செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அம்மா...அருமை அம்மா

அன்பு எனப்படுவது யாதெனின் .. அம்மா என்றால் அன்பு..

நாம் செலுத்துகிறோமோ இல்லையோ பிரதிபலனற்று நம்மிடம் அன்பு செலுத்திக்கொண்டு இருப்பவர் நம் அம்மா.. நம்மை நல்வழியில் செலுத்துபவரும் அவரே.. அம்மா என்று சொல்லும்போதே கண்டிப்புக் கலந்த கனிவுதான் தோன்றுகிறது. கனிவும் கண்டிப்பும் சேர்ந்த கலவைதான் அம்மா. உற்றது செய்யும் போது பாராட்டுதலும் அற்றது செய்யும் போது வழி நடத்துதலும் அம்மாவின் இயல்பு. அவளின் அன்புக்கு இணையுண்டோ.?

தாய்ப்பாலைப் போல முதல் முக தரிசனம் நம் அம்மா முகத்தில்தான் நிகழ்கிறது. ! நாம் பார்த்த முதல் அழகியும் அவள்தான். அவள் முந்தானை வாசம்தான் நாம் உணர்ந்த முதல் சுவாசம்.! அன்கண்டிஷனல் லவ் என்பதெல்லாம் அம்மாவிடம் கிடையாது! எல்லாம் ஒரே கண்டிஷந்தான்..!

காலையில் அலாரம் வைத்து எழுந்து, ஸ்டவ்வில் தண்ணீர் வைத்து ஹார்லிக்ஸ் கலந்து குடித்து, படிக்க அமர வேண்டும். வாசலில் கோலமிட வேண்டும். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ படிக்கும் போது நம் துணியை நாமே துவைத்து உலர்த்தப் பழகிக் கொள்ள வேண்டும். புத்தக., துணி அலமாரியை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். உடல் சுகாதாரம்., பாத்திரபண்டங்களை நன்கு பராமரிப்பது., சமையல்., உணவுப் பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாத்துப் பக்குவம் செய்து உரிய நேரத்துக்குப் பயன்படுத்துவது., சமையலறை சுத்தம்., வீட்டின் சுத்தம்., கைவேலைகள்., பின்னல்கள்., குழந்தைகள் பராமரிப்பு., கை மருந்து இவையெல்லாம் போக கவி எழுதும் திறனும் கைவரப் பெற்றது அம்மாவால்தான்.

பிள்ளை பெற்ற சமயத்தில் எண்ணெய்த்தண்ணீர் ஊற்றிவிட என்று முத்தியக்கா என்று ஒரு அக்கா வருவார்கள். ஒரு முறை அம்மா இல்லாத தினத்தில் வந்த போது குழந்தையை வைத்துக் கொள்ளவும் ., எனக்கான குளியலுக்கு தயார் செய்யவும்., வெந்நீர்., காய்ச்சிய எண்ணெய்., வாசனைப்பொடி., சாம்பிராணி., கை மருந்து., குளித்தவுடன் ஹார்லிக்ஸ்., என தயார் செய்வதற்குள் களைத்து விட்டது.. அப்போது அந்த அக்கா சொன்னார்கள்., தாய் செய்வதை யாராலும் செய்யமுடியாது என்று .. உண்மைதான் தாய் செய்வதை யாரும் செய்ய முடியுமா என்ன..?

கண்டிப்போடு அன்பு செலுத்தினாலும் சில சமயம் அம்மா கோபத்தில் பேசாமலிருந்தால் எனக்கு உலகமே நின்றுவிடும். அந்தக் கண்டிப்பான பேச்சாவது கிடைக்காதாவென..! அன்பையும் பாராட்டையும் அம்மா பிரசாதம் போலக் கொஞ்சமாக தந்ததால் இன்னும் இன்னும் எனத் தேடிக்கொண்டே இருக்கிறது மனது.

பிரசாதம் உயர்வானது அல்லவா? அமிர்தம் சிறிது கிடைத்தாலென்ன.. அதிகம் கிடைத்தாலென்ன..?

இன்னும் கூட அம்மாவை மறக்காத நேரமிருக்காது. என் எல்லா செயல்களின் நேர்த்தியிலும் அம்மா இருக்கிறார்.. தனியே வேலைக்கு ஆள் இல்லா ஊர்களிலும்., முன்பே எல்லா வேலைகளையும் அம்மா கற்பித்ததால் சமாளிக்க முடிந்திருக்கிறது.

உடல் பலமும் மனோ பலமும் இறைபக்தியும் அம்மாவிடம் கற்றுக் கொண்டது அதிகம். எந்தச் சூழ்நிலையிலும் கலங்காமல் சிந்தித்து முடிவெடுப்பது அம்மாவின் வரம்!

ஷேர் பிஸினஸ் செய்வது ., கோயில்களுக்கு அளிப்பது., வசதியற்ற குழந்தைகளுக்கு படிப்பு., திருமண உதவி செய்வது என அம்மா எப்போதும் ஏதாவது செய்து வியக்க வைத்துக் கொண்டே இருப்பார். இது நாம் கற்றுக் கொள்ளவும் உதவும்.

இப்போது கூட கிரிஜாம்மாவையும் லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையையும் பற்றித் தெரிந்து., “ உன் திறமையைக் கண்டு பிடித்துவிட்டார்கள்” என்று பாராட்டினார்கள். “ பரவாயில்லை.. இந்த வயதிலும் முயற்சி எடுத்து லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையில் ஏதோ எழுதிக்கிட்டு இருக்கியே., நல்லது நல்லா செய் .” என என் அம்மா என்னை வாழ்த்தியது என் வாழ்நாளுக்கான சாதனையாக நினைக்கிறேன்.. ஏன்னா அம்மாவிடம் இருந்து பாராட்டு வாங்குவது ஆஸ்கார் வாங்குவதற்குச் சமம்..

“நம்ம மனுஷா குறையத்தான் சொல்வா (திருத்திக் கொள்ள) .. பிற மனுஷாதான் பாராட்டுவா “ என்பார். பல வருடம் கூட்டுக் குடும்பத்தில் மாமியார்., நாத்தனார்., கொழுந்தனார் அனைவரையும் அரவணைத்து எங்களுக்கான அன்பும் கனிவும் பாசமும் கொண்டிருந்தாலும் அம்மா கடலுள் மூழ்கி இருக்கும் பனிமலை போல்.. வெளியே தெரியும் பனிப்பாறை அளவுதான் அன்பு வெளித்தெரிந்தாலும் அவர்களை முற்றிலும் உணர்ந்தவர்கள் அவர்கள் அன்பின் பிரம்மாண்டத்தை உணர்வார்கள்.

ஆம்... அம்மா என்றால் அன்பு..! பிரசாதமும் அமிர்தமும் சிறிது கிடைத்தாலும் பிறவிப் பயன்தானே.. !

இது செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது..

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

அன்பு வெருட்டு..

மண்ணைக் கிளறி
மூச்சை பெருக்கி
கொம்போடு விரட்டும்
அன்பு மிருகம்..

வாலும் அல்ல.,
தும்பும் அல்ல..
திமிலும் அல்ல..
பிடிக்கு எட்டாமல்..

கிளப்பும் புழுதி ...
கொடிய மூர்க்கம்..
விரட்டுகிறோமா..
வெருட்டுகிறதா..

முயல்குட்டி..
சிங்கக் குட்டியாய்..
குடலும் பதறும்
கொம்பின் முத்தம்..

வெல்வோமா.
சாவோமா...
களத்தின் நடுவில்..
ஓடி ஒளியாமல்..

தழும்புகள் சுகமாய்..
காயங்கள் சுகமாய்..
வெருட்டுதல் சுகமாய்..
வழியும் ரத்தம் கூட சுவையாய்..

வாழ்வது ஒரு முறை
வளைத்துப் பிடிப்போம்..
குற்றுப் படவோ..
கொற்றம் அடையவோ..

சனி, 25 செப்டம்பர், 2010

சேமிப்பு..

குழந்தைகள் லேபிள்களையும்., சிகரட் அட்டைகளையும் ., வண்ணப் படங்களையும் ., தீப்பெட்டித் தாள்களையும்., ஸ்டிக்கர்களையும்., சேமிப்பதாய்..

பள்ளி செல்லும் வயதில் அது நாணயங்களாய்., ஸ்டாம்புகளாய் ., ஸ்கெட்சுகளாய்..

பருவ வயதில் ரெக்கார்ட் நோட்டுகளாய்., க்ரோஷாக்களாய்., எம்பிராய்டரிகளாய்.,

திருமணக்காலம் புகைப்படங்களாய்., சிடிக்களாய்., டிவிடிக்களாய்..

முற்றிவளர்ந்து பங்குப் பத்திரமாய்., ம்யூச்சுவல் ஃபண்டாய்., ஃபிக்ஸட் டெப்பாஸிட்களாய்.,

எல்லாம் வெறுத்த ஒரு நாளில்.. வலைத்தளமாய்., கேட்ஜெட்டுக்களாய்., விருதுகளாய்.,

விட்டு விடுதலையான பொழுதொன்றில் நட்புக்களாய்.. நட்பே உறவுகளாய்., உணர்வுகளாய்.. வாழ்வாய்..

பருவம் மாறி.. உருவம் மாறி... பழக்கம் மட்டும் மாறாமல்..

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

இனிது இனிது.... போஸ்டர்

எனக்குப் பிடித்த ஹாலிவுட் ...இந்த தலைப்பில் இடுகையைத் தொடர்பவர்களுக்கு என் முகபுத்தக நண்பர் ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது படத்தின் இந்த போஸ்டர் ஃப்ரீ..அட நிஜமாத்தான்பா.. நேத்து சொன்னமில்ல... அந்த சத்யத்தை நிறைவேத்திட்டோம்..:))

என்னது ஏஞ்சலினா ஜோலி., ஹாலி பெரி.,ஜூடி பாஸ்டர் போஸ்டர் எதிர்பார்த்து வந்தீங்களா.. ஹாஹாஹா... நல்ல கதையா போச்சு.. அதுக்கு நம்ம கேபிள் ஜியோட கொத்துப் பரோட்டா போங்க..

ரொம்ப நல்லா எழுதப் போறவங்களுக்கு உண்மைத்தமிழனோட இந்த விமர்சனம் மும் டிஸ்டிங்ஷன்ல வர்றவங்களுக்கு அதுல இருக்குற R. GOPI யோட கமெண்ட்ஸும் போனஸ்....:))

யாரும் தொடராம போனா எந்திரன் முதல் ஷோ டிக்கட் கிடைக்காம போயிரும் .. ஆமா சொல்லிட்டேன்.. சொல்லிட்டேன் சொல்லிட்டேன்..

வியாழன், 23 செப்டம்பர், 2010

எனக்குப் பிடித்த ஹாலிவுட்....

1. ஆர்னால்டு ஸ்வஷர்நெகர்.. - ட்ரூ லைஸ்.. டெர்மினேட்டர்., டோட்டல் ரீகால்.

2. டாம் க்ரூஸ் - மிஷன் இம்பாஸிபிள் 1. 2. 3.

3. ப்ராட் பிட் - ஓஷன்ஸ் 11. 12. 13.

4. பியர்ஸ் ப்ராஸ்னன் - கோல்டன் ஐ., வர்ல்ட் இஸ் நாட் இனாஃப்.

5. அல் பசினோ - காட் ஃபாதர் .

6 ஜாக்கி சான் - ஷாங்காய் நைட்ஸ்..

7. டாம் ஹாங்ஸ் - டாவின்சி கோட்., த டெர்மினல்.

8. வில் ஸ்மித் - த பர்ஸ்யூட் ஆஃப் ஹாப்பினஸ்.

9. ஜாக் நிக்கல்சன் - த பக்கெட் லிஸ்ட்..

10. நிக்கலஸ் கேஜ் - த அனிமல்.

11. ஜான் ட்ரவோல்டா - த ஃபேஸ் ஆஃப்

12. ஆண்டானியோ பாந்தாரஸ் - ஸ்பை கிட்ஸ் 2., டேக் த லீட்., மாஸ்க் ஆஃப் ஸாரோ

13. ஆண்டனி ஹாஃப்கின்ஸ் - த சைலன்ஸ் ஆஃப் த லாம்ப்ஸ்., ஹன்னிபால்., ரெட் ட்ராகன்.

14. எட்டி மர்பி - நட்டி ஃப்ரொபஸர்.

15. கேதரின் ஸீடா ஜோன்ஸ் - த டெர்மினல்., மாஸ்க் ஆஃப் ஸாரோ

16. ஜென்னிஃபர் லோபஸ் - அனகோண்டா..

17. ஏஞ்சலினா ஜோலி - மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித்., சால்ட்.

18. ஹாலி பெரி - டை அனதர் டே..

19. காமரூன் டையஸ் - சார்லீஸ் ஏஞ்சல்ஸ்..

20. ட்ரூ பாரிமோர் - ஈ. டி . ( எக்ஸ்ட்ரா டெரஸ்டியல்)., த பாட் மான் அண்ட் த ராபின் ..

21. ஜூடி ஃபாஸ்டர் - சைலன்ஸ் ஆஃப் த லாம்ப்ஸ்..

22. கேதி வின்ஸ்லேட் - டைட்டானிக்., த ஹாலிடே..

23. கேதி ஹோல்ம்ஸ் - மிஷன் இம்பாஸிபிள்.

24. கெவின் காஸ்ட்னர் - ஹோம் அலோன்

25. ராட்க்ளிஃப் - ஹாரி பாட்டர்.

இது ஒரு தொடர் பதிவு .. ஞாபகம் இருக்கட்டும்.. நான் இதுக்கு ஹாலிவுட் பாலா., கேபிள் ஜி., வண்ணத்துப் பூச்சியாரை கூப்பிடலை.. மத்த எல்லாரும் எழுதணும்.. அசைன்மெண்ட்.. :))

எழுதுற எல்லாருக்கும் ஒரு சினிமா போஸ்டர் ஃப்ரீ.. அது அடுத்த இடுகையில் போடப்படும்..

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

இன்னும் இளமையாய்...

தந்தை கைகளுக்குள்
வளர்ந்த காலம் முடிந்து..
செல்லச் சகோதரர்கள்
குடும்பஸ்தர்களாகி..
முயல்குட்டிகளாய் அணைப்பில்
கிடந்த குழந்தைகள்
ஆளுயரம் தாண்டி.,
அரும்பு மீசை ஆண்களாய்..,
கணவர் கனவான்...
அலுவலக அலுவலில் ..
எல்லாம் முதிர்ந்த இக்கணமும்
அன்பும் ., காதலும்., பாசமும்.,
மோகமும் முதிராமல்..
இன்னும் இளமையாய்
வளர்ந்து கொண்டு..

திங்கள், 20 செப்டம்பர், 2010

நீ என்பதான ஒன்று..

எங்கு சென்றாலும் உன்னையும்
ஏந்திச் செல்கிறேன்..
இன்பச் சுமையாய் இருப்பதால்
இலகுவாய் இருக்கிறாய்...

எப்போது புகுந்தாய்..
எங்கிருந்து வந்தாய் ..
மஹிமா ., லகிமா.,
அணிமா அறியாமலே..

நினைவு விளக்கில்
அலாவுதீன் பூதமாய்
அவ்வப்போது எழுந்து ...

ஏஏஏய்ய்ய்ய் சொல் சொல்.
நீ ஏவலாளியா..
நான் ஏவலாளியா..

குழந்தையின்
பொம்மைத்தேராய்
இழுத்துச் செல்கிறேன்
உன் நினைவுகளை ...

இடறும் சமயம்
நடைவண்டியாய்
அவை என்னை
முன்னிழுத்துச் செல்கின்றன..

இரவு நேரக் குல்ஃபியைப் போல்
ஜில்லென்றும் ருசியாயும்
உறைந்து கிடக்கிறது
உனக்கான அன்பால்
என் இதயக் கோப்பை..

விரும்பியோ
விரும்பாமலோ கிடைத்த
விபரீத ராஜயோகம் நீ...

எழுந்தவுடன்.,
சாப்பிடும் முன்.,
சாப்பிட்ட பின்...
இரவுத் தூக்கத்துக்கு முன்
கனவுக்குள் என
மருந்துச் சிட்டையாய்
நினைவுறுத்திக் கிடக்கிறது
நீ என்பதான ஒன்று..

சனி, 18 செப்டம்பர், 2010

செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் துளசி கோபால்., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்., ஹேமா மற்றும் நான்..

பண்டிகைகள் விநாயகர் சதுர்த்தியுடன் ஆரம்பிக்கின்றன..
எனவே அடுத்து அடுத்து விஷேச சிறப்பிதழ்கள்தான்..
அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் என்னுடைய பகிர்வு வந்து இருக்கு. சகோதரிகள் தங்கள் அம்மாவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்க .. சிறப்பானது அடுத்த அடுத்த இதழ்களில் வெளிவரும்.

சித்ரா நாகப்பனின் முதலீட்டுத் தொடர் காசுமழை மிகச் சிறப்பா வந்துகிட்டு இருக்கு.. அடுத்த மாதத்துக்கான உங்க முதலீடு சம்பந்தமான கேள்விகளை அனுப்புங்க
ருக்மணி அம்மாவின் திருக்குறள் கதைகளும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுக்கிட்டு இருக்கு.. சின்னக் குழந்தைகளுக்கு படிச்சுக் காண்பிங்க.. நல்ல அறிவுரைகள் இருக்கு..

இந்த மாதம் நம்ம ப்லாக்கர் துளசி கோபால் அறிமுகம் ஆகி இருக்காங்க.. சில பல நூறு .. ஏன் ஆயிரம் இடுகைகளுக்குச் சொந்தக்காரர்.. இவரோட இரண்டு நூல்கள் வெளிவந்து இருக்கு ..என் செல்லச் செல்வங்கள்.. நியுசிலாந்து அதுக்கு நம்ம ஜோதிஜி தன்னோட ப்லாக்கில விமர்சனம் எழுதி இருக்கார்..
இந்த மாதம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான் மக்காஸ் முயற்சி திருவினையாக்கும்.. எனவே முயற்சி செய்துக்கிட்டே இருங்க..

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்..

இரண்டு இல்லாமல்
எப்போதும் எதுவுமில்லை..
இருப்பு ... இருப்பின்மை..
உளதாய் ., இலதாய்..

நட்பு., பிரிவு
அன்பு., க்ரோதம்.,
ஆதரவு., அலட்சியம்.,
எழுத்து ., விமர்சனம்...

வெளி வெறுத்து
நிஜம் போலான ஒரு உருவில்.,
மௌனப்பேச்சில் நிம்மதி..
கஞ்சாக்காரனின் உலகமாய்..

கலையக் கலைய
போதை தேடி
கைகள் பதற முகர்ந்து
முயங்கி மயங்கி..

வீட்டுச் சுவரோரமோ.,
அலுவலகச் சந்தோ.,
எழுத்துக் குப்பைகளோடு...
எண்ணப் புழுதியோடு.,.

ஒன்றல்ல பல போதை..
அங்கீகாரம்.. மேதமை.,
பாராட்டு., சமயத்தில்
லேசான ப்ரியம் கூட..

நட்பும் புகழும் அதி போதையாகி
அனைவரையும் அதிரடிக்க
திரும்பத் திரும்பத் தேடும்
வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்..

வியாழன், 16 செப்டம்பர், 2010

பங்குச்சந்தை......முரட்டுக் காளையும் மிரளும் கரடியும்.

1986 பிப்ரவரி மாதம் முதல் காப்பிடல் மார்க்கெட் இதழ் வந்தது ...
பெட்ரோ பாட்டரி டிப்போ எனும் பெயரில் ஷேர் ட்ரேடிங் செய்துவந்த ஐயா சொல்வது புரிந்தும் புரியாமலுமிருக்கும்... லாங் .,ஷாட்., புல்லிஷ் .,பியரிஷ் என்று..

திருமணம் முடிந்தபின் தெரிந்தது என் கணவருக்கும் பங்குச் சந்தையில் ஆர்வம் அதிகம் என்று .. இந்திய வழக்கப்படி ராமர் செல்லும் வழியில் சீதையும் செல்ல ஆரம்பித்தேன்..( இது ரொம்ப ஓவர் என்று குரல் கேக்குது..:))
கவிதை தெரிந்த அளவு வணிகம் புரிபடவும்., பிடிபடவும் இல்லை..

பிஸினஸ் லைன்., காப்பிடல் மார்க்கெட்., எகனாமிக் டைம்ஸ்., ஹிண்டுவில் ஷேர் ப்ரைஸ் மூவ்மெண்ட்ஸ் என்று அவ்வப்போது விரும்பியும் விரும்பாமலும் பங்குச் சந்தை என்னை தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதில் ஏறுதலும் இறங்குதலுமான பரமபத விளையாட்டில் கடியும் அதிகம்., ஏற்றமும் அதிகம். மார்க்கெட் அதி வேகமாக உயர்வதை புல்லிஷ் ( காளை) என்றும் ., சரசரவென்று இறங்குவதை பியரிஷ் (கரடி) என்றும் சொல்கிறார்கள்..

இதில் காளை முட்டுதோ இல்லையோ கரடி மிரண்டு நம்மையும் மிரட்டி விடும்.. ஆட்சி மாற்றம்., அன்னிய செலாவணி., கம்யூனிஸம்., ரிக்கிங்க் என்று ஏகப்பட்ட விஷயங்கள் கரடி மிரளக் காரணிகள்.

ஒரு 30 மிகச் சிறந்த கம்பெனிகளைக் கொண்டு ஷேர் மார்க்கெட்டின் இண்டக்ஸ்., நிஃப்டி போன்றவை நிர்ணயிக்கப் படுகின்றன. A +++ கம்பெனிகளில் முதலீடு செய்தவர்கள் எக்ஸ்பர்ட் முதலீட்டாளர் என சொல்லலாம். முதலீடு செய்து விட்டு தியானம் கூட செய்யலாம் அமைதியாய். ஆனால் க்ளூ ட்ரேடர் ., ஜாபர்.,(JOBBER) ., தூங்கும் போது கூட விழித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

96 வயது வரை என் ஐயாவை செலுத்தியது இந்த பங்குச் சந்தைதான் என்பது வியப்பாயிருக்கும். இதன் ஏற்றமும் இறக்கமும் தினம் தினம் ஏன் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது.. என் அம்மாவும் .,மாமனாரும் CNBC., NDTV போன்றவற்றைப் பார்த்து ஷேர் கம்பெனிகளுக்கு ஃபோன் செய்து பங்குகளை வாங்கி விற்கிறார்கள்..மிக இறங்கி விட்டால் அப்படியே வைத்து விடுவது.. பின் எப்போது ஏறுகிறதோ அப்போது விற்பது என்று.

நானும் சிலகாலம் வீட்டிலேயே ஆக்ஸஸ் செய்து டைரட்டாக ட்ரேடிங்க் செய்து இருக்கிறேன்.. காலையில் ஏறும் இண்டக்ஸ் மாலையில் இறங்கும் போது யானைக்கும் பானைக்கும் சரி என்ற நிலைதான்.. பதட்டத்தில் எனக்கு பிபி வந்து விடுமோவென்று இருக்கும்..

கார்வி., ஷேர்கான்., ஓரியண்டல் போன்ற நிறுவனங்களில் ட்ரேடிங் செய்வதால் சில டிப்ஸ்களின் மூலமும் ஸ்டாப் லாஸ் மூலமும் பெரும் இழப்பைத் தடுக்கலாம்.

ஹர்ஷத் மேத்தா ப்ரீயட்களிலும்., சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்னும் ( சென்செக்ஸ் 25,000 பாயிண்ட்டுகள்.. இன்னும் 30,000 பாயிண்டுகள் வரை செல்லும் என ஆரூடம் சொன்னார்கள்.) கரடி மிரண்டு ரொம்பவும் பிராண்டி விட்டது.. வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகல்லவா..

ஃப்யூச்சர் ., ஆப்ஷன்., கமாட்டீஸ்., கோல்ட்., சில்வர் முதலியவற்றில் யோசித்து முதலீடு செய்யலாம்.. தற்போது கோல்டும் சில்வரும் தாறுமாறான விலை..( 2004 இல் கிராம் ரூ.450 /- இருந்த தங்கம் இப்போது ரூ. 1780/- ., ரூ 7,000/- ஆக இருந்த வெள்ளி இப்போது ரூ. 33,000./- ) ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய அதிகம் தேவை. பங்குச் சந்தையில் குறைவான அளவும் முதலீடு செய்யலாம்.

எந்த பிஸினஸ் செய்தாலும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நம் கையில் இருக்க வேண்டும். , கைப் பணத்தில் மட்டுமே வாங்குவது., ஸ்பாட்டில் வாங்குவது., ஸ்டாப் லாஸ் போட்டு வைப்பது என்று.

4 நாட்களுக்கு முன் 400 பாயிண்டுகள் கிர்ரென்று ஏறிய சந்தை இன்று 100 பாயிண்டுகள் இறக்கம். ஃப்யூச்சரில் லாஸ் மினிமைஸ் பண்ண சான்ஸ் கம்மி., ஆப்ஷனில் லாஸ் மினிமைஸ் பண்ணலாம். லாபமும் அதிகம். எனவே ஆப்ஷனில்தான் அதிகம் ட்ரேடிங்க் ஆகிறது.

தங்கம்., வெள்ளி., இடம்., மனை., வீடு., ஃபிக்ஸட் டெப்பாசிட்., இன்ஸூரன்ஸ்., அஞ்சலக முதலீடு., வங்கி பாண்டுகள் ., சிட் ஃபண்டுகள்., ம்யூச்சுவல் ஃபண்டுகள்., ஏனைய வியாபாரங்கள் இவற்றில் முதலீடு செய்வது போல் முரட்டுக் காளையையும் மிரளும் கரடியையும் கண்டு ஒதுங்காமல் உங்க பணத்தை கொஞ்சம் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்ங்க மக்காஸ்.

செப்டம்பர் 9 ம் தேதி தனது 16 வது பிறந்த நாள் கண்ட ஓரியண்டல் ஸ்டாக்ஸுக்கு வாழ்த்துக்கள்.. !!!ஸ்வீட் சிக்ஸ்டீன்.. இன்னும் நூற்றாண்டுகள் சேவை செய்ய வாழ்த்துக்கள்.!!!

டிஸ்கி 1 :- இது எனது 250 ஆவது இடுகை.
டிஸ்கி 2 :-ஈரோடு கதிர்., சூர்யா சுரேஷ்..., ( வண்ணத்துப் பூச்சியார்) பங்குச் சந்தையில் பலவருட அனுபவம் இருந்தும் இவர் அது பற்றி எழுதாமல் சிறந்த உலக சினிமாக்கள் பற்றி பகிர்ந்து வருகிறார் ., கோகுல் சல்வாடி... ( இவரின் இடுகைகள் சர்காஸ்டிகாக சோவினது எழுத்து போலிருக்கும்..!!) மூவரும் வணிக நாடியில் இருந்தும் கலை உணர்வோடு இடுகைகள் வெளியிடுவது ஆச்சர்யம். அதிலும் கதிரின் கவிதைகள் சில அற்புதம்..

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வெம்மிளகாய்..

குடுவை உடைந்து
மீன்கள் துள்ளின..
ஆன்ம விடுதலைக்காய்..

பிணத்தின் முன் ஆட்டம்..
சாவும் கொண்டாடப்பட வேண்டுமென்றா..
நிறைபட வாழ்ந்ததற்கா..

மல்லிகை மொக்குகளில்
வெம்மிளகாய் வாசனை ..
உன் ஊடல்..

கேட்ட வரம் கொடுக்கும்
கோயில் வாசல்கள் எல்லாம்
காசுக்காய் பிச்சைக்காரர்கள்..

மலைக்கு மாலை..,
தீட்டு கூடாது..
மழைத்தண்ணீர் அடித்து அலசியது
ஊர்த்தீட்டு அனைத்தும் காலில்..

ஒரே பரிசலில் ..
இருவேறு பக்கங்கங்களில்..
எதிர்த்துடுப்போடு.,

நீர்வீழ்ச்சி அடிக்க.,
நதிச்சுழி இழுக்க.,
அணைச்சுறா எதிர்க்க..

செல்லும் வழியெல்லாம்
அன்பைத் தூவித் தூவி
தலை நரைத்த மேகம்..

வார்த்தைச் சட்டிகளில்
கவனமில்லாமல் வறுபட்டு
கருகிய மனசு..

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

லேடீஸ் ஸ்பெஷல்., தேவதை.,வல்லினம்., திண்ணை., கழுகு....




இந்த மாத லேடீஸ் ஸ்பெஷலில் என்னுடைய அம்மா அருமை அம்மா என்ற பகிர்வு வந்து இருக்கு ..
தேவதையில் என்னை வலையோடு விளையாடு பகுதியில் அறிமுகப்படுத்தி இருக்காங்க..
சும்மாவில் அப்பாவிற்கு எழுதிய கவிதையும்., கண்ணதாசனும் பதிப்பகங்களும் என்ற கட்டுரையும்., தேனூஸ் ரெசிப்பீஸ் என்ற சமையல் ப்லாக்கும்., அதில் உருளை ஃப்ரென்ச் ஃப்ரைஸும் ., கவுனரிசியும் வந்து இருக்கு.

கழுகுவில் நண்பர் தேவா தேனம்மையுடன் ஒரு நேர்முகம் என்ற பேட்டியை வெளியிட்டுள்ளார்..
லேடீஸ் ஸ்பெஷல்., தேவதை., வல்லினம்., திண்ணை., கழுகுக்கு நன்றி.. !நன்றி..!! நன்றி ..!!!
நண்பர் செல்வகுமாருக்கு நாளை பிறந்தநாள்.. எங்களின் கிரியா ஊக்கியான நண்பர்....!!! அவர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் ., நலமுடன்..., ஜெய(ந்தியு)முடன்...!!!

புதன், 8 செப்டம்பர், 2010

அம்மா....

அம்மாவின் புன்னகை.. ம்ம்ம் பூக்கள் என்று சொல்லலாம். சட்டென்று வாடிவிடுவதாலும்.. செல்லும் வழியில் நியானின் கோலங்கள் முகமெங்கும் கோடிழுத்துக் கொண்டிருந்தன வண்ணத்தில்.. எத்தனை வருடம் இப்படியே எங்களைப் பற்றிய சிந்தனையில் .. நெற்றிச் சுருக்கம் கூட அதிகமாகி..

எதைச் சொல்லவேண்டும் .. எப்போது சொல்ல வேண்டும் .. எப்படி சொல்ல வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக் கொண்டது.. சொல்லாமல் உணர்த்துவது கூட..

முழுமையான சரணாகதி என்பதன் அர்த்தம் அம்மா.. குழந்தைகளுக்கும் ., கணவருக்கும்..

மல்லிகையும் மஞ்சளும் குங்குமமும் காற்றில் கலந்து தாய்மையோடு வீசிக் கொண்டிருந்தது வேனில்.. நடு இரவின் ரகசியத்துக்குள் நுழைவது போல் ஆட்களற்ற சாலையில் வழுக்கிக்கொண்டிருந்தது சுமோ..

ஒருவருடன் ஒருவர் பேசாமலே உணர்வின் கணங்கள் கனமாக இருந்தன.. ஆறு மாதம் ஆகலாம் அம்மா வர.. பிரிவின் தவிப்பு .. பக்கமிருந்தால் நினைத்தால் பார்க்கலாம்..

நோய் நொடி என்றால் நமக்கு முன் அம்மாவுக்கு கலங்கிவிடும்.. என்றும் அதிகம் பேசாமல் கூடவே இருக்கும் தன்மையால் ஒரு தனித்துவமான துணைதான் அம்மா...

எப்போதாவது கோபம் வந்தால் ஓரவிழிகள் தெரிவிக்கும்.. அல்லது ஒரு பாராமுகம் மட்டுமே... அதிகம் வார்த்தைகளால் சிதைப்பதில்லை நம்மை .. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே அவசியமானால்தான் அதுவும்.. அதுவே கலங்க அடிக்கும் ..

எதையும் கற்பிக்கவோ., வலியுறுத்தவோ முயன்றதில்லை அம்மா.. அவரவரே கற்றுத் தெளியட்டுமென.. கண்டித்ததில்லை எதற்கும்., யாவரையும்..

எல்லாரின் ரகசியக் கிடங்காக அம்மா.. யாரிடமும் யாரைப் பற்றியும் புறணி கூறாமல்., பெருமை பேசாமல்., குற்றங்குறை சொல்லாமல் எல்லாரையும் அதனதன் படியே ஏற்றுக் கொண்டு..

வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து களைத்த சலிப்பும் சுவடும் அவ்வப்போது தென்படும்..

ஏர்ப்போர்ட்டின் கூட்டத்தில் காணாமல் போய்விடுவதுபோல அங்கங்கே பாச மழை.. வாழ்விலும் யாரும் ஒரு எல்லை வரைதான் வர இயலும் என்பதாய் வெளியிலேயே நிறுத்தப்பட்டோம்.. ட்ராலியை அம்மா தள்ளிச் செல்ல யத்தனித்தபோது முன்பே தெரிந்திருந்த ஊழியர் ஒருவர் தானே வந்து அம்மாவை அழைத்துச் சென்று எல்லாவற்றையும் முடித்து குடியேற்றப் பகுதியில் விட்டார்.. கைச்சுமையோடு மட்டும் இப்போது அம்மா எங்கள் பக்கத்தில்..

சொல்லவோ தெரிவிக்கவோ வார்த்தைகளற்ற அன்பு கரைந்து கொண்டிருந்தது நொடிகளாய்.. கண்கள் மினுங்கத் தொடங்கின அம்மாவுக்கு.. லேசாய் சிவந்தும்.. முதுமையிலும் தேவதையாய்.. சிவப்பு வண்ணச் சேலையில் .. பாசம் போல் மென்மையாய் ஒரு வாசம் வீசிக் கொண்டிருந்தது சூழலிலும்..

கை பிடித்து அழுத்திக் கொண்டபின் பிரிய இயலாமல் பிரிந்து கையசைத்துக் கொண்டே குடியேற்றப் பகுதிக்கு சென்றார்கள் அம்மா.. சிறு குழந்தைகளைப் போல கையசைத்துக் கொண்டிருந்தோம்..

கனமாகி சுமக்க இயலா இதயத்தோடு.. திரும்ப வேனில் அமர யத்தனித்த போது கணவர் அவரின் அம்மா இருந்த இடத்தில் அமர்ந்து இருந்தார்.. அம்மாவின் சுவாசம் எங்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது..

டிஸ்கி:- பெஸ்ட் கதை சொல்லின்னு அஹமத் இர்ஷாத் எனக்கு ஒரு அவார்டு கொடுத்து இருந்தார்.. மனசு கேக்கலை.. அதை உண்மையாக்க ஒரு கதை எழுதி இருக்கேன் .. நல்லா இருக்கா மக்காஸ்.. கதையா அல்லது டைரியான்னு எல்லாம் கேக்கக்கூடாது.. மக்காஸ்

திங்கள், 6 செப்டம்பர், 2010

நதியலையில் ஆடும் நிலவு....

ஒளிந்தும் கரைவதுமான
விளையாட்டில் நீ....

நான் நீராய் உன்னைக் கையில் ஏந்தி..
பிம்பமென அறியாமல்...

நீ நிஜம் போலிருக்கிறாய்..
காலை வரை..

பின் பகல் முழுதும் தேடுகிறேன்..
மழுங்கின இதயத்தோடு..

மாலைப் பொழுதின் மயக்கத்தில்
பின்னும் உண்மை உணராத உள்ளத்தோடு..

உணர்வுப் பெருக்கில்
உன் வரவுக்காகக் காத்து நான்..

உன் பால் கரம் பட்ட பரவசத்தில்
சிற்றலையால் உள்ளம் துடிக்க.,

உள் உன்மத்தத்தோடும்..
ஒப்புமையில்லா உவப்போடும்...
உய்யமுடியாமல் அலைகிறேன்..

உணர்கிறோம் எந்த யுகத்திலும்..
நீ உயரே நிலவாகவும்..
நான் உன்னை ஏந்தும் நதியாகவும்..

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

திருமண (பண) அழைப்பு ”இதழ்..”



திருமண அழைப்பிதழ்கள் இரண்டு வந்தது..
இரண்டும் மிக அழகு.. இன்று ரஜனிகாந்தின் மகள் திருமணம் நடைபெறுவதாக முகப்புத்தகத்தில் ஏகப்பட்ட டாக்ஸ் ( TAGS ) ..
மூன்று மணமக்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.. நலமுடன்...
என் அன்புத்தங்கை புதுகைத்தென்றல் ஹைதையில் புதுமனை குடி புகுந்து இருப்பார்.. அவருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்..
லோட்டஸ் டெம்பிள் மாதிரி மெரூன்கலரில் ஒரு இதழ் இதழான அழைப்பு .. என்ன கற்பனா சக்தி.. என் திருமணப் போதிலெல்லாம் ( நான் என் ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் 100 அழைப்புதான் அனுப்பி இருந்தேன் ). மிக எளிமையாக ஒரே செவ்வக அமைப்பில் ரோஸ்வண்ணத்தில் இருக்கும். பெரியவர்கள் அனுப்பும் அழைப்பிதழ் மஞ்சள் ரோஸ் கலரில் பச்சை எழுத்துக்களோடு அல்லது சந்தனக்கலர் திக் கார்டில் தங்க எழுத்துக்களோடு.. அவ்வளவுதான்.. இப்போ கற்பனைக்கும் பட்ஜெட்டுக்கும் அளவே இல்லை..
அடுத்த அழைப்பிதழ்தான் என்னை ரொம்ப அசர வைத்தது.. வட இந்தியத்திருமணங்களில் ரூபாய் நோட்டு மாலை பார்த்து இருக்கிறேன்....
இதில் பர்ஸில் 1000 ரூபாய் நோட்டுப்போல... பாங்க் ஆஃப் லவ் வெட்டிங் இன்விடேஷன்.. (TWO HEARTS THAT BEAT AS ONE ) ...அதில் 100% லவ்., 100% எண்டர்டெயின்மெண்ட்., 100 % ஃபன் என எழுதி இருந்தது...முத்திரை குத்தும் இடத்தில் ஒருபக்கம் முகூர்த்தமும் இன்னொரு பக்கம் ரிசப்ஷனும்...
எல்லா மொழியிலும் ரூபாய் என எழுதி இருக்கும் இடத்தில்
அன்பாய் இரு..
ஆதரவாய் நட..
இன்பமாய் பேசு..
ஈசனை நினை..
உறவுகளை மதி..
ஊருடன் ஒத்துவாழ்..
எண்ணங்களை உயர்த்து..
ஏளனம் செய்யாதே..
ஐயம் மற..
ஒழுக்கம் கடைப்பிடி.,
ஓயாது உழை..
ஔஷதம் வேண்டேல்..
அஃகம் சுருக்கேல்..
என எழுதி இருந்தது..
உங்கள் அன்பை எல்லாம் இந்த திருமண மண்டபத்தில் டெப்பாஸிட் செய்யுங்கள் என்றிருந்தது... ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்திடும் இடத்தில் மணமகனும் மணமகளும் கையெழுத்திட்டிருந்தார்கள்.. இருவரும் இறுதிவரை இணைபிரியாமல் இருப்போம் என்று.. நல்லது மக்கா அப்படியே வாழுங்கள்.. எங்கள் ஆசீர்வாதமும் உங்களுக்கு ..

வியாழன், 2 செப்டம்பர், 2010

காலச்சுவடு-வீழ்தலின் நிழல்--ரிஷான் ஷெரீஃப்.. எனது பார்வையில்.



நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்..சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்.. இது காலச்சுவட்டின் வெளியீடு..விலை ரூ. 60/-
வாழ்வதன் ஆவலையும் கவலையையும் குறித்துப் பேசும் இதில் இளவயதின் காதல் ஏக்கங்களும்., வாழ்வியல் துயரங்களும்., புலம்பெயர் நிலையும்., எதையும் சீர் செய்யவியலா கையறு நிலையும்., தணிக்கவியலா தனிமையும்.,
நட்புக்கான தேடலும் பொங்கிக் கிடக்கிறது.
எரிக்கப்பட்டவர்களையும்., நசுக்கப்பட்டவர்களையும்., அழிக்கப்பட்டவர்களையும்., அவர்களின் வலியையும்., வலுவற்றவர்களாக ஆக்கப்படுவதுமான ஆதங்கம் விரவிக்கிடக்கிறது...
கொழுத்த வெய்யில் ஆதிக்கக்குறியீடாகவும்., வீழும் நிழல் இயலாமையின் குறியீடாகவும்., கோடை எல்லையற்ற வன்மமும் அழிவும் கொண்டதாகவும்.,
விருட்சம் தொன்மையின் பிரதிபலிப்பாகவும்., காற்று புலம் பெயர்தலாகவும்., மழை எல்லா இடத்திலும் பெயரும் இருப்பற்ற இருப்பாகவும்., துயரங்களின் சாட்சியாகவும்., பறவைகள் நிம்மதி இன்மையைக் குறிப்பனவாகவும்., பூக்கள் விள்ளவொண்ணா துயரின் வெளிப்பாடாகவும்., தீ., நெருப்பு., எரிமலை., உக்கிரம் உள்ளடக்கிய உணர்வின் ., இருப்பின் வெளிப்பாடாகவும்., நாகம் ., பாம்பு., வன்முறையின் குறியீடாகவும்., குருடன் ., அந்தகன்., எதுவும் மாற்றவியலா கழிவிரக்கமாகவும்., சுயமும்., காதலும்., தேடலும்., நிம்மதியும் ., நட்பும்., தனிமையும் கொண்டு தாய் தேசத்தில் இன்னும் வாழும் எண்ணற்ற மனிதர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கிறது..
மனிதன் இயற்கையின் நடுநிலையைக் குலைப்பவனாக நடுநிசி தன் பாடலை நிறுத்துவதில் ஆரம்பிக்கும் ரிஷானின் கவிதைகள்., நிலவு தின்னும் நட்சத்திரங்களும்., இருள் விழுங்கும் நிலவையும்., காப்பரணில் கிடத்தப்பெறும் குழந்தை கற்றுக்கொள்ளும் முதல் மொழி குறித்தான கவலையுடன் தொடர்கிறது.
சூறாவளியின் பாடல் ஒப்பாரியாவதும்., அநீதிப் பருக்கைகள் தின்னும் காக்கைகளின் எரிச்சலும்., கோடையின் வன்மமும்., புலம் பெயர்ந்தவர்களாவது நிம்மதியாயிருக்கிறாரா எனக் கேள்வி எழுப்புவதும்., கடவுளின் கூற்றுவனை சபித்தும்., ஏழு ஜென்மமும் வதைக்கும் வலி மிகுந்த துயரமும்., உள்ளங்கையில் சிதறவிடும் நினைவின் கணங்களின் சுமையும்., நம்மை தணிக்கவியலா ஏக்கத்துள் தள்ளுகின்றன..
காதலின் ரேகைகள் மழைக்கரமாய் அழைப்பதும்., காத்திருப்பின் தவிப்பும்., மீன்தொட்டித் தாவரம் புலம் பெயர்ந்து கண்ணாடிக்கூண்டுக்குள் சமுத்திரம் தேடும் விழைவும்., சுதந்திரமெனும் மாயமான் தேடுதலின் கனவிலும்., விருட்சம் அறியாப் பூவின் வலியும்., எதையும் சீர்ப்படுத்த வியலா ஏக்கமும்.,
வன்முறையெனும் பாம்பின் வாயில் சிக்கியவர்கள் கலகக்காரர்களாக சித்தரிக்கப்படுவதும்., சாட்சிகளேதுமற்ற மழையில் தெருக்களில் கேள்வி கேட்பாரற்று அழிக்கப்பட்ட மக்களுக்கான துக்கமும்., செவிட்டூமைக்குருடனின் தவிப்பும்., கிழச்சிங்கத்தின் கதையும்., தேவதைகளும் சாத்தான்களும் ஒருமித்துக் கொடியேற்றுவதான கனவும்.,
வார்த்தைகளின் வீச்சம் தாங்கிய கருந்தழும்பும்., இயற்கையை சீரழிக்கும் மனப்போக்கை கண்டிக்கவியலா தன்மையும்., காதலியின் அன்பு நடுகல்லாய் வியாபிப்பதும்.,
புலம்பெயர் நாடோடிப் பறவையின் துயரமும்., ஒருமித்துப் போராடாமல் சிதறிய மழைத்துளியாய்ப் போன ஒற்றுமையும்., பகிரப்படாத அன்பும்., எலும்பு மலைகள் உருவாக்கிய போரின் விளைவும்., அநீதியான குருதிச் செங்கோலும்., மெல்லிசை அழிவதும்., பொம்மைகள் தேசத்தில் அன்பு கூட சலிப்பதும்.,
இரு இனமக்கள் துவேஷமுற்றவர்களாய்ப் பிரிவுற்றதும்., வீழ்தலின் நிழலில் சுயமற்றுப் போவதும்., ஆணாதிக்கத்தில் பெண் வாழ்வும்., சித்தம் பிசகியவனின் கோடையும்., சாகசக்காரியின் வக்கிரமும்., பாவப்பட்ட மனதும்., காவல் நாகமே கொன்றழிப்பதும்., அகதிப் பட்சியின் அவலமும்., விசித்திரக்கூடு கட்டும் அதன் முன்னெச்சரிக்கைத்தனமும்., தாய் தேசம் புதைகுழி வீடானதும்.,
வன்புணர்வுக்கு ஆளான பெண்களின் இறப்பும்., பின்னங்கால் வடு ஏந்தும் சொந்தங்களின் நினைவும்., சாம்பல் நிற மரணமும்., வன்கொடுமைக்கு ஆளாகி இறந்தவனது விரிந்திருந்த விழியின் ஏக்கமும்., காதல் நெருப்பு விழுங்கும் பறவையாய்., முடிவற்ற துர்ச்சாவுகள் முடிவிலியாகவும்., புதியன மோஹித்து பழையன கழிதல் விருட்ச துரோகமாகவும்., குணவிலங்குகளும்.,
வீண்பழி சுமத்திய காதல் எண்ணங்களும்., வண்ணங்களும்., ஊடலாய்., காதலி நிலாத்திருடியாகவும்., நிராகரிப்பின் பெருவலியாகவும்., காதல்., காமமற்ற நட்பும்., பேரன்பின் தேவதையின் வருகையும்., வெற்றியை சூடத்தரும் நேசத்துக்குரிய எதிரியும்.,
தனித்துப் பசித்திருக்கும்சுயமும்., முயன்று தோற்றதும்., அநீதிகள் நிறைந்த செஞ்சாயக் கருங்குருதி ஈழமும்.,
இப்படி என்னைப் புரட்டிப் போட்ட புத்தகத்தை இதுவரை நான் படித்ததில்லை.. ஒவ்வொரு கவிதையும் உள்வாங்கி உருப்படுத்திக் கொள்ள வெகு நேரமாயிற்று எனக்கு..
படித்துப் பாருங்கள் வாழ்வென்பது எவ்வளவு மகத்துவமானது எனப் புரியும்..
என் எண்ணங்களில் தாங்கவொணா பாதிப்பு ஏற்படுத்திய எழுத்து .. பகிர்வு இது...
நன்றி ...அறியத்தந்த அரிய கவிஞர் ரிஷானுக்கும்., இந்தப் புத்தகத்தைப் பரிசளித்த டிஸ்கவரி புக் பேலஸின் உரிமையாளர் வேடியப்பனுக்கும்..
டிஸ்கி ..1 :- என்னுடைய இந்த விமர்சனம் இந்த மாதம் வல்லினம் இதழில் வெளிவந்துள்ளது..
டிஸ்கி 2 :- செப்டம்பர் 5ம் தேதி திண்ணையிலும் வந்து உள்ளது..