புதன், 18 டிசம்பர், 2013

பாரதி பணிச்செல்வர் விருதுக்கு வாழ்த்துகள்.


லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா ராகவன் மேடம், பத்ரிக்கைத் துறையில் சிலகாலம் என்னைப் பணியாற்ற அழைத்த பேரன்புக்கு உரியவர். அவரால்தான் நான் சாதனை அரசிகள் புத்தகம் கொண்டுவர முடிந்தது. அவரும் ஒரு சாதனை அரசிதான். அவரைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். 


கவிதாயினி மற்றும் வலைப்பதிவரான நான் ஒரு நிருபராகப் பணிபுரிவது எப்படி என்றும் விஷயம் சேகரிப்பது எப்படி என்றும் குழம்பிய வேளை உங்களைச் சுற்றித்தான் செய்தி இருக்கிறது தேனம்மை.  உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொன்றும் செய்திதான். அதை நீங்கள் அணுகும் முறையில் இருக்கிறது என அனுபவப் பாடம் சொல்லிக் கொடுத்தவர். ஜர்னலிசம் என்பதை இவரிடம் பால பாடமாகப் படித்தேன். 

பொதிகைத் தொலைக்காட்சியில் என்னுடைய கவிதை ஒன்றைக் ( விடுவிப்பு என்ற தலைப்பு )  கொஞ்சம் தேனீர், கொஞ்சம் கவிதை நிகழ்ச்சியில் படித்துப் பெருமைப்படுத்தியவர். நிறைய பெண் பதிவர்களை லேடீஸ் ஸ்பெஷலில் நான் அறிமுகப்படுத்தக் காரணமானவர். 20 பெண் வலைப்பதிவர்கள், 7 ஆண் வலைப்பதிவர்கள் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள்.  20 போராடி ஜெயித்த கதைகள், 7 மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் , 4  முதலீடு சம்பந்தமான கேள்வி பதில்கள் பேட்டி,  5 கவிதைகள் எழுதி உள்ளேன். அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் நான் ஆரம்பித்த ஒரு கட்டுரையை இன்றும் அதன் வாசகிகள் தங்கள் அம்மா பற்றிய நினைவோடு பகிர்ந்து தொடர்ந்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாக பத்ரிக்கைத் துறையில் கோலோச்சி வரும் அவரது சாதனைகள் பிரம்மாண்டமானவை. முகநூலில் பெண் உலகம் மூலமாகவும் பெண்கள் சக்தியைப் பெற்றிருக்கிறார். 

சுய உதவிக் குழுக்களுக்கு நவராத்திரி சமயங்களில் குமரன் கல்யாண மண்டபத்தில் ஸ்டால் போட்டு விற்பனை செய்ய உதவுவது முதல் பெண்களுக்கான போட்டிகளையும் நிகழ்த்தி அந்த சுய உதவிக் குழுப் பெண்களின் உற்பத்திப் பொருட்களையே வாங்கிப்பரிசாக அளித்து இருபக்கங்களையும் ஊக்குவிப்பார். 

தன்னுடைய பத்ரிக்கையில் காலத்துக்கேற்ற மாற்றங்களோடு இளைய ரத்தம் பாய்ச்சும் ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளித்து வெளியிடுவார். இவரின் புத்தகம் மூலம் நிறையப் புதியவர்கள் வெளியுலகுக்குத் தெரிய வந்திருக்கிறார்கள்.   புதுமை விரும்பி, புதுமைப் பெண், தன்னம்பிக்கைச் சரித்திரம் அவர். பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் 4 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். இவரது முதுமையின் முகங்கள் என்ற தொடரை நான் விரும்பிப் படிப்பேன். ஜ்வாலா முகி என்ற புனைபெயரிலும் எழுதி வருகிறார். 

பத்ரிக்கைத் துறை மட்டுமல்லாது வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துச் சிறப்பித்துள்ளார். விளம்பரத் துறையிலும் கோ ஆர்டினேட்டராகப் பணியாற்றி வருகிறார். பல்துறை வித்தகர்.

ரோட்டரி க்ளப் மூலமாகவும், தான் சார்ந்துள்ள சங்கங்கள் மூலமும் பொதுச்சேவை செய்வதுடன் லேடீஸ் ஸ்பெஷல் வாசகிகளான அனைத்து மகளிரையும் அதில் ஈடுபட ஊக்குவிப்பார். 

இனி அவருக்கு எட்டையபுரத்தில் வழங்கப்பட்ட பாரதி பணிச்செல்வர் விருது பற்றி அவர் முகநூல் வரிகளில்..


////////என்ன தவம் செய்தேன் .

"பாரதி " யார் என்று தெரியும் முன்பே பாரதியொடு பயணப்படஆரம்பித்தவள் நான் .


மழலை பேசும் போதே பாப்பா பாட்டு சொல்லிக் கொடுத்த வீடு , நான்காம் வகுப்பு படிக்கும் போது பாரதி பாட்டுப் போட்டியில் பரிசு பெற்ற பாரதியார் புத்தகம், 12 வயதில்ஆல் இந்தியா ரேடியோவில் சுதந்திரப் போராட்டம் பற்றிப் பேசச் சொன்ன போது "சுதந்திரத் தீ மூட்டிய கவி "
என்று பேசி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது ,என்று சொல்லிக் கொண்டே போகலாம் . 

வளர்ந்து வளர்ந்து ............வீட்டில் கொலுவுக்கு அழைப்பிதழ் அடித்தால் கூட அதில் பாரதியின் சக்தி பாட்டுதான் இருக்கும் . அப்படி எனக்குள்ளே புகுந்து கொண்டன பாரதியின்வரிகள்.

அப்படி பாரதியைக் கரைத்துக் குடித்தவளா நான் என்றால்.......................

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.பாரதியார் பாடல்கள் பல ..............
நம்முடைய நாடு என்னும் நாட்டுப் பற்றை என்னுள் ஊட்டியவை, பெண்ணாய்ப் பிறந்த்தைப் பற்றிப் பெருமை கொள்ள வைத்தவை, கௌரவத்தொடு ஒரு பெண்ணால் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்று புரிய வைத்தவை, சோர்ந்து போனபோதெல்லாம் என்னை ஊக்கம் தந்து எழுந்து நிற்க வைத்தவை............இப்படி என்னை பல விதங்களில் செதுக்கியவை பாரதியின் வார்தைகள்,வரிகள்.

வங்கியில் பணியாற்றும் போது நாடகம் போடலாம் என்று முடிவான போதும் நான் தேர்ந்தெடுத்தது "பாரதியின் பாஞ்சாலி சபதம் " !! பாரதியின் கவிதைகளை நாடகமாக்கி நானே இயக்கி பாஞ்சாலியாகவும் நடித்தது என்க்குள் இருந்த பாரதிக் கொழுந்து தந்த தைரியதினால் தான்..


லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கை ஆரம்பிக்க முடிவானதும் அத்ற்க்கு லோகோ வடிவமைக்க வேண்டும் என்று எல்லோரும் சொன்ன போது " பாரதிதான் " என் பத்திரிக்கையின் லோகோ என்றே முடிவு செய்தேன்........................


பாரதியின் வைர வரிகள் என் வாழ்வின் அஸ்திவாரம்.அந்த அளவிற்கு அவை என்னை வளர்த்தன,உருவாக்கின, எனக்குள் உரமூட்டின,
இப்படி என் வாழ்வோடு கலந்த பாரதியின் பிறந்த நாள் அன்று , அவர் பிறந்த எட்டையபுடரத்திலேயே எனக்கு ஒரு விருது கிடைத்தது என்றால் அது எவ்வளவு பெறும் பேறு !!


அனைதிந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் பாரதி பிறந்த எட்டயபுரத்தில் அவருடைய பிறந்த நாள் (11.12.13 ) அன்று (நேற்று) எனக்கு "பாரதி பணிச்செல்வர் விருது " அளித்து கெளரவித்தது. இது பாரதி எனக்களித்த ஆசி என்றே நினைக்கிறேன். 


காலை பாரதி இல்லத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து விட்டுப் பிறகுஅந்த ஊர் குழந்தைகள்,பெண்கள், ஆண்கள் அனைவரும் எங்கள் எழுத்தாளர் சங்கத்தினரோடு சேர்ந்து ஊர்வலமாகச் சென்றோம். பாரதியார் மணி மண்டபத்தில் விழா நடந்தது .பிறகு எழுத்தாளர் சங்க நண்பர்களோடு ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி இல்லம், வீர பாண்டிய கட்டபொம்மன் அரண்மனை, ஜக்கம்மா கோயில், கயத்தாற்றில் கட்டபொம்மனைத் தூக்கில் இட்ட இடம் எல்லாவற்றையும் பார்த்து விட்டுத் திரும்பினோம்./////------ மிக அருமை மேடம். பாரதியின் புதுமைப் பெண் நீங்கள்தான். பாரதி பிறந்த ஊரில் உங்களுக்குக் கிடைத்த அரிய விருதுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறையப் புதியவர்களை அறிமுகப்படுத்தவும், பல மகளிருக்கு வாழ்வில் தன்னம்பிக்கை ஒளியூட்டும் பணி செய்யவும் வாழ்த்துக்கள். 

7 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான தகவல்... நன்றி சகோதரி...

வாழ்த்துக்கள்...

Menaga sathia சொன்னது…

Congrats to Girija Mam!!

அம்பாளடியாள் வலைத்தளம் சொன்னது…

மகத்தான விருது ! இலைமறை காயாய் இன்றும் எங்கோ ஒரு மூலையில்
தன்னம்பிக்கையோடு எழுதுகோலைத் தன் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையோடு
கைபிடித்து வலம் வரும் எம் போன்ற பெண்ணினத்தின் எண்ணத் திரையைப்
படம் பிடித்துக் காட்டுவதற்கு இவர்களைப் போன்றவர்களின் அறிமுகம் என்பதே
ஒரு வரம் தான் .விருது பெற்ற சாதனைப் பெண்மணிக்கும் தங்களுக்கும்
என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .

கோமதி அரசு சொன்னது…

நிறைய பெண் பதிவர்களை லேடீஸ் ஸ்பெஷலில் நான் அறிமுகப்படுத்தக் காரணமானவர். 20 பெண் வலைப்பதிவர்கள்,//

20லில் நானும் ஒருத்தி.
மார்கழி வந்தாலே லேடீஸ் ஸ்பெஷல் நினைவு வந்து விடும். என் கட்டுரை மார்கழி மாதம் இடம் பெற்றது.
தேனம்மை! உங்களுக்கு நன்றி.
கிரிஜா ராகவன் அவர்களுக்கு பாரதி பணிச்செல்வர் விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள். மேலும் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

கிரிஜாம்மாவுக்கு விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி..

இப்படிக்கு,
20ல் ஒருத்தி :-)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

நன்றிடா மேனகா

நன்றி அம்பாளடியாள்

நன்றி கோமதி அரசு மேடம்

நன்றி சாந்தி :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...