எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 மே, 2023

விரிநீர் வியனுலகம்.

விரிநீர் வியனுலகம்.


நதிக்கரை நாகரீகங்களில் தழைத்து வந்தவர்கள் நாம். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்பார்கள். கோவையின் சிறுவாணித் தண்ணீர் சீனித்தண்ணியாக இனிப்பதாக ஊரே கூறினாலும் நமக்குக் காரைக்குடியின் சம்பை ஊற்றுத் தண்ணீர்தான் கல்கண்டு. வெறுமனே குடிக்கலாம் என்றாலும் பழக்கதோஷத்தின் காரணமாக நகராட்சி வழங்கும் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிப்பதுண்டு.

எனக்கு ஐந்து வயதாயிருக்கும்போது மன்னார்குடி மஹமூதாபி காலனியில் குடியிருந்தோம். கிணற்று நீர்தான் எல்லாவற்றுக்கும். பிரம்மாண்டக் கிணற்றில் பதினைந்து வீடுகளில் யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் தண்ணீர் இறைத்துக் கொண்டே இருப்பார்கள். சகடைச் சத்தம் கேட்காத பொழுதே இல்லை. ஒருநாள் படுக்கையிலிருந்து எழுந்ததும் என் கண்ணை மூடி அடுப்பங்கரைக்கு அழைத்துச் சென்றார் அம்மா. வீட்டுப் பைப்பைத் திறந்தார். என்ன ஆச்சர்யம். வாளி வைத்து மாங்கு மாங்கென்று இறைக்காமலே கைகளில் தவழ்ந்து உருண்டோடிய தண்ணீர் இன்றும் என் நினைவின் திவலைகளில் இனிக்கிறது.

சாலியமங்கலத்தில் தாத்தாவின் வயல்வெளியில் உள்ள குளம்தான் நான் முதன்முதலில் நெருக்கத்தில் முகம் கண்ட நீர். சூரியன்பட்டு தங்கச் செதில்களாய் மின்னும் குளத்து நீரை அதன்பின் அநேக கோயில்களின் புஷ்கரணிகளில் கண்டாலும் படியில் அமர்ந்து சொம்பில் முகர்ந்து ஊற்றிக் குளிப்பதுதான் வழக்கம்.

பட்டாம்பூச்சிகளும் மஞ்சள்வண்ணப் பாப்பாத்திகளும் தட்டாரப் பூச்சிகளும் பறந்து நீரின் மேல் பறந்து பறந்து அலைகளை விசிறிக் கொண்டிருக்கும். அங்கங்கே சிறார்கள் நீர்ப்பாம்புக்கும் பயப்படாமல் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருக்க சூரியனும் ஜோடியாக மஞ்சள் கொக்காய்க் குதித்து குளத்தை நீவி நீவி மீன் பிடித்துக் கொண்டிருக்கும்.  

அதன்பின் ஏழு வயதில் இராமேஸ்வரம் சென்றபோது 22 தீர்த்தத்திலும் நீராடி லெக்ஷ்மண தீர்த்தத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்தேன். யாரோ காப்பாற்ற அதன்பின் எத்தனையோ நீர் எத்தனையோ தலைமுழுகல். பன்னிரெண்டு வயதில் பாமினியின் ஆடி பதினெட்டு ஆலகால வெள்ளம். இன்றோ தொலைப்பதற்கு ஆட்டனத்தியும் தேடுவதற்கு ஆதி மந்தியும் இல்லாமல் துடைத்துக் கிடக்கிறது ஆடி பதினெட்டு. கோட்டையூர் கொத்தங்குளத்தில் ஐப்பசிக் கடைமுழுக்கு ஆனந்தவாரி என்றால்  கும்பகோணம் துலாப்படித்துறையில் ப்ளாஸ்டிக் குப்பைகள் மிதக்க ஒரு முழுக்கும் முழுகி இருக்கிறேன். சோம்நாத் கோவிலின் கடற்கரையோரம்தான் அச்சமூட்டும் ஆள்விழுங்கி அலைகளைக் கண்டேன். 

இன்றைக்குக் காரைக்குடியின் கோவிலூரில் இருந்து பாதரக்குடி செல்லும் வழியிலும் சரி, கோட்டையூர் சிவன் கோவில் எதிரில் உள்ள கண்மாய், திருமயம் கோட்டைபைரவர் கோவிலுக்கெதிரிலுள்ள கண்மாய் எல்லாம் காய்ந்து பாறைகளாயோ பாளமாயோ வெடித்துக் கிடப்பதை துடித்த மனத்தோடு பார்த்துக் கடக்கிறேன். காரைக்குடி முத்துப்பட்டிணம் அதளைக் காளி கோவில் செல்லும் வழியில் அமைந்த அதலைக் கண்மாயும் குறைந்தும் சுருங்கியும் போயுள்ளது. கண்மாயைக் காத்திடுவாள் ஆத்தாள் அதளைக் காளி என்றே நம்பிக்கை கொள்ளத் தோன்றுகிறது. பெரிய கண்மாய், செஞ்சை நாட்டார் கண்மாய், அமராவதிபுதூர் கண்மாய், தேனாறு போன்றவையோடு காரைக்குடியின் நீர்த்தேவையைப் பெரும்பாலும் இக்கண்மாயும் தீர்க்கிறது. இக்கண்மாய்கள் சிறுகச் சிறுக ஆக்கிரமிக்கப்பட்டு வணிக வளாகம், வீடுகள் எழுப்பப்படுவதால் கால்வாயின் பாதைகள் தூர்ந்து விட்டன. கையெட்டிக் கிணற்றில் நீர் இறைத்த காலம் போக போர் போட்டாலும் கிடைக்காமல் 300 அடிகளுக்கும் கீழே போய்விட்டது நிலத்தடி. இன்று பொன்னைக்கூட வாங்கிவிடலாம், மண்ணைக் கூட வாங்கிவிடலாம். தண்ணீரைத்தான் வாங்க முடிவதில்லை. காரைக்குடி, சென்னை மட்டுமல்ல பெங்களூர் போன்ற நீர் வளம் மிகுந்த ஊர்களிலும் கூட ப்ளாஸ்டிக் கேன் தண்ணீர்தான் குடிநீராகப் பயன்படுகின்றன. 

கங்கை, யமுனை, சரஸ்வதி, (அலஹாபாத், காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ்), பிரம்மபுத்திரா, நர்மதா, துங்கபத்திரா, கோவளம், கொச்சுவேலி, சந்தோஸா, கார்னிஜ், ரைன், ஷைன், அர்னோ ( சிங்கப்பூர், துபாய், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், யூரோப்)  என எத்தனை நீர் நிலைகளைக் கண்டாலும் காரைக்குடியின் அதலைக் கண்மாய் நீருக்கு ஈடாகாது. அதைப் பாதுகாக்க ஈதல் அறக்கட்டளை என்றொரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நீர் என்பது எக்காலமும் நம்மை ஆகர்ஷணம் செய்தே வந்திருக்கிறது. வெள்ளலூரில் மதகுகளின் வழியே பாயும் நீரில்தான் குளியல். அதற்கென்றே நீர்ப்பாய்ச்சி/மடைக்குடும்பன் என்றொரு அலுவலர் உண்டு. வாய்க்காலில் நீர்வரத்து இல்லாத நாட்களில் விவசாயக் கிணறுகளின் பம்புசெட் இறைக்கும் நீரில் குளியல்.நேமம், வைரவன்பட்டி போன்ற ஊர்களில் உள்ள கோவில் தீர்த்தங்களுக்கு நீர் வரத்து வரும்படி செய்யப்பட்டிருக்கிறது. எந்நேரமும் அங்கே மழைநீர் போன்றவை வாய்க்காய் மூலம் இணைக்கப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றன. இதில் நேமத்தின் தாமரையும் அல்லியும் பூத்த தடாகத்தை மறக்கவே முடியாது. 

காரைக்குடியின் வீட்டின் அமைப்புக்களில் ராஜஸ்தான், குஜராத் போல நீர் சேமிப்புக் கிணறுகள் உண்டு. வடகிழக்கு, தென்மேற்கு என வீட்டிற்கு இரு கிணறு என்ற அளவில் வீடு முழுதும் வரும் மழைத்தண்ணீர் சேகரிக்கும் இடமாக இருப்பதால் தண்ணீருக்கு என்றைக்குமே தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. வளவு வாசல்களில் மழைநீரை காசாணி அண்டாக்களில் வேடுகட்டி சேமித்து  ஆறுமாதங்களுக்குக் குடிநீராகவும் சமைக்கவும் பயன்படுத்துவார்கள். சமீபகாலங்களில் பெருகிவரும் போர்வெல் போடுதல் என்றொரு ராட்சசன் வந்து தேவதைகளாயிருந்த கிணறுகளை எல்லாம் விழுங்கிவிட்டான்.

சீமைக்கருவேலம் வளர்தல், சாக்கடை நீர் கலப்பது, ப்ளாஸ்டிக் குப்பைகள், வீட்டுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், சாய்நீர் கலப்பது ஆகியவற்றால் நீர் மாசுபடுகிறது. நீர் சேமிப்பு முகத்துவாரங்களை எல்லாம் மண்மூடியும்  கட்டிடங்களாலும் அடைத்துவிட்டோம். அரப்புத்தூளும் பயத்தமாவும் இருந்த இடத்தில் இரசாயனமும் ஆலாவும், ஆசிட்டும் புகுந்துவிட்டது. காட்டாறுகளின் பாதைகள் எல்லாம் காங்க்ரீட் கட்டிடங்கள். மாநிலங்கள் மழை நீரை மட்டுமல்ல மலைநீரையும் அணைகட்டித் தடுத்து அளவோடு விடும் கொடுமை நீங்க வேண்டும். வெங்காயத்தாமரைச் செடிகள் ஆக்கிரமிப்பும் ஏரிகளுக்கான அச்சுறுத்தல். வண்ணச் சாமிகளைக் கரைப்பதும் இன்னொரு இரசாயனக் கொடுமை. சுற்றுச்சூழலைப் பாதிக்காத முறையில் இறைவன் திருவுருவங்கள் செய்யப்பட்டுக் கரைக்கப்படுதல் நலம். பாண்ட் எக்கோ சிஸ்டம் எனப்படும் நீர்வாழ் உயிரின சுழற்சி (மீன், தவளை, பாம்பு , மனிதர்கள் ) தடைபடாமல் இருப்பது முக்கியம். ஜெர்மனியில் ரைன் நதியில் இன்றும் சரக்குப் போக்குவரத்து உண்டு. ஆனால் அதன் கரையோர ஆலைகள் கொட்டும் கழிவுகளால் நீர் மாசுபட்டதை அறிந்து கோடிக்கணக்கான யூரோக்கள் நஷ்டப்பட்டாலும் எல்லா தொழிற்சாலைகளையும் இரும்புக் கரம் கொண்டு மூடி விட்டது அந்த அரசு. அந்த மனோதிடம் நமக்கும் வேண்டும். நொய்யல் மட்டுமல்ல கூவத்துடன் சேர்த்து நம் நாட்டின் பெரு நதிகள் அனைத்தும் சாக்கடைகளாவதைத் தடுத்தே ஆக வேண்டும். அதற்கு அதிகாரபீடத்துக்கும் ஆலையதிபர்களுக்கும் மட்டுமல்ல பொதுமக்களுக்கும் விழிப்புணர்ச்சி வேண்டும். 

நிலப் பிரபுத்துவக் காலத்தில் இருந்து இப்போது வெகுஜன காலத்துக்கு மாறி இருக்கும் நாம் சேங்கை வெட்டுதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். சேங்கை வெட்டுத்ல் என்றால் ஐயனார் கோவில் போன்ற குலதெய்வம் கோவில்களில் பூசாரிகளாய் உள்ள வேளார்கள் அதற்கென நாள் குறிப்பார்கள். அந்த தினத்தில் இளையர்களைக் கொண்டு கோவில் கண்மாயில் மண்ணை வெட்டிக் கொண்டு வந்து கொட்டிக் கரையை உயர்த்துவது நடக்கும். அதேபோல் அந்த மண்ணைக் கொண்டு வந்து பதப்படுத்தி ஐயனார் குதிரை செய்வார்கள். அக்குதிரையை அலங்கரித்து மேளதாளத்துடன் மாலை மரியாதையுடன் புரவி எடுப்புச் செய்கிறார்கள். இதேபோல் தூர்வாரிக் கரம்பை மண்ணெடுத்துக் கரை உயர்த்துவதும் படியும் வண்டல்களை வயல்களில் உழவுக்குச் சேர்ப்பதும் தொடர வேண்டும். நீராதாரங்களில் கட்டிடங்கள் கட்டுவதை அனுமதிக்கக் கூடாது. இதைப் பின்பற்றினால்தான் சுனாமி, மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து தப்பிக்கலாம். கடல் நீரையும் கழிவுநீரையும் குடிநீராக்கும் அவலத்திலிருந்தும் தப்பிக்கலாம்.

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று வருமானால் அது நீருக்காகத்தான் இருக்கும். மரங்கள் வெட்டப்படுவதால் மழையின் அளவும் குறைந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் வருடம் தப்பாமல் வரும் நம் பருவ மழைக்கு ஆதாரமாயிருக்கின்றன. மலைகளை சிதைப்பதன் மூலம் அல்லது கூறாக்குவதன் மூலம் மழை தடைபடுகின்றது. 

நீர் கொண்டுவர வேண்டியே மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆண்கள் திருமணம் முடிக்கிறார்கள் என்பது அதிர்ச்சிச் செய்தி. தண்ணீர் லாரியின் முன் மக்கள் ப்ளாஸ்டிக் குடங்களோடு தவமிருப்பது தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவின் ஏனைய மாநிலங்களின் நிலைமையும் இதுதான். 

அன்றைக் காலத்தில் மன்னர்களும் தனவந்தர்களும் மட்டுமல்ல பெரும் பாவம் செய்தவர்களும் பரிகாரமாகக் குளம் வெட்டி இருக்கிறார்கள். ஆயி என்ற பொதுமகளின் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணதேவராயர் கட்டியதே ஆயிகுளம். இன்றைக்கு அது ஆயிமாண்டேப் என்னும் நினைவு மண்டபமாய் இருக்கிறது. அன்றைக்குக் கோவில்களின் அருகிலேயே நீர்நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாவம் தொலையவும், புண்ணியம் பெருகவும் நீர் நிலைகளில் மூழ்கி மனதையும் உடலையும் புதுப்பித்துக் கொள்வது இன்றும் நடைமுறை. நீர் மேலாண்மையைப் பின்பற்றினால்தான் வரட்சி, வெய்யில்கால அவதி நீங்கும். மழைநீர் சேமிப்பு, நதிநீர்ப் பங்கீடு, நதிநீர் இணைப்பு வந்தால்தான் மாநகரங்களும் மாகாணங்களும் உயிர்பெறும்.

1600 ஆண்டுகளுக்கு முன்பு காரியாசான் என்பவர் எழுதியது ( பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில் ) 

குளந்தொட்டுக் கோடு பதித்து, வழி சீத்து
உளந்தொட்டு உழுவயலாக்கி, - வளந்தொட்டுப்
பாகு படும்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத் தினிது ( 66 ) 

வரப்புயர நீர் உயரும்.நீர் உயர நெல்லுயரும்,நெல்லுயரக் குடி உயரும், குடி உயரக் கோன் உயர்வான் என்ற சொலவடைக்கு ஏற்ப  குளம் கால்வாய், வாய்க்கால், ஆகியன  வெட்டி வழியமைத்து குளத்தைச் சுற்றிலும் மரங்கள் நட்டு, மக்கள் நடக்கும் பாதையை சீர்படுத்தி, தரிசு நிலத்தை உழுது வளமான கழனியாக்கி அதற்கு நீர்பாய்ச்சக் கிணறு வெட்டுதல் ஆகிய இந்த ஐந்து செயல்களையும் செய்பவர் மண்ணுலகிலேயே சொர்க்கத்தைக் காண்பார்கள். இதனால் விரிநீர் வியனுலகம் என்றும் அவர்க்கு மட்டுமல்ல அனைவர்க்கும் இன்பமயமே. 

நீராதாரங்கள், மலைகள் பற்றிய ஆவணக் காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், புகைப்பட கேலரிகள், தீம் பார்க்குகள்  உருவாக்கப்பட வேண்டும். பூங்காக்களுக்கும் அறிவியல் கண்காட்சிகளுக்கும், சிறப்பான திரைப்படங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவது போல,  மலையேற்றம் , நதி நீர் , ஏரி போன்றவற்றுக்கும் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட வேண்டும்.பொதுமக்களுக்கும் பத்ரிக்கை தொலைக்காட்சி  போன்ற ஊடகங்கள் மூலம் இவற்றின் சிறப்பையும் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பரப்ப வேண்டும். பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்ச்சியைத் தூண்ட வேண்டும்.


இளஞ்சிறார்களின் உள்ளத்தில் இவற்றைப் பாதுகாப்பதற்கான விதைகள் விதைக்கப்படவேண்டும். இவை சம்பந்தமான ஆவணப் படங்கள் குறும்படங்கள் , திரைப்படங்கள், டிஜிட்டல், கிராஃபிக்ஸ் கார்ட்டூன் படங்கள் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் இவற்றின் முக்கியத்துவம் சேர்க்கப்படவேண்டும்.நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். கைபர் போலன் போன்ற கணவாய்கள் வழிவந்த மக்கள் வாழ்வும்  சிந்து சமவெளி நாகரிகமும் மலை சார்ந்தும் நதி சார்ந்தும் உருவானவை.கல்லூரிகளில் விண்வெளி விஞ்ஞானத்துக்கும் அணு ஆராய்ச்சிக்கும் வழங்கப்படும் சம முக்கியத்துவம் பூமியைப் பற்றிய ஆராய்ச்சிப் பாடத்துக்கும்  ( ஜியாலஜி ) வழங்கப்பட வேண்டும்.இயற்கைத் தாயின் அமுதசுரபியாம் மலைகளையும் அவற்றிலிருந்து பெருகும்நீராதாரங்களையும் அவற்றின் இயல்பிலேயே வைத்திருப்போம். இயற்கை சுழற்சியைப் பாதுகாப்போம். இச்செல்வங்களைப் பாதுகாப்பதன் மூலம் உலக நாடுகளில் வல்லரசாக நாம் உயர்ந்து நிற்போம்.

டிஸ்கி :- இத்தொகுப்பில் இடம் பெற்ற எனது கட்டுரை. 

பதிப்பகம் :- ஸ்நேகா
தொகுப்பாசிரியர் :- மதுமிதா
விலை ரூ. 550/- 

2 கருத்துகள்:

  1. சிறப்பான கட்டுரை.  வளர்ந்து வரும் நகர நாகரீகத்தில் அடுக்கடுக்காய் அபார்ட்மெண்ட்கள் முளைத்துக் கொண்டே போகும் நிலையில் அவற்றையெல்லாம் பார்க்கும்போது எனக்குள் என்றும் தோன்றும் பயமே இத்தனை கட்டிடங்களுக்கு எப்படி இறைவன் நீர் ஏற்பாடு செய்யப் போகிறான்?  மனிதன் தனது சுயநலத்தால் அத்தனையையும் அழித்து வைத்திருக்கிறானே என்று பயம் வரும்.

    பதிலளிநீக்கு
  2. உண்மை ஸ்ரீராம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...