எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

கொஞ்சம் ப்ளாஸ்டிக். மேசை விளக்கும் தந்தச் சீப்பும்.

 கிட்டத்தட்ட 500 வருடங்களாக (அதற்கு முன்னும் கூட இருக்கலாம்) காரைக்குடிப் பக்கம் கல்யாணச் சீரில் வைரம், தங்கம், வெள்ளியுடன், எவர்சில்வர், அலுமினியம், மங்கு, செம்பு, பித்தளை ( வெண்கலம்), இரும்பு, மரம், தகரம், மரவைகள், ப்ளாஸ்டிக், ரப்பர் ( குளுதாடிகள் , கப்புகள் ) ,கண்ணாடிச் சாமான்கள்,துணிமணிகள், மெத்தை பாய் தலையணைகள், அலமாரிகள்  வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இப்போது புதிதாய் மெல்மோவேர், டஃபர்வேர், நான் ஸ்டிக் , காப்பர் பாத்திரங்களும், கிச்சன் எலக்ட்ரிகல் ( மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், கேஸ் அடுப்பு ) ஐட்டங்களும், வாஷிங் மெஷின், டிவி வகைகளும் பரப்பி வந்திருக்கிறார்கள்.

இதெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு வரை பெண் வீட்டார் பெண்ணுக்குப் பரப்பிக் கொடுத்த சாமான்கள். அதன் பின் பெண்ணுக்குத் தனியாகவும் மாமியாருக்குத் தனியாகவும் ( இது பொங்கல் அடுப்பு, தவலை, கோலக்கூட்டு , சில வாளிகள், சம்புடங்கள், மங்கலப்பொருட்கள் மட்டுமே இருக்கும் ) , மாப்பிள்ளைக்குத் தனியாகவும் சாமான் பரப்பிக் கொடுப்பார்கள். இதில் ஐந்து ஜோடி சட்டை பாண்ட், பனியன், ஜட்டி, கைக்குட்டைகள், பாடி ஸ்ப்ரே, செண்ட் , ஷேவிங் செட், டேபிள் ஃபான், டேபிள் சேர், ரேடியோ, டேப் ரெகார்டர் போன்றவையும் இன்னும் குடை செருப்பு, சூட்கேஸ் போன்றவையும் இருக்கும். 

மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்குப் பதினாறு புடவைகள் ( 7 பட்டு தொகை வாரியாக 35,000 இல் இருந்து பத்தாயிரம் வரை , 9 சிந்தடிக் சேலைகள்,) 5 சூடிதார்கள், 5 நைட்டிகள் அல்லது இரவு அணியும் சட்டை பாண்டுகள், பாடி, ஜட்டி, கைக்குட்டைகள், தலை அணிகள், மேக்கப் செட், சீப்பு, சோப்பு , பாடி ஸ்பிரே, செண்ட் வகையறாக்கள், பவுடர், ஸ்நோ, நெயில்பாலிஷ்கள், துண்டுகள், கைப்பைகள், வாட்ச், சாப்பாட்டுத் தட்டு, குடை, சில்வர் அண்டா, வாளி , கப், செருப்பு, இன்னபிறவற்றோடு வெள்ளியில் ஒன்று அல்லது சில சாமான்களும் ( ஒரு கிலோவிலிருந்து இருக்கும் ) தங்கத்தில் அல்லது வைரத்தில் பெண்ணுக்கு சில நகைகளும் கொடுப்பார்கள். 

திருமணத்தின் போது பெண்ணுக்குக் கொடுக்கும் சீதனப் பணத்தை இப்போதெல்லாம் அப்படியே மாப்பிள்ளை வீட்டார் முழுதாகவே பெண் பெயரிலேயே டெபாசிட் போட்டு விடுகிறார்கள். ( வேண்டாம் என்று சொன்னால் பையனிடம் ஏதும் குறையோ என்று பேச்சு எழுவதால் இதைத் தவிர்க்க இப்படிச் செய்கிறார்கள். ) அந்தக்கால முறைப்படி சீதனப் பணத்தில் சிறிது மாமியாருக்கான பின் முறை என்று கொடுப்பார்கள். அதே போல் பேசி முடித்துக்கொள்ளும்போது மணமகளுக்குத் தாலிக்குப் பொன் தட்டும்போது  (மாப்பிள்ளை வீட்டில் இருந்து பொன் தாலி போட வேண்டும். தாலியை முன்பே பெண் வீட்டார் செய்து வைத்து விடுவதால் அதற்குப் பதிலாக பெண் வீட்டாருக்கு ஒரு பவுன், 3 அல்லது 5 அல்லது 16  இதுபோல் தோதுக்குத் தக்கன  கொடுப்பார்கள். இதையே சிலர் தங்கள் மருமகளுக்கு நகையாகச் செய்து போட்டு விடுகிறார்கள்.  

மேலே கூறியுள்ளதில் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பெண் வீட்டார் வெள்ளியில் சில பாத்திரங்கள் வைப்பதோடு சரி, அது போக பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் உடைகள், சாமான்கள் கொடுப்பதில்லை. சிலர் வீடுகளில் மட்டுமே இந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். 

ஆனால் இப்போதும் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குச் சாமான் பரப்புகிறார்கள். சாதாரணக் கல்யாணத்தில் கூட (உடைகள் ஒரு லட்சம்) தையல்கூலி ( 45,000) உட்பட இதுவே சுமார் ஒன்றரை லட்சம் உடை மற்றும் மற்ற பொருட்களுக்கான செலவு ( பத்தாயிரம்) ஆகிறது.  தாலிக்குப் பொன் தட்ட 3, 5, 16 பவுன் பெண் வீட்டாருக்குக் கொடுக்கிறார்கள். மேலும் பெண்ணுக்கு ஒரு கிலோ முதல் வசதிக்குத் தக்கபடி வெள்ளிப் பாத்திரம் ( வேவுக்கடகாம், குடம், குத்து விளக்கு போன்றவை) வைக்கிறார்கள். 

எனவே மாப்பிள்ளை வீட்டிற்கும் பெண் வீட்டிற்கும் இன்றைய நடைமுறையில் செலவுக் கணக்கு ஒன்றுதான். மேலும் அவர்கள் மாப்பிள்ளைக்குக் கொடுப்பதை ( வைர மோதிரம், செயின் , ப்ரேஸ்லெட் )  இவர்கள் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்து விடுகிறார்கள்.  இது போக வீடியோ, சாப்பாட்டு செலவு, உறவுமுறைகளுக்கான உடைகள், சீர் முறைகள் , இன்விடேஷன், வீடியோ, வண்டி வாகன வசதிகள், திருமண ஹால் எடுத்தால் அதற்கான வாடகை எல்லாம் சேர்த்துக் குறைந்தது 7 முதல் பத்து லட்சம் வரை செலவாகிறது. 

நிற்க. இது எல்லாம் என் திருமணத்தில் எங்கள் அம்மா வீடு பரப்பிக் கொடுத்த சாமான்கள். இதில் புழங்கியது போக மிச்சமிருக்கும் சாமான்கள் கானாடுகாத்தானில் ஒரு கண்ணாடி பதித்த மர அலமாரியில் அடைபட்டுக் கிடந்தன. அவை உங்கள் பார்வைக்கு .


#இது டேபிள் லாம்ப். மேசை விளக்கு. 


மூடி போட்ட ஸ்கேல் அளவு 50 செமீ நீளப் பென்சிலும், இருபக்கமும் மூடியைத் திறந்து எழுதக்கூடிய பச்சை, சிவப்பு மசி கொண்ட நிப் பேனாக்களும். டூ இன் ஒன். 

பென்சிலில் ஒரு குடைக்காம்பு போல ஒரு கொக்கி.

டூ இன் ஒன் சோப்பு டப்பா. சோப்பு டப்பாவே பிரஷாகவும் பயன்படும். இதுவும் டூ இன் ஒன் உபயோகம். 

மர்லின் மன்றோ பதித்த சோப்பு டப்பா. ( சரோஜா தேவி சோப்பு டப்பா இல்லீங்கோ :) 

சோப்பு டப்பாவில்  நீர் தேங்காமல் வழிய துவாரங்கள்.

சிகரெட் ஆஷ் ட்ரே. இது தகரம். 
தந்தப் பேனா இல்லை, ப்ளாஸ்டிக் பேனாதான். 

ப்ளாஸ்டிக் கப்பல். பேப்பர் வெயிட். நடுவில் வெயிட் வைச்சிருக்காங்க. 


குழந்தைகளுக்கான பீப்பீ ஊதல். ரப்பரில். 


உள்பக்கம் மணி அடிக்கும் கிலுகிலுப்பை. வெளிநாட்டுச் சரக்கு, மலேயா இறக்குமதி. 

இதுவும் கிலுகிலுப்பைதான். ப்ளாஸ்டிக். 

இது இன்னொரு வகை. உள்லே ஒரு குழந்தை சேரில் அமர்ந்து ஆடும் போஸில் வைக்கப்பட்டுள்ளது. 

இதுதான் செட்டியார் கோம்ப் எனப்படும் சீப்பு. கறுப்புக் கலரில் இருக்கும் இந்தச் சீப்பில் கைப்பிடி பக்கம் கூர்மையாக இருக்கும். இதை வாகு/வகுப்பு எடுக்கப் பயன்படுத்துவார்கள். நெளி நெளியாக இருக்கும் முடியை இச்சீப்பைக் கொண்டு சீவிக் கொள்வார்கள். ( அந்தக்காலப் புகைப்படத்தில் பார்த்தால் தெரியும். கிராப்புத் தலைக்காரர்கள் நெளிநெளியாக மடிப்பு மடிப்பாக வாரிக் கொள்வார்கள். சீப்பின் மேற்புறம் கொண்டு தலை முடியை ஆங்காங்கே வளையம் வளையமாக, மடிப்பாக அமுத்தி விடுவார்கள் ! )

அதன் பக்கத்தில் இருப்பது தந்தச் சீப்பு. வேலைப்பாடுகளுடன் கூடியது. மாப்பிள்ளைக்கு வைக்கும் சாமான்களில் வைத்தது. பக்கத்தில் இருப்பது நகை சுத்தம் செய்யும் பிரஷ். எவ்வளவு நீளமான பிரஷ் குச்சங்கள். கைப்பிடியும் கை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கு.! 

3 கருத்துகள்:

 1. நல்ல நினைவுகள். இப்படியான பொருட்கள் எல்லாம் இப்போது கிடைக்கிறதா?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 2. எல்லாமே ரசனைமிக்க இருக்கு. சீப்பு சோப்பு டப்பா இப்போதும் இருக்கிறதோ? வகிடு எடுக்கும் கூர் பகுதியுடன் மற்றும் ப்ரஷ்ஷுடனான சோப்பு டப்பா..

  உங்கள் சீர் சாமான்கள் அருமை...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இப்போது கிடைப்பதில்லை துளசி சகோ. அதுதான் போஸ்ட் போட்டிருக்கேன்.

  நன்றி கீத்ஸ். இப்போது இவை கிடைப்பதில்லை.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...