கிட்டத்தட்டப் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இக்கோட்டை. இதன் ராக் கட் எனப்படும் மார்பிள் வெட்டு ஒட்டு சிற்ப வேலைப்பாடுகளால் புகழ்பெற்றது இக்கோட்டை.
ஜைன தீர்த்தங்கரர் சிலைகளும் இன்னொரு பக்கம் அலங்கரிக்கின்றன. குஜரி மஹால்,மன் மந்திர், கரன் மகால் ஆகியனவும் உண்டு. 14 ஆம் நூற்றாண்டில் மன் மந்திர் மன்னர் மான்சிங் தோமரால் கட்டப்பட்டது.
பதினைந்தாம் நூற்றாண்டு வரை தோமர் மன்னர்கள் வசம் இருந்த இக்கோட்டை அதன் பின் முகலாயர் வசம் கைமாறியது. பான் ,பானி பனீர் என இது பற்றி ஒரு கட்டுரை எழுதி அது புதிய பயணி இதழிலும் வெளியானது.
முகலாயருக்குப்பின் ஆங்கிலேயர் காலத்திலா எனத் தெரியவில்லை. இக்கோட்டை சிறைச்சாலையாக கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக இருந்ததாம்.
கரன் மகால் பக்கத்தில் ஒரு மண்டப ஸ்டைலில் கட்டிடம்.
மாலை வெளிச்சத்தில் மின்னும் குவாலியர் கோட்டை. மாட மாளிகளைகளும் கூட கோபுரங்களும்.
இது நான்கடுக்குக் கோட்டை. இரண்டடுக்கு மலையின் உள்ளேயும் மீதி இரண்டடுக்கு மலைக்கு மேலேயும் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டையிலிருந்து குவாலியர் மாநகரம்.
தோமர்களும் முகலாயர்களும் சிந்தியாக்களும் ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்த ஊர் இது.
அரசவை முற்றம்.
இன்னொரு கோணத்தில் குவாலியர் கோட்டையும் மதில்களும்.
ஆறு வாயில்களைக் கடந்துதான் இந்த ஏழாவது வாயிலுக்குள் நுழைய வேண்டும். மலை மீது யானை ஏறி வரும்படி அமைக்கப்பட்டிருக்கும் இப்பாதையை ஹாத்திபூல் அப்பிடிங்கிறாங்க.
யானையடிப்பாதை :) பக்கவாட்டில் கோட்டை. உள்ளேயும் பல பலகணிகளும் ரகசியங்களும் இருக்கின்றன.
பால்கனி போன்ற உப்பரிகை அல்லது ராஜமாடம்.
கீழே அகழி போன்ற அமைப்பில் பள்ளம் இருந்தது. நீர் வரத்து இருந்திருக்கலாம் அந்தக் காலத்தில்.
எங்கோ செல்லும் ரகசியச் சுரங்கம்.
சிற்பக் கதவு.. இதுதான் ஏழாவதுவாயில். மிகப் பெரியது. கீழே யானை புகுந்து வரும் அளவு பெரியது. மேலே எவ்வளவு வேலைப்பாடுகள் பாருங்கள். மார்பிள் கல்லை இப்படி விதம் விதமாய் வெட்ட முடியுமா அற்புதச் சிற்பிகள் வாழ்ந்திருக்கிறார்கள் அக்காலத்தில். !! காற்று வரும்படிப் பலகணி அமைப்பில் யன்னல்கள். 13 பகுதிகளில் இரண்டை மட்டும் இரும்புக்கம்பிகளால் பிணைத்திருக்கிறார்கள். நடுவில் என்ன ஆயிற்றோ அங்கே இருந்த வேலைப்பாடுகளுக்கு.
யானையடிப் பாதை. ராஜபாட்டை. துந்துபி முழங்க எக்காளம் ஒலிக்க வண்ண மலர்களும் வண்ணப் பூக்களும் சிதற வண்ண ஆடைகள் அணிந்த ஆடவரும் மகளிரும் கட்டியம் கூற யானையின் மேல் வெற்றித் திலகமிட்டுக் கம்பீரமாக க்ரீடமணிந்து உலாவரும் ராஜாவை மனக்கண்ணில் காண முடிகிறதுதானே. !
எண்ட்ரன்ஸ் டிக்கெட்.
இதோ இன்னொரு சாளரம். இது மன் மந்திரின் உள்ளே இருக்கும் ஒரு கூடத்தின் பக்கமிருக்கும் அறைக்குக் காற்றோட்டம் தர அமைக்கப்பட்டிருக்கு.
இது கோட்டைக்குள் இரண்டாவது அடுக்கு. உள்ளே சென்று இறங்கிப் பார்த்தோம். படிகளில் எல்லாம் ஏறி இறங்குவது கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. இருட்டுக்கூடம். அந்நாளில் ரகசிய சதியாலோசனைக்குப் பயன்பட்டிருக்குமோ என்னவோ.
மன் மந்திரின் கூடத்தில் யாளிகள் . தூண்களில் அழகு வேலைப்பாடுகள். கொடுங்கைகள் போல் இவை வரிசை கட்டிக் கட்டியம் கூறுவது பேரழகு.
இந்த ராக் கட் ஸ்கல்ப்சர் இங்கே வெகு ப்ரபல்யம். மன் மந்திரின் கூடத்தில் இந்த அலங்காரக் கல் இடம் பெற்றுள்ளது. இது தெரிவிக்கும் செய்தி என்னவென்று புரியலை. ஆனால் அழகாக இருந்தது.
ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும் எப்படித்தான் செதுக்கினார்களோ என வியப்பதை நிறுத்த முடியவில்லை. இந்த சாளரத்தை ஒரே கல்லில் ( எனது கணவரின் பின்புறம் காணப்படும் யன்னல் ) காற்று வரும்படி சன்னமான இழைகளாக வடித்தெடுத்துள்ளனர்.
இதுவும் மன் மந்திர்தான்.அதன் கூடத்தின் முகப்பு. முன்புறம் முற்றம். கோட்டைக்குள் நடுவில் உள்ளது இது. ராஜாராணிகள் மாலைப்பொழுதைக் கழிக்கும் இடமாக இருக்கலாம். இளவரசர்களும் இளவரசிகளும் ஓடி ஆடியது போலும் இருந்தது. மென் தென்றல் வீசுகிறது. மேலே ஒரு உப்பரிகை. கீழே ராஜா ஏதும் கேளிக்கைகளை/ நடன, இசை நிகழ்வை ரசிக்கும்போது மேலே உப்பரிகையில் ராணியரும் அமர்ந்து ரசிப்பார்கள் எனத் தெரிகிறது. எல்லாப் படங்களையும் பெரிதுபடுத்திப் பாருங்கள். அதன் அழகு இன்னும் விரியும்.
மொத்தத்தில் குவாலியர் கோட்டை கோட்டைகளின் அணியாரம் என்றாராம் பாபர். இந்தச் சிற்பக் கதவையும் சிற்பச் சாளரங்களையும் கோட்டையின் பிரம்மாண்டத்தையும் பார்த்துவிட்டு அதையே நானும் வழிமொழிகிறேன்.
டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.
அழகான இடம். நானும் இங்கே சென்றதுண்டு. என் பக்கத்திலும் எழுதி இருக்கிறேன்.
பதிலளிநீக்குஅஹா ! இணைப்புத் தாருங்கள் வெங்கட் சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!