கனவுகளை விதைத்துக் காத்திருக்கும் காரைக்குடித் தென்றல்
காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் தென்றல். இது அண்ணஞ்சார் என்று அனைவராலும் அன்பால் விளிக்கப்படும் இவரது தாத்தாவால் தொடங்கப்பட்டது. எப்போதும் சுறுசுறுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கும் தென்றல் கொரோனா காலத்தில் கூட வாட்ஸப்பில் தேவதைக் கூட்டம் என்றொரு குழு ஆரம்பித்துப் பயிற்றுவித்தார், கொரோனா தொடரவும் வாசல் பள்ளி என்று அவரவர் வீட்டுக்கே சென்று பயிற்றுவித்தார். அவரிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கைக்காகப் பேட்டி கேட்டபோது இதுவரை அறியாத அவரின் பன்முகத் திறமைகளையும் தடை தாண்டி வரும் அவரது வெற்றி ஓட்டங்களையும் கண்டு பிரமித்தேன். அவர் மொழிகளிலேயே அதைத் தருகிறேன்.
”நான் 12ஆம் வகுப்புப் படித்து முடித்த போது, அயல் நாட்டுத் தூதுவராகவரவேண்டும்என்பதே என் மிகப்பெரிய கனவாக, இலட்சியமாக இருந்தது. ஆனால் ஐந்து பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றதொரு நிலையான கொள்கையுடன் என் அப்பா வாழ்க்கையை நகர்த்தியதால், அவரின் விருப்பப்படி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன்.ஆனால், சில நாட்களிலேயே, "கிட்டாதாயின் வெட்டென மற" என்பதை மனதில் கொண்டு என்னைத் தேற்றிக்கொண்டு, ஈராண்டுகள் நன்றாகப் படித்து மாவட்ட அளவில் ரேங்க் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன்.
திருமணம் ஆகும்வரை பெரிதாக எந்தக் கஷ்டமும் தெரியவில்லை. பிறகுதான் வாழ்க்கையின் இன்னொரு பக்கம் கரடுமுரடான பாதையாகத் தெரிந்தது. அந்த முகம் அச்சுறுத்தலாகவே இருந்தது. அடுத்தடுத்து மூன்றாண்டு கால இடைவெளியில் இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்ட போதும், கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.