எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 டிசம்பர், 2013

மகளிர் மன்றங்களின் தேவைகளும், சேவைகளும். :-

மகளிர் மன்றங்களின் தேவைகளும், சேவைகளும். :-

திருப்பூரில் 20 வருடங்களாகக் கல்விச்சேவையில் ஈடுபட்டிருக்கும் ார்க் கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் மன்றத்தைத் துவக்கி வைக்க அக்கல்லூரியின் முதல்வரும் முகநூல் நண்பருமான திருமாறன் ஜெயராமன் அழைத்திருந்தார்.

அரசாங்கத்திலேயே இன்னும் 33 % இடங்களை நாம் பூர்த்தி செய்யவில்லை. ஆனால் பார்க் கல்லூரியில் சரிபாதியாக அங்கம் வகிப்பது அதை நிறுவிய ரவி அவர்களின் மனைவியும் மகளும். PARK  கல்லூரி  PREMA , ANUSHA, RAVI, KARTHIK, ஆகியோரின் பெயரில் முதல் எழுத்தைக் கொண்டு அமைந்துள்ளது. அதிலும் மனைவி மகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பார்க் கல்லூரிகளுடனான தொடர்பு எனக்கு 8 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. என் மகன் அங்கே பொறியியல் படித்தார். மேலும் அதன் தாளாளர் அனுஷா என் முகநூல் தோழி . அந்தக் கல்லூரிகளின் ஹாஸ்பிட்டாலிட்டி குறிப்பிடத்தக்கது.  


அதே போல் முதல்வர் ஜெயராமன், பேராசிரியைகள் சுமதி, புவனா, ப்ரவீன், சபரி, ஆனந்த் ஆகியோரும் சென்றதில் இருந்து சிறப்பாக கவனித்து அனுப்பினார்கள்செயலாளர் ரகுராஜன் அவர்களும் முதல்வர் திருமாறன் அவர்களும் மாணாக்கர்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றிருக்கிறார்கள்.

பூக்கள் பூத்திருக்கும் இடத்தைப் பூங்கா என்போம். அதுபோல் பெண் பூக்கள் பூத்திருக்கும் இடத்தைப் பார்க் கல்லூரி எனக் குறிப்பிடலாம்மகளிர் மன்றங்கள் அங்கங்கே அமைக்கப்படுகின்றன. அவற்றின் தேவைகளும் சேவைகளும் என்னென்ன என்பதைப் பற்றி என்னுடைய கருத்துக்களைப் பூவையருடன் பகிர்ந்து கொண்டேன்

பெண்களுக்கு சமூகம் பற்றிய விழிப்புணர்வும் சமூகப் பொறுப்புணர்வும் வேண்டும். அதற்கு மன்றங்கள் வழிகாட்டுகிறன.

மகளிர் மன்றங்கள் மாணவப் பருவத்திலேயே மகளிரை ஒன்றிணைக்கும் குழுவாக அமைகிறது. ஏதேனும் விஷயத்தில் தனித்து ஒருவர் குரல் கொடுப்பதை விட ஒரு குழுவாக அது சொல்லப்படும்போது விஷயத்தின் வீரியம், சக்தி கணக்கில்கொள்ளப்பட்டு அதன் தீர்வு விரைவில் கிடைக்க வழிகோலுகிறது.

மகளிர் மன்றங்கள் மூலம் பெண்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்படவும், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் தேவைகளை மேல் மட்டங்களுக்குக் கொண்டு செல்லவும், தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும், தங்கள் தலைமைப் பண்பை, ஆளுமைப் பண்பை வளர்த்துக் கொள்ளவும், சேவை மனப்பான்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் முடிகிறது.

இதற்காக சிலரில் வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்தேன். களப்பணில் இருந்து கார்ப்பரேட் பணி வரை இருக்கும் மகளிர் - தமிழ்நாட்டில் இருந்து வடநாடு வரை - வயலில் இருந்து கம்ப்யூட்டர் மூலமாக தனியாகவும் அதன்பின் குழுவாகவும்  செயல்பட்டு வெற்றி அடைந்த கதைகளைப் பகிர்ந்து கொண்டேன். இவர்களை சேஞ்ச் மேக்கர்ஸ் (  CHANGE MAKERS) என்று சொல்லலாம்.

இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு  குடிகாரக் கணவர்கள் சம்பாதித்ததைக் குடித்துவிட்டு வீட்டுக்கு ஏதும் கொடுக்காமல் போக மனைவிகள் பிள்ளை குட்டிகளுடன் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். அந்த சமயத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்கு அளவிடற்கரியது. இன்று பலவாய்ப் பல்கிப் பெருகி இருக்கும் மகளிர் குழுக்கள் அந்தப் பெண்களின் அன்றாட வருமானத்தைச் சரியாகச் சேமிப்பதன் மூலம் தங்கள் குடும்பத்தேவையை நிறைவேற்றவும், சொந்தமாக வீடு, மனை வாங்கிக் கொள்ளவும், பிள்ளைகளைப் படிக்க வைக்கவும் முடிகிறது. ஓரளவு தங்கள் சம்பாத்தியத்திலேயே தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள்

முதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சின்னப்பிள்ளை. இவர் களஞ்சியம் என்ற அமைப்பின் தலைவி. இவர் மதுரைப் பக்கம் கிராமத்தில் பிறந்தவர். பத்து வயதில் பூப்படைந்து 12 வயதில் திருமணம். 5 குழந்தைகள். கணவருக்கு உடல் நலமில்லாததால் வயலில் கூலி வேலைக்குச் சென்றவர் பின்னாளில் பலருக்கு வேலை கொடுக்குமளவு உயர்ந்தார். பில்டிங் காண்ட்ராக்ட் போல வயலில் நாற்று நடும் வேலைக்கும் மொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்து உடல் ஊனமுற்றோர், முதியோர், உடல் நலமில்லாதவர்களும் வேலை வாய்ப்பையும் வருமானத்தியும் பகிர்ந்தளித்தவர்.

இவருடன் வேலை செய்த மக்கள் ஓரளவு பொருளாதாரம் அன்றாடத் தேவைகளை ஈடு செய்யும் அளவு வந்ததும்  சொந்தமாக வீடு கட்ட முனைந்தார்கள். சில இடங்களில் அரசாங்கம் வழங்கும் சொந்த வீடு வேண்டி பலருக்கும் கோழி , ஆடு, மீன் என்று கொடுத்து ஏமாந்ததால் இவர் குழுவுக்கு உதவ வந்த தானம் அறக்கட்டளையைச் சேர்ந்த வாசிமலை என்பவர் மகளிர் சுய உதவிக் குழு  அமைக்கும்படிச் சொல்ல அவர்கள் முதலில் நம்பிக்கையில்லாமல் மறுத்திருக்கிறார்கள். பின்பு தங்கள் பணத்தைத் தாங்களே சுழற்சி முறையில் பங்கிட்டு வட்டிக்கு விட்டுக் கொள்ளலாம் அதன் மூலம் வங்கிக் கடனும் பெறலாம் எனச் சொல்லப்பட்டபின் அவர்கள் குழுவாக அமைந்தார்கள்.


ஆனால் முதலில் 14 பேர்தான் சின்னப்பிள்ளையை நம்பிக் குழுவாக இணைந்தார்கள். ஆனால் இன்று கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இந்தக் குழுவில் அங்கத்தினராக இருக்கிறார்கள். இவரின் சிறப்பு என்னவென்றால் இவரின் சேவைகளைக் கேள்விப்பட்டு பிரதமர் வாஜ்பாயியே இவரைச் சாதனைப் பெண்ணாக கௌரவித்து விருதுகொடுத்த போது இவரின் கால்களில் விழுந்து வணங்கி இருக்கிறார். அவ்வளவு பெருமை வாய்ந்தவர் . அது மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட இது எப்படி வெற்றிகரமாக செயல்படுகிறது என்று சொல்வதற்காக இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

அடுத்து ஒற்றை ஆளாக ஆதிவாசிகளின் நல்வாழ்க்கைக்குப் பாடுபட்டு வரும் தயாபாயைச் சொல்லலாம். இவர் கேரள கன்யாஸ்த்ரி. ”ஒற்றையாழ்இவரின் வாழ்க்கையைப்  பற்றி  ஷனி ஜேக்கப் பெஞ்சமின் எடுத்த குறும்படம். ஒரு நாள் கன்யாஸ்த்ரீகளுக்கான மடத்தில் ஜெபம் செய்துகொண்டிருந்தபோது இவரின் மனதில் ஒரு குரல் ஒலித்திருக்கிறது.

புத்தாண்டு கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களில் மட்டுமே இந்த ஆதிவாசிகளைப் பார்த்து உணவும் கேக்கும் கொடுக்கிறோம். எப்போதோ மருத்துவ முகாம், சில கல்விப் பணிகள் செய்கிறோம். ஆனால் நாம் மட்டும் மடத்தில் சௌகர்யமாக இருக்க அவர்கள் அனைவரும் வெளியே இருளில் குளிரில் கஷ்டப்படுகிறார்கள்சேவை செய்யவேண்டும் என்றால் அவர்களுடன் கூடவே இருந்து செயல்படவேண்டும். இது தனக்கான இடமல்ல என்று உணர்ந்தவுடன் மறுநாளே மதர் அவர்களிடம் சென்று தான் வெளியே சென்று துறவியாகவே மக்களோடு மக்களாக இருந்து போராடப் போவதாக அனுமதி கேட்கிறார். அனுமதி கிடைத்ததும் அவர் ஆதிவாசி மக்களுடனே தங்கி அவர்கள் வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்அநியாயம் நடக்கும் இடங்களில் எல்லாம் சென்று தட்டிக் கேட்கிறார். அவர்களுக்கான உறைவிடம், படிப்பு வசதிகள், பெண் கல்வி, அடிப்படைத் தேவைகள், உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடி வருகிறார்.

அடுத்து உத்தரப் பிரதேசத்தில் போராடிவரும் குலாப் கேங்க் ( GULAB'S GANG) என்ற அமைப்பு. இதன் அங்கத்தினர்கள் அனைவரும் பிங்க் கலர் புடவை அணிந்து பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு மட்டுமல்ல.பொதுவான கோரிக்கைகளுக்காகவும் போராடி வருகிறார்கள்.

இதை அமைத்தவர் சம்பத் பால் தேவி. அரசாங்கத் துப்புரவுப் பணியாளர். இவருக்கும் சிறுவயதிலேயே திருமணமாகி குழந்தைகள் பிறந்து விட்டார்கள். ஆனால் ஒரு முறை ஏதோ ஒரு கேஸில் தவறுதலாக காவலர் இவரைப் பிடித்து இவர் தன் தரப்பைச் சொல்லவிடாமல் லத்தியால் அடித்துவிட  இவர் கோபம் கொண்டு அதே லத்தியைப் பிடுங்கி அடித்திருக்கிறார். உடனே அந்தக் காவலர் தன் பக்கத் தவறை உணர்ந்து அமைதியாக ஆகிவிட்டதாகக் கூறும் இவர் தன்னைத் துன்புறுத்துவர்களை, மெயினாகக் குடித்து விட்டு அடிக்கும் கணவர்களைப் பற்றிப் பெண்கள் புகார் அளித்தால் உடனே இந்த குலாபி குழுவைச் சேர்ந்தவர்கள் அந்தக் குடிகாரரைப் பிடித்து அடிப்பதாகக்கூறினார். இவர்கள் பொதுவாக பிங்க் நிறப்புடவை அணிவதோடு கையில் ஒரு லகடி ( கம்பு) யும் வைத்திருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் இவர்கள் வாழும் பகுதியில் பொதுவாக படிப்பறிவு கம்மியாக உள்ள மக்கள். பின் தங்கிய கிராமம். வரதட்சணைக் கொடுமை, ஜாதிப்பாகுபாடு அதிகம். மேலும் குடும்பத்தலைவர் வகுத்த சட்டத்தின்படி நடக்கவேண்டும். வறட்சியான கிராமம். தொழில்கள் ஏதும் கிடையாது. பெண்கள் தலையை முக்காடிட்டு அந்நியர் முகத்தைக்கூடப் பார்க்க மாட்டார்கள்இவர்கள் மத்தியில் சம்பத் பால் தேவி பெண்களின் கல்வி, முதிய பெண்களுக்கான பென்ஷன், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் ஆகியவற்றுக்காகவும், கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்காகவும் போராடி வருகிறார். இவருக்கு கிராம மக்களின் ஆதரவும் அமோகமாக இருக்கிறது.

துர்க்கா சக்தி நாக்பால் ஐஏஎஸ் மண் மாஃபியாக்களுக்காகப் போராடிப் பதவி இழந்தார். இது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தலைவியும் கூட மண் மாஃபியாக்களுக்கெதிராகப் போராடி வருகிறார். அவர் வி. ஜஸீரா. இவர் தன் தாய் வீட்டுக்கு டெலிவரிக்கு சென்றிருந்தபோது அங்கே கடற்கரையில் மண் எடுக்கப்பட்டுப் பள்ளமாகக் கிடந்த இடத்தைப் பற்றி அதிர்ந்திருக்கிறார். உடனே தன் பையனோடு உண்ணாவிரதமிருந்து  கோரிக்கை வைக்க தற்போதுஒரு காவலரை கடற்கரைக்குக் காவலாகப் போட்டிருக்கிறது அரசாங்கம்.

இவர்கள் எல்லாம் களத்தில் போராடினால் கணினியில் இரு பெண்மணிகள் கலக்கி வருகிறார்கள். இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மிஸஸ் காந்தி என்றழைக்கப்படும் ப்ரீத்தி காந்தி. இவர் மோதி ஆதரவாளர். 20,000 ஃபாலோயர்கள். இவர் போடும் ட்வீட்டுக்கள் 500 ஷேர் வரை பகிரப்படிகின்றன

இன்னொருவரும் மும்பையைச் சேர்ந்தவர்தான். இவர் வித்யுத் காலே. இவருக்கும் 9. 750 பின் தொடர்பவர்கள். இவர் ஒரு வலைப்பதிவரும் கூட. இவர் மோதி எதிர்ப்பாளர்.

மேலும்  I LEAD INDIA ( ileadindia) என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய  நிகழ்ச்சியில் YOUTH BRIGADE ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மொத்தம் 17 பேரில் 10 பேர் பெண்கள். இஷ்னி, பூஜா, திரிஷா, அதிதி, அலாஸ்கி, ஹனி, ப்ரீத்தி, ராஷ்மி  ஆகியோர். பெண்களின் வளர்ச்சி அபரிதமாகப் போய்க்கொண்டிருக்கிறது தடுத்து நிறுத்த முடியாத அளவில் . 2025 வாகில் பெண்கள்தான் அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் இருப்பார்கள் என்று ஒரு சர்வே சொல்லுகிறது.

இங்கு சொல்லபட்ட பெண்கள் குடும்பத்தலைவி, கன்யாஸ்த்ரி, ஐஏஸ் ஆகிய பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும் தனியாகவோ, அதன் பின் குழுவாகவோ இணைந்து சமூகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே போல கல்லூரிப் பெண்களும் இணைந்து மக்களுக்காக சமூகத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டும். இணைந்து செயலாற்றி நல்லன பெற்றுத் தரவேண்டும். அதற்கான பொறுப்பு அவர்களின் கையில் இருக்கிறது.

அதன் முன் தன்னைத் தானே அவர்கள் செப்பனிட்டு சீர்படுத்திக் கொள்ள வேண்டும். மகளிர் சக்தி என்பது ஒப்பிடற்கரியது. முதலில் தன்னைத் தானே கண்டடைதல், தன்னுடைய சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றிலும் தன் உயர்வை எண்ணி ஒருமைப்பாட்டோடு உழைத்தல், தான் யாராக ஆக விரும்புகிறோம் என்பதை மனக்கண்ணில் காணுதல், ஆகியன முக்கியம். மேலும் ஒரு விஷயத்தை பாசிட்டிவாக மனதிற்கு எடுத்து செல்லுதல், அதைப்பற்றி அதன் விளைவுகள் பற்றி முடிவு வெற்றியாக அமைவது பற்றி மனதில் உருவகப்படுத்துதல் மற்றும் உருவமைத்தல், தொடர்ந்து விடாமல் முயற்சித்தல், விரும்பியதை அடையும் வரை உழைத்தல், அதன்பின்னும் சோர்ந்து விடாமல் வெற்றியைத் தக்க வைக்க உழைத்தல் முக்கியம்.

எந்த ஒரு விஷயத்திலும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு முக்கியம். அதே போல் எல்லாச் செயல்களிலும் தடையற்ற  சுதந்திரத்தோடு ஈடு படாமல் குடும்பம் என்ற சேணத்தை அணிந்து கொள்வதன் மூலம் தீமைகளைத் தடுத்தல் தவிர்த்தல் முக்கியம். அது போல் எந்த செயலிலும் ஈடுபடும் முன் தன்னுடைய மனதின் சொல்லைக் கேட்பது ( HEAR THE INNER VOICE)  முக்கியம். அது பொய் சொல்லாது. தவறாக வழிநடத்தாது.

அதே போல பாதுகாப்பான இண்டர்நெட் மற்றும் கைபேசிப் பயன்பாடு செய்யப்படணும். உலகத்தைத் தெரிந்து கொள்ள நல்ல இலக்கியங்கள் படிக்கப்பட வேண்டும் . முக்கியமா கல்லூரியின் லைப்ரரியைப் பயன்படுத்தினாலே போதும்.

மகளிர் மன்றத்துக்கான வெப்சைட்டுக்கள், வலைத்தளங்கள் அமைக்கலாம். அது மகளிரை ஒன்றிணைக்கப் பயன்படும். முக்கியமாகக் கைக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் ஆண்களை எதிர்க்கவில்லை., அநீதியையே எதிர்க்கிறோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் வழிகாட்டுதல் அவசியம். அனைவரும் நமக்கு உதவக் காத்திருக்கிறார்கள். மனிதர்களை வசப்படுத்துங்கள். உலகமே வசமாகும். குழுவாக இணைந்து செயல்படுங்கள் . நிச்சயம் ஜெயிப்பீர்கள்.



2 கருத்துகள்:

  1. அருமை சகோ...

    நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -

    தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

    விளக்கம் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன் சகோ. முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...