உத்யோகத் துறையிலும் நாவலோ சிறுகதைத் தொகுப்போ படைக்க வாழ்த்துக்கள்.  
 

நூல் :- நிலமெலாம் முள் மரங்கள்.
ஆசிரியர் :- திரு.ஜீவசிந்தன்
பதிப்பகம்:- பாரதி புத்தகாலயம்
விலை :- ரூ. 90/-

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...