எனது நூல்கள்.

வியாழன், 11 ஜனவரி, 2018

ஆண்டாள் உலா.

ப்ளஸ்டூ பருவம். மார்கழிக் காலை, பாமா அக்காவின் வீடு. ஊதுபத்தி, துளசி மணம், மெல்லிய பனி பெய்யும் காலை, வாசலை அடைத்துக் கோலம் பூசணிப்பூ, கை நிறைய கலர் கலராக டிசம்பர் பூக்கள்.

கொஞ்சம் சாமந்திகளும் நிவேதிக்க முந்திரி நிரடும் நெய் ஏல வாசனையில் சர்க்கரைப் பொங்கலோ, வாசத்திலேயே நெய்யும் மிளகும் உறைக்கும் வெண்பொங்கலோ கதகதப்போடிருக்க,  இரண்டடி அகல குழலூதும் கிருஷ்ணன் படத்தை வைத்துச் சுற்றியபடி

“ நீளா துங்கஸ் தனகரி “

“ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு.” ( மனதில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்ற வரியைச் சொல்லியபடி )

”அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வளர்த்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கு மட்பாஞ்ச சன்யமும் பல்லாண்டே”.

என ஆரம்பிக்கும் எங்கள் பாடல்கள்.,”கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான், கணையிருளகன்றது காலையம் பொழுதாய்,  மார்கழித் திங்கள், ஓங்கி உலகலந்த ( பள்ளியின் ப்ரேயர் பாடல். ) கீசு கீசென்று, கீழ்வானம் வெள்ளென்று, குத்துவிளக்கெரிய, ஆழி மழைக்கண்ணா, தூமணி மாடத்து, புள்ளின் வாய் கீண்டானை, எல்லே இளங்கிளியே, ஒருத்தி மகனாய்ப் பிறந்து , சிற்றம் சிறகாலே  இவற்றோடு மாணிக்க வாசகரின் கூவின பூங்குயில் கூவின கோழி ”இவையும் பாடுவோம்.

”வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான். ,”

”மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத. .. ”

“கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ..”

“ பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் “

“ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ “

”அன்னவயல் புதுமை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னுதிருப்பாவைப் பல்பதியம்”

“ திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே “  என்று தொடர்ந்தொலிக்கும்.

இப்பாடல்கள் அனைத்துமே கறவை இனங்களின் கழுத்துமணி ஒலியெழுப்பி கருக்கலின்  காட்சிப் பிம்பத்தை மனதில் உருவாக்கி அரங்கனோடும் ஆண்டாளோடும் நாமும் ஒரு கருப்பொருளாகக் கரைவதை உணர்த்தும்.

இவை அனைத்தையும் பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார்  யார் இயற்றி இருந்தாலும் நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தம், திருப்பாவை, பாசுரங்கள், நாச்சியார் திருமொழி  எல்லாம் எங்களுக்கு ஒன்றுதான். எல்லாமே ஆண்டாள் பாடியதுபோல் மயக்கம்.

தன் பாசுரங்களாலும் பூச்சரங்களாலும் அரங்கனை மட்டுமல்ல எங்களையும் கட்டி இழுத்தவள். அரங்கனுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் தொண்டாற்றியவள். ஆண்டவனையே ஆளனாய்ப் பற்றிய ஆண்டாள்.  அழகான பவித்ரமான புனிதமான மடந்தை.   நயமான  பெண் கவிதை.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, கோதை , பூமிப் பிராட்டி, நாச்சியார், ( மிகப் பெரும் ஆளுமை உடைய பெண்களைத்தான் நாச்சியார் என்போம். அதே போல் சேட்டை செய்யும் பிள்ளைகளை மிரட்டும்போது நாச்சியா மகன் வரட்டும் சொல்றேன் என்று சொல்வோம்  - மாமியாரையும் நாச்சியார் என்ற பதத்தில் வெகு மரியாதையாகக் குறிப்பது ). , ஆனந்தவல்லி என்று எத்தனை பெயர்கள் அவளுக்கு

ஆண்டாளைப் படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் யெவனத்தை உணர்வது திண்ணம். அரங்கன் ஒரு மாயக் காதலன் அவனோடு அவளுக்கு ஒரு தெய்வீக உறவு . இறைவனோடு ஆழ்ந்த உறவுகொண்டவர்கள் ஆழ்வார்கள். பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண்பால். ஆனால் அனைத்து ஆழ்வார்களும் ஆண்டாள் போலவே இறைவனை நாயகனாக வரித்துத் தம்மை நாயகி பாவத்தில் வைத்து உருகிப் பாடிய பாடல்கள் அநேகம்.

நம் மனதில் அரங்கன் உலா நடக்கிறதோ இல்லையோ ஆண்டாள் உலா நிச்சயம் நடக்கும் . பதின்பருவத்தில் என்னை ஈர்த்த மாயக்காரி அவள். எல்லாப் பெருமாள் கோயில்களிலும் அவளுக்குத் தனிச்சந்நிதி உண்டு. தாயார் வலப்பக்கம் என்றால் அவள் அவரின்  இடப்பக்கம் ( இதயப் பக்கம் ) குடியிருப்பாள். அரங்கனையே சூடியவள். ஆழ்வார்களைப் பாமாலையாக்கினால் அதில் அவர் நெஞ்சில் உறையும் துளசியாக அவள் இருப்பாள்.

ஜீவாத்மா பரமாத்வோடு ஐக்கியமாக விரும்பும் பாடல்களாகத்தான் இன்றுவரை திருப்பாவைப் பாடல்கள் எனக்குப் பட்டிருக்கின்றன. இந்தப் பாடல்களை அறிந்தும் அறியாத வயதில் பாடியதாலோ என்னவோ என் கணவர் பெயர் ( வீட்டில் அழைப்பது ) கண்ணன் என்றிருப்பது என் பூர்வஜென்ம பாக்கியமாக நினைத்துக் கொள்வேன். இப்பாடல்களை உள்ளம் உருகப் பாடியதன் பலன்தான் இவர் கணவராகக் கிடைத்தார் எனத் திண்ணமாக நம்புகிறேன்.

கடவுள் உணர்வதற்குரியவர். அவர் அடியவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். விவாதத்துக்குரியவர்களல்லர்.

ஹாலிவுட் திரைப்படங்களில் நம் விநாயகரையும் பத்ரகாளியையும் பல்வேறு ரூபத்தில் கோரமாகப் படைத்து ஏதோ ஏலியன்ஸ் மாதிரிக் காட்டி இருப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு வியாபார பிம்பம் மட்டுமே.. அதிலும் இந்திய தெய்வங்களைச் சிதைத்துக் காட்டுவதில் அவர்களுக்கு ஒரு வக்கிர சந்தோஷம்.  நம் எண்ணத்திலும் இதயத்திலும் இக்கடவுளர்கள் பெற்றிருக்கும் இடம் அவர்கள் எக்காலமும் அறிய முடியாதது. மெய்ஞ்ஞானம் அறியாத அஞ்ஞானிகள்.

புத்தூரில் பிறந்து ரங்கனுக்கு வாக்கப்பட்டவள். அரங்கனுடன் ஐக்கியமானவள் அரங்கத்துக்கு வந்தவிதம் வருத்தம்.

அரங்கத்தில் சொன்ன கருத்துக்கள் அற்புதம் கவிஞரே ஆனால் நடுவில் ஏன் அந்த நரகல். யாரோ செய்த ஆராய்ச்சியை இறைச்சியாய்ப் படைத்ததில் கவிச்சி நாற்றம்.  விருந்தைப் பரிமாறி வெருட்டிய கதையாய் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருளா,  பகிர்தல் நலமா எனத் தெளிதல் நன்று.  யார் யாரோ நம்மை, நம் நம்பிக்கைகளை, நம் கடவுளர்களை,  நம் வழிபாட்டுப் பிம்பங்களைச் சிதைக்கிறார்கள். நூற்றாண்டுக்கான நல்ல கவிதைகள் படைத்த  நீங்களுமா வைரமுத்து ?

6 கருத்துகள் :

Govindaraju Arunachalam சொன்னது…

"கடவுள் உணர்வதற்குரியவர். அவர் அடியவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். விவாதத்துக்குரியவர்களல்லர்."
இவை வைர வரிகள்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

இமா க்றிஸ் சொன்னது…

இது முற்றிலும் எனக்குப் புரியாத‌ மொழி. மீரா, ஆண்டாள் இருவரையும் பிடிக்கும். படிக்கச் சுவாரசியமாக‌ இருந்தது என்று படித்தேன். கடைசியில் நீங்கள் சொல்லியிருப்பது என்னவென்பதைப் புரிந்துகொண்டேன். கேட்கும் ஒவ்வொரு தடவையும் எனக்கும் நெடுடலாகத் தோன்றிய‌ விடயம்.

Sri Dharan சொன்னது…

தமிழ் சினிமா செய்திகள்

R Muthusamy சொன்னது…

வைரமுத்துவிற்கு ஒரு நல்ல கேள்வி! அவர் தன் தரப்பு ஞாயத்தை எடுத்துரைப்பாரா?

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அருணாசலம் சார்

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி இமா க்றிஸ்

நன்றி ஸ்ரீதரன்

நன்றி முத்துசாமி சார். அதுதான் தெரியவில்லை. ஹ்ம்ம்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...