எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 மே, 2020

தொழிலாளிகள். நமது மண்வாசம் மே சிறப்பிதழ்.

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு. 

ஆண் செய்யும் கனரகம் சார்ந்த வேலைகளையும் கூட இன்று பெண்கள் பார்க்கத் துவங்கியுள்ளனர். மண்ணிலிருந்து விண்வரை பெண்களில் ஆதிக்கம் பரவியுள்ளது. ட்ரான்ஸ்ஃபார்மரில் லைன்மேனாகவும், லாரி, ஆட்டோ, கார், பஸ் ஓட்டுனராகவும் மட்டுமல்ல பைலட்டுகளாகவும் விண்வெளி வீராங்கனைகளாகவும் பணி செய்யும் பெண்கள் பெருகி வருகிறார்கள்.
அலுவலக வேலைகள், ஐடி வேலைகள், தொழிற்சாலை வேலைகள், ஆட்டோமொபைல், சட்டத்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, திரைப்படத்துறை விளம்பரத்துறை, வங்கிப்பணி, பங்குச்சந்தை போன்றவற்றுடன் மதுவிடுதிகள், வரவேற்பாளினிகள்,  துணி/நகைக்கடைகளில் விற்பனைப் பெண்கள், கூலித்தொழிலாளிகள், கட்டிடத்தொழிலாளிகள், தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம், கைவினை/குடிசைத்தொழில் புரிதல்,  ஆகிய பல்வேறு துறைகளில் பெண் தொழிலாளர்களின் பங்கு அளப்பரியது.
இவற்றுள் பணிபுரியும் பலர் அமைப்புச் சாராத் தொழிலாளர்கள்தாம். சிலர் சுயதொழில் புரிபவர்களாகவும் உள்ளார்கள். கேட்டரிங், ப்ரிண்டிங் ப்ரஸ், புடவை/செயற்கை நகைவியாபாரம், பெட்டிக்கடை, பொட்டிக்‌ஷாப், இவை போக மீன் பிடித்தல் கீற்று/கூடை முடைதல், கடல்பாசி சேகரிப்பு, ஆடு,மாடு,கோழி வளர்த்தல், வீட்டுவேலை செய்தல் எனப் பலவற்றில் நேரம் காலம் இன்றிப்பணிபுரிய வேண்டியுள்ளது. .

ஷாப்பிங் மால்களில் பில்லிங் செக்‌ஷனில் நிற்கும் பெண்களின் பாடு மிகக் கொடுமையானது. அதேபோல் நாள் முழுவதும் நின்றபடி பணிபுரியும் விற்பனைப் பெண்களின் கதியும். மாதாந்திரத் தொந்தரவு நாட்களிலும் கர்ப்பகாலங்களிலும் கூட நாள்பூராவும் நின்று கொண்டே பணியாற்றுவது எவ்வளவு கொடுமை. சமீபத்திய சட்டம் ஒன்றின் படி இவர்கள் அமர இருக்கைகள் கொடுக்கப்படவேண்டும். அந்த ஆணையின்படி இவர்களுக்கு விற்பனை இல்லாத நேரத்தில் அமர நாற்காலிகள் வழங்கப்படுகின்றனவாவெனத் எனத் தெரியவில்லை. வங்கிப் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அருந்ததி பட்டாச்சார்யா என்ற ஸ்டேட்வங்கி சேர்மன் மகப்பேறு காலத்திற்கென பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளார்.
மகப்பேறுக்கான குறுகிய விடுமுறை, அதீத வேலைப்பளு, உச்சவரம்பற்ற வேலை நேரங்கள், பாலியல் தொல்லைகள், அதே தொழில் புரியும் ஆணை விடக் குறைந்த ஊதியம், அலுவலக வேலை முடிந்தபின் வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு என இவர்கள் இன்னல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். காண்ட்ராக்ட் முறையில் விவசாய வேலைகளைக் கூட எடுத்துப் பெண்களுக்கான வேலையையும் ஊதியத்தையும் முறைப்படுத்திய சின்னப்பிள்ளை அம்மா போன்றவர்கள் போற்றத்தக்கவர்கள்.
நம்முடைய தொழிலாளர் சட்டங்கள் எல்லாம் 90 வருடங்களுக்கு முன் இயற்றப்பட்டவை. சுதந்திரத்துக்குப் பின் 1948 இல் தொழிற்சாலைகளுக்கான சட்டத்தில்தான் சம வேலை, சம ஊதியம், மகப்பேறு கால நிவாரணம் அளித்தல் அரசின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின் 66 ஆவது பிரிவில் இரவு பத்து மணி முதல் காலை ஐந்து மணி வரை தொழிற்சாலைகளில் பெண்கள் பணியில் ஈடுபடுத்தப்படக்கூடாது என்ற விதி கொணரப்பட்டது. ஆனால் தொலைபேசி, மருத்துவம் ஆகியதுறைகளில் பெண்கள் இரவுப் பணியும் செய்ய நேரிடுகிறது. சாஃப்ட்வேர் போன்ற துறைகளிலும். ஏனெனில் இரவுப்பணியில் ஈடுபடுவதால் பாலியல் பலாத்காரம், கொலை போன்றவற்றுக்கு உட்பட நேரிடுகிறது எனப் புள்ளிவிவரம் சொல்கிறது.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்து இயங்கும் ஐடிபோன்ற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு, மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் இரவில் வேலை செய்ய ஏற்பாடு, பாலியல் சீண்டல்கள் பற்றிய புகார்களை உடனடியாக விசாரித்தல், பெண்கள்  நலனைக் கவனிக்கத் தனி அதிகாரிகள், தனிப் போக்குவரத்து வசதிகள், மாதவிலக்கு சமயத்தில் ஊதியத்துடன் கூடுதலான விடுமுறை என்றெல்லாம் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
1965 இல் கொண்டு வந்த சட்டப்படி விமானப் பணிப்பெண்கள் பணியில் இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளக்கூடாது.  பெண் கொத்தடிமைகள், பெண்குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியோர் சுமங்கலி திட்டம் போன்றவற்றினால் பெற்ற கஷ்டங்களைப் பட்டியலிட இயலாது. பல்வேறு அலுவலகங்களில் செயல்படும் பெண் தொழிலாளர் நலச்சங்கங்களின் மூலம் பெண்களின் உடல்நலம் காக்க அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. பாலியல் சீண்டல்கள் என்றால் உடனுக்குடன் விசாரித்துப் பிரச்சனையைத் தீர்ப்பதும் நடக்கின்றது. 
1810 களில் பல்வேறு தொழில்களை ஒன்றிணைக்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 1818 இல் மான்செஸ்டரில் நிறுவப்பட்ட ஜெனரல் யூனியன் ஆஃப் ட்ரேட்ஸ் என்பது முதல் தொழிற்சங்கமாக இருக்கலாம். ஏறக்குறைய 20,00,000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தொழிற்சங்கம் முறைசாரா பொருளாதாரத்தில் பணிபுரியும் இந்தியப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சுயதொழில் மகளிர் சங்கம் (SEWA) ஆகும்.
தொழிற்சங்கங்களின் பணி ”தொழிலாளர்களின்  வேலைவாய்ப்பின் நிலைமைகளைப் பராமரித்தல் அல்லது மேம்படுத்துதல்" ஆகும். இதில்  ஊதியம் , பணிவிதிகள், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்கள், புகார் நடைமுறைகள், பதவி உயர்வு உள்ளிட்ட ஊழியர்களின் நிலையை நிர்வகிக்கும் விதிகள், பணிநீக்கம் செய்வதற்கான நிபந்தனைகள் மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகள் ஆகியவை அடங்கும்.
குறைந்தபட்ச ஊதியச்சட்டம் 1948, ஊதியக் கொடுப்பனவு சட்டம் 1936, போனஸ் செலுத்தும்சட்டம் 1965, சம ஊதியச் சட்டம் 1976 ஆகிய நான்கு சட்டங்களையும் இணைத்து ஊதியங்களின் வரையறையைச் சீராக்கத் திட்டமிட்டிருக்கிறது தொழிலாளர் அமைச்சகம். இந்த ஊதிய விகிதத்தையும் எப்படிக் கணக்கிடுகிறார்கள் தெரியுமா, கணவன், இரு குழந்தைகள் ஆகிய மூன்று பேரை உள்ளடக்கிய தொழிலாளர் வர்க்கக் குடும்பம், ஒருவருக்குத் தினசரி 2700 கலோரி அடங்கிய உணவு, குடும்பத்துக்கு ஆண்டுக்கு 66 மீட்டர் துணி, வீட்டு வாடகை, உணவு, ஆடை ஆகிய செலவுகளுக்கு 10%, எரிபொருள், மின்சாரம் மற்ற செலவுகளுக்கு 20%, குழந்தைகள் கல்வி, மருத்துவம், அவசரசெலவு, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு 25 % ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு உருவாக்குகின்றார்கள் !.
பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2017 – 2018 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் 18% ஆகக் குறைந்துள்ளது. ஆனாலும் மாதச் சம்பளத்துக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2004 ஆம் ஆண்டு 36.6% ஆக இருந்ததை விட 2017 ஆம் ஆண்டில் 52.1% ஆக அதிகரித்துள்ளது.
அமைப்பு சாரா ஊழியர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்வதன் மூலம் ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கலைஞர் காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவராணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும்.
அரசியல் பொருளாதாரத்தின் கோட்பாடுகளில் ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவர் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இயங்கினால் குறைந்த வேலை நேரமும் அதிக ஊதியமும் பெறமுடியும் என எழுதினார். அது இந்தியாவில் சாத்தியமாகும் நாள் என்னாளோ என்று எண்ணவேண்டி உள்ளது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...