எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 ஏப்ரல், 2021

வாடிகன் என்னும் தனி தேசம்.. !!!

 யூரோப் டூரின் நான்காம் நாள் இத்தாலி வந்தடைந்தோம். வெனிஸை சுற்றிப் பார்த்தபிறகு ஐந்தாம் நாள் காலையில் ரோம் நகரத்தையும் மதியத்தில் வாடிகன் சர்ச்சையும் காணச் சென்றோம். 

கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் புனித நகரம். போப்பின் தனியாட்சிக்கு உட்பட்ட தனிதேசம் வாடிகன். இதற்கென்று தனி ரயில் நிலையம், தனி போஸ்ட் ஆஃபீஸ், முத்திரைகள், நாணயங்கள் உண்டு. இந்தத் திருச்சபை, புனிதர்கள், அற்புதங்கள்  சம்பந்தமாக நூலகமும், அருங்காட்சியகமும் கூட உண்டு.

எனக்கு போப் இரண்டாம் ஜான் பால், புனித ஃப்ரான்ஸிஸ் ஆகிய போப்பாண்டவர்களை செய்திகள் மூலம் பரிச்சயம் உண்டு. ஆனால் அங்கே 250 க்கும் மேற்பட்ட ( 266) போப்பாண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். 


பிரம்மாண்ட சர்ச்சுக்குள் செல்வதற்குள் ஏகப்பட்ட செக்யூரிட்டி செக்கிங்க்ஸ். அதன் பின் பல்வேறு தளங்களில் கன்வேயரிங் பெல்ட் மூலம் உள்ளே நுழைந்தோம். செயிண்ட் பீட்டர்ஸ் ஸ்கொயரில்/புனித பீட்டர் சதுக்கத்தில் முதன் முதலாக வரவேற்றது ஒரு ஸ்தூபி/ஸ்தம்பம். உயரமாக நாற்சதுரத் தூண் போல அமைந்த ஒபிலிக்ஸ் எனப்படும் நீள் பிரமிட் வடிவம்.  இதே போல் வடிவத்தை ஃப்ரான்ஸிலும் பார்த்தேன்.  இதேபோல் ஒபிலிக்ஸ் துருக்கி, எகிப்திலும் இருப்பதாகக் கூறுகிறார்கள். 

இரு பக்கத்திலும் நூற்றுக்கணக்கான தூண்கள் கொண்ட பர்கோலா டைப் மண்டபங்கள் அழகூட்டின. 
சர்ச்சின் எதிரே ஒரு ஃபவுண்டன் குளிர்வூட்டியது. 
நூற்றுக்கால் தூண் மண்டபங்களின் உச்சியில் அப்போஸ்தலர்களும் புனிதர்களும் காட்சி அளித்தார்கள். 
இதோ தெரிவதுதான் உலகப் புகழ் பெற்ற வாடிகன் சர்ச். பக்கவாட்டில் அப்போஸ்தலர்களின் அரண்மனை என்ற போப்பாண்டவர் , பிஷப்புகள் போன்ற துறவியர் தங்குமிடம் உள்ளது.


சர்ச்சினுள்ளே உள்ள விதானம் பல்வேறு மக்களையும் சித்தரிக்கும் ஓவியங்களாகவும் மார்பிள் சிற்பங்களாகவும் அழகூட்டியது. 

சர்ச்சின் - கத்தோலிக்கத் திருச்சபையின் முன் பக்கத்திலிருந்து ஒபிலிக்ஸ் மற்றும் நூற்றுக்கால் தூண் மண்டபங்களின் காட்சி. 

பக்கவாட்டுக் கட்டிடங்களில் அப்போஸ்தலர்களும் புனிதர்களும். 

மிகவும் கட்டுக் கோப்பாகவும் தூய்மையாகவும் பராமரிக்கப்படுகிறது இந்த சர்ச்.
வருடந்தோறும் லட்சக்கணக்கான புனித யாத்திரிகர்களும் பயணிகளும் இங்கே வருகைபுரிகின்றார்கள். 


திருச்சபையின் முகப்பு. மேங்கோப்பிலிருந்து எல்லா இடங்களும் மார்பிள் சிற்பங்கள். தரை முழுக்க முழுக்க மொஸைக்கினால் ஆனது. இங்கே ஓவியங்களும் கூட மொஸைக்கினால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அப்போஸ்தலர்களின் அரண்மனைக்குச் செல்லும் வழி. 

திருச்சபையின் முன்புறம் இரு மன்னர்கள்/போப்பாண்டவர்கள் சிற்ப வடிவில் காட்சிஅளிக்கிறார்கள். 

திருச்சபையின் நுழைவாயில்.கடவுட் காட்சியைப் பதிவு செய்யும் மக்கள். இங்கே நுழைய ட்ரெஸ் கோட் உண்டு. தோள் பட்டையையும் தலையையும் முழுமையாக மூட வேண்டும் பெண்கள். ஆண் பெண் யாராக இருந்தாலும் ட்ரவுஸர், தோள்பட்டை தெரிய உடை அணிந்தால் அனுமதி இல்லை. 


கூட்டத்தோடு கூட்டமாக நாமும் உள்ளே நுழைந்தோம். புடவை அணிந்ததால் முக்காடு போட்டுக் கொண்டேன். உள்ளே நுழைந்ததும் எடுத்து விட்டேன். 

திருப்பலி கொடுக்கும் இடம். 


டொனடோ ப்ராமண்டி, செயிண்ட் பியரி, மைக்கேலேஞ்சலோ ஆகியோர் கொடுத்த சிலுவை ( லேடின் க்ராஸ்) வடிவங்களில் மைக்கேலேஞ்சலோ கொடுத்த சிலுவை வடிவம் கட்டிட உறுதிக்கு வலுவாகப் பொருந்தியதால் அதன் பின் மாற்றம் செய்யாமல் அதையே இன்று வரை நீடித்துப் பராமரித்து வருகிறார்கள். 

சூரிய ஒளி பாயும் கண்ணாடிகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருப்பதால் வெளிச்ச வெள்ளம் திருச்சபை முழுதும் பாய்கிறது. 


திருச்சபைக்கு நுழையுமுன் .. நாங்களே வெய்யிலாலும் வெப்பத்தாலும் வெந்து போய் இருக்க ( இத்தாலி என்ன கொடுமையா எரிக்குது அதுக்கு இந்தியாவே பரவாயில்லப்பான்னுதான் வந்திருப்பாங்க சோனியா அம்மையார் :)  எங்கள் முன் ஒரு ஆசாமி அந்த வெய்யிலிலும் கம்பளியைக் கச்சிதமாகப் போர்த்திக் கொண்டு கோஸ்ட் போலக் காட்சி அளித்தார் !!!.


உள்ளே நுழைந்தால் ஒளி ஊருடுவிப் பாய்ந்து சர்ச்சை ஒரு தேவலோகம் போல ஆக்கி இருந்தது. 

எங்கள் கைட் மைக்கேல் ஹெட்போனில் திருச்சபை பற்றிய விளக்கம் அளித்தார். 

மிக மிக அழகான டூம். சர்ச்சின் நடு மையத்தில் அமைந்த குவி மாடக் கோபுரம். சுற்றிலும் மன்னர்கள், புனிதர்களின் மார்பிள் , மொஸைக் ஓவியங்கள். 


திருச்சபையின் முன் நாங்கள்.

தேவாலயத்தின் திருப்பலி பீடத்தினை (மேடைக்கு பின்னே) அலங்கரிக்கும் நான்கு புனிதர்கள் !


இவர்கள் அப்போஸ்தலர்களா அறியேன். இவர்கள் நால்வரும் சுற்றி நிற்பது செயிண்ட் பீட்டரின் சிம்மாசனத்தை.  மையத்தில் ஒரே ஒளிவெள்ளம். எங்கிருந்து பாய்கிறது எனக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

பெரினினியின் பால்டாச்சினோவுடன் கூடிய பலிபீடம் என்கிறார்கள் இதை.  

மக்கள் கூட்டம் அதிகமானால் ஏர் வெண்ட் எனப்படும் காற்றைச் சீராக்கும் வெண்டிலேஷன்/தரைச்சாளர அமைப்புக்கள்  ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்தன.

உள்ளே பியட்டா என்ற மரியன்னை ஏசுவை ஏந்திய காட்சிச் சிற்பத்தையும் மைக்கேலேஞ்சலோவின் மார்பிள், மொஸைக் சிற்பங்களையும் ஓவியங்களையும் காண முடிந்தது. அவற்றைத் தனி இடுகைகளாகப் பகிர்ந்துள்ளேன். 
அப்போஸ்தலர்களின் மாளிகையைக் காக்கும் ஸ்விஸ் நாட்டுக் காவலர்கள். இவர்கள் இங்கே வாலண்டரி சர்வீஸ் செய்வதாகக் கூறினார்கள். போப்பாண்டவரின் தனிப் பாதுகாவலர்கள், மெய்க்காவலர்கள்.
 

எங்கள் டூர் மேனேஜர் சந்தோஷ் ராகவனும், இத்தாலி டூர் கைட் மைக்கேலும் :) 
திருச்சபை பற்றியும் புனிதர்கள் பற்றியும் விரிவாகக் கூறினார். நமக்குத்தான் யாரென்று அப்போது தெரியாததால் கவனத்தில் கொள்ள முடியவில்லை. 

போப் ஒன்பதாம் பயஸின் சிலை.  அபார்ஷனைத் தடுப்பது பற்றியும் கருவைப்பாதுகாப்பது குறித்தும் இவர் கருத்துத் தெரிவித்ததோடு அதைக் கட்டளையாகவும் ஆக்கியவர். அதைக் கௌரவிக்கும் பொருட்டு அவர் சிலையை இங்கே நிறுவி உள்ளார்கள் போல் தெரிகிறது. 


ஒவ்வொரு போப்பும் இந்தத்திருச்சபையின் முன்னிருக்கும் இடத்தில்தான் பதவி ஏற்றுக் கொள்வார்கள். அதற்கென உள்ள உடை , அங்கிகள்,தரித்து செங்கோலுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து கடவுளின் பிரதிநிதியாக செயல்படுவார்கள். 

மிகுந்த கட்டுக்காவலுடன் சுத்தத்தோடு பாதுகாக்கப்படுகிறது இந்த இடம். 

30- 35 படிகள் உயரத்தில் இதன் நுழைவாயில் அமைந்துள்ளது. ரோமானியக் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. 


பல்வேறு தேசங்களின் பல்வேறு மனிதர்களோடு திருச்சபையின் முன் சங்கமித்தோம் நாமும். 

செயிண்ட் பீட்டர்ஸ் பேசிலிக்காவில்/ புனித பீட்டர் தேவாயலத்தின்  திருப்பலி பீடத்தின் முன்னே உள்ள அழகான பால்டாச்சின் என்னும் விதானத்தின் முன் நின்று ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டேன். 

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...