எனது புது நாவல்.

வெள்ளி, 5 ஜனவரி, 2018

சம்பளத்துக்கு "சாலரி" என்று பெயர் வந்தது எப்படி ?

உப்பைப் பற்றிய கற்பிதங்களைத் தவிர்ப்போம்.


"உங்க பேஸ்டில் உப்பு இருக்கிறதா.." விளம்பரத்தில் பளிச்சென வந்து கேள்வி கேட்கும் நடிகையின் முகம் உங்கள் ஞாபகத்தில் இருக்கும்.  "இது தேசத்தின் உப்பு" என்ற வார்த்தை உங்கள் காதுகளில் ரீகாரமிட்டுக்கொண்டிருக்கும். "உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்கமாட்டேன்ட என்ற பாடல் வரி உங்கள் முணுமுணுப்பிலிருந்து தப்பியிருக்காது. இப்படியெல்லாம் உப்புக்கு விளம்பரமா..? வியக்கவேண்டாம். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜியத்தை வீழ வைத்தது காந்திஜியின் உப்பு சத்தியாகிரமல்லவா?


உப்பில்லாப் பண்டம் குப்பையிலேஎன்பதும்உப்பிட்டவரை உள்ளளவும் நினைஎன்பதும் பழமொழி. ! நெய்தல் நிலத்துக்கே உரிய ஒரு தொழில் உப்பு விளைவித்தல்.அந்தக் காலத்தில் பண்டமாற்று முறைக்கும் உதவிய ஒரு பொருள் உப்பு.
களர்நிலம், உவர்நிலம் என்று உப்பு விளைவிக்கப்படும் பூமி அழைக்கப்படுகிறது. உப்பு விளையும் இடத்தை உப்பளம் என்றும் உப்பு வயல் என்றும் சொல்வதுண்டு.  உப்பு அளம் என்பதால் கோவளம், பேரளம் என்று கடற்கரைக் கிராமங்களில் பெயர் அமைந்திருப்பதும் இதற்கு எடுத்துக்காட்டு. பாத்தி பாத்தியாகப் பிரிக்கப்பட்ட வயல் போன்ற அமைப்பில் உப்பு விளைவிக்கப்பட்டதால் இது உப்பு வயலெனப்படுகிறது.

உப்பு விற்றவர்களை உமணர்கள்/உவணர்கள் என்று பண்டைஇலக்கியக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கழுதைகளின் முதுகில் உப்பை மூட்டையாகக் கட்டிச் சென்று விற்பவர்களை  உப்புக் குறவர்கள் என்று கூறுவதும் உண்டு. இவர்கள் அளத்தியர், அளவர் என்றும் குறிக்கப்பட்டனர்.
உப்பு என்றதும்  காந்தியடிகளின் தண்டி யாத்திரையும் வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகமும் நினைவுக்கு வரலாம்.  இதை உப்புப் போர் எனவும் குறிப்பிடலாம். பாரத தேச மக்கள் உப்பு காய்ச்சி எடுப்பதற்கும் அநியாய வரி விதித்த வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மார்ச் 12, 1930 இல் காந்தியடிகள் நடத்திய இப்போராட்டம் பின்னாளில் சட்டமறுப்பு இயக்கமாகவும் உருவெடுத்தது.

உப்புப் பெருகுவதுபோல் பணம் பெருகும் என்ற நம்பிக்கையில் உப்பை பூஜை அறையில் வைத்து வணங்குவோரும் உண்டு. உப்பு என்பது பணத்துக்குச்/தனத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது. நாள் கிழமைகளில் உப்பு வீட்டில் நிறைந்திருக்க வேண்டும் என்பார்கள். அட்சய திரிதியை போன்ற நாட்களில் தங்கம் வெள்ளி, வெள்ளை ப்ளாட்டினம் போன்றவற்றுக்கு ஈடாக வெண்மைப் பொருளான உப்பை வாங்குவதும் சிறந்தது என்று நம்பப்படுகிறது.  
நான் படித்த அயலகமொழிச் சிறுகதை ஒன்றில் தன் குழந்தையை இழந்த பெண் ஒருத்தி சோகமாக நின்றுகொண்டே கரண்டியால் கூழை உண்பது போன்ற புகைப்படம் இருக்கும். கதை என்று ஒன்றுமில்லை. குழந்தை இறந்த சோகத்திலும் அவள் சில கணங்கள் கழித்து அந்தக் கூழை உண்பாள். அப்போது அவளிடம் அவளது துக்கம் பற்றி  யாரோ விசாரிக்கும்போது அவள் அந்தக்கூழில் உப்பிடப்பட்டிருப்பதால் உண்பதாகக் கூறுவாள். ஏனெனில் அன்று உப்பு விலை மதிக்கமுடியாததாக இருந்திருக்கிறது. அதை வீணடிக்க அவள் துக்க மனநிலையிலும் முடியவில்லை என்பது யதார்த்தம் கூறும் கருத்து.

ஒரு காலத்தில் தங்கத்துக்கு நிகராக உப்பு மதிக்கப்பட்டுள்ளது. உப்பு அச்சுக்களைக்  காசாகப் பயன்படுத்தும் பழக்கமும் இருந்திருக்கிறது. அதை சம்பளம் போலும் கூட வழங்கி இருக்கிறார்கள். அதனால்தான் சம்பளத்துக்கு சாலரியம் & சாலரி  என்ற பெயர் வந்ததாம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை க்ரேக்க தேசத்தில் உப்பைக் கொடுத்து அடிமைகளை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.
யாரையாவது கோபப்படுத்த வேண்டுமென்றால் சோத்துல உப்புப்போட்டுத்தான் சாப்பிடுறியா என்று கேட்பது சினிமாக்களில் வழக்கமாயிருக்கிறது. ஒருவர் வீட்டில் அடிக்கடி உணவருந்தும்போது, அவர்களால் வியாபாரம் இன்னபிற லாபங்களைப்பெறும்போது , அவர்களுக்குத் தாங்கள் நன்றிக்கடன் பட்டதைத் தெரிவிக்க ”உப்பு அதிகமாகிவிட்டது” என்று வட இந்தியர்கள் குறிப்பார்கள். அராபியர்களும் இம்மாதிரி மொழிப் ப்ரயோகத்தைப் பயன்படுத்தினர். நிரந்தத்தன்மையைக் குறிப்பதால் பைபிளில் ஒரு உடன்படிக்கை ”உப்பு உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது.  
உணவைப் பதப்படுத்தும் தொழிலில் உப்பின் பங்கு அதிகம், உப்புக்கண்டம், கருவாடு, அப்பளம் ஊறுகாய், வற்றல் போன்றவை உப்பிலிடப்பட்டுப் பதப்படுத்தப் படுகின்றன. சோப்பு, கண்ணாடி ஆகியன தயாரிக்கவும் பயன்படுது. பற்கறைகளைப் போக்கவும், வீட்டில் உள்ள கறைகளைப் போக்கவும் உப்பு பயன்படுத்தலாம்.
தாவரங்களில் தென்னைக்குக் கல் உப்பை உரமாகப் போட்டால் தேங்காய்கள் நன்கு விளையும். இதனால்தான் கேரள மலபார் கடற்கரைப்பக்கம் தென்னைகள் அதிகம். தாது உப்புக்களை கால்நடைகளுக்குக்கொடுப்பதன் மூலம் அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் , இனப்பெருக்கத்தையும் பால் உற்பத்தியையும் அதிகரிக்கலாம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மனிதர்களுக்குத் தேவையான தாது உப்புக்கள் சோடியம், பொட்டாஷியம், கால்ஷியம், அமோனியம், பாஸ்பேட், மெக்னீஷியம், க்ளோரின், சல்ஃபர், பாஸ்பரஸ்.
விதம் விதமான பூக்கள் , பயறுவகைகள், மண் கொண்டு கோலமிடுவது போல கல் உப்பில் விதம் விதமான நிறங்களைச் சேர்த்துக் கோலங்களுக்கு அழகூட்டவும் பயன்படுத்துகின்றனர். கல் உப்பையும் காய்ந்த மிளகாயையும் கையில் வைத்து திருஷ்டி சுத்திப் போடுதல் என்னும் நம்பிக்கை தமிழகத்தில் உண்டு. ப்ரானிக் ஹீலிங் என்றொரு மருத்துவத்தில் உப்பைக் கொண்டு குணப்படுத்துவதும் அதன் பின் அந்த உப்பை நீரில் கரைத்து ஊற்றுவதும் வழக்கமாயிருக்கிறது.  இதை உப்பு மந்திரம் என்கிறார்கள். உப்பு எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் பொருள்னு நம்பப்படுது. அதுனால இதன் மூலம் செய்யப்படும் சிகிச்சையை ஓரா தெரஃபின்னு சொல்றாங்க.  நம்மூர் கோயில்களிலேயே உப்பும் மிளகும் வாங்கிக் கொட்டும் பழக்கம் தொன்று தொட்டு வேண்டுதலாக இருந்து வருகிறது.

உணவு வகைகளில் (தற்காலத்தில் உப்பு சேர்க்காவிடினும்) இயற்கையாகவே சில காய்கறிகளில் உப்புச் சத்துகள் உறைந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உப்பு கைப்புச் சுவை உடையது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைகக் வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே கொழுப்புச் சத்தினால் அடைபட்டிருக்கும் இரத்த நாளங்களில் உப்பு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி அது இதய நோய்க்கும் வழிவகுக்கிறது. ரத்த அழுத்தக்காரர்களுக்கு சோடியம் உப்பு ஆகாது. பொட்டாசியம் உப்பை சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ( இது வாழைப்பழத்தில் அதிகம் உள்ளதாம். )

உப்பில் அயோடின் இருக்கவேண்டும் என்பதற்காகவே கல் உப்பின் பயன்பாடுசுத்திகரிக்கப்படாத  கடல் உப்பு ) வலியுறுத்தப்படுகிறது. டேபிள் சால்ட் எனப்படும் நைஸ் உப்பு/தூள் உப்பு/ பொடி உப்பில் இந்த அயோடின் கொண்டது என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அப்போது இதில் இயற்கையாக இருக்கும் அயோடின் என்னாச்சு ?

ராக்சால்ட், இந்துப்பு, ப்ளாக்சால்ட்சைனீஸ் சால்ட் எனப்படுபவை, பாறையில் இருந்து கிடைப்பவை, நாம் உபயோகப்படும் கல் உப்பே கடலில் இருந்து கிடைக்கும் உப்பாகும்.

கடற்கரை அருகில் உள்ள உப்பள நிலங்களை வயல் பாத்திகள் போலப் பிரித்து அதில் கடல் நீர் கொட்டப்பட்டு ஆவியாக்கப்படுகிறது.ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு கிடைக்குமாம். கடல்நீர் உப்பு வயல்களில் ( உப்பளங்களில்கொட்டப்பட்டவுடன் வெய்யில் பட்டு ஆவியாகி உப்புப் படிகங்களாகப் படிந்துவிடுகிறது. அவற்றை மேலோட்டமாக வாரி சேர்க்கிறார்கள்.
அவ்வாறு சேர்ந்த வெண் குவியல்கள் , சிறு குன்றுகளைப் போலக் காட்சி அளிக்கின்றன.அதன் பின் அவை தனியாராலோ அல்லது அரசாங்கத்தாலோ ( டெண்டர் முறையில் வாங்கப்பட்டு) சுத்திகரிப்புச் செய்யப்பட்டு பைகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.இவ்வாறு உப்பைக் கடல் நீரிலிருந்து பிரித்தெடுப்பதைக் கண்டுபிடித்தவர்கள் ஜெர்மானியர்கள் என்கிறது விக்கிபீடியா.

கிறிஸ்டல் அயோடைஸ்ட் சால்ட், டபிள் ஃபோர்ட்டிஃபைட் சால்ட், ரீஃபைண்ட் அயோடைஸ்ட் சால்ட் ஆகியன தமிழ்நாடு உப்பு வணிகக் கழகத்தின் வலைத்தளத்தில் உள்ள உப்பு வகைகள் ஆகும். தமிழ்நாட்டில் அயோடைஸ்ட்  உப்பு கிடைக்கும் இடங்கள் என்று 163 இடங்களை லிஸ்ட் செய்துள்ளது உப்பு வணிகக் கழகம். தற்காலத்தில் தைராய்டு பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் அயோடைஸ்ட் உப்பு உபயோகிப்பதை வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்களும். !

அநேகமாக எல்லா சில்லறை விற்பனை நிலையங்களிலும் மால்களிலும் அயோடைஸ்ட் உப்புத்தான் கிடைக்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் நிலத்தடி நீரை ஆக்கிரமித்து பாட்டில் குடிநீரை இந்திய மக்களுக்கு சுகாதாரமானது என்று பரப்பியதைப் போல தைராய்டுக்கு நல்லது என்று அயோடின் உப்பு என்று பொடி உப்பிலும் கல் உப்பிலும் உருவாக்கி உலவவிட்டு உருவமற்ற ஒரு போரை நிகழ்த்தி நோயாளிகளின்   விகிதத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. தேசப்பிதா காப்பாற்றிய உப்பை தேசத்தின் உப்பு என்று முகமாத்து செய்து பன்னாட்டு நிறுவனங்கள் கல்லா கட்டுகின்றன. 

உப்பு பீங்கான் ஜாடிகளிலும் உப்புப் பானைகளிலும் வருடத்துக்கு உப்பு வாங்கிக் கொட்டி வைத்துப் பயன்படுத்திய நாம் இப்போது உப்பை பாலித்தீன் பாக்கெட்டுக்களில் வாங்கிப் பயன்படுத்துகிறோம். மாட்டு வண்டியில் கல் உப்பு விற்று வந்த சில்லறை வியாபாரிகள் இதனால் அற்றுப் போனார்கள். முடிந்தவரை கல் உப்பையே வாங்கி உபயோகப்படுத்தப் பழகுதல் ஆரோக்யத்துக்கு நல்லது.

உணவில்  உப்பும் அளவோடு இருக்கவேண்டும். ஊடலைப் போலஇல்லாவிட்டால்  உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான், தப்பைச் செய்தவன் தண்டனை கொள்வான் என்பது போலாகிவிடும்.
டிஸ்கி:- என்னுடைய மரபு சார்ந்த கட்டுரைகளைப் பாராட்டி வாசகர் கடிதம் எழுதியுள்ள மதுரை வி. சிதம்பரம் அவர்களுக்கு நன்றிகள். !!!

இந்தக் கட்டுரை பற்றி வந்த வாசகர் கடிதம். ! 


நன்றி பத்ரிக்கையாளர் அ. கண்ணன் சார். !!!

7 கருத்துகள் :

G.M Balasubramaniam சொன்னது…

உப்பை இனி யாரும் உப்பு பெறாத விஷயம் என்று சொல்லக்கூடாது

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யம்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

உப்பு
அருமையாகச் சொன்னீர்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உப்பின் மகத்துவத்தை விளக்கும் பதிவு. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது. அருமை.

Bhanumathy Venkateswaran சொன்னது…

உப்பு பெறாத விஷயம் என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கட்டுரை. பாராட்டுக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் பாலா சார்.

நன்றி ஸ்ரீராம்

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி பானு மேம்.

நன்றி வெங்கட் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...