முத்தாயி:-
பள்ளிக்கூடம் விட்டுப் பிள்ளைகளுடன் ஆடிக்கொண்டே வந்தாள் முத்தாயி. வீட்டின் எதிரேதான் பள்ளிக்கூடம். அவளுடன் அஞ்சாப்பு படித்த ரேவதியும் காமாட்சியும் தோளில் கைபோட்டு ஒஞ்சரிச்சுச் சாய்ஞ்சபடி வந்தார்கள்.
”ஏ புள்ள உன்கிட்ட பேப்பரக் காமிக்கச் சொன்னேன்ல.” ரேவதி முத்தாயியிடம் கேட்டாள்.
“பரிச்ச எழுதும்போது பேப்பரக் காமிச்சா மிஸ் அடிப்பாங்க புள்ள” என்றாள் முத்தாயி.
“நா படிக்கலன்னுதானே கேட்டேன். பெரிய பிசுவு பண்ணிக்குற. நீ நல்லாப் படிக்குறங்கற பவுசு. போ போ ஒன் பேரு ஆயிதானே.. “ கோபத்தோடு தோளில் போட்ட கையை வெடுக்கென ரேவதி உதற முத்தாயியின் ஒருபக்க சடை உருவி அவிழ்ந்து ரிப்பன் தொங்கியது.
கண் கலங்க படியேறி வீட்டிற்குள் போய் புத்தகக் கட்டைப் போட்டுவிட்டு தம்பிப்பாப்பாவின் அருகில் முகம் வைத்துப் படுத்துக் கொண்டாள் முத்தாயி. அவன் கைகளால் அக்காளின் முகத்தில் தட்டினான். தம்பியின் பிஞ்சுக் கைகளை எடுத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
“என்ன ஆராவது இனி ஆயின்னா நீ போய் அடிச்சிடுவதான தம்பி “ ‘எப்பதான் இவன் பெரிசாவானோ. ‘ எனக் கவலைப்பட்டாள். அவன் சிரித்தபடி கைகளையும் கால்களையும் ஆட்டி அக்காளின் விரல்களைப் பற்றி வாயில் வைத்துக் கொண்டான்.
”இந்தா ஆயி எந்திரி. போய் மூஞ்சி கழுவி பால் குடிச்சிட்டு வந்து தம்பியக் கொஞ்சு ”. அவளுடைய சித்தி விரட்டினாள். அம்மா அவள் எப்படி இருப்பாள். ஃபோட்டோவில் பார்த்ததுதான் அம்மாவை. முத்தாயி பிறந்ததும் இறந்துவிட்டாளாம். அதன் பின் இரண்டு வருடம் அவள் அப்பா சுந்தரேசன் படாதபாடு பட்டு இவளை வளர்க்க சொந்தக்காரர்கள் ஒன்று சேர்ந்து இந்தச் சித்தியைக் கட்டி வைத்தார்களாம்.
”நான் ஒண்ணும் ஆயி இல்ல.” என்று கோபமாக மூக்கை விடைத்தாள் முத்தாயி.
”சரி ஆயி இல்ல தாயி.. போய் மூஞ்சி கழுவிட்டு வா” என்றாள் சித்தி. சித்தி என்றாலும் இவள் அம்மா என்றுதான் அழைப்பாள். சித்தியுடன் கூடவே அவளது அம்மாவும் பாட்டியும் எப்போதும் இருப்பார்கள்.
எட்டு மணிக்கு சுந்தரேசன் வந்ததும் ஓடிப்போய் அவனைக் கட்டிக் கொண்ட முத்தாயி விசும்பினாள். “ என்னடா அம்மாப் பொண்ணுக்கு என்ன ஆச்சு யார் என்ன சொன்னா? “
”எனக்கு ஏம்பா ஆயின்னு பேர் வெச்ச.. எல்லாரும் கேலி பண்ணுறாங்க “ திக்கென தூக்கிப் போட அவளது சித்தி முத்தாயியைப் பார்த்தாள். ‘சின்னது போட்டுக் கொடுக்குது போலிருக்கே’
”உனக்கு முத்தாயின்னுல்லம்மா பேர் வச்சிருக்கு. அது உன் அம்மா சொன்ன பேருதான். முத்துப் போல நீ பொறந்தே. அவளுக்கு அம்மா மாதிரி மறுபொறப்புக் கொடுத்தேன்னு உன் முகம் பார்த்ததுமே முத்தாயின்னு கூப்பிட்டுட்டுக் கொஞ்ச நேரத்துல அவ போய்ச் சேர்ந்துட்டா. அதுனாலதாம்மா அந்தப் பேரேயே வைச்சேன். “
“என் செல்லக் குட்டியக் கேலி பண்ணது யாரு? “ முகம் விடைக்கக் கேட்டான் அவன்.
“ரேவதியும் காமாட்சியும்தான் கேலி பண்ணாங்கப்பா”.. அப்பாடா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சித்தி.
“அதுக கிடக்குதுக சின்னப் புள்ளங்க. விடு கழுதைகளை”
”சரி கண்ணு வா சாப்பிடலாம்”
ராத்திரியில் சுடச் சுட சோறு போட்டு மீன் குழம்பை ஊற்றினாள் சித்தி. பாசிபோல் வழுவழுவென்றிருக்கும் தோலை நீக்கி முள் எடுத்து சதைப்பகுதியாக மகளுக்கு ஊட்டி விட்டான் சுந்தரேசன்.
“அப்பா நீ ஊட்டிவிட்டா சூப்பரா இருக்குப்பா” இடது கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்துக் கையுயர்த்திப் பாராட்டினாள் மகள்.
“கண்ணு நீ மத்யானம் எப்பிடி மீன் சாப்பிட்ட? கண்ணுக்கு நல்லதுன்னு சொல்லி இருக்கேன்ல “
“மதியம் நான் மீன் சாப்பிடலைப்பா “
இப்போது நிஜமாகவே அவளது சித்தியின் வயிற்றில் புளியைக் கரைத்தது.
”என்னது மீன் சாப்பிடலையா ? நீ மூணு வேளையும் சூடா சுவையா சாப்பிடணும்னுதானே ஒன் ஸ்கூலுக்குப் பக்கத்திலேயே வீடு பிடிச்சிருக்கேன்”
”பாப்பா வரும்போதுதான் கொழம்பு கொதி வந்துச்சு. மீனு போட்டா கொதிக்க நேரமாகுமுன்னு வெறும் கொழம்புதான் ஊத்திக் கொடுத்தேன்.” சித்தி சமாளித்தாள்.
முன் கோபத்துக்குப் பேர் போனவன் சுந்தரேசன். சாப்பாட்டுத்தட்டு பறந்தது.
“வீட்டுல ஒண்ணுக்கு மூணா பொம்பிள்ளைங்க இருக்கீங்க. ஒரு புள்ளைக்கு சோறு கொழம்பை நேரத்துக்கு ஆக்கிப் போடத் தெரியாதா. என் புள்ளைக்கு இல்லாத மீனு எனக்கெதுக்கு ?”
அன்றைய இரவு அமாவாசைபோல் யாருடைய பேச்சரவமும் இல்லாமல் கழிந்தது. தம்பி மட்டும் அவ்வப்போது அழுது குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு வாரம் சென்றிருக்கும். அன்றைக்கு மதியமும் சித்தி குழம்பு வைக்க நேரமானது. பாட்டியும் கொள்ளுப் பாட்டியும் எங்கோ உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள்.
அன்றைக்கு இரவும் அப்பாவுக்குக் கோபம் வந்தது. சித்திக்குக் கைகால் நடுக்கம் கண்டிருந்தது. “அப்பா. இருப்பா.. நாந்தான் அம்மாட்ட வெறும் கொழம்பு ஊத்த சொன்னேன்” சித்தியே வியந்து பார்த்தாள்.
“ஆமாம்பா ஸ்கூலுக்கு இன்னிக்கு ஒருத்தர் பேச வந்தாரு. அவர் கஸ்தூரிபா காந்தி பத்தி சொன்னாரு. எவ்ளோ ஒடம்பு சரியில்லாம இருந்தும் அவங்க என் உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக இன்னொரு உயிரைக் கொல்ல மாட்டேன்னாங்களாம். அதுனால நானும் மீனு வேண்டான்னுட்டேன்” திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் சுந்தரேசன்.
வாரி அணைத்துக் கொண்டாள் சித்தி. தன் சித்திக்கும் ஆயியாக ஆன முத்தாயியும் சித்தியைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். அவர்களைப் பார்த்துக் கைகொட்டிப் பொக்கைவாயால் சிரித்துக் கொண்டிருந்தான் தம்பி.
டிஸ்கி:- நமது மண்வாசம் செப்டம்பர், 2020 இதழில் இந்தச் சிறுகதை வெளியாகி உள்ளது. நன்றி திருமலை சார்.
அருமை...
பதிலளிநீக்குநல்லதொரு சிறுகதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!