பொன்னல்ல பெரிது..
எடைக்கு எடை சமன் செய்த அன்பின் இலை/ தங்க துலாபாரத்தை சமன் செய்த துளசிதளம்
ஒரு பொருளையோ மனிதரையோ அடைய பொன்னையும் பொருளையும் கொட்டிக் கொடுக்கலாம். ஆனால் அப்பொருளையோ மனிதரையோ உண்மையான உள்ளன்பு இருந்தால் மட்டுமே ஆத்மார்த்தமாகப் பெற முடியும். கூடை கூடையாய்ப் பொன்னைக் கொட்டியும் ஒருத்தி பெற முடியாத அன்பை ஒரே ஒரு இலையை உள்ளன்போடு கொடுத்து அடைந்தாள் இன்னொருத்தி. அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பகவான் கிருஷ்ணருக்கு சத்யபாமா, ருக்மணி என்ற இரு மனைவியர் . இருவரும் அவர்மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார்கள்.
சத்யபாமாவின் திருமணத்தின்போது அவளது தாய்வீட்டில் இருந்து பொன்னையும் பொருளையும் மலைபோல் சீராகக் கொட்டி அனுப்பி இருந்தார்கள். அது போக கிருஷ்ணருக்குத் தேரோட்டியாக ஒரு சமயம் அவள் செயல்பட்டாள் என்ற பெருமை வேறு அவள் மனத்தில் மமதையை ஏற்படுத்தி இருந்தது.
ருக்மணியோ சராசரியான குடும்பத்தில் பிறந்து கிருஷ்ணரை மணந்து கொண்டவள் ஆயினும் உள்ளன்போடு அவருக்கு சேவை செய்வாள். அதென்னவோ ருக்மணியைப் பார்த்தால் சத்யபாமாவுக்குப் பொறாமை உணர்ச்சி மேலிடும். வசதி வாய்ப்பில் தான்தான் பெரியவள் என்ற எண்ணம் துளிர்விடும். எப்படியாவது கிருஷ்ணரின் மேல் ருக்மணி வைத்திருக்கும் அன்பைவிட தான் வைத்திருக்கும் அன்புதான் பெரியது என்று காட்டவேண்டும் என்ற எண்ணத்தோடு காத்திருந்தாள். அதற்கு வாய்ப்பு வந்தது ஒருமுறை.
ஒருமுறை நாரதர் வேறு அவளது பொறாமைக்குத் தூபம் போடுவது போல் ருக்மணியின் அன்பே பெரிது என்று கூறிவிட்டார் அவளிடம். ஏற்கனவே கோபத்தால் கொந்தளித்துக் கொண்டிருந்த அவள் “ இல்லை என் அன்புதான் பெரிது என நிரூபிக்கிறேன். கிருஷ்ணரின் எடைக்கு எடை தங்கத்தைக் கொடுத்து எனது அன்புதான் பெரிது என நிரூபிப்பேன் “ என சபதம் போடுகிறாள்
ருக்மணியின் வசம் அவ்வளவு பொன்னும் பொருளும் இல்லாததால் தானே ஜெயிக்க முடியும் என்றும் கிருஷ்ணரின் மேல் தனக்கு உள்ள ப்ரேமையை நிலைநிறுத்தி உலகுக்கு அறிவிக்க முடியும் என்றும் எண்ணுகிறாள் பேதை சத்யபாமா.
வீட்டின் முற்றத்தில் உடனடியாகத் தயாராகிறது மிகப் பெரிய துலாபாரம். கிருஷ்ணரும் ஒன்றும் சொல்லாமல் நடப்பதை எல்லாம் புன்முறுவலோடு கவனித்துக் கொண்டிருக்கிறார். ”சுவாமி இந்தத் துலாபாரத்தின் ஒரு தட்டில் ஏறி அமருங்கள் “ என்று கிருஷ்ணரிடம் சொல்கிறாள் சத்யபாமா.
“ ஏனம்மா. இதில் அமரச் சொல்கிறாய் “ என்று ஏதுமறியாதவர் போல் கேட்கிறார் கிருஷ்ணர். ”நான் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பை இந்த உலகுக்குத் தெரிவிக்க உங்கள் எடைக்கு எடை பொன் கொடுத்து அளக்கப் போகிறேன் “ என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறும் சத்யபாமாவைப் பார்த்துப் புன்னகைத்தபடி தனது புல்லாங்குழல், கிரீடம் ஆகியவற்றைக் கழற்றி வைத்துவிட்டுத் துலாபாரத்தின் ஒரு தட்டில் ஏறி அமர்கிறார் கிருஷ்ணர்.
ஆரம்பமாகிறது அன்பின் ஆட்டம். கிருஷ்ணர் துலாபாரத்தின் ஒரு தட்டில் அமர்ந்திருக்க சத்யபாமா தன் தாய்வீட்டுச் சீராய் வந்த பொற்குவியலைக் கூடை கூடையாய் கொண்டு வந்து கொட்டுகிறாள். மிகப் பெரிய துலாபாரமான அது கொஞ்சம் கூட அசையவில்லை.
அவளது பணிப்பெண்கள் இன்னும் இன்னும் என கருவூலத்தில் இருந்து நவநிதியங்களையும் ரத்னஹாரங்களையும் பொன்னாரங்களையும் நவமணிகளையும் கொண்டுவந்து கூடை கூடையாய்ப் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். துளிக்கூட அசையாமல் இருக்கும் அந்தத் துலாபாரத்தைப் பார்த்து அசந்து போய் நிற்கிறாள் சத்யபாமை.
மேலும் மேலும் பொன்னும் பொருளும் கிருஷ்ணர் அமர்ந்திருக்கும் துலாபாரத்தின் எதிர் தட்டில் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சத்யபாமாவின் கஜானாவே காலியாகிவிடுகிறது. என்ன செய்வதென்று கைகளைப் பிசையும் சத்யபாமா யோசிக்கும்போது நாரதர் அவள் உடலில் அணிந்திருக்கும் நகைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
உடனே சத்யபாமா மகிழ்வுடன் தன் உடலில் அணிந்திருக்கும் பொன்னாபரணங்களை எல்லாம் கழட்டி வைக்கத் தொடங்குகிறாள். தலையிலிருந்து கால்வரை பூட்டப்பட்டிருந்த பொன்னாபரணங்களை ஒவ்வொன்றாக கழட்டி வைக்கிறாள். க்ரீடத்தில் இருந்து சிலம்பு வரை வைத்துவிட்டாள்.
கிருஷ்ணரின் எடைதான் அதிகமாக இருக்கிறதே தவிர அவருக்கு எதிரில் இருக்கும் தட்டில் கொட்டப்பட்டிருக்கும் மலைபோன்ற பொன் தட்டு துளிக்கூடத் தாழ்ந்து இறங்காமல் மேலேயே நிற்கிறது.
மனம் வருந்தித் தோல்வியை ஒப்புக்கொள்ளும் பாணியில் சத்யபாமை நிற்கும்போது அங்கே வருகிறாள் ருக்மணி. “ என்ன நடக்கிறது இங்கே “ என ஆச்சர்யமாக வினவுகிறாள்.
“கிருஷ்ணரின் எடைக்கு எடை பொன் கொடுத்துத் தனது அன்பை நிரூபிக்க முயல்கிறாள் சத்யபாமா “ என்று கிண்டலாகக் கூறுகிறார் கலகக்கார நாரதர்.
அதைக் கேட்டதும் ருக்மணி சத்யபாமாவைப் பார்க்க அவள் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தலை குனிகிறாள். ருக்மணி உடனே சத்யபாமாவின் முகவாயைத் தொட்டு நிமிர்த்தி “ பாமா நான் இதை சமன் செய்யட்டுமா “ எனக் கேட்கிறாள். சத்யபாமாவுக்கு அவமானமாக இருந்தாலும் சரி என சம்மதிக்கிறாள். அந்தத் துலாபாரத்தில் கொட்டப்பட்ட பொற்குவியலை அகற்றுகிறார்கள் சேடியர்.
அங்கே முற்றத்தில் ஒரு துளசி மாடம் இருந்தது. ருக்மணி அதன் அருகே சென்று சுற்றி வந்து வணங்கி ஒரு துளசி இலையைப் பறித்து வந்தாள். அந்தத் துளசி தளத்தைக் கையில் வைத்துக்கொண்டு மனதுள் “ கிருஷ்ணார்ப்பணம்” என்று சொல்லி வணங்கிவிட்டுக் கிருஷ்ணருக்கு எதிரில் இருந்த தராசுத்தட்டில் வைக்கிறாள். அவள் அந்தத் துளசிதளத்தை வைத்ததுதான் தாமதம் துலாபாரத்தின் இரு தட்டுக்களும் சமமாகின்றன.
’அட என்ன இது ஆச்சர்யம். தான் மலை போல் குவித்த செல்வத்தைவிட ஒரு துளசிதளம் கிருஷ்ணரின் எடைக்கு ஈடாகி விட்டதே’ என வியந்து பார்த்தாள் சத்யபாமா. அகங்காரத்தோடு கொடுக்கப்படும் செல்வத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் எளியே பொருளே உயர்ந்தது என்பதை ருக்மணியின் அன்பின் மூலம் உணர்கிறாள். தன் மனமாச்சர்யத்தை ஒழித்து ருக்மணி மேலும் அன்பு செலுத்தத் தொடங்குகிறாள் சத்யபாமா. இதைக் கண்டு கிருஷ்ணரும் ருக்மணியும் மகிழ்கிறார்கள். தன்னுடைய கலகம் சத்யபாமாவுக்குத் தெளிவு கொடுத்ததால் நாரதரும் மகிழ்ந்து செல்கிறார்.
எளிய பொருளானாலும் உண்மையான அன்போடு அளிக்கப்படும் பொருளே உயர்ந்தது என்பதை இந்தக் கதை உணர்த்துகிறதுதானே குழந்தைகளே.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!